20 லட்சம் ஒயின் பாட்டில்களைக் கொள்ளையடித்த ஹிட்லரின் படையை பிரான்ஸ் மக்கள் தந்திரமாக ஏமாற்றியது எப்படி?

    • எழுதியவர், எமிலி மொனாகோ
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இரண்டாம் உலகப்போர் நடந்த 1940-களில், விலையுயர்ந்த சிறந்த ஒயின் பாட்டில்களை ஒளித்துவைப்பது முதல், நேச நாட்டுப்படைகளுக்கு ரகசியத் தகவல்களை வழங்குவது வரை பிரெஞ்சு ஒயின் தயாரிப்பாளர்கள், பிரான்ஸின் நாஜி எதிர்ப்பிற்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்கள். இதுவே இறுதியில் டி-டே படையெடுப்பிற்கு வழிவகுத்தது.

அடால்ஃப் ஹிட்லர் ஒயின் அருந்துபவர் அல்ல என்றாலும், அவரது உயர்மட்டத் தலைவர்கள் நிச்சயமாக அதை ருசிப்பவர்களாக இருந்தனர். விமானப்படை பிரிவான லுஃப்ட்வாஃபின் (Luftwaffe) தலைமைத் தளபதி ஹெர்மேன் கோரிங், வெளியுறவு அமைச்சர் ஜோசிம் வோன் ரிப்பெண்ட்ராப் மற்றும் பிரச்சார அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ் ஆகியோர் போர்டோ, பர்கண்டி மற்றும் ஷாம்பெயின் ஒயின்கள் மீது கொண்டிருந்த தனிப்பட்ட விருப்பம், ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்ஸில் நாஜி கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இரண்டாம் உலகப் போரின்போது பிரெஞ்சு ஒயின் மீது நாஜிக்களின் தாகம் தீவிரமடைந்ததால், சில பிரெஞ்சு ஒயின் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். பல ஒயின் தயாரிப்பாளர்கள் போரின் மிகவும் பிரபலமான ஹீரோக்களாக மாறினர். இரண்டாம் உலகப் போர் தொடங்கும் முன் பிரான்ஸ் ஒவ்வொரு ஆண்டும் 790 கோடி லிட்டர் ஒயினை உற்பத்தி செய்துவந்தது.

இது பிரெஞ்சு ஒயின் சந்தையை ஜெர்மனியின் முக்கியப் பொருளாதார இலக்காக மாற்றியது. "Third Reich இன் (நாஜிக்கள் ஆண்ட ஜெர்மனியின் பெயர்) விலைமதிப்பற்ற பொருளாக ஒயின் மாறியது," என்று Le Vin des Nazis (The Wine of the Nazis) புத்தகத்தின் ஆசிரியர் கிறிஸ்டோபே லுசண்ட் தெரிவித்தார்.

"ஆடம்பர பிரெஞ்ச் ஒயின்கள் – தலைசிறந்த ஷாம்பெயின், போர்தோ, பர்கண்டி மற்றும் கோக்னாக் அல்லது அர்மாகனாக்ஸ் ஆகியவை நாஜிக்களின் ஆர்வத்தை நிலைநிறுத்தியது மற்றும் மேல்தட்டு ஜெர்மானியர்களால் மிகவும் விரும்பப்பட்டது. இந்த ஒயின்கள் மிகவும் விலைமதிப்பற்றவை. அவை தங்கத்தின் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது. நாஜி அரசியல் அமைப்பில் இருந்த ஊழலை தொடர வைத்தது,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

1940-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரான்ஸுக்கு எதிரான போரில் நாஜிகள் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஜெர்மானியர்கள் பிரான்ஸை 'சுதந்திர தெற்கு’ மற்றும் 'ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கு’ என்ற இரண்டு மண்டலங்களாகப் பிரித்தனர். புகழ்பெற்ற ஒயின் தயாரிக்கும் பகுதிகளான பர்கண்டி மற்றும் ஷாம்பெயின், நாஜிக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதை இது உறுதி செய்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கொள்ளையடிக்கப்பட்ட 20 லட்சம் ஷாம்பெயின் பாட்டில்கள்

தெற்கு போர்தோ பகுதி முழுவதுமாக புவியியல் ரீதியாக ஆக்கிரமிப்பு மண்டலத்தின் கீழ் வரவில்லை. ஆனால் அதன் ஒருசில பகுதிகள் ஆக்கிரமிப்பின் கீழ் வந்தன. பிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரை மற்றும் அதன் ஒயின்கள் மீது நாஜிகளுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதை அது உறுதி செய்தது.

"ஆக்கிரமிக்கப்பட்ட மண்டலத்திற்கும் சுதந்திர மண்டலத்திற்கும் இடையிலான பிரிவுக்கோட்டைப் பார்த்தால், அது நாண்டிஸ்ஸிலிருந்து ஸ்ட்ராஸ்பேர்க் வரையில் பிரான்ஸை இரண்டாகப் பிரிக்கும் ஒரு நேர் கோடு அல்ல என்பது சுவாரசியமான விஷயம்," என்று 'The Grapes of the Reich' புத்தகத்தின் ஆசிரியர் ல னுவெல் ரிப்பப்ளிக் (La Nouvelle République) என்ற பிரென்ஞ்சு நாளேட்டிடம் கூறினார்.

"இதில் போர்தோ மற்றும் கோஞ்யாக்கும் (Cognac) அடங்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.

போரின் தொடக்கத்தில் பிரான்ஸ் ஒயினின் பெரும்பகுதி நாஜிகளால் சூறையாடப்பட்டது. (ஆக்கிரமிப்பின் முதல் வாரங்களில் மட்டும் 20 லட்சம் ஷாம்பெயின் பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன). ஆனால் விரைவில் ஒரு தடையற்றச் சந்தையின் சாயலை உறுதிப்படுத்தும் விதமான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

நாஜிகளால் நியமிக்கப்பட்ட சிறப்பு ஒயின் ஏஜெண்டுகள், (பிரெஞ்சு நாட்டவர் இவர்களை 'ஒயின் ஃப்யுரர்கள்' அதாவது ஒயின் தலைவர்கள் என்று அழைத்தனர்) ஒவ்வொரு பெரிய ஒயின் பிராந்தியத்திற்கும் அனுப்பப்பட்டனர். சிறந்த பிரெஞ்சு ஒயின் மூலத்தைக் கண்டுபிடித்து அதை ஜெர்மனிக்கு அனுப்பும் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன் விளைவாக 1945 வாக்கில் பல கோடி லிட்டர் ஒயின், சந்தையைவிடக் குறைவான விலையில் நாஜிக்களால் வலுக்கட்டாயமாக வாங்கப்பட்டன அல்லது திருடப்பட்டன. மிகச்சிறந்த ஒயின்கள் ஜெர்மன் மற்றும் அச்சு நாடுகளின் உயரடுக்குக்கு விற்கப்பட்டன. 'சாதாரண ஒயின்' மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் போரில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு அளிக்கப்பட்டது அல்லது வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது,” என்று லுகண்ட் குறிப்பிடுகிறார்.

பாதியாகக் குறைந்த ஒயின் தயாரிப்பு

நாஜி கொள்கைகள் தொழில்துறையைச் சீரழித்ததாக ஷாம்பெயின் ஒயின் உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்சார் ஷாம்பெயின் ஒயின் குழு அமைப்பின் பிரிஜிட் பேடோனெட் கூறுகிறார்.

"ஜெர்மனி மற்றும் அச்சு நாடுகளுக்கு, ஜெர்மானியர்கள் நிர்ணயித்த விலைக்கு மட்டுமே நாங்கள் விற்க முடியும்," என்றார் அவர். போர்க்காலப் பற்றாக்குறை மற்றும் 1940-களின் மிக மோசமான அறுவடை ஆகியவை வாரத்திற்கு 5 லட்சம் பாட்டில்கள் என்ற இலக்கை எட்டுவதை ஏறக்குறைய சாத்தியமற்றதாக மாற்றியது என்று டான் மற்றும் பெட்டிட் கிளாட்ஸ்ட்ரப் தங்களின் 'ஒயின் & போர்: பிரஞ்சு, நாஜிக்கள் & பிரான்சின் மிகப் பெரிய புதையலுக்கான போர்' என்ற புத்தகத்தில் விவரித்துள்ளனர்.

எனவே ஷாம்பெயின் தயாரிப்பாளர்கள் தங்கள் இருப்புகளிலிருந்து வித்தியாசத்தை ஈடுகட்டவேண்டும் என்று ஷாம்பெயின் ஒயின் ஃப்யுரரான ஓட்டோ கிளேபிஸ்ச் கூறினார். சர்வதேசச் சந்தையில் ஷாம்பெயின் இல்லாததால், போலிகள் உருவாக அது வழிவகுத்தது என்று பேடோனெட் குறிப்பிடுகிறார்.

"போரின் போது அமெரிக்காவின் ஸ்பார்க்லிங் [ஒயின்] உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்தது," என்று அவர் கூறினார். "அவர்கள் ஷாம்பெயின் என்று லேபிள் செய்தார்கள். அது இன்றும் ஒரு பிரச்சனையாக உள்ளது," என்றார் அவர்.

எபர்னேயில் உள்ள ஷாம்பெயின் ஒயின் அருங்காட்சியகம் மற்றும் பிராந்தியத் தொல்பொருளியல் அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் எவரும், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இருந்து நீடிக்கும் இந்தச் சிக்கலைத் தெளிவாகப் பார்க்க முடியும். அங்கு சட்டவிரோதமாகப் பிராந்தியத்தின் பெயரைக்குறிப்பிடும் பாட்டில்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் நாஜி கொள்கைகள் பிரெஞ்சு ஒயின் உற்பத்திக்குப் பேரழிவை ஏற்படுத்தியிருந்தாலும் பல உள்ளூர் ஒயின் தயாரிப்பாளர்கள் குறைந்தபட்சம் துவக்கத்தில் அவற்றுக்கு இணங்கினர்.

"உயிர்வாழ்வதற்காக பெரும்பான்மையான ஒயின் தொழில் வல்லுநர்கள் அதிக ஏலத்தில் எடுப்பவருக்கு விற்பனை செய்தார்கள். மற்றவர்கள் (1944 வரை அரிதாக இருந்தனர்) விற்காமல் இருந்தனர்," என்று லுகண்ட் கூறினார்.

1942 வாக்கில் ஆண்கள், விலங்குகள் மற்றும் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக பிரான்ஸில் ஒயின் உற்பத்தி, 1939-இல் இருந்த 69,015,071 ஹெக்டோலிட்டரிலிருந்து வெறும் 35,022,362 ஹெக்டோலிட்டராக குறைந்தது.

பிரான்ஸின் ஒயின் வளரும் பகுதிகளில் பலர் ஆரம்பத்தில் விச்சி அரசு (ஜெர்மனியின் கைப்பாவை என்று நம்பப்பட்ட பிரெஞ்சு அரசு) மீது அனுதாபம் கொண்டிருந்தாலும், ஆக்கிரமிப்பின் பிற்பகுதியில் அணுகுமுறைகள் மாறத் தொடங்கின.

புதிய விச்சி கொள்கைகள் மது விளம்பரத்தைத் தடைசெய்தது, அதிக வரிகளை விதித்தது மற்றும் பிரான்ஸின் முதலாவது குறைந்தபட்ச குடிக்கும் வயதை 14 ஆக அறிவித்தது. 'சந்தேகம் முதல் வெளிப்படையான விரோதம்' வரையில் எதிர்வினைகள் இருந்தன. மேலும் 1943-இல் வேலை இடங்கள் கட்டாயமாக திணிக்கப்பட்டது எதிர்ப்பை மேலும் அதிகமாக்கியது.

ஒயினைக் காக்க உருவான தலைமறைவுக் குழுக்கள்

ஆக்கிரமிப்பின் தொடக்கத்திலிருந்தே பிரெஞ்சு ஒயின் உலகில் சிறிய எதிர்ப்புச்செயல்கள் வெளிப்பட்டன. பாரிஸின் புகழ்பெற்ற லா டூர் த'அர்ஜென்ட் உணவகத்தின் உரிமையாளர் முதல் ஷாம்பெயின் லாரன்ட்-பெரியர் ஒயின் லேபிளின் டி நோன்கோர்ட் குடும்பம் வரை அனைவரும் தங்கள் சிறந்த பழங்கால ஒயின்களை நாஜிக்களிடமிருந்து மறைத்தனர்.

தங்கள் பாதாள அறைகளில் அவசரமாகச் சுவர்களைக் கட்டி இதை அவர்கள் செய்தனர். தனது எட்டாவது வயதில் புதிதாகக் கட்டப்பட்ட சுவரின் முன் வைப்பதற்காக சிலந்திகளைத் தேடும் பணியில் தான் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அவற்றின் வலைகள் சுவருக்குப் பின்னால் இருக்கும் 'ரொமானே காண்டி’ யை (உலகின் மிகவும் பிரபலமான மற்றும் விலையுயர்ந்த ஒயின்கள்) நாஜிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் என்று கருதப்பட்டதாகவும், பர்கண்டியைச் சேர்ந்த ராபர்ட் ட்ரூஹின், கிளாட்ஸ்ட்ரப்ஸின் புத்தகத்தில் நினைவு கூர்ந்தார்.

இன்னும் பலர் ஜெர்மன் ஆர்டர்களை பயன்படுத்தி தங்கள் மோசமான பழங்கால ஒயின்களை வெளியேற்றினர். நாஜிக்கள் இந்த ஒயின்களை பெறும்போது அவற்றைப் பகுத்தறிந்து கண்டுபிடிக்கமாட்டார்கள் என்பதில் அவர்களுக்கு இருந்த உறுதிப்பாடு பல சமயங்களில் சரி என்றே நிரூபணமானது.

சில சந்தர்ப்பங்களில் பிரெஞ்சு ஒயின் தயாரிப்பாளர்கள் மறுபக்கத்திலிருந்தும் உதவி பெற்றனர். ஒயின் ஏஜெண்டுகள் அவர்களின் ஒயின் நிபுணத்துவத்திற்காக தெரிவுசெய்யப்பட்டவர்களாக இருந்தனர். எனவே அவர்கள் பெரும்பாலும் ஜெர்மன் அரசைக்காட்டிலும் தங்கள் சக ஒயின் நிபுணர்கள் மீது அதிக அனுதாபத்தைக் கொண்டிருந்தனர்.

பர்கண்டியின் ஒயின்ஃபுரர், அடால்ப் செக்னிட்ஸ், ஒயின் தயாரிப்பாளர்கள் தங்கள் சிறந்த பாட்டில்களை மறைத்து வைத்திருப்பதை கண்டும் காணாமல் இருந்ததாக கிளாட்ஸ்ட்ரப்ஸ் எழுதுகிறார். போர்டோவின் ஒயின் ஏஜெண்ட் ஹெயிஸ் போமர்ஸ், ஜெர்மன் அரசியல்வாதி கோரிங் மீது வெறுப்பு கொண்டிருந்தார். இதன் காரணமாக சட்டோ மூட்டான் ராத்ஸ்சைல்ட் ஒயினுக்காக கோரிங் கொடுத்த ஆர்டரின் இடத்தில் தவறாகப் பெயரிடப்பட்ட சாதாரண ஒயினை அவர் அனுப்பி வைத்தார்.

இந்தச் சிறிய எதிர்ப்புச்செயல்கள் ஒருபுறமிருக்க ஒரு பெரிய பிரெஞ்சு எதிர்ப்பு கனன்று கொண்டிருந்தது. இந்த நிலத்தடி வலையமைப்பில் கம்யூனிஸ்டுகள், சார்லஸ் டி கோலுக்கு (லண்டனில் இருந்துகொண்டு சுதந்திர பிரான்ஸ் மண்டலத்தை ஆட்சி செய்தவர்) விசுவாசமான கோலிஸ்டுகள் மற்றும் மாக்விஸ் அமைப்பினர் (விச்சி பிரான்ஸின் கட்டாயப்பணி சேவையில் இருந்து தப்பிச்சென்றவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கொரில்லா குழு) இடம்பெற்றிருந்தனர்.

போர் நடந்துகொண்டிருந்த நிலையில் பல்வேறு தலைமறைவுக் குழுக்கள் ஒருங்கிணைந்த வலையமைப்பாக மாறியது. 1943-ஆம் ஆண்டுக்குள் ஜெனரல் ஷார்ல் தெகால் (Charles de Gaulle) தலைமையில் பலர் ஒன்றிணைந்தனர். முக்கியமான தகவல்களை அணுகுவது, ஜெர்மன் போக்குவரத்து மற்றும் விநியோக பாதைகளை முடக்குவதற்கு ரயில் வலையமைப்பைத் தாக்குவது மற்றும் சக எதிர்ப்பு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்குச் சட்டவிரோத ஆயுதங்களை வழங்குதல் ஆகியவை பிரான்ஸின் விடுதலைக்கான நேச நாடுகளின் செயல் உத்தியில் கணிசமாக உதவின.

நாஜி கொள்கைகளால் ஏற்பட்ட அழுத்தம் மற்றும் இந்த 'நாஜி ஆட்சிக்கு விலைமதிப்பற்ற ஒயினை' வழங்குவதில் தங்களின் தனித்துவமான பங்கு காரணமாக, பல எதிர்ப்பு உறுப்பினர்கள் பிரெஞ்சு ஒயின் தயாரிப்பாளர்களாக இருந்தனர்.

உதாரணமாக, மத்திய டூரைன் பிராந்தியத்தில், க்ளாட்ஸ்ட்ரப்ஸ் ஒயின் தயாரிப்பாளர் ஜீன் மோன்மௌஸ்ஸோக்ஸ், நாஜி கட்டுப்பாட்டில் இருந்த வடக்கை, தெற்கில் உள்ள விச்சி ஆட்சியிலிருந்து பிரிக்கும் கோட்டிற்கு அருகில் வாழ்ந்ததாக எழுதுகிறார்.

ஒயினை கொண்டு செல்லும்பொருட்டு இந்தக்கோட்டை கடக்க அவர் தொடர்ந்து அழைக்கப்பட்டார். எதிர்ப்பு குழுவின் உறுப்பினரான மோன்மௌஸ்ஸோக்ஸ், ரெசிஸ்டன்ஸ் தலைவர்களை ஒயின் பீப்பாய்களில் அடைத்து அவர்களை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் அழைத்துச்சென்றார்.

இரண்டாண்டுகளுக்கு அவர் இந்தப்பணியை செய்தார். பல்வேறு நிலத்தடி குழுக்களிடையே தகவல்தொடர்புகளை எளிதாக்குவதற்கும் அவர்களின் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் இது உதவியது.

ஷாம்பெயின் பகுதியில் எதிர்ப்பு என்பது 2,000 ஆண்டுகள் பழமையான க்ரேயர்களுக்குள் (சுண்ணாம்பு குகைகள்) இருந்து செயல்பட்டது. ரீம்ஸில் உள்ள ருய்னார்ட் ஷாம்பெயின் வீட்டிற்குக் கீழே உள்ள 8கி.மீ. நீள நிலத்தடி குகை போன்ற பல குகைகள் இன்று பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. மேலும் இவை யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

1785-இல் நிறுவப்பட்ட புகழ்பெற்ற ஷாம்பெயின் ஹவுஸ் பைபர்-ஹெய்ட்ஸிக்கின் தலைவரான மார்க்விஸ் சுரேஸ் த'ஆலன், போரின்போது தனது சுண்ணாம்பு சுரங்கத்தை ஆயுத கிடங்காக மாற்றினார். நேச நாடுகளால் பாராசூட் மூலம் போடப்படும் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை அங்கு அவர் சேமித்துவைத்தார்.

இந்த ஆயுதமேந்திய எதிர்ப்பு, நார்மண்டியில் டி-டே படையெடுப்பிற்கு முன்னும் பின்னுமான நாட்களில் அத்தியாவசியமான தரை உதவிகளை வழங்கியது என்று பிரெஞ்சு ராணுவ (armed forces) அமைச்சகம் தெரிவிக்கிறது. முன்வரிசையை அடைய முயற்சிக்கும் எதிரிப் படைகளை பதுங்கியிருந்து அழிப்பது, முக்கிய நகரங்களை விடுவிப்பது மற்றும் மேற்கு துறைமுகங்களில் எதிரி பிரிவுகளை தடுத்து வைப்பது போன்றவை இவற்றில் அடங்கும்.

ஷாம்பெயின் மீதான நாஜிகளின் விருப்பம், உளவுபார்த்தலில் நேச நாடுகளுக்கு உதவியது. 1940-இல் ஜெர்மனி படையெடுப்பதற்கு சற்று முன்பு ருமேனியாவிற்கு ஒரு பெரிய ஷாம்பெயின் ஆர்டர் கொண்டுசேர்க்கப்பட்டது. அசாதாரண ஆர்டர்கள் மீது கவனம் செலுத்துவதில் ஷாம்பெயின் தயாரிப்பாளர்களின் உதவியை பிரெஞ்சு ரெசிஸ்டன்ஸ் நாடியது.

1941-ஆம் ஆண்டில், 'மிகவும் வெப்பமான நாட்டிற்கு', வெப்ப-எதிர்ப்பு பேக்கேஜிங்கில் ஷாம்பெயின் ஏற்றுமதிக்கான ஒரு பெரிய ஆர்டர் குறித்து பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு பிரென்ச் ரெசிஸ்டன்ஸ் தகவல் தெரிவித்தது. நாஜிக்களின் வட ஆப்பிரிக்கா மீதான திட்டமிட்ட படையெடுப்பின் தொடக்கத்திற்கு சற்று முன்பு அதுபற்றிய துப்பு கிடைத்தது.

போர் வெடித்தபோது ஷாம்பெயின் பகுதியைச்சேர்ந்த பெர்னார்ட் டி நோன்கோர்ட்டுக்கு வயது 19. போர் அறிவிக்கப்பட்டவுடன் அவர் எதிர்ப்பு பிரிவில் சேர்ந்தார். அவர் தனது குடும்பத்தின் லாரன்ட்-பெரியர் ஷாம்பெயின் ஹவுஸின் தைரியமான மற்றும் புதுமையான தலைவராக ஆவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஒரு குறிப்பிடத்தக்க எதிர்ப்பு போராளியாக ஆனார்.

டி-டே தரையிறங்கலுக்குப் பிறகு டி நோன்கோர்ட், கவச வாகன படைப்பிரிவில் சேர்ந்தார். டச்சாவின் விடுதலையிலும், மலை உச்சியில் இருக்கும் ஹிட்லரின் சொகுசு இருப்பிடம் 'ஈகிள்ஸ் நெஸ்ட்’ இன் முற்றுகையிலும் அவர் பங்கேற்றார். போர்டோ, கோக்னாக் முதல் தனது சொந்த இடமான ஷாம்பெயின் வரை நாஜிக்கள் ஒன்று திரட்டியிருந்த பல்லாயிரக்கணக்கான ஒயின் பாட்டில்களை அவர் அங்கு பார்த்தார். அவரது சேவைக்காக அவருக்கு கிராய் த கேர் (Croix de Guerre) விருது வழங்கப்பட்டது.

இந்த தைரியமான ஹீரோக்களில் பலர் இதற்கான விலையை செலுத்தவேண்டி இருந்தது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலிருந்து திராட்சைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற உதவ முயன்றபோது, பெர்னார்டின் சகோதரர் மாரிஸ் டி நோனன்கோர்ட் பிடிபட்டு சாக்சென்ஹவுசென் வதை முகாமுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் 1945-இல் இறந்தார். புகழ்பெற்ற ஒரு ஷாம்பெயின் ஹவுஸின் தலைவரான காஸ்டன் போய்ட்டெவின் மற்றும்

ஷாம்பெயின் ஒயின் தயாரிப்பாளர் ஹென்றி மார்ட்டின் உட்பட எண்ணற்றவர்கள் தங்கள் வீரத்திற்காக இதே தலைவிதியை அனுபவித்தனர்.

1944-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி நேசநாட்டுப்படைகள் நார்மண்டியில் தரையிறங்கின. இதன்மூலம் விடுதலை நடவடிக்கை துவங்கியது. ஆகஸ்ட் மாதத்தில் ஷாம்பெயின் மற்றும் போர்டோவுக்கும், செப்டம்பரில் பர்கண்டிக்கும் படைகள் சென்றடைந்தன.

1945-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி ஷாம்பெயினின் அதிகாரப்பூர்வமற்ற தலைநகரான ரீம்ஸில், சரணடைதல் ஆவணங்களில் ஜெர்மனி கையெழுத்திட்டது. வெற்றி தினத்தன்று அதை கொண்டாடுவதற்காக நேச நாட்டுப் படைவீரர்களுக்கு பிரெஞ்சு ஒயின் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

இன்று, ரீம்ஸின் மியூசி த லா ரெடிஷனுக்கு (சரணடைதல் அருங்காட்சியகம்) பார்வையாளர்கள் சென்றால், சரணடைதல் கையொப்பமிடப்பட்ட அந்த அறையிலேயே நிற்க முடியும்.

"போரின் போது ஷாம்பெயினில் இருந்தவர்கள் ஷாம்பெயின் குடிக்கவில்லை. அதேபோல பிரெஞ்சுக்காரர்களும் ஷாம்பெயின் குடிக்கவில்லை. நாங்கள் ஜெர்மானியர்களுக்கு அதை வழங்க வேண்டியிருந்தது. ஆனால் விடுதலைக்குப் பிறகு நேச நாட்டுப் படைகளுக்கு அதை வழங்கினோம்," என்கிறார் பேடோனெட்.

உலகின் மிகவும் பிரபலமான 'ஒயின் ஸ்பார்க்லிங்’ மீண்டும் ஒரு முறை கொண்டாட்டத்தின் ஒயினாக ஆனது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)