You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானிய கொள்ளையர்கள் தமிழ்நாட்டை குறிவைத்து வழிப்பறி செய்வது ஏன்? யார் இவர்கள்?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் ஒரேநேரத்தில் ஆறு இடங்களில் தங்கச் சங்கிலி வழிப்பறியில் ஈடுபட்ட இரானிய கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை சென்னை மாநகர காவல்துறை கைது செய்துள்ளது. அதில் ஒருவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) இரவு காவல்துறையின் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
"வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் மும்பை மற்றும் கர்நாடகாவில் வசிக்கும் இரானிய கொள்ளையர்கள்" என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண், புதன்கிழமையன்று (மார்ச் 26) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இரானிய கொள்ளையர்கள் என்பவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தனர்? இவர்களின் பின்னணி என்ன?
சென்னை தெற்கு காவல் எல்லைக்கு உட்பட்ட சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், வேளச்சேரி, கிண்டி உள்பட ஆறு இடங்களில் காலை 6 மணியளவில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்தன.
குறிப்பாக, 50 வயதைக் கடந்த பெண்களை இலக்காக வைத்து கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் திருவான்மியூரில் 54 வயது பெண்ணிடம் 8 சவரன் நகையை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கொள்ளையடித்தனர்.
அதைத் தொடர்ந்து பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆறு பெண்களிடம் நகை பறிப்புச் சம்பவங்கள் நடந்தன.
இதுகுறித்து உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டுத் துரித விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நகை பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து காவல்துறை கைது செய்தது.
மூன்றாவது நபரான சல்மான் என்பவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து தனிப்படை காவல்துறையினர் புதன்கிழமையன்று கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 26 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
யார் இந்த இரானிய கொள்ளையர்கள்?
இவர்களில் ஜாபர் குலாம் ஹூசைன், சூரஜ் என்கிற மெசம் இரானி ஆகியோர் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்றும் சல்மான் என்பவர் கர்நாடக மாநிலம் பிதர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
"மூன்று பேரும் இரானிய கொள்ளையர்கள்" என செய்தியாளர் சந்திப்பின்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் குறிப்பிட்டார்.
பொது மக்களின் கவனத்தை திசை திருப்பிக் கொள்ளையடிப்பது இரானிய கொள்ளையர்களின் உத்தி எனக் கூறிய காவல்துறை ஆணையர் அருண், "சென்னையில் உள்ள சாலைகள், இவர்களுக்கு நன்கு பழக்கப்பட்டவையாக இருந்துள்ளன" எனக் கூறினார்.
இவர்கள் ஒரு பெரிய குழுவாகச் செயல்படுவதாகக் கூறிய அருண், "இந்தியா முழுவதும் சென்று செயல்படக் கூடிய குற்றப் பின்னணி உடையவர்களாக உள்ளனர். மகாராஷ்டிராவில் இவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அங்கு குற்றப் பின்னணி கொண்ட நபர்களில் மூன்றாவது நபராக ஜாபர் குலாம் ஹூசைன் இருந்துள்ளார்" எனவும் தெரிவித்தார்.
"விமானத்தில் ஏறி தப்பிச் சென்றிருந்தால் இந்தக் கும்பலை அவ்வளவு எளிதாகப் பிடித்திருக்க முடியாது" எனவும் அவர் குறிப்பிட்டார். இவர்களில் ஜாபர் குலாம் ஹூசைன், செவ்வாய்க்கிழமை இரவு நடந்த காவல்துறை என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.
சேலம் சம்பவம்
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே இரானிய கொள்ளைக் கும்பலை காவல்துறை கைது செய்யும் சம்பவங்கள் நடந்துள்ளன.
சேலம் செவ்வாய்பேட்டையில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் இந்தியாவில் வசிக்கும் இரான் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டியிடம் இருந்து 4 சவரன் நகையை இவர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், கர்நாடக மாநிலம் பிதர் மாவட்டத்தில் தங்கியிருந்த முகமது ஆசிப் அலி, ஷபிஷேக் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
இவர்களின் பின்னணியில் மும்பையைச் சேர்ந்த இரானிய கும்பல் ஒன்று இயங்கி வருவதாகவும் காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் தமிழ்நாட்டை குறிவைப்பது ஏன்?
"மும்பை மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இரானில் இருந்து வந்து குடிபெயர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்" என பிபிசி தமிழிடம் கூறினார், தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு.
எதாவது பொருட்களைக் கீழே போட்டுவிட்டு, மக்களின் கவனத்தைத் திசை திருப்புவது இவர்களின் நோக்கமாக உள்ளதாகக் கூறிய அவர், "இவர்கள் கொலை சம்பவங்களில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. ஆனால் காவல்துறையைத் தாக்கிய சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன," எனத் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் சென்று ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்களில் (Organized Crime) இவர்கள் ஈடுபடுவதாகக் கூறிய சைலேந்திரபாபு, "அவர்களின் மாநிலத்தில் வைத்துக் கைது செய்வதற்குச் சென்றால் தமிழக காவல்துறையினர் மீது பொய்ப் புகார் கொடுத்து கைது செய்ய வைத்துவிடுகின்றனர்," என்றார்.
ராஜஸ்தானில் இரானிய கொள்ளைக் கும்பலைப் பிடிக்கச் சென்ற காவல்துறையினரிடம் நகைக்குப் பதிலாக பணம் கொடுப்பதாகக் கூறி வரவழைத்து, அந்த மாநில லஞ்ச ஒழிப்புத் துறையில் லஞ்சம் கேட்டதாகப் புகார் கொடுத்துவிட்டதாகவும் சைலேந்திரபாபு தெரிவித்தார்.
"அங்குள்ள டிஜிபியிடம் நிலவரத்தை எடுத்துக் கூறி சிறையில் இருந்து மீட்டுக்கொண்டு வந்தேன். அந்த அளவுக்கு அவர்கள் ஏமாற்றுவார்கள்," எனக் கூறுகிறார் சைலேந்திரபாபு.
தமிழ்நாட்டைக் குறிவைப்பது குறித்துப் பேசும் சைலேந்திரபாபு, "இங்கு நடுத்தர ஏழை மக்கள் நகை அணிவது வழக்கம். தங்கத்தை ஒரு சொத்தாகப் பார்க்கின்றனர். வேலைக்குச் செல்லும் மகளிரிடம்கூட சிறிய அளவில் நகை இருக்கும். அதனால் தமிழ்நாட்டை இலக்காக வைத்துக் கொள்ளையடிக்கின்றனர்," என்று விளக்கினார்.
அணுகுமுறையை மாற்றிய கொள்ளையர்கள்
"கவனத்தை திசை திருப்பி தங்கச் சங்கிலியைப் பறிப்பது இரானிய கொள்ளையர்களின் வழக்கமாக இருந்தாலும், சென்னை சம்பவத்தில் அவர்களின் அணுகுமுறை மாறியுள்ளது" எனக் கூறுகிறார் காவல்துறை அதிகாரி ஒருவர்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "என்கவுன்டரில் கொல்லப்பட்ட ஜாபர் குலாம் ஹூசைன் கும்பலின் மீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன. ஒசூரில் மட்டும் சுமார் 12 வழக்குகள் இரானிய கொள்ளையர்கள் மீது பதிவாகியுள்ளது" எனக் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது தாம்பரத்தில் ஒரே நேரத்தில் பத்து இடங்களில் தங்கச் சங்கிலி வழிப்பறி சம்பவங்கள் நடந்தன.
ஆனால், தாம்பரத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது இரானிய கும்பல் அல்ல என்றும் இவர்களைப் போலவே செயல்படும் வேறு ஒரு கும்பல் எனவும் தெரிய வந்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அந்த அதிகாரி, "இரானில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறிய இவர்கள், மும்பை தானேவில் உள்ள அம்தாவாடி என்ற பகுதியில் அதிகளவில் வசிக்கின்றனர். அங்கு சென்று இவர்களைக் கைது செய்து கூட்டி வருவது அவ்வளவு எளிதல்ல," எனவும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் இரானியர்கள் - பின்னணி என்ன?
கடந்த 19ஆம் நூற்றாண்டில் இரான் உலகப் பொருளாதாரத்தில் இணைந்த நேரத்தில், இரானிய ஏழைகள் பஞ்சம், வாழ்க்கைக் கஷ்டங்கள் மற்றும் பரவலான வேலையின்மையை அனுபவித்துக் கொண்டிருந்தனர். இதனால் தங்களுக்கான பொருளாதார வாய்ப்புகளைத் தேடி 1870-1920 காலகட்டத்தில் மகாராஷ்டிராவுக்கு அவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
மொழிப் பிரச்னை உள்படப் பல்வேறு காரணங்களால் அவர்களின் முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேநீர் விடுதிகள் மற்றும் உணவகங்களை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் மும்பை மற்றும் மேற்கு தானே, கர்நாடகா உள்படப் பல மாநிலங்களில் பரவலாக வசித்து வருவதாக செய்தியாளர் சந்திப்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.