You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராக்கெட் ஏவுதளத்தில் புதினை சந்தித்தார் கிம்
ரஷ்யாவின் வோஸ்டாக்னி ராக்கெட் ஏவுதளத்தில் அந்நாட்டு அதிபர் புதினை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்தார்.
கைகுலுக்கிக் கொண்ட இரு தலைவர்களும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டன்ர்.
"உங்களது நெருக்கடியான அலுவல்களுக்கு மத்தியில் எங்களை அழைத்ததற்கு நன்றி" என்று கிம் ஜாங் உன் அப்போது கூறினார்.
பின்னர் ராக்கெட் ஏவுதளத்தை கிம்முக்கு புதின் சுற்றிக் காட்டினார்.
பொதுவாக உலகத் தலைவர்கள் வெளிநாட்டுப் பயணத்தின் போது ரயிலைப் பயன்படுத்துவதில்லை என்றாலும், விமானத்தில் பறந்தால் எளிதில் சுட்டு வீழ்த்தப்படும் ஆபத்து இருப்பதால் கிம் ஜாங் உன் எப்போதும் ரயில் பயணத்துக்கு முன்னுரிமை அளிக்கிறார்.
குண்டு துளைக்காத ரயில் மூலம் பயணம் செய்யும் போது, அது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதும் கடினம் என்பதால் அது பாதுகாப்பான பயணமாக இருக்கும் என கிம் நினைக்கிறார். இருப்பினும் சாட்டிலைட் படங்கள் மூலம் அவரது ரயில் பயணித்த பாதையை அறிய பிபிசி முயன்றது. ஆனால், அந்தப் படங்களும் கிடைக்கவில்லை.
இதற்கு முன் இப்படி ஒரு பயணத்தை அவர் மேற்கொண்ட போது, ஒரு பாதுகாப்பு ரயில் முன்னரே அந்த ரயில் பாதையில் ஆபத்து ஏதேனும் இருக்கிறதா என்பதைப் பரிசோதனை செய்வதற்காகவே சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
வட கொரிய தலைவர்கள் நீண்டகாலமாக கடைப்பிடிக்கும் பாரம்பரியத்திற்கு ஏற்ப, மெதுவாக நகரும் ரயில் வண்டியில் சுமார் 1,180 கிலோ மீட்டர் (733 மைல்கள்) பயணம் செய்ய கிம் ஜாங் உன் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக செலவிட வேண்டியிருந்தது. சிறந்த பிரெஞ்சு ஒயின்கள் மற்றும் புதிய இரால் உணவுகளை வழங்கும் வசதியும் இந்த ரயில் வண்டியில் இருக்கிறது.
ரயில் அதன் பலத்த கவச பாதுகாப்பு காரணமாக மணிக்கு சுமார் 50 கிலோ மீட்டர் (31 மைல்) வேகத்தில் சலசலத்துச் சென்றது.
லண்டனின் அதிவேகமாகப் பயணிக்கும் ரயிலுடன் ஒப்பிடுகையில், இந்த ரயில் நான்கு மடங்கு வேகம் குறைவானது. ஜப்பானில் ஓடும் புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
பூமியின் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நீண்ட ரயில் பயணம், சில நேரங்களில் தொன்மையான ரயில் வலையமைப்பைக் கடந்து செல்லவேண்டியிருந்தது.
இந்த ரயிலுக்கு கொரிய மொழியில் டேயாங்கோ என்று பெயரிடப்பட்டுள்ளது, கொரிய மொழியில் அதற்கு சூரியன் என்று அர்த்தம். மேலும் வட கொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் அடையாளக் குறிப்பாகவும் இச்சொல் அறியப்படுகிறது.
இப் பயணத்தின் இறுதியாக கிம் ஜாங் உன் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரை அடையத் திட்டமிட்டிருந்தார். ஆனால், பின்னர் அவருடைய ரயில் அந்நகரை விட்டு விலகி வடக்கு நோக்கி நகர்ந்தது. அவருடன் ராணுவ உயரதிகாரிகளும் பயணம் மேற்கொண்டிருந்தது, ஆயுத விற்பனை குறித்த பேச்சுக்களுக்கான சாத்திய கூறுகளை பறைசாற்றியது.
ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து மேற்குலக நாடுகள் கவலைகளை வெளிப்படுத்தும் நிலையில், என்ன மாதிரியான ஆயுதங்களை ரஷ்யாவுக்கு வடகொரியா விற்கும் என்பதும், அதனால் யுக்ரேன் மீதான போரில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதும் கேள்விக்குறியாகவே தொடர்கின்றன.
வடகொரியா தயாரிக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யாவின் வடிவமைப்பை ஒட்டி இருப்பதால், அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் ரஷ்யாவுக்கு எந்த விதமான சிரமங்களும் இருக்காது என்று கருதப்படுகிறது. மேலும், ஆயுதங்களைத் தயாரிப்பதில் வடகொரியாவுக்கு பெரிய அளவில் வளங்கள் இல்லாததால், இருக்கும் வளங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முழுவதையும் ரஷ்யாவுக்கு விற்கும் நிலை இருக்காது என்றும் கருதப்படுகிறது.
இத்துடன், கிம் ஜாங் உன், தனது சொந்த நாடான வடகொரியாவின் பாதுகாப்பு குறித்தும் கவலைப்படும் நிலை உள்ளது. சொந்த பாதுகாப்புக்காகவும் குறிப்பிட்ட அளவிலான ஆயுதங்களை வைத்திருக்கவேண்டிய கட்டாயமும் அவருக்கு உள்ளது.
ரஷ்ய அதிபர் புதினுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாலேயே இது போன்ற சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேற்குலக அரசியல் விமர்சகர்கள் கருதினாலும், யுக்ரேன் மீதான போரில் வடகொரியாவின் ஆயுதங்களால் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றே எண்ணுகின்றனர்.
இருப்பினும், வடகொரியாவின் ஆயுதங்களை ரஷ்யாவுக்கு விற்கவேண்டும் என அதிபர் புதின், கிம் ஜாங் உன்னை வலியுறுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது.
வடகொரியாவுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பதால் நாடு முழுவதும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்ற நிலையில், ஆயுத உதவிக்குப் பதிலாக உணவுப் பொருட்கள் மற்றும் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உதவியை வடகொரியாவுக்கு ரஷ்யா அளித்து உதவவேண்டும் என கிம் ஜாங் உன் எதிர்பார்க்கிறார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ரஷ்யாவின் தூரகிழக்கு பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் நகருக்கு அதிபர் புதின் தற்போது வந்துள்ளார். வடகொரிய எல்லையிலிருந்து இந்நகரம் சுமார் 200 கிலோ மீட்டர் (125 மைல்) தொலைவில் உள்ளது.
நான்காண்டுகளில் வடகொரிய அதிபர் கிம் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமைந்துள்ளது.
இதற்கு முன் கடந்த 2019ஆம் ஆண்டு வியட்நாமில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புடன் கிம் அணு ஆயுத ஒழிப்பு குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். ஆனால் அந்த பேச்சுவார்த்தையை கிம் ஜாங் உன் பாதியிலேயே கைவிட்டார்.
2017 ஆம் ஆண்டில் வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விதித்த பொருளாதாரத் தடைகளை ரஷ்யா ஆதரித்ததன் மூலம் சீனா மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஆகிய இரண்டிற்கும் இடையில் புதின் செயல்பட்டார்.
ஆனால், இப்போது உலகின் பார்வை மாறியுள்ளது. யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் வடகொரியாவுடனான உறவுகளை ரஷ்யா பலப்படுத்தியுள்ளது.
ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகளுக்கு இடையே ஒரு நட்புறவை அமெரிக்கா உருவாக்கிய பின் வடகிழக்கு ஆசியாவின் அரசியல் நிலைப்பாட்டில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், வடகொரியாவின் நெருங்கிய கூட்டாளியான சீனா என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
ரஷ்யாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த வடகொரியா விரும்பினால், அதை சீனா எப்படிப் பார்க்கும் என்பதும் புதிராகவே உள்ளது.
இதற்கிடையே, யுக்ரேன் போரில் பயன்படுத்த தரைப்படைத் தளவாடங்களும், ஆயுதங்களும் ரஷ்யாவிடம் போதுமான அளவுக்கு இல்லை என்பதால், அவற்றை வடகொரியாவிடமிருந்து ரஷ்யா கேட்டுப்பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆயுதங்களும், தளவாடங்களும் வடகொரியாவிடம் ஏராளமாக உள்ளன.
இந்நிலையில், இது போல் ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்களை வழங்குமானால், அது கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்கா ஏற்கெனவே எச்சரித்துள்ளது.
அதே நேரம், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் வடகொரியாவுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்ற கேள்வி தென்கொரியாவின் முன் நிற்கும் கவலையாக உள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் தடுமாற்றத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் கிம், தனது தேவைகளை அதிகரித்துக் கேட்க்கும் நிலையும் ஏற்படவாய்ப்பிருக்கிறது.
ஒருவேளை ரஷ்யாவிடமிருந்து அதிக ராணுவ உதவிகளைக் கூட அவர் கேட்கலாம். அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் போர் ஒத்திகையைப் போன்ற நடவடிக்கைகளை ஏற்கெனவே சீனாவுடன் இணைந்து வடகொரியா மேற்கொண்டு வருகிறது.
எனவே எதிர்காலத் தேவைக்கு ரஷ்யாவிடம் இருந்து அவர் ராணுவ உதவிகளை எதிர்பார்க்கும் வாய்ப்பு உள்ளது.
தற்போதைய நிலையில், உளவு பார்க்கும் செயற்கைக் கோள்களோ, அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கிக் கப்பல்களோ வடகொரியாவிடம் இல்லாத நிலையில், அவற்றைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடம் வடகொரியா எதிர்பார்க்கும் நிலையையும் மறுப்பதற்கில்லை.
ஆனால், அந்த அளவுக்கு ரஷ்யாவிடம் இருந்து வடகொரியாவுக்கு உதவிகள் கிடைக்காது என தென்கொரியா நம்புகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்