மும்பை அணியின் தோல்விக்கு யார் காரணம்? ஹர்திக் கூறியது என்ன?

கடந்த 7 போட்டிகளாக 121 ரன்கள், ஒரு அரைசதம், சதம் கூட இல்லை, அதிகபட்சமாக 39 ரன்கள் என இந்த சீசன் தொடங்கியதில் இருந்து ஃபார்மின்றி ஜெய்ஸ்வால் திணறிக்கொண்டிருந்தார். திறமையான தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் மீது தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைத்திருந்த நம்பிக்கையை நேற்றை ஆட்டத்தில் சதம் அடித்து நிரூபித்தார்.

அது மட்டுமல்லாமல் காயத்தால் பல போட்டிகளாக பந்துவீசாமல் இருந்த டெத் ஓவர் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் ஒட்டுமொத்த சரிவுக்கும் காரணமாகினார்.

அது மட்டுமல்லாமல் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் எனும் சாதனையை யஜுவேந்திர சஹல் நேற்று பெற்றார். டி20 போட்டிகளிலேயே 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் இங்கிலாந்தின் டேனி பிரிக்ஸ், சமித் படேலுக்கு அடுத்தார்போல் சஹல் இடம் பெற்றார்.

இதுபோன்ற பல இனிமையான நினைவுகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை அணியை எளிதாகவே வீழ்த்திவிட்டது.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 38-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால், நிகர ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் 10 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தா(1.206) அணியைவிட, ராஜஸ்தான் குறைவாகவே 0.698 என்ற அளவிலேயே இருக்கிறது.

அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 5 தோல்விகள், 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.227 என்ற அளவில் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை அணியைவிட நிகர ரன்ரட்டில் குறைவாக இருந்தாலும், புள்ளிக்கணக்கில் அதிகமாக இருப்பதால் 6வது இடத்துக்கு நகர்ந்துள்ளது.

மும்பையைச் சாய்த்த சந்தீப் சர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது சந்தீப் சர்மா, டிரன்ட் போல்ட் இருவரும்தான். இதில் டிரன்ட் போல்ட் ஏற்கெனவே மும்பை வான்ஹடே மைதானத்தில் உள்ள ரசிகர்களை தனது பந்துவீச்சால் நிசப்தமாக்கி அதிர்ச்சியளித்தார். அதேபோல ஜெய்ப்பூர் மைதானத்திலும் மும்பை அணியின் ரசிகர்களையும் மவுனமாக்கினார்.

காயத்திலிருந்து மீண்டுவந்து பந்துவீசிய சந்தீப் சர்மா அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதற்கு முன் டெத் ஓவர்களில் மட்டுமே பந்துவீசி வந்த சந்தீப் சர்மா பவர்ப்ளேயில் பந்துவீசினார். ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு வீசிய சந்தீப் சர்மா, பவர்ப்ளேயில் 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து மும்பைக்கு அதிர்ச்சி அளித்தார். கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி டெத் ஓவரில் மும்பை அணிக்கு சிம்ம சொப்னமாகத் திகழ்ந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

ஃபார்முக்கு வந்த ஜெய்ஸ்வால்

இந்த ஆட்டத்தில் 31 பந்துகளில் அரைசதம் அடித்தபின், ஜெய்ஸ்வால் பேட்டிலிருந்து பந்துகள் சிக்ஸர், பவுண்டரி என பறந்தன, அடுத்த 28 பந்துகளில் 50 ரன்களுடன் சதத்தை நிறைவு செய்து 60 பந்துகளில் 104 ரன்களுடன் (7 சிக்ஸர், 9பவுண்டரிகள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடந்த சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்திருந்த ஜெய்ஸ்வால், இந்த சீசனிலும் சதம் அடித்துள்ளார். ஒற்றை பேட்டராக இருந்து ராஜஸ்தான் அணியை ஜெய்ஸ்வால் கரை சேர்த்துள்ளார்.

கடந்த போட்டியில் ஒற்றை பேட்டராக இருந்து வெற்றி தேடித்தந்த ஜாஸ் பட்லர் இந்த போட்டியில் 35 ரன்களில் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் பட்லர் கூட்டணி 74 ரன்கள் சேர்த்தனர். 2வது விக்கெட்டுக்கு கேப்டன் சாம்ஸன், ஜெய்ஸ்வாலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2வது விக்கெட்டுக்கு சாம்ஸன்-ஜெய்ஸ்வால் கூட்டணி 109 ரன்கள் சேர்த்தனர்.

மும்பையின் தொடக்க வரிசையை உடைத்த போல்ட், சந்தீப்

மும்பை அணியின் தொடக்க வரிசை பேட்டிங்கை டிரன்ட் போல்ட், சந்தீப் சர்மா இருவரும் சேர்ந்து நிலைகுலையச் செய்தனர். ஆடுகளத்தின் தன்மை, பனிப்பொழிவு, காற்று ஆகியவற்றை சாதகமாகப் பயன்படுத்தி, துல்லியமான லைன் லென்த்தில் வீசி பேட்டர்களை திணறடித்தனர். பவர்ப்ளே ஓவருக்குள் மும்பை அணியின் முதுகெலும்பு பேட்டிங் வரிசை சுக்குநூறாக இருவரும் சேர்ந்து உடைத்துவிட்டனர்.

மூன்று வாரங்களுக்கு முன் மும்பை வான்ஹடே மைதானத்தில் மும்பை அணி ரசிகர்களை தனது பந்துவீச்சால் ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி டிரன்ட் போல்ட் அரங்கையே நிசப்தமாக்கினார். அதேபோன்று நேற்றும் தனது பந்துவீச்சால் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா(6) விக்கெட்டை வீழ்த்தி ரசிகர்களுக்கு ஷாக் அளித்தார். ஐபிஎல் தொடரில் டிரன்ட் போல்ட் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்துவது இது 26-வது முறையாகும். இந்த சீசனில் மட்டும் போல்ட் 5-ஆவதுமுறையாக முதல் ஓவரில் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

சந்தீப் சர்மா தான் வீசிய முதல் ஓவரிலேயே இஷான் கிஷனை அவுட் ஸ்விங் மூலம் சாம்ஸனிடம் கேட்ச் கொடுக்கவைத்து டக்அவுட்டில் வெளியேற்றினார். அடுத்துவந்த 360 டிகிரி பேட்டர் சூர்யகுமாரும், தனக்குரிய ரிதம் கிடைக்காமல் பேட்டிங்கில் தடுமாறினார். அவர் தனது இயல்பான பேட்டிங்கிற்கு திரும்பவிடாமல், போல்ட், சந்தீப் இருவரும் துல்லியமாகப் பந்துவீசினர். ஒரு கட்டத்தில் சந்தீப் வீசிய ஸ்லோ-பாலோ தூக்கி அடிக்க ரோவ்மன் பாவலிடம் கேட்சானது. சூர்யகுமார் 10 ரன்னில் வெளியேறியது, மும்பையின் பெரிய நம்பிக்கையே உடைந்தது. அடுந்து வந்த முகமது நபி, அதிரடியாக ஆவேஷ் கான் ஓவரில் கேமியோ ஆடி 18 ரன்கள் சேர்த்து, சஹல் வீசிய முதல் ஓவரிலேயே அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவரில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்தும், 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.

5-ஆவது விக்கெட்டுக்கு நேஹல் வதேரா, திலக் வர்மா ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். நிதானமாகவும், மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஆடிய திலக் வர்மா 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். மிகக் குறைந்த வயதில் 21 வயது 166 நாட்களில் ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையை திலக் பெற்றார்.

இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் பங்கேற்ற நேஹல் வதேரா அதிரடியாக பேட் செய்து 24 பந்துகளில் 49 ரன்கள்(4சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்து போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இவர்கள் இருவரும் சேர்த்ததுதான் அணியில் பெரிய ஸ்கோராகும். இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்காமல் இருந்தால், மும்பை அணி 140 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

அதன்பின் வந்த பேட்டர்களான கேப்டன் ஹர்திக் பாண்டியா(10), டிம் டேவிட்(3), கோட்ஸி(0) எனவரிசையாக ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 65 ரன்களில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 18 ஓவர்களில் மும்பை அணி 170 ரன்களை எட்டியநிலையில் கடைசி இரு ஓவர்களில் அதிரடியாக ஆடி 200 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி இரு ஓவர்களில் மும்பை அணி 9 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதிலும் சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் திலக் வர்மா, 2வது பந்தில் கோட்ஸீ, 5வது பந்தில் டிம் டேவிட் என 3 விக்கெட்டுகளை மும்பை இழந்தது. அதாவது ஒரு ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை மும்பை இழந்தது. கடைசி 28 ரன்களுக்குள் மும்பை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

என்ன சொல்கிறார் பாண்டியா?

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ தொடக்கத்தில் இருந்தே நாங்கள் சிக்கல்களைச் சந்தித்தோம். ஆனால், திலக், வதேரா ஆடியவிதம் அருமை.அதேபோல ஃபினிஷிங்கிலும் சிறப்பாகச் செயல்படவில்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிட 15 ரன்கள் குறைவாகச் சேர்த்துவிட்டோம். அதேபோல பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் எங்களுக்கு சிறந்தநாளாக அமையவில்லை. பவர்ப்ளே ஓவர்களில் ரன்கள் சேர்க்க முடியாத பிரச்னை தொடர்கிறது.”

“ஒவ்வொரு வீரரும் தங்களுக்குரிய பணியை, பொறுப்பை உணர்வார்கள். தவறுகளை திருத்துவது அவசியம், மீண்டும் தவறுகள் வராமல் பார்க்கவேண்டும். தனிப்பட்ட முறையில் ஏற்படும் தவறுகள், பணியையும் ஏற்க வேண்டும். சரியாக விளையாடாத வீரர்களை உடனே நீக்குபவன் நான் அல்ல, வீரர்களுக்கு போதுமான வாய்ப்புத் தருவேன். நல்ல கிரிக்கெட்தான் என்னுடைய நோக்கம், எங்கள் திட்டங்களை நோக்கிச் செல்வோம்”எ னத் தெரிவித்தார்”

மும்பை அணியின் தோல்விக்கான காரணங்கள்

மும்பை அணியின் பந்துவீச்சு, பீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் ஆகியவை நேற்று சுமாராகவே இருந்தது. ஜெய்ஸ்வாலுக்கு மட்டும் நேற்று இரு கேட்சுகளை டிம் டேவிட், வதேரா இருவரும் தவறவிட்டனர். இருவரும் கேட்சுகளை பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கக்கூடும்.

அதேபோல பவுண்டரிகளை தடுக்கும் பீல்டிங்கிலும் மும்பை வீரர்கள் பெரிதாக முயற்சி எடுக்காமல் பீல்டிங்கில் கோட்டைவிட்டனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டும் 2 பவுண்டரிகளை விட்டார்..

பந்துவீச்சிலும் 7 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் சராசரியாக ஓவருக்கு 9 ரன்களுக்கு குறைவில்லாமல் வாரி வழங்கினர். ஹர்திக் பாண்டியா 2 ஓவர்கள்வீசி 21 ரன்களை வாரிக் கொடுத்தார். உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் ஐபிஎல் தொடரில் இதுவரை ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு இரு பிரிவுகளிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. இது நிச்சயமாக உலகக் கோப்பைக்கான அணியில் எதிரொலிக்கும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சிறப்பாகப் பந்துவீசக்கூடிய பும்ரா 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை வழங்கினார். முகமது நபி, துஷாரா பந்துவீச்சும் எடுபடவில்லை. ராஜஸ்தான் பேட்டர்கள் குறிப்பாக ஜெய்ஸ்வாலைக் கட்டுப்படுத்தக்கூடிய பந்துவீச்சு நேற்று மும்பையிடம் இல்லாததே தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

சஹலின் சாதனைகள்

யஜுவேந்திர சஹல் நேற்று முகமது நபி விக்கெட்டை வீழ்த்தியபோது, ஐபிஎல் தொடரில் 200-வது விக்கெட்டை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றார். டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்துவீச்சாளராகவும் சஹல் இடம் பெற்றார். இதற்கு முன் டேனி பிரிக்ஸ்(219), சமித் படேல்(208) வீழ்த்தியுள்ளனர்.

சஹல் தனது 200 விக்கெட்டுகளில் 158 விக்கெட்டுகளை 125 போட்டிகளில் இந்திய மண்ணில் விளையாடி எடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 42 விக்கெட்டுகளை சஹல் வீழ்த்தியுள்ளார். உள்நாட்டு மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை புவனேஷ்வர் குமார்(160) வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல் தொடரில் 7 முறை 4 விக்கெட்டுகளை சஹல் வீழ்த்தி மலங்காவுக்கு அடுத்தார்போல் இடம்பெ ற்றுள்ளார். 20 முறை 3 அல்லது அதற்கு மேல் அதிகமான விக்கெட்டுகளை சஹல் கைப்பற்றியுள்ளார். இரு அணி நிர்வாகங்களுக்கு 50 விக்கெட்டுகளை4 பந்துவீச்சாளர்கள் இதுவரை வீழ்த்தியுள்ளனர்.

இதில் சஹல் ஆர்சிபி அணிக்கும், ராஜஸ்தானுக்கும் 50 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திக் கொடுத்துள்ளார். இதில் ஆர்சிபி அணிக்காக மட்டுமே சஹல் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துக் கொடுத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு வந்தபின் 61 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக சஹல் கைப்பற்றியுள்ளார். அதிலும் பெங்களூரு சின்னசாமி அரங்கில் மட்டும் சஹல் 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நடுப்பகுதி ஓவர்களில் சஹல் சிறப்பாகப் பந்துவீசக் கூடியவர். சஹல் எடுத்த 200 விக்கெட்டுகளில் 152 விக்கெட்டுகள் 7 முதல் 16-வது ஓவர்களுக்குள் எடுக்கப்பட்டவையாகும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)