மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் - சைபர் போலீஸ் எச்சரிக்கை

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான சினிமா டப்பிங் கலைஞர் அவர். திருமண தகவல் இணையதளத்தில் தனக்கான பெண்ணைத் தேடி வந்தார்.

தனது சுயவிவரக் குறிப்புகளுடன் பொருந்தக்கூடிய ஒரு பெண்ணையும் அவர் தேர்வு செய்தார்.

"அந்த பெண் சினிமா கதாநாயகியை போல இருந்தார். அந்த பெண்ணின் புகைப்படம் உண்மையா என அவர் ஆராயவில்லை. ஆனால், அந்தப் பெண் கூறியதை நம்பி ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் 28 லட்ச ரூபாயை அவர் இழந்துவிட்டார்" எனக் கூறுகிறார், வழக்கைக் கையாண்ட காவல் ஆய்வாளர் ரஜினிகுமார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த சம்பவம் இது. இதே பாணியில் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 379 புகார்கள் பதிவாகியுள்ளதாக, சென்னையில் உள்ள இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் சமீபத்தில் எச்சரித்தது.

திருமண தகவல் இணையதளங்களில் என்ன நடக்கிறது? மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த ஆண்டு திருமண தகவல் இணையதளம் ஒன்றில் தனது சுயவிவரக் குறிப்புகளைப் பதிவு செய்தார்.

"அதைப் பார்த்துவிட்டு அவருக்கு பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். 'நான் சத்துவாச்சாரியை சேர்ந்தவள்' எனக் கூறியுள்ளார். ஆனால், அப்பெண்ணின் வேலூர் முகவரியை அவர் நேரில் சென்று ஆராயவில்லை," எனக் கூறுகிறார் வேலூர் சைபர் குற்றப் பிரிவில் இந்த வழக்கைக் கையாண்ட ஆய்வாளர் ரஜினிகுமார்.

வாட்ஸ்ஆப் சாட்டிங் மூலமாக கடந்த சில மாதங்களாக அந்தப் பெண்ணுடன் பிரவீன் குமார் பேசி வந்துள்ளார். 'தனக்கு ஏற்ற துணையாக இருப்பார்' என்ற நம்பிக்கையில் அவர் கூறியதையெல்லாம் பிரவீன்குமார் நம்பியதாக ஆய்வாளர் ரஜினிகுமார் தெரிவித்தார்.

கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் (2020) சென்னையில் இருந்து சொந்த ஊரான வேலூருக்கு பிரவீன்குமார் வந்துவிட்டார். அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக படிப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.

"இதைப் பற்றி அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். அவரோ, 'இதற்காக நீ தனியாக படிக்க வேண்டாம். நானே கற்றுத் தருகிறேன்' எனக் கூறியுள்ளார். அவர் அனுப்பிய பாடங்களையும் அவர் படித்து வந்துள்ளார்" எனக் கூறுகிறார் ஆய்வாளர் ரஜினிகுமார்.

ஆன்லைன் வர்த்தகத்தில் பிரவீன்குமார் ஆர்வமுடன் இருப்பதை அறிந்த அந்தப் பெண், ஒருகட்டத்தில் போலி முதலீட்டுத் தளங்களை அவருக்கு அறிமுகப்படுத்தியதாக கூறுகிறார் ஆய்வாளர் ரஜினிகுமார்.

விரைவில் திருமணம் செய்ய விரும்புவதாகவும் பிரவீன்குமார் கூறியுள்ளார். அந்தப் பெண்ணும், 'அதிக பணம் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்' எனக் கூறி கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியதாக புகார் மனுவில் பிரவீன்குமார் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்தப் பெண் அனுப்பிய லிங்க் மூலம் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்ததாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார் பிரவீன்.

பிறகு பல்வேறு தவணைகளில் சில வங்கிக் கணக்குகளுக்கு 28 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். தான் செய்த முதலீட்டுக்கான கமிஷன் தொகை என செயலியில் காட்டிய பணத்தை எடுப்பதற்கு முயன்றபோது முடியவில்லை எனப் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

பிரவீன் குமாரிடம் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஒன்றரை மாதங்கள் மட்டுமே அந்தப் பெண் வாட்ஸ்ஆப் தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் சாட்டிங் மூலம் மட்டுமே பேசி வந்துள்ளனர்.

மேலும் அதிக தொகையை முதலீடு செய்தால் மட்டுமே கமிஷன் தொகையைப் பெற முடியும் எனக் காட்டியதால், தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்ததாகவும் அதன்பிறகு அந்தப் பெண்ணைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

போலி செயலியில் கூறப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு பிரவீன்குமார் அனுப்பிய பணம், பிகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சில வங்கிக் கணக்குகளுக்கு மாறியுள்ளது. "அங்கிருந்து பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அந்தப் பணம் மாற்றப்பட்டுவிட்டது".

இந்த வழக்கில் பி.என்.எஸ் சட்டப்பிரிவு 318(4), தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2008 பிரிவு 66டி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

"அந்தப் பெண் வீடியோ அழைப்பில் வந்து முகத்தையே காட்டவில்லை. வீட்டில் பெற்றோர் உள்ளதாகவும் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். வெறும் சாட்டிங் உரையாடலை மட்டும் எப்படி நம்பினார் எனத் தெரியவில்லை. நாங்கள் அறிந்தவரை, எதிர்முனையில் இருப்பவர் பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை," எனக் கூறுகிறார் காவல் ஆய்வாளர் ரஜினிகுமார்.

"மேட்ரிமோனியல் தளத்தில் அழகான பெண் அல்லது ஆணின் படத்தைப் பதிவேற்றி, அவர்களின் பெயரில் போலியான சுயவிவரத்துடன் மோசடிக் கும்பல் ஏமாற்றுகிறது. அந்தப் பெண் சினிமா நடிகையின் தோற்றத்தில் இருந்ததால், ஆர்வத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்துவிட்டதாகவே இதைப் பார்க்க முடியும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

சமீபகாலங்களில் திருமண பொருத்த இணையதளங்களைப் பயன்படுத்தி போலி முதலீட்டு இணையதளங்களில் பெரும் தொகையை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்வதாக, செய்தி அறிக்கை ஒன்றில் சென்னை, இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் எச்சரித்துள்ளது.

கடந்த மார்ச் 22 ஆம் தேதி வெளியான அந்த அறிக்கையில், கடந்த 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் திருமண தகவல் தளங்கள் மூலமாக நடைபெற்ற மோசடிகள் தொடர்பாக, 379 புகார்கள் தேசிய இணையவழி குற்றப்பிரிவு தளத்தில் பதிவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி நடக்கிறது மோசடி?

கூடவே, மோசடி நடக்கும் விதத்தையும் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர்.

* திருமண தகவல் இணையதளத்தில் போலி கணக்கை உருவாக்கும் நபர், அழகாகவும் வெற்றிகரமான தொழிலில் இருப்பவர் போலவும் காட்டிக் கொள்கிறார். வரன் தேடும் நபர்களை அணுகி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடலைத் தொடங்குகிறார்.

* பெரும்பாலும் வாட்ஸ்ஆப் அழைப்புகள் மூலமே தொடர்புகொண்டு பாதிக்கப்படுகிறவரின் நம்பிக்கையைப் பெற்று உறவை வலுப்படுத்திக் கொள்ளும் வேலையில் ஈடுபடுகிறார்.

* நம்பிக்கை ஏற்பட்ட பிறகு முதலீட்டு வாய்ப்பை அறிமுகப்படுத்தி தாங்கள் பெரும் லாபம் ஈட்டியதாக கூறி போலி முதலீட்டு தளங்களின் இணைப்புகளை பகிர்கின்றனர்.

* முதலில் சிறிய தொகையை முதலீடு செய்ய வைத்து லாபங்களை தருகின்றனர். நம்பிக்கை ஏற்பட்ட பிறகு அதிக தொகையை முதலீடு செய்ய ஊக்குவிக்கின்றனர்.

* முதலீடு செய்த பிறகு பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. தொழில்நுட்ப பிரச்னைகள், வரி அல்லது கட்டணம் செலுத்துமாறு கூறுகின்றனர்.

* அதிகபட்ச தொகையைப் பெற்ற பிறகு தங்களின் சுயவிவரங்களை நீக்கிவிட்டு மறைந்துவிடுகின்றனர்.

" ஒருவரை நம்ப வைத்து மோசடி செய்யும் அளவுக்கு சைபர் குற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் பல்வேறு உத்திகளைப் பின்பற்றுகின்றனர். திருமண தகவல் தளங்களில் அறிமுகம் ஆன பிறகு நேரடியாக பணம் கேட்காமல் போலி செயலிகளில் முதலீடு செய்ய வைத்து ஏமாற்றுகின்றனர்," எனக் கூறுகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநர் வினோத்.

"பணத்தை இழந்த பிறகு சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர்களைப் பின்தொடர்ந்து கண்டறிவது சவாலான விஷயம். அது சிரமமாக இருப்பதால் தான் இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் அறிக்கை மூலமாக எச்சரிக்கிறது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேட்ரிமோனியல் தளங்களில் பதிவு செய்திருப்பவர்களின் பின்னணியை முதலில் நன்கு ஆராயும் இந்த மோசடிக்காரர்கள், அவர்களின் வேலை, பின்புலம், விருப்பங்கள் உள்ளிட்டவற்றை அலசுகின்றனர். பின்னர், போலி புரொபைல் மூலம் அவர்களிடம் பேச ஆரம்பித்து, இன்னும் மேலதிக தகவல்களை பெற்று, நிதி சார்ந்த அவர்களின் ஆர்வங்களை மெல்ல கேட்டுப் பெறுகின்றனர். அதன் வாயிலாக அவர்களை மோசடி வலைகளில் சிக்க வைக்கின்றனர். அந்த நபர் மோசடியில் விழுவதற்கு வாய்ப்பில்லை அல்லது நாம் மாட்டிக்கொள்ளலாம் என்ற எச்சரிக்கை எழுந்தால் தொடர்பை துண்டித்துவிட்டு, வேறொரு நபருக்கு தாவிவிடுவதாக கூறுகிறார்கள் இணைய பாதுகாப்பு சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

இதனால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதால், போலி சுயவிவரக் குறிப்புகளைத் தடுப்பதற்கு அடையாள சரிபார்ப்பு, பதிவு செய்யும்போது விபிஎன் பயனர்களைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திருமண தகவல் தளங்களுக்கு இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் பரிந்துரைத்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னையில் உள்ள தமிழ் மேட்ரிமோனி தளத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய சேவை மைய அலுவலர் ஒருவர், "பயனரின் உண்மைத்தன்மை குறித்து அடையாள சான்று உட்பட பல்வேறு வழிகளில் பரிசோதிக்கப்படுகிறது. இதற்காக தனி நடைமுறையை பின்பற்றி வருகிறோம்" எனக் கூறினார்.

"நிதி மோசடி தொடர்பான புகார்கள் எதுவும் இதுவரை வந்ததில்லை" எனக் கூறிய அவர், "செயலியை கையாள்வது தொடர்பான புகார்கள் மட்டுமே எங்கள் கவனத்துக்கு வருகின்றன" எனத் தெரிவித்தார்.

தங்களின் பயனருக்கான பல்வேறு விதிமுறைகளை பாரத் மேட்ரிமோனி தளம் வெளியிட்டுள்ளது.

"போலியான சுயவிவரக் குறிப்புகள் கண்டறியப்பட்டால், அதை நீக்குவதற்கு தங்களுக்கு உரிமை உண்டு. உறுப்பினர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு படங்கள் மற்றும் உள்ளடக்கத்தை சேமிப்பதை இந்த தளம் கட்டுப்படுத்துவதாக" கூறியுள்ளனர்.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் சுயவிவரத்தை இடைநிறுத்தும் உரிமை தங்களுக்கு உண்டு எனவும் பாரத் மேட்ரிமோனி நிர்வாகம் கூறியுள்ளது.

ஆனால், 'தளத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்தவொரு விளைவுக்கும் தாங்கள் பொறுப்பேற்க முடியாது' எனவும் 'இதனால் ஏற்படும் நேரடியான, மறைமுகமான சேதங்கள் உட்பட எதற்கும் தங்கள் நிறுவனம் பொறுப்பேற்காது' எனவும் பாரத் மேட்ரிமோனி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்காத்துக் கொள்வது எப்படி?

இதுபோன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்கான ஆலோசனைகளை சைபர் குற்றப்பிரிவு தலைமையகம் தெரிவித்துள்ளது.

  • ஆன்லைனில் சந்திக்கும் நபர்களின் பின்னணியை சரிபார்ப்பது, வீடியோ அழைப்புகள், நேரடி சந்திப்புகளை ஒருவர் தவிர்த்தால் அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • ஆன்லைனில் அறிமுகமான நபரின் ஆலோசனையின்படி பணத்தை முதலீடு செய்யக் கூடாது. குறுகிய காலத்தில் அதிக வருமானம் என உறுதியளித்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • போலி வலைதளங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • மோசடியில் ஈடுபடும் நபர்கள் விரைவாக முதலீடு செய்யுமாறு கூறுகிறார்கள். நம்பகமான நிதி நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
  • வாட்ஸ்ஆப் அல்லது மெசேஜிங் செயலிகள் மூலம் தனிப்பட்ட அல்லது நிதி தொடர்பான தகவல்களைப் பகிர வேண்டாம்.

இதில் ஏதேனும் ஒருவகையில் பாதிக்கப்பட்டால் சைபர் கிரைம் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணில் அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற தளத்தில் புகார் அளிக்கலாம் என இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு