அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பிரதமர் நரேந்திர மோதியும் அந்த 'ரகசியம்' பற்றிப் பேசுவார்களா?

அமெரிக்கா, இந்தியா, மோதி, பைடன், அணுசக்தி, நீர்மூழ்கிக் கப்பல்

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், ஜுகல் புரோஹித்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிரதமர் நரேந்திர மோதி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்திய நேரப்படி இன்று காலை அதிபர் மாளிகையை அடைந்த பிரதமர் மோதியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அன்புடன் வரவேற்றார்.

முதல்முறையாக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோதியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இன்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.

இந்திய அமெரிக்க உறவுகளில் பல பெரிய, முக்கியமான முடிவுகள் கடந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் இதுபோன்ற பல முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இரு நாடுகளும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச்சு நடத்தாது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். அந்த ஒரு விஷயத்தைப் பற்றித்தான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

அந்த விஷயம்: அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை கூட்டாகத் தயாரிப்பது.

அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் முக்கியத்துவம் என்ன?

அமெரிக்கா, இந்தியா, மோதி, பைடன், அணுசக்தி, நீர்மூழ்கிக் கப்பல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'ரேடார்'களால் இதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதே இந்தக் கப்பலின் மிகப் பெரிய சிறப்பம்சம்

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் அணு உலை இருக்கும். அது அந்தக் கப்பலின் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். அதன் ஆற்றலைக் கொண்டு கப்பல் இயங்கும்.

ஆனால் இந்தக் கப்பலின் மிகப் பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் 'ரேடார்'களால் இதைக் கண்டுபிடிக்க முடியாது. ரேடாரின் பார்வைக்கு வராமல் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அது தண்ணீருக்கு அடியில் இருக்க முடியும். இன்று இருக்கும் வேறு எந்த நீர்மூழ்கிக் கப்பலாலும் இதைச் செய்ய முடியாது.

இத்தகைய நீர்மூழ்கிக் கப்பல்கள், அவற்றின் பயன்பாடு மற்றும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் ஆயுதங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

ஆனால் அதைப் பற்றிப் பிறகு பேசுவோம். அமெரிக்க கடற்படை பயன்படுத்தும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றிய தகவல்கள் அதன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

அதே நேரம் இந்தியாவில் இருக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் பற்றிய பல தகவல்கள் பொதுவெளியில் இல்லை.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிப்பில் முன்னணியில் இருப்பது யார்?

கடந்த 2017ஆம் ஆண்டு, ஆறு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, இந்திய கடற்படைத் தலைவர் கூறியிருந்தார்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிஹந்த், 2018ஆம் ஆண்டில் தனது பணியை வெற்றிகரமாகத் துவக்கியது.

பல தசாப்தங்களாகப் பணிகள் நடைபெற்று வந்தபோதிலும்கூட இந்தியாவிடம் குறைந்த எண்ணிக்கையிலான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களே உள்ளன.

உலகின் இரண்டு சக்திவாய்ந்த நாடுகளைப் பார்க்கும்போது, அமெரிக்காவிடம் இதுபோன்ற 90 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அதே நேரத்தில் சீனாவிடம் இதுபோன்ற 12 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன என்று கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோதியின் அரசுமுறைப் பயணத்தின் நிகழ்ச்சி நிரலில், அமெரிக்காவுடனான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு முதன்மையாக இருக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அட்மிரல் ராஜா மேனன் கூறுகிறார்.

ஆனால் இந்தியாவும் அமெரிக்காவும் இதற்கு முன் எப்போதாவது இந்த விஷயம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா?

இந்தியா இதுபற்றி அமெரிக்காவிடம் கேட்டது. ஆனால் அமெரிக்கா அதற்குச் சம்மதிக்கவில்லை என்கிறார் அட்மிரல் மேனன்.

இந்தியா அமெரிக்காவை சார்ந்திருப்பது ஏன்?

அமெரிக்கா, இந்தியா, மோதி, பைடன், அணுசக்தி, நீர்மூழ்கிக் கப்பல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா தனது நெருங்கிய நட்பு நாட்டிற்குக்கூட இந்தத் தொழில்நுட்பத்தை எளிதில் பகிர்ந்து கொள்ளாது

இந்த விஷயம் குறித்து அமெரிக்காவுடன் பேசுவது ஏன் முக்கியமானது?

இந்தியா ஏன் ரஷ்யாவையோ, ஃபிரான்ஸையோ கேட்கவில்லை? அல்லது அத்தகைய நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடியாதா?

“இந்தியாவிடம் பல்வேறு மாற்று வழிகள் உள்ளன. ஆனால் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை அமெரிக்கா மற்ற எந்தவொரு நாட்டையும்விட மிகவும் முன்னணியில் உள்ளது,” என்று அட்மிரல் மேனன் குறிப்பிட்டார்.

தனது பெயரைக் குறிப்பிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசிய இந்திய தூதாண்மை அதிகாரி ஒருவர், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து இரு நாடுகளும் இதுவரை பேசியதில்லை என்றார்.

அமெரிக்கா தனது நெருங்கிய நட்பு நாட்டிற்குக்கூட இந்தத் தொழில்நுட்பத்தை எளிதில் பகிர்ந்து கொள்ளாது. அப்படிப்பட்ட நிலையில் இந்தியாவால் வேறு என்ன செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு என்னதான் வழி?

அமெரிக்கா, இந்தியா, மோதி, பைடன், அணுசக்தி, நீர்மூழ்கிக் கப்பல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீர்மூழ்கிக் கப்பல்களைக் குறிவைக்கும் ஆயுதங்கள் உட்பட பல புதிய ராணுவ ஹார்ட்வேர் பொருட்களை அமெரிக்கா இந்தியாவிற்கு விற்றுள்ளது

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இரண்டு வகைகள் உள்ளன.

முதல் வகை, அணுசக்தியால் இயங்குவது, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்வது. இந்தியாவின் ஐ.என்.எஸ் அரிஹந்த் இந்த வகையைச் சேர்ந்தது.

இரண்டாவது வகை அணுசக்தியால் இயங்கினாலும், அணு ஆயுதங்கள் அல்லாத சாதாரண ஆயுதங்களைச் சுமப்பவை. பிற கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை இதிலிருந்து குறிவைக்க முடியும். இத்தகைய நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா இன்னும் உருவாக்கவில்லை.

இந்த வகை கப்பல்கள் பற்றித்தான் இந்தியாவும் அமெரிக்காவும் பேச வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் விஷயத்தில் நிபுணத்துவம் பெற்றவர் டாக்டர் யோகேஷ் ஜோஷி.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று இந்தியா நம்பிக்கொண்டிருக்க முடியாது, என்கிறார் ஜோஷி. ஏனெனில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் அமெரிக்கா கொண்டிருக்கும் உறவைப் போன்றது இல்லை என்று அவர் கூறினார்.

AUKUS உடன்படிக்கையின் கீழ் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவிற்கு விற்பது தொடர்பாக சமீபத்தில் அமெரிக்கா பேசியுள்ளது. இதுபோன்ற நவீன தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் பேச்சு வரும்போது இது முக்கியத்துவம் பெறுகிறது.

தனது நட்பு நாடாக இல்லாவிட்டாலும், நீர்மூழ்கிக் கப்பல்களை குறிவைக்கும் ஆயுதங்கள் உட்பட பல புதிய ராணுவ தளவாடங்களை அமெரிக்கா இந்தியாவிற்கு விற்றுள்ளது என்று டாக்டர் யோகேஷ் ஜோஷி சுட்டிக்காட்டினார்.

“முன்பெல்லாம், ரஷ்யா இந்தியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவதை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது. ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. இத்தகைய சூழ்நிலையில் இந்தியா இதைப் புரிந்துகொண்டு, அமெரிக்காவுடன் இது பற்றிப் பேசி இந்த விஷயத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிய முயல வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“அணுசதியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பொருத்தவரை என்ன செய்வது என்று தீர்மானிக்கும் சுதந்திரம் இந்தியாவுக்கு உள்ளது. அதன் மீது எந்தத் தடையும் இல்லை. இதைத்தான் இந்தியா எப்போதுமே விரும்புகிறது,” என்று டாக்டர் ஜோஷி கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: