You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசியாவின் அடுத்த பிரதமர் அன்வார் இப்ராகிமா, மொஹைதின் யாசினா? - நீடிக்கும் அரசியல் குழப்பம்
- எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மலேசிய நாடாளுமன்றத்துக்கான 15ஆவது பொதுத்தேர்தல் முடிவடைந்து நான்கு நாள்களாகிவிட்டன. எனினும் நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
மலேசியர்களுக்கு இந்தக் காத்திருப்பும் அரசியல் குழப்பமும் புதிது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் இதுபோன்ற நிச்சயமற்ற சூழல் நிலவியதில்லை என்பதை சாமானியர்களும் உணர்ந்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்னர் அமைக்கப்பட்ட கூட்டணிகளுக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அதனால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. மலேசிய மாமன்னர் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண அனைத்துவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
முதற்கட்டமாக ஐக்கிய (ஒற்றுமை UNITY GOVERMENT)) அரசாங்கம் அமைக்கலாம் என்ற யோசனையை முன்வைத்துள்ளார் மாமன்னர். கூட்டணிகளுக்கு அப்பாற்றபட்டு இந்த ஏற்பாட்டுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
தற்போதைய அரசியல் குழப்பத்தை அறியும் முன்னர், மலேசிய அரசியல் கள நிலவரத்தை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.
காட்சியிலிருந்து காணாமல் போன மகாதீர்
மொத்தம் உள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 220 இடங்களுக்கு மட்டுமே கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் நான்கு பெரிய அரசியல் கூட்டணிகள் தேர்தலை எதிர்கொண்டன.
முன்னாள் பிரதமர்கள் மகாதீர், மொஹைதின் யாசின், இஸ்மாயில் சப்ரி யாகூப், அன்வார் இப்ராகிம் ஆகியோர் அந்நான்கு கூட்டணிகளுக்கும் தலைமையேற்றினர்.
நீண்ட நாள்களாக பிரதமர் பதவிக்காக காத்திருக்கும் அன்வார் இப்ராகிம் இம்முறை வெற்றிபெறுவார் என்ற கணிப்பு பொய்த்துப் போனது. மூத்த அரசியல் தலைவர் மகாதீரும் அவரது தலைமையிலான கூட்டணியும் படுவீழ்ச்சியை சந்தித்திருப்பதை அடுத்து, மலேசிய அரசியல் தளத்தில் அவருக்கு இனி இடம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
இடைக்கால பிரதமராக பொறுப்பில் இருந்து இஸ்மாயில் சப்ரி யாகூப் சார்ந்துள்ள அம்னோ கட்சியும், அக்கட்சி அங்கம் வகிக்கும் தேசிய முன்னணி கூட்டணியும் தனித்து ஆட்சியமைக்க வாய்ப்பில்லை.
எனவே 82 இடங்களைக் கைப்பற்றி உள்ள நம்பிக்கை கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்) அன்வார் அல்லது 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தேசியக் கூட்டணியின் (பெரிக்கத்தான் நேசனல்) மொஹைதின் யாசின் ஆகிய இருவரில் ஒருவர்தான் பிரதமராக வாய்ப்புள்ளது.
ஆனால் இருவருக்குமே குறைந்தபட்ச பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க பிற சிறிய, உதிரிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அதுதான் இன்னும் கிடைத்தபாடில்லை.
நேற்று பிற்பகல் 2 மணிக்குள் இவ்விரு தலைவர்களும் தங்களை ஆதரிக்கும் எம்பிக்களின் பட்டியலை அரண்மனையில் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய மாமன்னர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மொஹைதின் யாசின் பட்டியலை அளித்துள்ள நிலையில் அன்வார் இப்ராகிம் தரப்பு பட்டியலை அளிக்கவில்லை.
குறைந்தபட்ச பெரும்பான்மையுட் ஆட்சியமைக்க 111 இடங்கள் தேவை. இந்நிலையில், தமக்கு 113 எம்பிக்களின் ஆதரவு உள்ளதாக மொஹைதின் யாசின் தெரிவித்துள்ளார். மாமன்னரிடம் இதற்கான பட்டியலையும் சம்பந்தப்பட்ட எம்பிக்களின் சத்தியப் பிரமாணத்தையும் அவர் ஒருசேர அரண்மனையில் ஒப்படைத்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, மொஹைதின்தான் அடுத்த பிரதமர் என்பதாக தகவல் பரவியது.
திடீர் திருப்பம்: அன்வார், மொஹைதினைச் சந்தித்த மாமன்னர்
இந்நிலையில் திடீர்த் திருப்பமாகக அன்வார் இப்ராகிம், மொஹைதின் யாசின் ஆகிய இருவரையுமே அரண்மனைக்கு வரவழைத்து பேசினார் மலேசிய மாமன்னர். அப்போது இரு தரப்பினரும் கூட்டணிகள், கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு, நாட்டின் நலன் கருதி ஐக்கிய (ஒற்றுமை) அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
எனினும் மொஹைதின் யாசின் இந்த ஏற்பாட்டுக்குச் செவிசாய்க்க மறுத்துவிட்டார். அன்வார் இப்ராகிம் தரப்புடன் தம்மால் இணைந்து செயல்பட இயலாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாக அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால் அன்வார் இப்ராகிம் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துழைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மாமன்னருடனான சந்திப்புக்குப் பின்னர் அரண்மனைக்கு வெளியே கூடியிருந்த செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார் மொஹைதின். ஆனால் அன்வார் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது, மாமன்னருடனான சந்திப்பின்போது யார் பிரதமர் என்பது குறித்து ஏதும் பேசப்படவில்லை என்றார்.
முன்னதாக நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு மத்தியில், வாக்காளர்களின் தீர்ப்பு, மலேசியர்களின் நலன் கருதி தாம் இறுதி முடிவெடுக்க இருப்பதாக மாமன்னர் அறிவித்திருந்தார்.
இன்று காலையும் நீடித்த சந்திப்புகள்
இன்று காலை அவர் தேசிய முன்னணி எனப்படும் பாரிசான் கூட்டணியின் தலைவர்களை அரண்மனைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார். இந்தக் கூட்டணியின் வசம் 30 எம்பிக்கள் உள்ளனர்.
தேசிய முன்னணி தமக்கு ஆதரவளிக்கும் என்று அன்வார் இப்ராகிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரு தரப்புக்கும் இடையே புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட தேசிய முன்னணி எம்பிக்கள், அதன் முடிவில் அன்வார், மொஹைதின் ஆகிய இருவருக்குமே ஆதரவு அளிப்பதில்லை என முடிவு செய்துள்ளது. மாறாக, எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராக உள்ளதாகவும் அந்தக் கூட்டணியைச் சேர்ந்தவரும், மலேசியாவின் இடைக்கால பிரதமருமாகிய இஸ்மாயில் சப்ரி யாகூப் நேற்று அறிவித்தார்.
இதையடுத்தே 30 இடங்களைக் கைப்பற்றியுள்ள தேசிய முன்னணியின் தலைவர்களையும், 22 தொகுதிகளில் வென்றுள்ள ஜிபிஎஸ் கூட்டணியின் தலைவர்களையும் நேரில் வரவழைத்து இன்று ஆலோசனை நடத்தி உள்ளார் மாமன்னர். அப்போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
நாளை மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்பு
இதற்கிடையே, நாளை மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் மலேசிய மாமன்னர். அரசியல் ரீதியிலான குழப்பங்கள் தலைதூக்கும்போது மலாய் ஆட்சியாளர்கள் ஒன்றுகூடி உரிய தீர்வுகளைக் காண்பது வழக்கமாக உள்ளது. எனவே நாளை ஆட்சியாளர்களின் சந்திப்பு முடிந்த கையோடு, மாமன்னர் முக்கிய முடிவுகளை அறிவிக்கக் கூடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்