You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனா: ஜோஷிமட் போல மண்ணுக்குள் புதையும் நகரங்கள் - மக்களின் நிலை என்ன?
- எழுதியவர், மேட் மெக்ராத்
- பதவி, சுற்றுசூழல் செய்தியாளர்
சீனாவின் பெரிய முக்கியமான நகரங்களில் பாதி, பூமிக்குள் புதைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் பெரியளவில் சுரண்டப்படுவதும், வேகமாக நகரமயமாக்கம் செய்யப்பட்டு விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதும் பூமியின் நிலைத்தன்மையை பாதிப்பதால், நிலப்புதைவு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
சில நகரங்கள் வேகமாக பூமிக்குள் புதைந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆறில் ஒரு நகரம் ஆண்டுக்கு 10 மி.மீ. அளவுக்கு பூமிக்குள் புதைந்து வருவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சீனாவில் சில தசாப்தங்களாக வேகமான நகரமயமாக்கல் மேற்கொள்ளப்படுகிறது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நிலத்தடி நீர் அதிக அளவில் சுரண்டப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடலோர நகரங்களில், இவ்வாறு நிலப் புதைவு ஏற்பட்டால், கடல் மட்டம் உயர்ந்து லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
நிலப் புதைவை எதிர்கொள்வது சீனாவுக்கு புதிதல்ல. இந்த பிரச்னையை எதிர்கொள்வதில் சீனா நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. ஷாங்காய் மற்றும் டியான்ஜின் ஆகிய இரண்டு நகரங்களும் 1920களில் பூமிக்குள் தாழ்ந்து போனதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஷாங்காய் கடந்த நூற்றாண்டில் 3 மீட்டருக்கும் அதிகமாக பூமிக்குள் புதைந்து உள்ளது.
தற்போதைய நவீன காலகட்டத்தில் சீனாவில் பல்வேறு நகரங்கள் நிலப் புதைவு நிகழ்வை சந்தித்துள்ளன. சமீபத்திய தசாப்தங்களில், அங்கு வேகமாக நகரமயமாக்கலின் விரிவடைதல் பணிகள் நடந்து வருவதே இதற்கு காரணம் என சொல்கின்றனர்.
இந்த சிக்கலின் அளவைப் புரிந்து கொள்ள, பல சீனப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 82 நகரங்களை ஆய்வு செய்துள்ளது.
நாடு முழுவதும், செங்குத்து நில இயக்கங்களை அளவிட சென்டினல்-1 செயற்கைக்கோள்களின் தரவைப் பயன்படுத்தி உள்ளனர். 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், 45% நகர்ப்புறங்களில் ஆண்டுக்கு 3 மி.மீ.க்கு மேல் நிலப்புதைவு ஏற்பட்டுள்ளதை அக்குழு கண்டறிந்துள்ளது.
சுமார் 16% நகர்ப்புற நிலங்கள் ஆண்டுக்கு 10 மில்லி மீட்டரை விட அதிகமாக நிலத்துக்குள் புதைப்படுவதை, "விரைவாகப் புதைந்து வருகிறது" என்று விஞ்ஞானிகள் விவரிக்கின்றனர். அதாவது, 6.7 கோடி மக்கள் வேகமாக நிலப் புதைவு நேரிடும் பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிலப்புதைவால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் ஐந்து பிராந்தியங்களில் உள்ள நகரங்கள் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.
நிலப் புதைவின் அளவு புவியியல் மற்றும் கட்டிடங்களின் எடை உட்பட பல காரணிகளால் மாறுபடும். இருப்பினும் ஆய்வாளர்களின் கூற்று படி, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது தான் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. நகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் தங்கள் தேவைகளுக்காக அதிக அளவில் நிலத்தடி நீரை சார்ந்து இருக்கின்றனர்.
ஏற்கனவே ஹூஸ்டன், மெக்சிகோ சிட்டி மற்றும் டெல்லி உட்பட உலகின் பல முக்கிய நகர்ப்புறங்களில் நிலப்புதைவு பிரச்னை இருந்து வருகிறது. சீனாவில் 1,600 க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கிணறுகளின் அளவீடுகளை வைத்து பார்க்கும் போது, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது நிலப்புதைவுக்கு வழிவகுப்பதை உறுதிப்படுத்துவதாக ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் நிக்கோல்ஸ் கூறுகையில், "நிலத்தடி நீர் சுரண்டப்படுவது தான் நிலப்புதைவுக்கு முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
"புவியியல் ரீதியாக பார்த்தால், சீனாவில் சமீப காலமாக வண்டல் படிந்து வரும் பகுதிகளில் ஏராளமான மக்கள் வாழ்கின்றனர். எனவே நிலத்தடி நீரை எடுக்கும் போது, மணல் படலம் அழிக்கப்பட்டு, நிலத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது. அதன் விளைவாக நிலப் புதைவு ஏற்படுகிறது" என்கிறார் அவர்.
நகர்ப்புற போக்குவரத்து அமைப்புகள், கனிமங்கள் மற்றும் நிலக்கரி சுரங்கம் ஆகியவை நிலப் புதைவு ஏற்படுவதற்கான பிற காரணிகளாகும்.
நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் ஒன்றான பிங்டிங்ஷானின் வடக்குப் பகுதியில், ஆண்டுக்கு 109 மிமீ அளவில் மிக வேகமாக நிலம் தாழ்ந்து வருகிறது.
காலநிலை மாற்றத்தாலும் நிலப்புதைவாலும் கடல் மட்ட உயர்வு ஏற்பட்டு நகர்ப்புற மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம். இது மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
2020 ஆம் ஆண்டில், சீனாவின் சுமார் 6% பகுதி, ஒப்பீட்டளவில் கடல் மட்டத்திற்கு கீழே இருந்தது. அதிக கார்பன் உமிழ்வு சூழ்நிலை ஏற்பட்டால் 100 ஆண்டுகளில், இந்த அளவு 26% ஆக உயரும். கடல் மட்டம் அதிகரிப்பதை விட நிலம் புதைவது வேகமாக நடந்து வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், நிலப் புதைவின் வேகத்தை குறைக்கும் பயனுள்ள உத்திகள் இருப்பதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
கடந்த காலங்களில் ஜப்பானில் உள்ள ஒசாகா மற்றும் டோக்கியோ உட்பட ஆசியாவின் பிற முக்கிய நகர்ப்புறப் பகுதிகளை நிலப்புதைவு பிரச்னைகள் பாதித்துள்ளன. "20 ஆம் நூற்றாண்டில் டோக்கியோ துறைமுகப் பகுதியைச் சுற்றி ஐந்து மீட்டர் வரை பூமிக்குள் புதைந்து உள்ளது" என்று பேராசிரியர் நிக்கோல்ஸ் கூறினார்.
"ஆனால் 1970 களில், அந்த பகுதிகளில் வசித்த மக்களுக்கு மற்ற பகுதிகளில் இருந்து நல்ல குழாய் நீர் வழங்கப்பட்டது. இதனால் அங்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறைந்தது. மேலும் இது தொடர்பாக ஒரு சட்டமும் அங்கு பின்பற்றப்பட்டது. இதனால் அங்கு நிலப் புதைவு ஏற்படுவது குறைந்தது." என்றார்.
இந்த ஆய்வு சயின்ஸ் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)