சீனா கூறுவதுபோல் இந்திய ராணுவம் பலவீனமானதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தீபக் மண்டல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஆசிய நாடுகளின் முக்கியமான பாதுகாப்பு மன்றமான ஷாங்கிரி-லா (Shangri-La) பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சீனக் குழு ஒன்று, இந்தியாவின் ராணுவத் திறனைக் கேள்விக்குள்ளாக்கி புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்கிரி- லா பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீனா ராணுவத்தின் பிரதிநிதி, "இந்திய ராணுவம் சீன ராணுவத்துக்கு சவால் அளிக்கக்கூடியது அல்ல" என்று குறிப்பிட்டார்.
ராணுவத்தின் நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு தயாரிப்புத் திறனில் சீனாவுக்கு சவால் விடும் நிலையில் இந்தியா இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சௌத் சீனா மார்னிங் போஸ்ட் ஊடகத்தில் PLA அகாடமி ஆஃப் மிலிட்டரி சயின்ஸின் மூத்த கர்னல் ஜாவோ ஜியாஜோ, “வரவிருக்கும் சில பத்து ஆண்டுகளில் , அதன் பலவீனமான தொழில்துறை உள்கட்டமைப்பு காரணமாக, ராணுவ பலத்தில் சீனாவுடன் போட்டியிடும் நிலையில் இந்தியா இருக்காது. ராணுவத்திற்காக சீனா பெரிய மற்றும் நவீன உற்பத்தி தளங்களை உருவாக்கியுள்ளது ” என்றார்.
சீன ராணுவத்தின் உயரதிகாரியின் இந்த கருத்தைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவத்தின் தற்போதைய பலத்தை ஒப்பிடும்போக்கு தொடங்கியிருக்கிறது.
சீன ராணுவம் மிகவும் வலிமையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று பல ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா தனது ராணுவத்தை நவீனமயமாக்குவதில் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதும் உண்மை என்பது அவர்களின் கருத்து.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தரவுகளின்படி, 2018 முதல் 2022 வரை, உலகிலேயே அதிக ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதில், 31 சதவீத ஆயுதங்கள் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
சீனாவின் லட்சியமும் இந்தியாவின் முன்னெடுப்பும்
ஷாங்கிரி-லா பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த PLA (சீன ராணுவம்) தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரும் மூத்த கர்னலுமான ஹாங் லீ இது தொடர்பாக சௌத் சீனா மார்னிங் போஸ்ட் ஊடகத்திடம் பேசும்போது, இந்தியா தன்னை வல்லரசாக மாற்ற ராணுவத்தை பலப்படுத்த எந்த கல்லையும் விட்டு வைக்கவில்லை என்றும் மறுபுறம், சீனாவின் மூலோபாய லட்சியங்களும் தொடர்ந்து பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.
தற்போது, அமெரிக்காவின் போட்டியாளராக தன்னை சீனா பார்க்கிறது. ஆசிய அளவில் பார்க்கும்போது ஜப்பான், இந்தியா என வல்லரசுகளும் சீனாவுக்கு போட்டியாக பார்க்கப்படுகின்றன.
இந்தோ- பசிபிக் முதல் தெற்கு சீன கடல் வரை, சீனாவிற்கும் அதன் போட்டியாளர்களுக்கும் இடையில் சச்சரவுகள் உள்ளன. அதனால்தான் சீனா தனது ராணுவத் திறனை பலப்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், சீன நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக சீன பிரதமர் லி கியாங், 2023ஆம் ஆண்டில் தனது ராணுவத்திற்காக சீனா 225 பில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்யும் என்று அறிவித்தார். இது முந்தைய ஆண்டை விட 7.2 சதவிகிதம் அதிகம் ஆகும்.
பாதுகாப்புக்கான சீனாவின் பட்ஜெட் 2020ல் 6.6 சதவிகிதமும் , 2021ஆம் ஆண்டில் 6.8 சதவிகிதமும் 2022ல் 7.1 சதவிகிதமும் அதிகரித்து வந்துள்ளது. இங்குதான் சீனாவின் பொருளாதாரம் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறையத் தொடங்கியது.

பட மூலாதாரம், NARENDRA MODI TWITTER PAGE
அமெரிக்கா தனது பட்ஜெட்டில் பாதுகாப்பிற்கு ஒதுக்கும் நிதியுடன் ஒப்பிடும்போது சீனா பட்ஜெட்டில் தனது பாதுகாப்புக்கு ஒதுக்கிய 225 பில்லியன் டாலர் என்பது மூன்றில் ஒரு பங்குதான். ஆனால், அதுவே இந்தியா தனது பாதுகாப்புக்கு ஒதுக்கும் நிதியுடன் ஒப்பிட்டால், இது மூன்று மடங்கு அதிகமாகும். இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் 2023-24ல் 54.2 பில்லியன் டாலராக இருக்கும்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்கு என்பது 5 சதவீதமாக உள்ளது. தனது ராணுவத்திற்காக 7 சதவீதம் நிதியை சீனா செலவிடுகிறது. அதே நேரத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 7 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கலாம். ஆனால், பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு இந்தியா ஒதுக்கும் நிதி 13 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கல்வான் தாக்குதலுக்கு பிறகு இந்தியா எப்படி தயாராகி வருகிறது?
கடந்த 2020 ஜூன் 15-ல் கிழக்கு லடாக்கில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், இந்தியா மற்றும் சீன துருப்புகளுக்கு இடையில் ஒரு பெரிய கைகலப்பு நடந்தது. இந்த தாக்குதலில் இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். இதற்கு பின்னர், இந்தியா தனது பாதுகாப்புத் தயாரிப்புகளை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தொடங்கியது.
இந்த மோதலுக்குப் பிறகு, சீனாவுடனான தனது எல்லையில் ராணுவத் தயாரிப்புகளில் இந்தியா துரிதமாக செயல்படுவதாக அமெரிக்க மதியுரையகமான யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் கூறுகிறது.
எல்ஏசி (LAC) பகுதிகளில் கூடுதலாக 50 ஆயிரம் ராணுவ வீரர்களை இந்தியா நிறுத்தியது. எல்லையோர பகுதிகளில் இந்திய விமானப் படை நிறுத்தப்பட்டது.
எல்லையை ஒட்டிய பகுதிகளில் உட்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
எல்ஏசியை ஒட்டியுள்ள 73 மூலோபாய சாலைகள் தயாராகி வருகின்றன. அருணாச்சல பிரதேசத்திலேயே 1430 மைல் நீள சாலை தயாராகி வருகிறது.
இந்தியா பாதுகாப்புக்கு ஒதுக்கிய ரூ.5.94 லட்சம் கோடியில் புதிய ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களுக்காக ரூ.1.62 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சீனாவின் ராணுவ வலிமையைப் பற்றி இந்தியா எவ்வளவு கவலைப்பட வேண்டும்?
இந்தியாவைவிட அதிகமாக சீனா தனது ராணுவத்திற்காக செலவிடுகிறது. தாங்கள் ராணுவத்துக்கு செலவிடும் தொகையைவிட சீனா அதிக தொகையை செலவிடுவது குறித்து இந்தியா கவலைப்பட வேண்டுமா?
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சீன படிப்புகள் துறையின் இணை பேராசியராக உள்ள அர்விந்த் யெல்லேரி இது தொடர்பாக கூறுகையில், “ ஜிடிபியுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பு பட்ஜெட்டை ஜிடிபி அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மையான சித்தரம் நமக்கு தெரியாது. பாதுகாப்புத் தேவைகள் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும்.” என்றார்.
“அமெரிக்காவும் சீனாவும் தங்களை பெரியவர்களாக காட்டிக்கொள்ள விரும்புவதால் அவர்கள் அதிகமாக செலவிட வேண்டியுள்ளது. இந்தியா அவர்களுடன் போட்டிப்போட்டு அதிகமாக செலவிடத் தேவையில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பாதுகாப்பு தயாரிப்பை இந்தியா தற்போது பல்வகைப்படுத்தி வருகிறது. ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்கி வருகிறது. ஆனால் தற்போது ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் தயாரிப்பில் தன்னிறைவை நோக்கி முன்னேறி வருகிறது. பாதுகாப்புத் துறையில் தனியார் நிறுவனங்கள் வரவுள்ளன. இந்த செலவுகள் பாதுகாப்பு பட்ஜெட்டில் தெரியாவிட்டாலும், ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களுக்கான செலவு அதிகரித்து வருகிறது” என்றும் யெல்லேரி குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பாதுகாப்பு முன்னெடுப்புகள் பலவீனமாக இல்லை
சீனா தனது ராணுவ முன்னெடுப்புகளில் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது. இதைப் பற்றி இந்தியா கவலைப்பட வேண்டுமா?
"இந்தியாவுக்கென தனிப்பட்ட பாதுகாப்புத் தேவைகள் உள்ளன, இந்த தேவைகளுக்கு ஏற்ப தனது வேலையை அது செய்கிறது. அதேசமயம் சீனாவின் லட்சியம் மிகப் பெரியது. இந்தியப் பெருங்கடல், இந்தோ-பசிபிக் முதல் தென் சீனக் கடல் வரை -துறைமுகம் கட்டுவதில் இருந்து தனித்தனியாகச் சென்று பல்வேறு வகையான உள்கட்டமைப்புகளை அமைப்பது வரை- அதன் பாதுகாப்புச் செலவு அதிகரித்து வருகிறது." என்று யெல்லேரி கூறுகிறார்,
ராணுவ விவகாரங்களில் சீனாவை விட இந்தியா அதிக பொறுப்பான மற்றும் நம்பகமான நாடாக இருந்து வருகிறது என்று யெல்லேரி கூறுகிறார். எனவே, இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் குறைவாக இருந்தாலும், அது பாதுகாப்பு முன்னெடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று அர்த்தமல்ல.
"கடந்த சில ஆண்டுகளில், இந்தியா ராணுவத் தயார்நிலையில் நிறைய வேலைகளைச் செய்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சியில் இந்தியா பணியாற்றியதையும், அதன் தாக்கம் உற்பத்தியில் இருக்கப் போவதையும் நீங்கள் காண்பீர்கள்."
ஒரு நாட்டின் பாதுகாப்புச் செலவினம் அதிகமாக இருந்தாலும், அது வாங்குவதற்காக மட்டுமே இருந்தால், அது நாட்டின் தன்னம்பிக்கையை குறைக்கிறது.
இந்த நிலையை இந்தியா புரிந்து கொண்டுள்ளது. எனவே, போரின் தன்மை மாறி வருவதால், அதற்கான முன்னேற்பாடுகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
'சீனாவின் திறன்கள் இன்னும் சோதிக்கப்படவில்லை'
இந்தியாவின் பாதுகாப்பு தயாரிப்புகள் குறித்து சீனா கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவின் பாதுகாப்பு தயாரிப்புகளின் தரம் எந்த இடத்தில் உள்ளது என்பதும் பார்க்க வேண்டிய விஷயம் என்று யெல்லேரி குறிப்பிடுகிறார்.
சீனாவில் பாதுகாப்பு தயாரிப்புகள் இருக்கலாம். ஆனால் அதன் தரம் என்ன? என்பதுதான் கேள்வி. இவை இன்னும் சோதனை செய்யப்படவில்லை. சீனா ஒவ்வொரு ஆண்டும் ஒரு போர்க் கடற்படையை உருவாக்குகிறது அல்லது போர்க்கப்பல்களை தயார் செய்து வருகிறது. ஆனால் தரத்தில் அது எங்கே நிற்கிறது என்பது ஒரு பெரிய கேள்வி.
பல நூற்றாண்டுகளாக கடற்படையில் இந்தியா பெரும் சக்தியாக இருந்து வருகிறது. சோழர் மற்றும் மராட்டிய ஆட்சியாளர்கள் வலுவான கடற்படையைக் கொண்டிருந்தனர் என்றும் யெல்லேரி சுட்டிக்காட்டுகிறார்.
அதேசமயம் சீனா இந்த விஷயத்தில் பலவீனமாக உள்ளது. சீனா கடலில் எந்தப் போரையும் நடத்தவில்லை. எனவே இந்த விஷயத்தில் அவர்களது திறமை கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு தயாரிப்புகள் பலவீனமாக இருப்பதால், அதன் ராணுவத் திறன் பலவீனமாக இருக்கலாம் என்று கூறுவது தவறு என்றும் அரவிந்த் யெல்லேரி கூறுகிறார்.
"இந்தியாவின் ராணுவத் திறன் ஆபத்தானது அல்ல என்று புரிந்து கொள்ளக்கூடாது. சீனாவின் இந்த அணுகுமுறை திருத்தப்பட வேண்டும்."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












