இந்தியா - பாக். எல்லையில் 15 ஆண்டுக்கு பின் மீண்டும் தலைதூக்கும் தீவிரவாதம் - என்ன காரணம்?

பட மூலாதாரம், GETTY IMAGES
- எழுதியவர், மஜித் ஜஹாங்கீர்
- பதவி, பிபிசி இந்திக்காக ஸ்ரீநகரில் இருந்து
அடர்ந்த காடுகள், எளிதில் செல்ல முடியாத மலைகளால் சூழப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் இந்திய ராணுவத்தின் மீது சமீபத்திய தீவிரவாத தாக்குதல்களுக்குப் பிறகு இந்தப் பகுதி மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தப் பகுதி தீவிரவாதத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான என்கவுன்ட்டர்கள் குறித்த செய்திகள் வாயிலாக மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி இந்திய ராணுவத்தின் இரண்டு வாகனங்கள் மீது தீவிரவாதிகள் பதுங்கி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல், ஜம்மு பிராந்தியத்தின் பூஞ்ச்-ரஜோரியில் ராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
ராணுவத்தின் மீதான தாக்குதலுக்குப் பின்னர் பொதுமக்களில் இருந்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட எட்டு பேரில், மூன்று பேர் ராணுவ முகாமில் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவர்கள் மூவரும் பின்னர் உயிரிழந்தனர். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அவர்களின் வீடுகளுக்குச் சென்று வருத்தம் தெரிவித்தார்.
இவர்களது மரணம் குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூஞ்ச்-ரஜோரி பகுதி

பட மூலாதாரம், GETTY IMAGES
பூஞ்ச் மற்றும் ரஜோரி ஜம்மு பிராந்தியத்தின் இரண்டு தனித்தனி மாவட்டங்கள். அவை பிர்பஞ்சல் என்றும் அழைக்கப்படுகின்றன. இது அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட பகுதி. எளிதில் செல்ல முடியாத உயரமான மலைகளுக்கு மத்தியில் இந்த மக்கள் வாழ்கின்றனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை சுமார் 90 சதவீதம், ரஜோரியில் இந்த எண்ணிக்கை 56 சதவீதம்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் எப்போதும் வன்முறையை எதிர்கொள்கின்றனர்.
ஸ்ரீநகரில் இருந்து பூஞ்ச் வரை சுமார் 140 கிலோமீட்டர் தூரம் உள்ளது. 2021ஆம் ஆண்டுக்கு முன், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த மீறல் சம்பவங்கள் இந்தப் பகுதிகளில் தொடர்ந்து பதிவாகின. இதற்கு இரு நாடுகளும் பரஸ்பரம் பொறுப்பேற்றன.
சில நேரங்களில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சாதாரண மக்களும் பலியாக வேண்டியிருந்தது.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இரண்டு முறை போர் நிகழ்ந்துள்ளது. இந்தப் பகுதிகள் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என இரு நாடுகளுமே உரிமை கோருகின்றன. ஆனால், இரு நாடுகளும் இங்கு வெவ்வேறு பகுதிகளைக் கட்டுப்படுத்துகின்றன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 2021இல் மீண்டும் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன் பின்னர் பிர்பஞ்சல் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் பிற பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதி நிலவுகிறது. ஆனால், சமீப காலமாக, பிர்பஞ்சல் பகுதியில் தீவிரவாத தாக்குதல்களும், என்கவுன்ட்டர்களும் அதிகரித்து வருகின்றன.
குஜ்ஜார், பஹாரி மற்றும் பேக்கர்வால் சமூகத்தினர் பூஞ்ச் மற்றும் ரஜோரியில் வாழ்கின்றனர். இந்தப் பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் பஹாரி மொழி பேசுகின்றனர்.
இங்கு 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோரின் உறவினர்கள் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் வசிக்கின்றனர்.
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் இந்தப் பகுதி பிர்பஞ்சல் என்றும், பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் பகுதி நீலம் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே 200 கி.மீ நீளமும் 30 கி.மீ அகலமும் கொண்ட கட்டுப்பாட்டுக் கோடு உள்ளது. இது உலகின் மிக ஆபத்தான எல்லைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பிர்பஞ்சல் பகுதியின் உயரமான மலைகள், அடர்ந்த காடுகள் மற்றும் எளிதில் செல்ல முடியாத சாலைகள் காஷ்மீரின் தெற்குப் பகுதிகளை இணைக்கின்றன.
இந்த எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகள் தெற்கு காஷ்மீர் மற்றும் பிர்பஞ்சல் மலைகளின் வழித்தடங்களை எளிதாகப் பயன்படுத்தி, பிர்பஞ்சலில் இருந்து தெற்கு காஷ்மீரை அடைய முடியும் என்று சில பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், GETTY IMAGES
பிர்பஞ்சலில் உளவுத்துறை அலட்சியம் காட்டுகிறதா?
பிர்பஞ்சல் பகுதியில் தொடர்ச்சியான தீவிரவாத சம்பவங்களுக்குப் பிறகு, இந்த பிராந்தியத்தில் உளவுத்துறை அலட்சியம் காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிர்பஞ்சலில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்த கேள்விக்கு, ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் ஷெஷ்பால் வைத் கூறுகையில், "உளவுத்துறை பலவீனமாக இருப்பது ஏதோ ஒரு வகையில் தெரிகிறது. இதனால் ராணுவத்தினர் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன,” என்றார்.
மேலும், "இந்த ஆண்டு, பிர்பஞ்சலில் ராணுவத்தினர் மீது நான்கு பெரிய தாக்குதல்கள் நடந்தன. அதில் ராணுவத்தினர் உயிரிழக்க நேரிட்டது. அந்தப் பகுதியில் உளவுத்துறை வலுவாக இருந்திருந்தால், இதுபோன்ற தாக்குதல்கள் நடந்திருக்காது. எங்கிருந்து தீவிரவாதிகள் ஊடுருவினர் என்பதைக் கண்காணித்திருந்தால் இவ்வளவு பெரிய தாக்குதல்கள் நடந்திருக்காது. ராணுவத்தினர் உயிரிழந்திருக்க மாட்டார்கள். அரைகுறை தகவல் கிடைப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன," எனத் தெரிவித்தார்.
பிர்பஞ்சல் பகுதி கடந்த 15 ஆண்டுகளில் தீவிரவாதத்தில் இருந்து விடுபட்டுள்ளது. காஷ்மீரில் 1989ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான வன்முறை இயக்கம் தொடங்கியபோது, விரைவில் பிர்பஞ்சலிலும் வன்முறைத் தீ மூண்டது. இந்தப் பகுதி நீண்ட காலமாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டது.
ஆனால், 2007இல், பாதுகாப்புப் படையினர் இந்தப் பகுதியில் தீவிரவாதத்தை ஒழித்தனர். அன்றிலிருந்து இன்று வரை சில நேரங்களில் சர்வதேச எல்லையில் சில ஊடுருவல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தாலும், பாதுகாப்புப் படையினர் சமாளித்து வந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தப் பகுதியில் 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், இன்னும் 20-25 பேர் எஞ்சியுள்ளதாகவும் கூறுகிறார் ஷெஷ்பால் வைத். எனவே, ஐம்பதுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தப் பகுதிக்குள் ஊடுருவியிருப்பதுதான் இதன் அர்த்தம் என்று அவர் கூறுகிறார். எல்லைக்கு அப்பால் இருந்து இந்த ஊடுருவல் நடந்துள்ளது என்கிறார் அவர்.
ஜம்முவின் பிர்பஞ்சல் பகுதியில் இன்னும் 20 முதல் 25 தீவிரவாதிகள் இருப்பதாக இந்திய ராணுவத்தின் வடக்குத் தளபதி உபேந்திர திவேதி நவம்பர் 24, 2023 அன்று தெரிவித்திருந்தார்.
இந்திய ராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரி தீபேந்தர் சிங் ஹூடாவும், பிர்பஞ்சல் பகுதியின் கடுமையான தரை உள்கட்டமைப்பு காரணமாக, அதிக பாதுகாப்புப் படைகள் அங்கு நிறுத்தப்பட வேண்டும் என்றும் உளவுத்துறை பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்.
மேலும் அவர், "தீவிரவாதிகள் இரண்டு முறை பதுங்கி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் நடந்திருக்கக்கூடாது. இதுபோன்ற தாக்குதல்கள் ராணுவத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகின்றன," என்றார்.
"சில நேரங்களில் இங்கு எதுவும் நடக்கவில்லை என்பது புரிகிறது. இதனால், ராணுவத்தின் நெறிமுறைகள், நடைமுறைகள் மற்றும் பயிற்சிகள் பலவீனமாகின்றன. இங்கு எதுவும் நடக்காததால் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று கருதப்படுகிறது. இப்போது பிர்பஞ்சலில் வன்முறை சம்பவங்கள்ள் அதிகரித்துள்ளன. இதைத் தடுப்பதற்கான உத்தியைக் கண்டுபிடிக்க வேண்டும்," என்றார்.
களத்தில் எந்த வேலையும் நடக்கவில்லையா?

பட மூலாதாரம், GETTY IMAGES
தீவிரவாதத்திற்கு எதிராகச் செயல்படும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர், பிர்பஞ்சல், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், தற்போது மீண்டும் இந்தப் பகுதியில் தீவிரவாத சம்பவங்கள் நடந்து வருவதாகவும் கூறினார்.
களத்தில் மேலும் பல பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தீவிரவாதம் மீண்டும் வளராமல் தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஷெஷ்பால் வைத் இதே கருத்தை வலியுறுத்துகிறார். கடந்த பதினைந்து ஆண்டுகளில் பிர்பஞ்சல் பகுதி வன்முறையில் இருந்து விடுபட்டுள்ளது, ஆனால் இப்போது மீண்டும் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதே வன்முறை காணப்படுவதாக அவர் கூறுகிறார்.
தீபேந்தர் சிங் ஹூடா, பிர்பஞ்சலின் தற்போதைய நிலை குறித்து விவரிக்கும்போது, "களத்தில் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று எங்களால் சொல்ல முடியாது. ஆனால், இங்கு தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த விதத்தில், உள்ளூர் பேக்கர்வால் மற்றும் குஜ்ஜார் சமூகத்தினருக்குப் பெரும் பங்கு உண்டு. இப்போது அங்கு தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கினால், உள்ளூர் சமூகங்களை மீண்டும் அணுகுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்," என்றார்.
காஷ்மீருடன் ஒப்பிடும்போது பிர்பஞ்சலில் பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவுத்துறையின் இருப்பு குறைவாக இருப்பதாக ஹூடா நம்புகிறார். இதன் காரணமாக தீவிரவாதிகள் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அதனால் ராணுவம் இழப்பைச் சந்திக்க நேரிட்டது என்றும் அவர் கூறுகிறார்.
இதுபோன்ற சம்பவங்களை நிறுத்த வேண்டுமானால் அங்குள்ள உளவுத்துறையை மேம்படுத்த வேண்டும் என்றும் ஹூடா கூறினார்.
பாதுகாப்புப் படையின் முன்னுள்ள சவால்கள் என்ன?

பட மூலாதாரம், GETTY IMAGES
காஷ்மீரில் சமவெளிகள் இருப்பதாகவும் ஆனால் காஷ்மீருடன் ஒப்பிடும்போது பிர்பஞ்சல் பகுதி கரடுமுரடான மலைகள் கொண்ட பகுதி என்றும் ஹூடா கூறுகிறார். இங்கு அனைத்தையும் அணுகுவது எளிதான காரியம் அல்ல.
"பிர்பஞ்சல் ஒரு கடினமான பகுதி. இங்கு பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் எந்தத் தகவலையும் உடனடியாகப் பெறுவது கடினம். எல்லா கிராமங்களுக்கும் சென்று உள்ளூர் மக்களைச் சந்திப்பது எளிதானது அல்ல," என அவர் கூறுகிறார்.
காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் வன்முறையின் நிலை என்ன?

பட மூலாதாரம், GETTY IMAGES
ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராகp பெரிய அளவிலான பிரசாரம் நடந்து வருகிறது.
இந்தப் பிரசாரத்தின் மூலம், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் பாதுகாப்புப் படையினர் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். காஷ்மீரில் அமைதி நிலவுவது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இருப்பினும், காஷ்மீரில் குறிவைத்து கொலை செய்யப்படுவது தொடர்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், ஜம்மு காஷ்மீர் காவல்துறையைச் சேர்ந்த 3 பேர் குறிவைத்துக் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு, காஷ்மீரில் பணிபுரியும் பல காஷ்மீரி பண்டிட்டுகள், காஷ்மீர் அல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் காஷ்மீர் அல்லாத அரசு ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு தொடங்கிய தொடர் கல் வீச்சு மற்றும் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதல் சம்பவங்களும் குறைந்துள்ளன.
"காஷ்மீரில் தீவிரவாதம் எப்படி கட்டுப்படுத்தப்பட்டதோ, அதைத் தக்க வைத்துக்கொள்ளவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் இருக்க முடியும்" என்று ஷெஷ்பால் வைத் கூறுகிறார்.
அக்டோபர் 2023இல், அப்போதைய காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங், 2010ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டில் இதுவரை காஷ்மீரின் 10 உள்ளூர் இளைஞர்கள் தீவிரவாதக் குழுக்களில் சேர்ந்துள்ளனர், அதேநேரம் 2010ஆம் ஆண்டில் 210 இளைஞர்கள் ஆயுதக் குழுக்களில் சேர்ந்துள்ளதாகக் கூறுகிறார்.
மத்திய அரசு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், GETTY IMAGES
இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, டிசம்பர் 8, 2023 அன்று மக்களவையில் ஜம்மு காஷ்மீரில் நடந்த வன்முறையின் சமீபத்திய புள்ளிவிவரங்களை வழங்கினார்.
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் குறையும் என்று ஏற்கெனவே கூறியதாக அமித் ஷா கூறினார்.
உள்துறை அமைச்சர் அளித்த தரவுகளின்படி, "ஜம்மு-காஷ்மீரில் 2004 முதல் 2008 வரை மொத்தம் 40,164 பயங்கரவாதச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2008 முதல் 2014 வரை 7,217 சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது இவை 2,197 ஆகக் குறைந்துள்ளன. இத்தகைய சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்துள்ளன,” எனத் தெரிவித்தார்.
அரசாங்க தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில் 48 ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன. அதேநேரம், 2010இல் இந்த எண்ணிக்கை 489 ஆக இருந்தது.
இருப்பினும், இந்த ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரண்டு பெரிய தீவிரவாதத் தாக்குதல்களில், நான்கு ராணுவ வீரர்கள் தவிர, ஒரு ராணுவ கர்னல், ஒரு மேஜர் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டனர்.
பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் நடைபெற்ற சம்பவங்களைப் போல இந்த இரண்டு சம்பவங்களும் அனந்த்நாக் மற்றும் குல்காம் பகுதிகளின் அடர்ந்த காடுகளில் நடந்துள்ளது.
பிர்பஞ்சல் தீவிரவாத சம்பவங்கள்

பட மூலாதாரம், GETTY IMAGES
கடந்த இரண்டு ஆண்டுகளில் பிர்பஞ்சல் பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களும் சுமார் பொதுமக்களுள் 10க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 2021இல், பிர்பஞ்சலில் 17 நாட்கள் நீடித்த என்கவுண்டர் நடந்தது. இதில் ஒன்பது இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு பிர்பஞ்சலில் நடந்த மிகப்பெரிய தீவிரவாத சம்பவம் இது.
அக்டோபர் 2021 தாக்குதலுக்குப் பிறகு பிர்பஞ்சல் பகுதியில் 21, டிசம்பர் 2023இல் நான்காவது முறையாகத் தாக்குதல் நடைபெற்றது.
இந்த ஆண்டு இதுவரை ஜம்மு பகுதியில் ராணுவத்தைச் சேர்ந்த மொத்தம் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், பிர்பஞ்சலில் ராணுவத்தைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதுதவிர, மே 5ஆம் தேதி 5 ராணுவ வீரர்களும், நவம்பர் 22ஆம் தேதி 5 பேரும், டிசம்பர் 21ஆம் தேதி 4 பேரும் உயிரிழந்தனர்.
’சௌத் ஏசியா டெரரிசம் போர்ட்டல்’ (South Asia Terrorism Portal) வெளியிட்ட தகவலின்படி, 2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இந்த அமைப்பு, காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத சம்பவங்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கிறது.
கடந்த 2022ஆம் ஆண்டில், தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மொத்தம் 30 பேர் கொல்லப்பட்டனர், 2023இல் இதுவரை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 33 பேர் கொல்லப்பட்டனர்.
இருப்பினும், 2018இல் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 95 பேரும், 2019இல் 78 பேரும், 2020இல் 56 பேரும், 2021இல் 45 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தெற்காசிய பயங்கரவாத இணையதளத்தின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் இறப்பு விகிதம் மாறியுள்ளது.
முன்பு ஆறு தீவிரவாதிகளுக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி என்ற விகிதத்தில் உயிரிழப்புகள் இருந்தன. இப்போது அது இரண்டரை தீவிரவாதிகளுக்கு ஒரு பாதுகாப்பு அதிகாரி என்ற அளவில் உள்ளது.
பாதுகாப்புப் படையினர் முன்பைவிட அதிக உயிரிழப்புகளைச் சந்திக்கின்றனர் என்பதே இதன் பொருள் என்கிறார்கள் நிபுணர்கள்.
இருப்பினும், பிர்பஞ்சலில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் ராணுவத்தின் மீதான நேரடித் தாக்குதல் அல்ல. பல இடங்களில் தீவிரவாதிகள் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்ததும், தீவிரவாத நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அங்கு பாதுகாப்புப் படையினர் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
ஜனவரி 2023 முதல் நவம்பர் 2023 வரை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் உள் பகுதிகளில் 27 தீவிரவாதிகள் ராணுவம் மற்றும் காவல்துறையினரால் கொல்லப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில், 16 ராணுவ வீரர்கள் என்கவுன்ட்டரில் உயிரிழந்தனர்.
ஜனவரி 2023இல், ரஜோரியின் டோங்கர்கானில், தீவிரவாதிகள் ஏழு இந்துக்களை கொன்றனர். பல தாக்குதல்களில், 21 டிசம்பர் 2023 தாக்குதலில் நடந்ததைப் போல, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் எந்தத் தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பிர்பஞ்சலில் ராணுவத்தின் மீதான தாக்குதல்களுக்கு மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAPF) பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பால் கட்டுப்படுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன.
மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி முதன்முறையாக 2019இல் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது நடைமுறைக்கு வந்தது.
உள்ளூர் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், GETTY IMAGES
பிர்பஞ்சலில் நடந்த இந்தத் தீவிரவாத சம்பவங்கள் சாதாரண மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிர்பஞ்சலில் திடீரென்று என்ன நடக்கிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இது குறித்து பூஞ்ச் உள்ளூர் தலைவர் சஃபிர் சோஹர்வர்தி கூறுகையில், ”பிர்பஞ்சலில் தீவிரவாதம் பரவி வருவது சாமானிய மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
பதினைந்து ஆண்டுக்காலமாக இந்தப் பகுதி தீவிரவாதத்தில் இருந்து விடுபட்டுள்ளதாகவும், தற்போது திடீரென அதிகரித்து வரும் தீவிரவாத சம்பவங்கள் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
”பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தபோது, இங்குள்ள உள்ளூர் மக்கள் பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக நின்று அவர்களுக்கு முழு ஆதரவு அளித்தனர். ஆனால் இன்று நிலைமை வேறு. பாதுகாப்புப் படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. எங்காவது தீவிரவாதச் சம்பவம் நடந்தால், பாதுகாப்புப் படையினர் சாதாரண மக்களைத் துன்புறுத்துகிறார்கள்," என்று அவர் கூறினார்.
பூஞ்ச் நகரின் மற்றொரு உள்ளூர்வாசியான முகமது சையத் கூறுகையில், ”பிர்பஞ்சலில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பொதுமக்களே கவலைப்படுகிறார்கள்,” என்றார்.
இங்கு ஏன் அமைதி குலைக்கப்படுகிறது என்பது அவரது கேள்வி.
தீவிரவாத சம்பவங்களுக்கு ஏன் பிர்பஞ்சல் தேர்ந்தெடுக்கப்படுகிறது?

பட மூலாதாரம், GETTY IMAGES
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதத்திற்கு எதிரான பிரசாரம் நடத்தப்பட்ட விதம் மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதால், பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் வாழ்வது கடினமாகிவிட்டது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால், அவர்கள் அதிக சவால்களைச் சந்திக்காத மலைப்பாங்கான பகுதிகளுக்கு நகர்ந்துள்ளனர்.
இதையறிந்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் இருப்பதால் இந்தப் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஷேஷ்பால் வைத் கூறுகையில், "காஷ்மீரில் சில நாட்களாக தீவிரவாதம் குறைந்துள்ளது. தீவிரவாதிகள் அங்கு தஞ்சம் அடைவது கடினமாகி வருகிறது. தற்போது ஜம்முவின் பிர்பஞ்சல் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கே அவர்கள் எளிதில் ஊடுருவ முடியும் மற்றும் எளிதில் மறைந்து கொள்ளலாம். இந்தப் பகுதியில் மலைகளுக்கு மத்தியில் பல குகைகள் உள்ளன, அடர்ந்த காடுகள் உள்ளன, இது எல்லா பக்கங்களில் இருந்தும் சூழப்பட்டுள்ளது. தங்களுக்குப் பல்வேறு நன்மைகள் இருப்பதால் அவர்கள் இப்பகுதியைத் தேர்ந்தெடுக்கின்றனர்," என்றார்.
கடந்த பதினைந்து ஆண்டுகளில், ஜம்மு பகுதியில் பாதுகாப்புப் படைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், அதைச் சாதகமாகப் பயன்படுத்தி தீவிரவாதிகள் மீண்டும் தங்கள் காலடியை நிலைநிறுத்தத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் கூறுகிறார்.
பிர்பஞ்சலில் நடக்கும் நிகழ்வுகளை ஷெஷ்பால் வைத் "கொரில்லா போராக" பார்க்கிறார். எல்லை தாண்டியும் தீவிரவாதிகள் இந்தப் பக்கம் அனுப்பப்பட்டிருப்பதையே தாக்குதல்கள் நடத்தும் விதம் காட்டுவதாக அவர் கூறுகிறார்.
இந்தப் பகுதியில் உள்ள தீவிரவாதிகளுக்கு அழுத்தம் கொடுத்தால், அவர்கள் எல்லை தாண்டி திரும்பிச் செல்லக்கூடிய அளவுக்கு பிர்பஞ்சல் பகுதி இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், தீபேந்தர் சிங் ஹூடா, காஷ்மீரில் மட்டும் தீவிரவாதம் செயல்படுவதை பாகிஸ்தான் விரும்பவில்லை என்றும், ஜம்மு-காஷ்மீர் பகுதிகள் இரண்டும் குறிவைக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் நம்புகிறார்.
ஜம்மு பகுதியில் 2013ஆம் ஆண்டிலும் பல பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அங்கு ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்ததாகவும், ஆனால் பின்னர் அதில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றும் அவர் கூறினார். அதன்பிறகு, தற்போது மீண்டும் இந்தத் தீப்பிழம்புகள் எரிய ஆரம்பித்துள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












