You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ராணுவ ரகசியங்களைக் கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் ஹனி ட்ராப்
- எழுதியவர், வரிகுடி ராமகிருஷ்ணா
- பதவி, பிபிசி செய்தியாளர்
அவர் பல நாடுகளுக்கு ரகசியமாக ஆயுதம் விற்பனை செய்யும் ஆயுத வியாபாரி.
ஆனால், சமூகத்தில் பலராலும் அறியப்பட்ட செல்வந்தர். பல அரசியல்வாதிகளுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கும். அவரை காவல்துறையினரால் நேரடியாக கைது செய்யவோ விசாரிக்கவோ முடியாது.
சட்ட விரோதமாக ஆயுத வியாபாரம் செய்யும் அந்த நபரிடம் இருந்து பணம் பறிக்கத் திட்டமிடும் போலீசார் ஒரு அழகான பெண்ணை பயன்படுத்துகின்றனர்.
அந்தப் பெண் அவரைக் கவர்ந்து நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறார். பின்னர் ஆயுத கடத்தல் தொடர்பான ரகசிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
இது மாதிரியான காட்சிகளை நாம் திரைப்படங்களில் குறிப்பாக ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அதிகம் பார்த்திருப்போம்.
இதற்குப் பெயர்தான் ஹனி ட்ராப் (honey trap).
ஒருவருடன் காதல் அல்லது பாலியல் உறவை ஏற்படுத்தி அவரிடம் இருந்து நமக்குத் தேவையான ரகசிய தகவல்களைப் பெறுவதற்கு ஹனி ட்ராப் என்று பெயர். பொதுவாக, இதற்கு அழகான தோற்றம் கொண்டவர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.
பழங்காலத்தில் ஹனி ட்ராப்
வரலாற்றை திரும்பிப் பார்த்தால் ரகசிய தகவல்களைப் பெற பழங்காலத்திலேயே பெண்கள் பயன்படுத்தப்பட்டதைக் காண முடியும்.
எந்த மாதிரியான பெண்களை உளவுப் பார்க்க பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஷமேற்றி எதிரிகளைக் கொல்ல பெண்களைப் பயன்படுத்தும் ‘விஷ கன்யா’ என்ற முறை மௌரியர் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உலகப் போரில் ஹனி ட்ராப்
சமீபத்திய காலங்களில் ஹனி ட்ராப் என்ற வார்த்தையை இந்தியாவில் அதிகம் கேட்க முடிகிறது.
இந்திய ராணுவ வீரர்கள் அல்லது அதிகாரிகள் ஹனி ட்ராப்பிற்கு உள்ளாகி அவர்களிடம் இருந்து ரகசிய தகவல்கள் பெறப்பட்டது தொடர்பான செய்திகளை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.
பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ உடன் தொடர்புடைய ஒரு பெண்ணின் ஹனி ட்ராப்பில் சிக்கி இந்தியா தொடர்பான ரகசிய ஆவணங்களை வழங்கிய குற்றச்சாட்டில் மத்திய அரசு ஊழியர் ஒருவரை கடந்த வெள்ளியன்று டெல்லி காவல்துறை கைது செய்தது.
இது போல பொறி வைத்து ரகசிய தகவல்களைச் சேகரிப்பது காலங்காலமாக இருந்து வருகிறது.
எதிரி நாடுகளின் போர் வியூகங்களைக் கண்டுபிடிக்க இரண்டாம் உலகப் போரிலும் ஹனி ட்ராப் பயன்படுத்தப்பட்டது. அதில் ஈடுபட்டவர்களில் அமெரிக்காவை சேர்ந்த பெட்டி பேக்கும் ஒருவர்.
அவர் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு உளவாளியாக வேலை செய்தார். எதிரி நாட்டைச் சேர்ந்தவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டு அவர் ரகசிய தகவல்களைச் சேகரித்தார்.
சோவியத் ரஷ்யாவிலும் கேஜிபி என்ற உளவுத்துறை ஹனி ட்ராப் உத்தியை பயன்படுத்தியது. மேற்கத்திய ராஜதந்திரிகள் மற்றும் ரகசிய சேவை அதிகாரிகளை கேஜிபி குறிவைத்தது.
முதல் உலகப் போரில் ஜெர்மனிக்காக உளவு பார்த்ததாக மாதா ஹாரி என்ற டச்சு நடனக் கலைஞர் குற்றம் சாட்டப்பட்டார்.
முக்கிய பிரெஞ்ச் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடன் உடலுறவில் ஈடுபட்டு, அந்நாடு தொடர்பான ரகசிய விவரங்களை ஜெர்மனிக்கு அனுப்பியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 1917ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஹனி ட்ராப்பில் ஈடுபட்ட ஆண்கள்
பொதுவாக ஹனி ட்ராப்பில் பெண்கள்தான் ஈடுபடுத்தப்படுவார்கள் என்ற புரிதல் உள்ளது. ஆனால், ஆண்களும் அதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
பனிப்போர் காலத்தில் கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியில் ஹனி ட்ராப்பில் ஆண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கிழக்கு ஜெர்மனி உருவாக்கிய ரோமியோ உளவாளிகள் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நிறைய ஆண்கள் உயிரிழந்ததால் தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தனியாக வாழும் பெண்கள் மேற்கு ஜெர்மனி அரசு அலுவலங்களில் அதிக அளவில் பணியாற்றினர்.
அவர்களைக் குறிவைத்து அழகான தோற்றம் கொண்ட உளவாளிகளைக் கொண்டு 'Stasi' என்ற சிறப்பு பிரிவு கிழக்கு ஜேர்மனியின் பாதுகாப்பு பிரிவில் உருவாக்கப்பட்டது.
இந்த உளவாளிகள் மேற்கு ஜெர்மனிக்குள் ஊடுருவி, அரசுப் பதவிகளில் இருக்கும் தனியாக வாழும் பெண்களுடன் நெருக்கமாகப் பழகினர். அதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் கிழக்கு ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டன.
சமூக ஊடகங்களில் ஹனி ட்ராப்
தற்போதைய இணைய மற்றும் சமூக ஊடக காலத்தில், ஹனி ட்ராப் முறையும் மாறிவிட்டது.
தற்போது பெரும்பாலான ஹனி ட்ராப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலமாக செய்யப்படுகின்றன.
ஹனி ட்ராப்பில் ஈடுபடும் நபர்கள் பெண்களின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் கணக்கு தொடங்கி, தங்கள் இலக்கைக் குறிவைக்கின்றனர்.
அவர்களுடன் நட்பாகப் பழகி, காதலிப்பது போல் நடித்து, பாலியல் ரீதியாக மயக்கி, அவர்களிடம் இருந்து ரகசிய தகவல்களைப் பெறுகின்றனர்.
இதில், சாதாரண நபர்களிடம் பணமும் முக்கிய பிரமுகர்களிடம் ராணுவம் அல்லது தேசப் பாதுகாப்பு தொடர்பான ரகசிய விஷயங்களும் பெறப்படுகின்றன.
இந்தியாவில் அதிகரிக்கும் ஹனி ட்ராப்
சமீபகாலமாக இந்தியாவில் ஹனி ட்ராப் அதிகரித்துவருகிறது. 2015 மற்றும் 2017க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையில் ஹனி ட்ராப் தொடர்பான ஐந்து வழக்குகள் பதிவாகியுள்ளதாக ராஜ்ய சபாவில் கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது.
பாகிஸ்தானின் ஹனி ட்ராப்பில் சிக்கி இந்தியா தொடர்பான ரகசியங்களைப் பகிர்ந்ததாக இந்தாண்டு ஜூன் மாதம் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஹனி ட்ராப்பில் சிக்கி பாகிஸ்தானுக்கு ரகசிய விவரங்களை வழங்கியதாக ஜெய்சல்மர் படையணியைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரை கடந்த 2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் காவல்துறை கைது செய்தது.
இதே மாதிரியான விவாகாரத்தில்தான், கடந்த வெள்ளியன்று இந்திய வெளியுறவுத் துறையில் ஓட்டுநராகப் பணியாற்றிய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்