ரஷ்யாவில் ஹைபர்சோனிக் ஏவுகணை விஞ்ஞானிகள் அடுத்தடுத்து கைது - என்ன காரணம்?

    • எழுதியவர், செர்ஜி கோரியாஷ்கோ
    • பதவி, பிபிசி ரஷ்யா

ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்குவதில் தனது நாடு உலகிலேயே முன்னணியில் இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அடிக்கடி பெருமை கொள்கிறார்.

ஆனால் இதுபோன்ற தொழில்நுட்பங்களை உருவாக்க அடிப்படைத் தேவையாக இருக்கும் அறிவியல் பிரிவில் பணிபுரியும் ரஷ்ய இயற்பியலாளர்கள் சமீப ஆண்டுகளில் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைக் குழுக்கள் இதனை ஒரு அதீதமான ஒடுக்குமுறையாகப் பார்க்கின்றன.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் வயதானவர்கள். அவர்களில் மூன்று பேர் இப்போது இறந்துவிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விளாடிஸ்லாவ் கல்கின் என்னும் 68 வயதான கல்வியாளர். 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெற்கு ரஷ்யாவில் உள்ள டாம்ஸ்கில் உள்ள அவரது வீடு சோதனையிடப்பட்டது.

கறுப்பு முகமூடி அணிந்து, ஆயுதம் ஏந்திய நபர்கள் காலை 4 மணிக்கு வந்து, அலமாரிகளை ஆராய்ந்து, அறிவியல் சூத்திரங்கள் அடங்கிய காகிதங்களைக் கைப்பற்றினர் என்று அவரின் உறவினர் ஒருவர் கூறுகிறார்.

கல்கினின் மனைவி டாட்டியானா இதுகுறித்து பேசுகையில், "என் கணவருடன் என் பேரக்குழந்தைகளுக்கு சதுரங்கம் விளையாட பிடிக்கும். தாத்தா எங்கே என்று அவர்கள் கேட்கின்றனர். அவர் வேலை தொடர்பாக வெளியூர் சென்றிருப்பதாகக் கூறினேன்” என்று விவரிக்கிறார்.

ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு சேவையான எஃப்.எஸ்.பி. (FSB), இந்த வழக்கைப் பற்றி பேசுவதைத் தடை செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.

2015 முதல் இதுவரை 12 இயற்பியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்துடன் அல்லது அதில் பணிபுரியும் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள்.

அவர்கள் அனைவரும் தேசத் துரோகக் குற்றத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர், நாட்டின் ரகசியங்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும்.

ரஷ்யாவின் தேசத் துரோகம் தொடர்பான விசாரணைகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ரகசியமாக நடத்தப்படுகின்றன. எனவே அவர்கள் மீது என்ன குற்றம் சாட்டப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

'தீவிரமான குற்றச்சாட்டுகள்'

ரஷ்யாவின் அரசு (கிரெம்ளின்) வெளியிடும் அறிக்கைகள் "குற்றச்சாட்டுகள் தீவிரமானவை" என்று மட்டுமே கூறுகிறது. சிறப்பு சேவைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இதில் மேலும் கருத்து தெரிவிக்க முடியாது என்கின்றன.

ஆனால் சக விஞ்ஞானிகளும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்களும் கூறுகையில், விஞ்ஞானிகள் ஆயுத மேம்பாட்டில் ஈடுபடவில்லை என்றும் சில வழக்குகள் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் வெளிப்படையாக பணிபுரிவதை அடிப்படையாகக் கொண்டவை என்றும் கூறுகிறார்கள்.

வெளிநாட்டு உளவாளிகள் ஆயுத ரகசியங்களைப் பெற முயற்சி செய்கிறார்கள் என்ற பிம்பத்தை எஃப்எஸ்பி உருவாக்க விரும்புவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹைப்பர்சோனிக் என்பது மிக அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய ஏவுகணைகளைக் குறிக்கிறது. வானில் பறந்து கொண்டிருக்கும் போதே திசையை மாற்றும் திறன் வாய்ந்தது. வான் பாதுகாப்பு அரண்களை தகர்க்க வல்லது.

யுக்ரேன் மீதான போரில் இரண்டு வகையான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தியதாக ரஷ்யா கூறுகிறது.

1.கின்சல் - விமானத்திலிருந்து ஏவப்படுபவை

2. சிர்கான் - கப்பலில் இருந்து ஏவப்படுபவை

இருப்பினும், யுக்ரேன் தரப்பு, சில கின்சல் ஏவுகணைகளை அதன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக கூறியுள்ளது. இது ரஷ்ய ஏவுகணைகளின் திறன்களைப் பற்றி கேள்வி எழுப்புகிறது.

இதுபோன்ற தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், விஞ்ஞானிகளின் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கல்கின் கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களில், அவருடன் இணைந்து பல ஆய்வு இதழ்களை எழுதிய மற்றொரு விஞ்ஞானி வலேரி ஸ்வெஜின்ட்சேவ் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனமான டாஸ் ஒரு ஆதாரத்தை சுட்டிக்காட்டி, "ஸ்வெஜின்ட்சேவ் கைது செய்யப்பட்டதற்கு 2021 இல் இரானிய இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை காரணமாக இருக்கலாம்” என்கிறது.

கல்கின் மற்றும் ஸ்வெஜின்ட்சேவ் ஆகிய இருவரும் அதிவேக விமானங்களுக்கான காற்று பயன்பாட்டு வழிமுறைகள் பற்றிய கட்டுரையை ஆய்வு இதழில் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட விஞ்ஞானிகள்

2022 கோடையில், ரஷ்ய மத்திய பாதுகாப்பு அதிகாரிகள், இன்ஸ்டிடியூட் ஆஃப் தியரிட்டிகல் அண்ட் அப்ளைடு மெக்கானிக்ஸ் (ITAM) என்ற ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த கல்கின் மற்றும் ஸ்வெஜின்ட்சேவ் ஆகிய இருவரையும் கைது செய்தது. ஸ்வெஜின்ட்சேவ் அந்த ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரும் அதிவேக காற்றியக்கவியல் துறை சார்ந்த ஆய்வகத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.

ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தங்கள் மூன்று சக ஊழியர்களுக்கு ஆதரவாக பல விஞ்ஞானிகள் ஒரு கடிதம் எழுதி அதனை இணையத்தளத்தில் வெளியிட்டனர்.

தற்போது நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்ட அந்த கடிதத்தில், கைது செய்யப்பட்ட விஞ்ஞானிகள் புத்திசாலித்தனமான அறிவியல் முடிவுகளுக்கு பெயர் பெற்றவர்கள் என்றும், தங்கள் நாட்டின் நலன்களுக்கு எப்போதும் உண்மையுள்ளவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர்கள் இருவரின் அறிவியல் சார்ந்த ஆய்வு கட்டுரைகள் வெளிப்படையாக பகிரப்பட்டது என்றும் கடிதத்தில் எழுதியிருந்தனர். அந்த ஆய்வு கட்டுரையில் தடைசெய்யப்பட்ட தகவல்கள் ஏதேனும் உள்ளதா என்பதை ITAM-இன் நிபுணர் ஆணையம் மீண்டும் மீண்டும் சரிபார்த்தது, ஆனால் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அது கூறியது.

ரஷ்ய மனித உரிமைகள் மற்றும் சட்ட அமைப்பான ஃபர்ஸ்ட் டிவிஷன் வழக்கறிஞர் யெவ்ஜெனி ஸ்மிர்னோவ் கூறுகையில், "ஹைப்பர்சோனிக் என்னும் தொழில்நுட்பத்தால் மக்களை சிறையில் அடைத்து வருகின்றனர்” என்றார்.

ஸ்மிர்னோவ் 2021 இல் ரஷ்யாவிலிருந்து ப்ராக் நகருக்குச் செல்வதற்கு முன்பு, தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் சிலருக்காக நீதிமன்றத்தில் வாதிட்டார். அதன் பிறகு தன் பணி பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்தார்.

"குற்றம்சாட்டப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளில் யாருக்கும் பாதுகாப்புத் துறையுடன் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஹைப்பர்சோனிக் வேகத்தில் உலோகங்கள் எவ்வாறு சிதைகின்றன போன்ற அறிவியல் கேள்விகளை ஆய்வு செய்வது மட்டும் தான்” என்று அவர் கூறுகிறார்.

"இது ராக்கெட் தயாரிப்பது பற்றியது அல்ல, ஆனால் வெளிப்புற செயல்முறைகள் பற்றிய ஆய்வுகளை பற்றியது தான்.” என்று அவர் கூறுகிறார்.

மேலும் இந்த கண்டுபிடிப்புகள் ஆயுத மேம்பாட்டாளர்களால் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைப்பு Vs விஞ்ஞானிகள்

2016-இல் விளாதிமிர் லாபிஜின் கைது செய்யப்பட்ட போது இந்த கைது நடவடிக்கைகள் தொடங்கின. தற்போது 83 வயதாகும் அவரை சிறையில் அடைத்தனர். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் விடுவிக்கப்பட்டார்.

அவர் ரஷ்ய விண்வெளி முகமையின் முக்கிய ஆராய்ச்சி நிறுவனமான `TsNIIMash’ இல் 46 ஆண்டுகள் பணியாற்றினார்.

ஏரோடைனமிக் கணக்கீடுகளுக்கான மென்பொருள் தொகுப்பை ஒரு சீனத் தொடர்பு இணைய முகவரிக்கு அனுப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் தான் பகிர்ந்த பதிப்பில் எந்த ரகசிய தகவலும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.

"பொது தளத்தில் வெளிப்படையாக பகிரப்பட்டது" என்பதை அவர் மீண்டும் மீண்டும் உறுதியாகக் கூறுகிறார்.

"ஹைப்பர்சோனிக்ஸ் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரும் அந்த ஆயுதங்களை உருவாக்கும் செயல்பாட்டில் சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள்’’ என்று லாபிஜின் பிபிசியிடம் கூறினார்.

சைபீரியாவில் உள்ள லேசர் இயற்பியல் நிறுவனத்தில் நிபுணரான டிமிட்ரி கோல்கர் கைது செய்யப்பட்ட மற்றொரு விஞ்ஞானி. அவர் தீவிரக் கணைய புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது 2022 இல் கைது செய்யப்பட்டார்.

சீனாவில் அவர் ஆற்றிய உரைகளின் அடிப்படையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர், ஆனால் அவர் உரையாற்றிய பாடங்கள் அனைத்தும் ரஷ்ய மத்திய பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்டவை. அவருடன் ஒரு ரஷ்ய உளவாயும் பயணம் செய்தார்.

கோல்கர் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, 54 வயதில் இறந்தார்.

தன் அடையாளத்தை வெளியிட விரும்பாத, கைது செய்யப்பட்ட விஞ்ஞானியின் சக ஊழியர் ஒருவர் கூறுகையில், "பாதுகாப்பு அமைப்பு மற்றும் விஞ்ஞானிகளுக்குள் ஒரு மோதல் உள்ளது. விஞ்ஞானிகள் சர்வதேச அளவில் தங்கள் ஆய்வு கட்டுரைகளை வெளியிட விரும்புகின்றனர். வெளிநாட்டு சக ஊழியர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள நினைக்கின்றனர். ஆனால், வெளிநாட்டு விஞ்ஞானிகளுடன் தொடர்புகொள்வது மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு எழுதுவது தாய்நாட்டிற்கு துரோகம் என்று எஃப்.எஸ்.பி. நினைக்கிறது," என்று அவர்கள் கூறுகிறார்கள்.

`ITAM ’ ஆய்வு நிறுவன விஞ்ஞானிகளும் இதே கருத்தை கூறுகின்றனர்.

"எங்கள் ஆய்வுப் பணிகளை எப்படித் தொடர்வது என்பது எங்களுக்குப் புரியவில்லை" என்று அவர்களின் கடிதத்தில் பதிவிட்டிருந்தனர்.

"இன்று நம்மை வெகுமதி பெற வைக்கும் ஒரு கண்டுபிடிப்பு... நாளை குற்றவியல் வழக்குக்கு காரணமாகிறது." என்றும் கூறப்பட்டுள்ளது.

திறமையான இளம் ஆய்வாளர்கள் அறிவியலை விட்டு வெளியேறும் அதே வேளையில், விஞ்ஞானிகள் சில ஆராய்ச்சிகளில் ஈடுபட பயப்படுகிறார்கள் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்தக் கடிதத்துக்கு ஆதரவு திரண்டது. மற்ற நிறுவனங்கள் கைது செய்யப்பட்ட தங்கள் விஞ்ஞானிகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

அனைத்து வழக்குகளும் விஞ்ஞானிகளின் சர்வதேச அளவிலான ஒத்துழைப்புடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மற்ற இரண்டு விஞ்ஞானிகளின் மீதான விசாரணை, ஹைப்பர்சோனிக் சிவிலியன் விமானத்தை உருவாக்கும் ஐரோப்பிய திட்டமான ஹெக்ஸா ஃப்ளை (Hexafly) தொடர்பானது என்று அவ்வழக்கில் பணியாற்றிய வழக்கறிஞர் ஸ்மிர்னோவ் தெரிவித்தார்.

அந்த திட்டம், இப்போது முடிக்கப்பட்டு, ஐரோப்பிய விண்வெளி முகமையால் வழிநடத்தப்பட்டு 2012 இல் தொடங்கியது.

ஐரோப்பிய விண்வெளி முகமை, "சம்பந்தப்பட்ட ரஷ்ய மற்றும் ஐரோப்பிய தரப்புக்கு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் அனைத்து தொழில்நுட்ப பங்களிப்புகளும் பரிமாற்றங்களும் ஒப்புக் கொள்ளப்பட்டன" என்று பிபிசியிடம் கூறியது.

இரண்டு விஞ்ஞானிகளுக்கும் கடந்த ஆண்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, இருப்பினும் அவர்களில் ஒருவரை மறுவிசாரணை செய்ய ரஷ்யாவின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிற கைது நடவடிக்கை, ஏரோடைனமிக்ஸ் பற்றிய ஆய்வு தொடர்பானது. ஒரு விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவது தொடர்பான இந்த ஆய்வு, ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தால் நிதியளிக்கப்பட்டது. பெல்ஜியத்தில் உள்ள வான் கர்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃப்ளூயிட் டைனமிக்ஸால் நடத்தப்பட்டது.

விஞ்ஞானிகளில் ஒருவரான விக்டர் குத்ரியாவ்ட்சேவின் மனைவி ஓல்காவின் கூற்றுப்படி, "வோன் கர்மன் (von Karman) நிறுவனத்திற்கு அனுப்பிய ஆராய்ச்சியில் ஒரு போர்க்கப்பல் போல தோற்றமளிக்கும் ஒரு வட்டமான கூம்பு வடிவ அமைப்பை பற்றி எஃப்எஸ்பி புலனாய்வாளர்கள் கேள்வி எழுப்பினர்.

'உளவு பித்து'

2011 முதல் 2013 வரை இயங்கிய இந்த திட்டம், "மிகத் தெளிவாக ராணுவ ஆராய்ச்சி பற்றியது அல்ல” என்று அந்நிறுவனம் கூறுகிறது.

மனித உரிமைக் குழுக்கள் இதில் ஒரு மாதிரியை கவனித்துள்ளன.

ஸ்மிர்னோவ் கூறுகையில், "தனிப்பட்ட உரையாடல்களின் போது ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் என்னிடம் உயரதிகாரிகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக ஹைப்பர்சோனிக் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான வழக்குகள் போடப்படுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர்.”

புதினின் ஈகோவைப் புகழ்வதற்கும் பாராட்டு வாங்கவும், உளவு அதிகாரிகள் ரஷ்ய ஏவுகணை ரகசியங்களை வெளியிடும் நபர்களை வேட்டையாடுகிறார்கள் என்ற தோற்றத்தை மத்திய பாதுகாப்பு அமைப்பு கொடுக்க விரும்புகிறது என்று அவர் நம்புகிறார்.

மெமோரியல் மனித உரிமைகள் மையத்தில் ரஷ்ய அரசியல் கைதிகளை ஆதரிக்கும் பணியை முன்னெடுத்துச் செல்லும் செர்ஜி டேவிடிஸ், "உளவு பித்து மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலை" பற்றி பேசுகிறார், குறிப்பாக யுக்ரேனில் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு இது நடக்கிறது.

டேவிடிஸின் அமைப்பு ரஷ்யாவில் தடைச் செய்யப்பட்டதால் லித்துவேனியாவில் தற்போது இயங்கி வருகிறது. அங்கிருந்து பேசிய அவர், "வழக்குகளை உருவாக்குவதன் மூலம் பாதுகாப்பு அமைப்பு புள்ளிவிவரங்களை போலியாக உருவாக்குகிறது" என்று அவர் நம்புகிறார்.

ஸ்மிர்னோவ் கூறுகையில், எஃப்எஸ்பி அமைப்பு சில சமயங்களில் சந்தேகத்திற்குரியவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மற்றவர்களை சிக்கவைத்தால் அவர்களுக்கு மிகவும் மென்மையான தண்டனைகளை வழங்குகிறது என்கிறார்.

``குத்ரியவ்ட்சேவுக்கு நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டது, அதன் கீழ் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வேறொருவரை நோக்கி விரல் காட்டுவார் என்று நினைத்தார்கள்” என்று அவரது மனைவி ஓல்கா கூறுகிறார்.

ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். அவர் 2021 இல் நுரையீரல் புற்றுநோயால் இறந்தார், 77 வயதில், அவரது வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவர் இறந்துப் போனார்.

ஓய்வுபெற்ற ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு ஜெனரல் அலெக்சாண்டர் மிகைலோவ் கூறுகையில், எஃப்எஸ்பி ராணுவ தொழில்நுட்பத்தின் "ரகசியத்தை உறுதிப்படுத்த வேண்டும்" என்றார்.

மூன்று ITAM விஞ்ஞானிகளில் ஒருவரான அனடோலி மஸ்லோவுக்கு மே மாதம் வழங்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளுக்கு "சரியான காரணங்கள்" இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

1990களில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் விரிவடைந்ததன் விளைவுதான் தற்போதைய தேசத்துரோக வழக்குகளின் அதிகரிப்புக்கு காரணம் என்கிறார் ஜெனரல் மிகைலோவ்.

இது சோவியத் காலத்திலிருந்து அணுகுமுறையில் மாற்றத்திற்கு வழிவகுத்தது என்றும் அவர் கூறுகிறார், "அந்த காலக்கட்டத்தில் அரசு ரகசியங்களை அணுகக்கூடியவர்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டனர். அவற்றை வெளியிடும் பொறுப்பைப் புரிந்துகொண்டனர்" என்று அவர் கூறுகிறார்.

கல்கினைப் பொறுத்தவரை, முகமூடி அணிந்த காவலர்கள் வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. முதல் மூன்று மாதங்கள் அவர் தனிமைச் சிறையில் கழித்ததாக அவரது உறவினர் கூறுகிறார்.

அவரது மனைவி டாட்டியானா, ஒரு சிறிய அறையில் தனிமையில் நாட்களை கழிக்கும் அவருடன் கண்ணாடி தடுப்பு வழியாக தொலைபேசியில் பேச முடியும். தன்னையும் கைது செய்தால் நல்லது என்று கருதுகிறேன். ஏனெனில் அவர் அங்கேயே தனிமையில் அமர்ந்திருப்பது அதிகம் பாதிக்கிறது என்கிறார்.

ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட மற்ற விஞ்ஞானிகள்:

  • அலெக்சாண்டர் ஷிப்லியுக், 57, ITAMஇன் இயக்குனர், 2022 இல் கைது செய்யப்பட்டார், விசாரணைக்காக காத்திருக்கிறார்.
  • ஹைப்பர்சோனிக் அமைப்புகளுக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் அலெக்சாண்டர் குரானோவ் 2021 இல் கைது செய்யப்பட்டார், ஏப்ரல் 2024 இல் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • ரோமன் கோவலியோவ், TsNIIMash இல் விளாதிமிர் குத்ரியாவ்ட்சேவின் சக ஊழியர், இவருக்கு 2020 இல் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, 2022 இல் இறந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)