You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரை: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக விரிவான ஏற்பாடு - பக்தர்கள் எங்கே ஆற்றில் இறங்கலாம்?
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வில் கடந்த இரண்டு வருடங்களில் மட்டுமே கூட்ட நெரிசல், ஆற்றில் மூழ்கி என 6 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த ஆண்டு நடைபெறும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?
மதுரையில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெறும். இதன் உச்சமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவும் அதன் தொடர்ச்சியாக அழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இது திருவிழாக்களின் பெருவிழா என அனைவராலும் பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பாக மீனாட்சியம்மன் கோயிலின் சித்திரை திருவிழாவும் அழகர் திருவிழாவும் வெவ்வேறு மாதங்களில் நடந்து வந்தன. சைவ வைணவ திருவிழாக்களை திருமலை நாயக்கர் மன்னர் தனது ஆட்சி காலத்தில் ( கிபி1629-1659) இரண்டையும் இணைத்து அனைத்து மக்களும் பங்கேற்கு விதமாக திருவிழாவை சித்திரை மாதத்திற்கு மாற்றினார்.
மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அழகர் ஆற்றில் இறங்குவது போல திருவிழாக்களை அமைத்தார். இதன் மூலம் சைவ - வைணவ இரண்டு திருவிழாக்களும் கூடும் விதமாக இது அமைந்தது என ‘அழகர் கோவில்’ என்ற புத்தகத்தில் தொ.பரமசிவன் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த சித்திரைத் திருவிழாவை காண மதுரை மட்டுமல்லாது தென் மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண்பதற்காக இரவே பக்தர்கள் ஒன்று கூட தொடங்கிவிடுவார்கள். ஆற்றின் கரையில் சுற்றி அமர்ந்து அழகர் ஆற்றில் இறங்குவதை பார்த்துவிட்டே அவர்கள் ஊருக்கு திரும்புவார்கள்.
சித்திரைத் திருவிழா வரலாறு
மதுரையிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோவில் அமைந்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக கள்ளழகர் மதுரை வருகிறார் என்பது வரலாறு.
அழகர் கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பன் சாமியிடம் உத்தரவு வாங்கி பின்னே கள்ளழகர் வேடம் தரித்து எதிர் சேவையாக அழகர் மதுரைக்கு கிளம்பி வருவார். வழி நெடுகிலும் பக்தர்கள் வைத்திருக்கும் மண்டபப் படிகளில் எழுதருள்வார்.
மறுநாள் மதுரை நகரில் இருக்கும் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இரவு தங்கி அதிகாலை பச்சை நிறப் பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை வட கரையில் இறங்குவார். இதனால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
இதனைத் தொடர்ந்து தீர்த்த வாரி நடைபெறும். மறுநாள் வண்டியூரில் உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பார்.
இந்த நிகழ்வு முன்பு தேனூரில் நடைபெற்றது. திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் அது மதுரை மாநகர் பகுதிக்குள் வைகையாற்றின் வட கரையில் நடைபெறும் விதமாக மாற்றப்பட்டது. இந்த நிகழ்வில் தேனூர் கிராம மக்களே கோவில் மரியாதையை பெறுகின்றனர்.
கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லாத திருவிழா
சித்திரை திருவிழா கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் நடைபெறுவதால் வெப்பத்தின் தாக்கம் சற்று கூடுதலாகவே இருக்கும். இதனையும் பொறுப்படுத்தாமல் சாதி,மதம், இனத்தைக் கடந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர்.
அவர்களின் வெப்பத்தையும் பசியையும் போக்கும் விதமாக மோர், சர்பத், ரஸ்னா, ரோஸ் மில்க் மற்றும் உணவுகளை மக்கள் ஆங்காங்கே வழங்குவார்கள்.
இரண்டு ஆண்டு தடைக்கு பின் நடந்த திருவிழா
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அனைத்தும் முடங்கியது. இதற்கு சித்திரை திருவிழாவும் விதிவிலக்கு இல்லை. மதுரை சித்திரை திருவிழா நிகழ்வுகள் கோவில் வளாகத்தினுள்ளே நடைபெற்றது. அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு கோவில் வளாகத்தின் உள்ளே குளம் போல் ஏற்படுத்தப்பட்டு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் திருவிழா நடைபெற்றதால் மக்கள் கூட்டம் எதிர்பார்த்ததை விட கட்டுக்கடங்காத அளவில் கூடினர். இந்த கூட்டத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
இதனால், மாவட்ட நிர்வாகம் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது; காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்பட்டது.
இரண்டாம் ஆண்டாக தொடர்ந்த உயிர் பலி
கடந்த ஆண்டு சித்திரை திருவிழா நேரத்தில், 'வைகை ஆற்றில் பக்தர்கள் இறங்க தடை' என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் குழப்பம் நிலவியது. சாமி வரும் நேரத்தில் பக்தர்கள் ஆற்றிற்குள் இறங்க துவங்கினர்.
இதனால் ஏற்பட்ட கூட்டத்தால் ஆற்றின் மூழ்கி 3 பேர், கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் என மொத்தம் நான்கு பேர் உயிரிழந்தனர். இது மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்புகளை எடுக்காததால்தான் இந்த உயிர் பலி ஏற்பட்டது என பக்தர்கள் விமர்சனம் செய்தனர்.
சித்திரை திருவிழா கோலாகலம்
இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.
அழகர் மலையிலிருந்து கள்ளழகர் எதிர் சேவையாக ஏப்ரல் 21ஆம் தேதி புறப்பட்டு வருகின்ற வழிகளில் உள்ள அனைத்து மண்ட படிகளிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். ஏப்ரல் 22ஆம் தேதி இரவு தல்லாகுளம் வெங்கடாசலபதி கோயிலை வந்து அடைகிறார்.
அங்கு இரவு தங்கி அதிகாலை அழகர் பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் எழுந்தருள்வதற்காக புறப்பட்டு அனைத்து மண்டப படிகளிலும் தங்கி 5:51 மணி முதல் 6:10 மணிக்குள்ளாக வைகை ஆற்றில் எழுந்தருள இருக்கிறார்.
இதற்காக வைகை ஆற்றின் வடகரை பகுதியில் 2000 டன் அளவிலான பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, மண்டபத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இது தவிர சுற்றியும் தற்காலிக விளக்குகளும் வைகை ஆற்றினுள் பொதுமக்கள் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
அழகர் ஆற்றில் இறங்குவதை முன்னிட்டு வைகை அணையில் இருந்து 216 மில்லியன் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், வைகை ஆற்றில் தற்பொழுது பாய்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
'மக்களை பாதுகாக்க கண்காணிப்பு தீவிரம்'
இது குறித்து மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் லோகநாதன் பிபிசி தமிழிடம் பேசும் போது, “சித்திரை திருவிழாவில் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக கூடுதலாக காவல்துறையினர் பணி அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
இந்த ஆண்டு 4 ஆயிரத்திற்கு அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது தவிர 400க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக அழகர் செல்லும் பாதைகளில் பொருத்தப்பட்டு நான்கு கட்டுப்பாட்டு அறைகளின் வழியாக கண்காணிக்கப்படுகிறது.
இது தவிர நான்கு பறக்கும் கேமராக்கள் கொண்டு பொதுமக்கள் கூட்டம் இருக்கும் பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். அங்கு ஏதேனும் அசாதாரண சூழல் நிலவும் பட்சத்தில் அருகில் இருக்கும் காவலர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக அந்த பிரச்னை சீர் செய்யப்படும்.
"கோரிப்பாளையம் பகுதியில் கடந்த காலங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதனை தவிர்க்க மக்கள் ஒரே இடத்தில் நிற்காமல் நடந்து கொண்டே இருக்கும்படியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன", என்றார்.
‘நீச்சல் குழுக்கள், குற்றத்தடுப்பு குழுக்கள் அமைப்பு’
தொடர்ந்து பேசிய அவர் கூறும் போது,
“வைகை ஆற்றின் கரையோரங்களில் தீயணைப்புத் துறையினர் மூலம் நீச்சல் தடுப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுவார்கள். திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் நடைபெறலாம். அதனை தடுக்க 60 குழுக்கள் பணி அமர்த்தப்பட்டிருக்கின்றன", என கூறினார்.
பக்தர்கள் எங்கே ஆற்றில் இறங்கலாம்?
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில்,
“சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் பகுதிகளை சுற்றிலும் 400க்கும் மேற்பட்ட தற்காலிக மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இது தவிர மக்கள் கூடும் இடங்களில் 18 நகரும் கழிப்பிட வசதிகள் செய்யப்படுள்ளன. மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் ஆகியோருடன் தல்லாகுளம் முதல் ஆற்றின் கரை வரை நடந்தே சென்று மக்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்களாக என்ன இருக்கிறது என்பதை பார்த்து வந்தேன். அதற்கு ஏற்ப, அங்கு தேவையான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றோம்.
மக்கள் ஆற்றில் இறங்குவதற்கு தேவையான இறங்கு தளம் ஆற்றின் இரண்டு புறமும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக வைகை ஆற்றில் உள்ளேயே நான்கு மருத்துவ குழுக்கள், ஆற்றை சுற்றி மற்ற பகுதிகளில் 35 குழுக்கள் என 39 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த முறை போல எந்தவிதமான அசம்பாவிதங்களும் இந்த முறை நடைபெறக் கூடாது என்ற அடிப்படையில் அனைத்து பாதுகாப்புகளையும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து மேற்கொண்டுள்ளன. மக்கள் கூடும் இடத்தில் தேவையான இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
சித்திரை திருவிழாவில் முன்னெப்போதும் இல்லாதபடி வகையில் கூடுதலாக 800 தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ", என கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)