'மூன்று உலகையும் வென்ற' பயிர்: கஞ்சாவை ஏற்றுமதி செய்ய இலங்கை திட்டம்

    • எழுதியவர், யூ.எல்.மப்றூக்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வரவு - செலவுத் திட்ட உரையின் போது, 'த்ரைலோக விஜேபத்ர' (Trailoka Vijaya Patra) இலைப் பயிரை ஏற்றுமதிக்காக மாத்திரம் உற்பத்தி செய்வதற்கான முன்மொழிவொன்றினை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

அவர் அந்தப் பயிரின் பெயரைக் கூறும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தமாக சிரித்தனர். அப்போது ஜனாதிபதியும் மெலிதாகச் சிரித்து, கையொன்றை உயர்த்திக் காட்டியவாறு தனது முன்மொழிவைச் சமர்ப்பித்தார்.

'த்ரைலோக விஜேபத்ர' என்கிற பெயரை ஜனாதிபதி பயன்படுத்திய பின்னர், அது பேசுபொருளானது. பலருக்கு - அது என்ன என்று புரியவில்லை. கஞ்சா பயிரையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

'த்ரைலோக விஜேபத்ர' என்றால் 'மூன்று உலகங்களையும் வென்ற' என்று பொருளாகும். கஞ்சாவின் மருத்துவப் பயன்பாடுகளைக் குறிப்பிடும் வகையில் 'மூன்று உலகங்களையும் வென்ற இலைகளைக் கொண்ட பயிர்' என அதனைக் குறிப்பிடுகின்றனர். 'மூன்று உலகம்' என்பது பௌத்த பின்னணியைக் கொண்ட வார்த்தைகளாகும்.

பிரித்தானியர் காலத்திலிருந்து தொடரும் தடை

இலங்கையில் பிரித்தானியர் காலத்திலிருந்து கஞ்சா தடைசெய்யப்பட்டுள்ளது. 1929ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க நச்சு வகை அபின், அபாயகர ஔடதங்கள் கட்டளைச்சட்டத்தின், திருத்தப்பட்ட வடிவமான 1984ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க நச்சு வகை அபின், அபாயகர ஔடதங்கள் சட்டத்தின் கீழ், கஞ்சா தொடர்பான குற்றங்கள் தண்டிக்கப்படுகின்றன.

கஞ்சாவிலுள்ள டெட்ரா ஹைட்ரோ கனபினோல் (THC) எனும் ரசாயனம், மனிதனின் மூளைக் கலங்களைக் கொல்லக் கூடிய நஞ்சுப் பொருள் என்கிறார் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட்.

கஞ்சாவை ஆயுர்வேதத்தில் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தும் போது, அதிலுள்ள நஞ்சை முறிப்பதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கஞ்சாவை புகைப்பதன் மூலமாகவோ, அல்லது நஞ்சை முறிக்காமல் வேறு வகையில் பயன்படுத்துவதன் மூலமாகவோ அது மருந்தாக அமையாது என்று கூறும் அவர், "டெட்ரா ஹைட்ரோ கனபினோல் இருக்கத்தக்க நிலையில் கஞ்சாவை பயன்படுத்தினால், அது கஞ்சாவுக்கு அடிமையாகும் (Addiction) நிலையை ஏற்படுத்தி விடும்" என்கிறார்.

”நோயைக் குணப்படுத்த, தடுக்க, கண்டுபிடிப்பதற்காகவே மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மூன்று நோக்கங்களைத் தவிர, வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் எதுவும் மருந்தாக அமையாது” என அவர் விவரிக்கின்றார்.

மருந்துகள் வைத்தியர்களினால் கட்டாயமாகப் பரிந்துரைக்கப்பட வேண்டும் எனக்கூறும் அவர், மருந்தைப் பயன்படுத்தும் அளவு, வேளைகள் மற்றும் பயன்படுத்தும் அதிகூடிய காலம் என்பன குறிப்பிடப்படுதல் வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.

இவை பின்பற்றப்படாமல் மருந்து பயன்படுத்தப்பட்டால், அது மருந்தாக அமையாது என்றும், மருந்தை துஷ்பிரயோகம் செய்ததாகப் போய்விடும் எனவும் விளக்கினார்.

துஷ்பிரயோகம் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் என்ன?

இலங்கையில் கஞ்சா தடைசெய்யப்பட்டுள்ள போதும், மருந்து உற்பத்திக்காக கஞ்சாவை பயன்படுத்துவது சட்ட ரீதியாக அனுமதிக்கப்படுகிறது. தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டில் ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிப்பதற்காக இலங்கையில் 810 கிலோகிராம் கஞ்சா பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் மதன மோதகம், காமேஷ்வரி மோதகம் ஆகியவற்றைப் தயாரிப்பதற்காக அதிகளவு கஞ்சா பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை - பாலியல் எழுச்சியை ஏற்படுத்துவதற்கான மருந்துகளாகும்.

வரவு - செலவுத் திட்டத்தில் கஞ்சாவை ஏற்றுமதிக்காக பயிரிடும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், உலகளவில் கஞ்சாவை இறக்குமதி செய்யும் நிலை குறைந்து கொண்டு செல்வதாகவும், கஞ்சா சட்டரீதியாக்கப்பட்டுள்ள நாடுகளில் - உளப்பிளவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் றஸாட் கூறுகின்றார்.

”வெளிநாட்டு ஏற்றுமதிக்காக கஞ்சா பயிரிடப்படும் போது, அது உள்நாட்டில் துஷ்பிரயோகம் செய்யப்படாது என்பதற்கு அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன என்பது பற்றியும் பேசப்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இருப்பதை இழந்து விட்டு, இல்லாதது குறித்து யோசிக்கின்றோம்

"உலகளவில் இலங்கைத் தேயிலையின் தரம் உயர்வானது. அதேபோன்று இலங்கை ரப்பரும் உலகளவில் தரமானது. ஆனால் உலக சந்தையில் இவற்றுக்கான இடங்களை நம்மால் தக்க வைக்க முடியவில்லை. நம்மைச் சுற்றிக் கடலினை வைத்துக் கொண்டு - டின் மீன்களை இறக்குமதி செய்யும் நிலையில் நாம் இருக்கின்றோம்.

இதற்குள் கஞ்சாவை ஏற்றுமதி செய்து டாலர்களை சம்பாதிக்க முடியுமா என்கிற கேள்வி பொதுவெளியில் உள்ளது" எனவும் றஸாட் கூறுகின்றார்.

”ஆடை உற்பத்தியில் இலக்கைக்கு இருந்த இடம், தற்போது வங்கதேசத்துக்கு சென்றுள்ளது. ஆடை உற்பத்தித் துறையில் திறனுள்ள பல இலங்கைத் தொழிலாளிகள் வங்கதேசத்துக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் வங்கதேசத்திடம் நாம் கடன் வாக்கிக் கொண்டிருக்கின்றோம். இதுதான் நாட்டின் நிலைமை”.

கஞ்சா உற்பத்தி தொடர்பில் பேசும் அரசியல்வாதிகளுக்கு, அது குறித்து இருக்கும் அறிவு என்ன என்கிற கேள்வி பரவலாக உள்ளது எனக் கூறும் றஸாட், 1950ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு சிகரட் வகைகளைக் கொண்டு வருவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அத்தனை விளம்பர உத்திகளும், தற்போது கஞ்சா விடயத்திலும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.

இலங்கையில் சிகரட் சட்டரீதியாக்கப்பட்டமையினால் நாடு பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றமையினையும், புதைத்தலால் நோயுற்றவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இலவச மருத்துவம் வழங்கப்படுகின்றமையினையும் சுட்டிக்காட்டிப் பேசிய றஸாட், இதேநிலை கஞ்சா விடயத்திலும் உருவாகி விடுமோ என்கிற அச்சம் தனக்கு உள்ளதாகவும் கூறுகின்றார்.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தரவுகளின் படி, இலங்கையில் சட்டவிரோத போதைப் பொருள் சார்ந்த தவறுகளுக்காக 2021ஆம் ஆண்டு 1,10,031 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் கஞ்சா தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடையோரின் எண்ணிக்கை 50, 412 ஆகும். கடந்த வருடம் மட்டும் 15,628 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டது. 2021ஆம் ஆண்டில், நாட்டில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3,01,898 பேர் கஞ்சா பயன்படுத்தியுள்ளனர்.

சித்த மருத்துவத்தில் சிவ மூலிகை

கஞ்சா ஒருபுறமாக தடைசெய்யப்பட்ட போதைப் பொருளாக இருக்கும் நிலையில், மறுபுறமாக ஆயுர்வேத, சித்த மற்றும் பரம்பரை மருத்துவங்களில் மிக முக்கிய மருந்துப்பொருளாகவும் கஞ்சா பயன்படுத்தப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

கஞ்சாவின் இலை, பூ, சமூலம் (அடி வேருடன் கூடிய முழுத் தாவரம்), நார், விதை என அனைத்தும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதாகக் கூறுகின்றார் கைதடியில் அமைந்துள்ள சித்த போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட பதிவாளரும், அரச சித்த வைத்தியருமான எஸ். போல்டன் ரஜீவ்.

”கஞ்சாவுக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன. சித்த மருத்துவத்தில் இதனை 'சிவ மூலிகை' என்பர். சிவனை 'மூன்று உலகையும் வென்றவர்' என்றும் கூறுவதுண்டு. ஆனந்தமூலி, கற்பமூலி என்றும் கஞ்சாவுக்கு பெயர்கள் உள்ளன. கோரக்கர் மூலி எனும் பெயரும் உண்டு. கோரக்கர் என்பவர் 18 சித்தர்களில் ஒருவர். அவர் கஞ்சா உபயோகித்திருக்கிறார். மூதண்டம் எனும் பெயராலும் கஞ்சா அழைக்கப்படுகிறது" என, கஞ்சா குறித்து டாக்டர் போல்டன் ரஜீவ் விளக்கமளித்தார்.

கஞ்சா கைப்பு (கசப்பு) சுவையைக் கொண்டது என்றும், மருத்துவத்தில் இது கார்ப்பு (காரம்) சுவையாக வேலை செய்யும் எனவும் அவர் விவரித்தார்.

மருத்துவ செயற்பாடுகள்

இதன்போது கஞ்சாவின் மருத்துவ செயற்பாடுகள் (Pharmacological action) தொடர்பிலும் டாக்டர் போல்டன் ரஜீவ் கூறினார். ”கஞ்சா வெப்பமுண்டாக்கி, உறக்கமுண்டாக்கி, வலி தெரியாமல் தூக்கத்தில் வைத்திருக்கும், காமத்தைப் பெருக்கும், நோவு விளங்காமல் வைத்திருக்கும், சிறுநீர் பெருக்கி (அதிக சிறுநீரை உருவாக்கும்), பேறுவலி உண்டாக்கி (குழந்தைப் பேறின் போது வலியை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும்) என, பல வேலைகளைச் செய்யும்” என அவர் குறிப்பிடுகின்றார்.

சித்த மருத்துவத்தில் கஞ்சா தொடர்பான சிகிச்சை முறைகள், பாட்டு வடிவில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "உதாரணமாக தேரையர் வெண்பா, அகத்தியர் குணவாகடம் போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.

ஏடுகளில் இருந்த பாடல்கள் தற்போது பொழிப்பாக எழுதப்பட்டுள்ளது. 'குணபாடம் மூலிகைத் தொகுப்பு' என அது புத்தகமாக உள்ளது. ஒவ்வொரு மூலிகையின் குணங்களும் அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.. சித்த மருத்துவத்தில் இது முக்கியமானதொரு புத்தகம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

தசைப்பிடிப்பு, நரம்புவலி, பெரும்பாடு (பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு), கீழ்வாயு, மூட்டுவாதங்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா), வயிற்றோட்டம், ஒற்றைத் தலிவலி, வயிற்றுவலி, இருமல் மற்றும் மிகுந்த பசி போன்றவற்றை கஞ்சா மருந்து குணமாக்கும் எனவும் டாக்டர் ரஜீவ் தெரிவித்தார்.

"கஞ்சாவை பயன்படுத்தும் அளவிலேயே அதன் மருத்துவ செயற்பாடுகள் உள்ளன. கஞ்சா இலையின் தூளை 32 கிராம் தொடக்கம் 65 கிராம் வரையில்தான் மருந்ததாக நாங்கள் பயன்படுத்த முடியும். இலையிலிருந்து பிரித்தெடுத்து (உதாரணமாக சாறு வடிவில்) பயன்படுத்தும் போது 16 மில்லிகிராம் தொடக்கம் 48 மில்லிகிராம் வரையில் பயன்படுத்த முடியும்” என்கிறார்.

கஞ்சாவை 'சுத்தி' செய்து அதிலுள்ள நச்சுத்தன்மையை அகற்றாமல் பயன்படுத்தும் போது, நரம்பு மண்டலத்தில் அது பிரச்சினைகளை உண்டாக்கும் எனவும் எச்சரித்தார்.

மனப் பிரள்வை ஏற்படுத்தும்

"கஞ்சாவை அதிகளவில் ஒருவர் உட்கொண்டால், அதன் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் உடலில் வெளிப்படும். உதாரணமாக வெறிகொள்ள வைக்கும். அப்போது அந்த நச்சுத்தன்மையை இல்லாமல் செய்வது எப்படி என்பது தொடர்பாகவும் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. கஞ்சாவை அளவு கடந்து உள்ளெடுத்தால், வலிப்பு, மயக்கம், நாடியில் தளர்வு, கண்ணீர் பெருகுதல் போன்றவை ஏற்படும்” என, அதன் பாரதூரத் தன்மை குறித்தும் பேசினார்.

"கஞ்சாவை நஞ்சு நீக்காமல் அல்லது கஞ்சா மருந்தை அளவுக்கும் காலத்துக்கும் மீறிப் பாவிக்கும் போது, அது நரம்பு மண்டலத்தைத் தாக்கி அடிமையாதலை (Addiction) ஏற்படுத்தும். அதாவது 'அதுதான் வேண்டும்' எனும் மனநிலை உருவாகும்.

நீண்ட நாட்கள் பாவனையின் போது நரம்பு மண்டலத்திலுள்ள 'செல்'கள் அழிக்கப்படுவதால் உடலில் தளர்வுநிலை, வலிப்பு போன்றவை ஏற்படும். ஆரம்பத்தில் பாலியல் எழுச்சியை கஞ்சா உருவாக்கினாலும் - அதனை அதிகளவிலும் தொடர்ச்சியாகவும் எடுத்துக் கொள்ளும் போது, பாலியல் எழுச்சியை இல்லாமலாக்கி விடும்" என்றும், ”ஒரு கட்டத்தில் மனப் பிரள்வு நிலையை இது ஏற்படுத்தி விடும்" எனவும் டாக்டர் போல்டன் ரஜீவ் எச்சரித்தார்.

எது எவ்வாறாயினும், இலங்கையில் சட்டத்தின் பிரகாரம் அபாயகர ஔடதமாக கஞ்சா உள்ளதால், அதனை தாம் எவருக்கும் சிபாரிசு செய்யவதில்லை எனவும் அவர் கூறினார்.

யோசனையின் முன்னோடி

கஞ்சாவை இலங்கையில் சட்டபூர்வமாக்க வேண்டுமென்றும், அதனை ஏற்றுமதிக்காகப் பயிரிட வேண்டுமெனவும் அண்மைக் காலமாக உரத்துப் பேசி வருபவர் - சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானாக கமகே. இதற்காக இவர் பல்வேறு கண்டனங்களையும் எதிர்கொண்டு வருகிறார்.

கஞ்சா தொடர்பில் 1800களில் இலங்கையில் பிரித்தானியா கொண்டுவந்த கட்டளைச் சட்டத்தை ரத்து செய்து, கஞ்சா பயிர்ச் செய்கையை சட்டபூர்வமாக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ள டயானா கமகே, கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்து - அண்ணிய செலாவணி பிரச்னைக்கு தீர்வுகாண முடியுமென்றும், அதன்மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் எனவும் நாடாளுமன்றில் பல தடவை கூறியுள்ளார்.

கஞ்சா செடி என்பது இயற்கையாலும் கடவுளாலும் வழங்கப்பட்ட வரம் என்றும், மதம், கலாசாரம் எனும் வரையறைகளுக்குள் இருந்தால் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

"அரசின் அனுசரணையுடன் வர்த்தக ரீதியாக கஞ்சா பயிரிடப்பட வேண்டும். கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்தால் இரண்டு, மூன்று வருடங்களில் நாட்டின் கடனை அடைத்து விட முடியும். வெளிநாடுகளிடமோ சர்வதேச நாணய நிதியத்திடமோ நாம் கையேந்தத் தேவையில்லை" எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கஞ்சாவை ஏற்றுமதிக்காக பயிரிடும் ஜனாதிபதியின் யோசனையை நாடாளுமன்றில் வரவேற்றுப் பேசிய டயானா கமகே, "இலங்கையில் கஞ்சாவை பயிரிடுவதற்கு ஜனாதிபதி முன்வைத்த யோசனையும், இந்த மருத்துவ மூலிகையின் மகத்துவத்தை ஜனாதிபதி உணர்ந்திருப்பதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

கஞ்சா செய்கை மூலம் இரண்டு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீடுகளை அடுத்த வருடம் நாட்டுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றில் தெரிவித்திருக்கிறார்.

கஞ்சா - இலங்கையின் கலாசாரம்

இதேவேளை, ஜனாதிபதியின் கஞ்சா தொடர்பான யோசனையை, முன்னாள் சுகாதார அமைச்சரும் எதிர்க்கட்சி நாடாளுமுன்ற உறுப்பினருமான டாக்டர் ராஜித சேனாரத்னவும் சனிக்கிழமையன்று (19ஆம் தேதி) நாடாளுமன்றில் வரவேற்றுப் பேசினார்.

கனடா, அமெரிக்கா நாடுகளில் ட்ரன்கியுலைசர் (Tranquilizer) மருந்துகளிலும் (பதட்டம், பயம் மற்றும் மனக் குழப்பம் போன்ற நிலைகளைக் குறைக்கப் பயன்படுத்தும் மருந்து). மன அழுத்தத்துக்கு எதிரான மருந்துகளிலும் கஞ்சா பயன்படுத்தப்படுவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

"நான் சுகாதார அமைச்சராக இருந்தபோது, ராணுவத்தைக் கொண்டு கஞ்சாவைப் பயிரிட்டு அதனை மருந்துப் பொருளாக ஏற்றுமதி செய்யும் யோசனையொன்றை அமைச்சரவையில் முன்வைத்தேன். அப்போது இது கலாசாரத்துக்கு விரோதமானது என அப்போதைய ஜனாதிபதி கூறினார். நான் அவருடன் அங்கு தர்க்கிக்க விரும்பவில்லை. பிறகு அவரிடம் சென்று, எமது நாட்டின் கலாசாரமாக கஞ்சா இருந்தது எனக் கூறினேன்" என டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

வெள்ளைக்காரர்கள் இலங்கைக்கு புகையிலையைக் கொண்டுவந்து கஞ்சா கலாசாரத்தை இல்லாமலாக்கினர் என்றும் புகையிலைக்கு கிராக்கி ஏற்படாததால் கஞ்சாவை தடை செய்தனர் என்றும் இதுதான் உண்மையான வரலாறு எனவும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.

"கஞ்சாவை புகைப்பது நுரையீரலுக்கு உகந்ததல்ல. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்துக்கு அதைப் பயன்படுத்த முடியும். அதேபோன்று அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் நான்கைந்து பில்லியன் டாலர் வருமானத்தை வருடமொன்றுக்குப் பெற்றுக்கொள்ள முடியும்" எனவும் முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: