You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
13 ஆயிரம் கோடி ரூபாய் பரிசு அறிவித்து அசர வைத்த லாட்டரி: 37 முறை யாரும் வெல்ல முடியாதது ஏன்?
- எழுதியவர், சாம் கார்பெல்
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்காவின் முதன்மையான பவர் பால் லாட்டரியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக யாரும் வெற்றி பெறாத நிலையில், இந்த வார இறுதி குலுக்கலில் இதுவரை இல்லாத அளவுக்கு உலகிலேயே பெரிய பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.
இப்போது விற்பனையில் இருக்கும் சனிக்கிழமையன்று வெளியான பவர்பால் ஜாக்பாக்ட் லாட்டரி விளம்பரத்தில் வரிக்கு முந்தைய பரிசானது 1.6 பில்லியன் அமெரிக்க டாலராக (தோராயமாக 13 ஆயிரம் கோடி ரூபாய்) அளவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு பவர் பால் லாட்டரி பரிசாக அதுவரை இல்லாத அளவுக்கு 1.59 பில்லியன் டாலர் பரிசுத் தொகையை மூன்று போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்டனர்.
292 மில்லியனில் ஒருவருக்குத்தான் லாட்டரியில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக பவர் பால் நிறுவனம் கூறுகிறது.
இந்த விளையாட்டு கடந்த 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் 50 மாநிலங்களில் தலைநகர் வாஷிங்டன், மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகள் ஆகிய அமெரிக்க பிரதேசங்கள் உள்ளிட்ட 45 மாநிலங்களில் இது நடத்தப்படுகிறது.
ஒரு டிக்கெட் ஜாக்பாட்டில் வெற்றி பெற ஆறு எண்களுடன் பொருந்திப் போக வேண்டும். தொடர்ச்சியாக நடைபெற்ற 39 குலுக்கல்களில் யாரும் வெற்றி பெறவில்லை.
பரிசுக்கான golden ticket என்ற டிக்கெட்டை வைத்திருப்பவருக்கு முழு தொகையும் ஆண்டுக்கு ஒருமுறை என்ற முறையில் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
எனினும் அனைத்து வெற்றியாளர்களும் முன் பண விருப்பத்தையும் தேர்வு செய்யலாம். அப்போது அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு குறைந்த தொகை மொத்தமாக வழங்கப்படும்.
சனிக்கிழமை இரவுக்கான குலுக்கல் ரொக்க பரிசு தோராயமாக 782.4 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தொடக்கத்தில் நடந்த வெற்றிகரமான ஜாக்பாக்ட்டை விடவும் இது ஒரு பெரிய முன்னெடுப்பாகும். அப்போது பென்சில்வேனியாவில் டிக்கெட் வாங்குபவர் ஒப்பீட்டளவில் மிதமான அளவில் 206.9 மில்லியன் டாலர் வெற்றி பெற வேண்டியிருந்தது.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு மூன்று வெவ்வேறு அமெரிக்கா மாநிலங்களைச் சேர்ந்த பரிசுக்கான டிக்கெட் வைத்திருந்த மூன்று பேர் பரிசை பகிர்ந்து கொண்டனர்.
வெற்றிபெற்ற டென்னசீ மாநிலத்தை சேர்ந்த ஜான் மற்றும் லிசா ராபின்சன், புளோரிடாவைச் சேர்ந்த மொரீன் ஸ்மித் மற்றும் டேவிட் கால்ட்ஸ்மிட், மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த மார்வின் மற்றும் மே அகோஸ்டா ஆகியோர் தோராயமாக மொத்த தொகை விருப்பத்தின் பேரில் 327.8மில்லியன் டாலர் பெற்றனர்.
ராபின்சன்கள் இருவரும் பரிசுக்கான கோல்டன் டிக்கெட் மற்றும் இதர மூன்று டிக்கெட்களை உள்ளூர் மளிகைக்கடையில் வாங்கியிருந்தனர். அப்போது அவர்கள் என்பிசி நியூஸ் டுடேவுக்கு அளித்த பேட்டியில், "ரொக்கமாக பரிசை பெற விருப்பம் தெரிவித்தோம். ஏனெனில் நாளை என்ன நடக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை" என்று கூறியிருந்தனர்.
என்பிசியிடம் பேசிய மொரீன் ஸ்மித் மற்றும் டேவிட் கால்ட்ஸ்மிட் ஆகியோர், தாங்கள் சீக்கிரமாக ஓய்வு பெற உள்ளதாகவும், மசாஜ் செய்வதற்கும், பழைய வாகனத்தை மாற்றுவதற்கும் இந்தப் பணத்தை செலவழிக்க இருப்பதாக கூறினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்