இலங்கை: 7 பேர் உயிரிழந்த ஃபாக்ஸ் ஹில் கார் பந்தய விபத்து எப்படி நிகழ்ந்தது? முழு விபரம்

இலங்கையில் இருக்கும் தியத்தலாவை என்ற பகுதியில் நேற்று (ஞாயிறு, ஏப்ரல் 21) நடைபெற்ற 'ஃபாக்ஸ் ஹில் சூப்பர் கிராஸ் 2024' (Fox Hill Supercross 2024) என்ற கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

தியத்தலாவையில் நரிய கந்தா (Fox Hill) என்ற பகுதியில் நடந்த கார் பந்தயத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் ஓர் 8 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிகா குமாரா, பிபிசி சிங்களத்துக்கு அளித்த பேட்டியில் உறுதிபடுத்தியுள்ளார்.

"ஃபாக்ஸ் ஹில் பந்தய டிராக், ராணுவத்திற்குச் சொந்தமானது. இந்தக் கார் பந்தயம் இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில், அங்கு பணியில் இருந்த நான்கு டிராக் மார்ஷல்களும், மூன்று பார்வையாளர்களும் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் ஓர் 8 வயது சிறுமியும் அடக்கம்,” என ராணுவத்தின் செய்தித் தொடர்பாளரான ரசிகா குமாரா தெரிவித்தார்.

விபத்து எப்படி நிழந்தது?

காவல் துறை செய்தித்தொடர்பாளர் டி.ஐ.ஜி நிஹால் தல்துவா இந்த விபத்து குறித்து பேசுகையில், “ஃபாக்ஸ் ஹில் பந்தயத்தின் போது கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையை விட்டு விலகி, பார்வையாளர்கள் இருந்த பகுதிக்குள் அதி வேகமாக பாய்ந்தது,” என்றார்.

“அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் சுமார் 20 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது,” என்றார்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக தியத்தலாவை காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது, என்றும் கூறினார்.

விபத்தின் காணொளிக் காட்சிகள்

இதனிடையே பந்தய கார் விபத்தின் காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக முகநூலில் விபத்து தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

ஒரு காணொளியில், பந்தயத்தின் போது ஓடும் பாதையில் இருந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகிறது. அப்போது, பந்தயத்தில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் குழு, ஓட்டுநரை வெளியே எடுக்க முயற்சிக்கிறது. அதே சமயம், மற்றொரு கார் அதிவேகமாக பார்வையாளர்கள் இருக்கும் பகுதிக்குள் பாய்கிறது. அந்தக் கார் பார்வையாளர்கள் மீது மோதுவதும் அங்கு ஏற்பட்ட பரபரப்பும் வீடியோவில் தெளிவாக பதிவாகியிருக்கின்றன.

ஃபாக்ஸ் ஹில் பந்தயத்தைக் காண வந்த பார்வையாளர்களின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை என்றும் ஓடு பாதையைச் சுற்றிப் போதிய பாதுகாப்பு வேலிகள் மற்றும் தடுப்புகள் இல்லாதது ஏன் என்றும் சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

'ஃபாக்ஸ் ஹில் ரேஸ்' என்றால் என்ன?

இலங்கை ஆட்டோமொபைல் விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்யும் இந்த மோட்டார் பந்தயப் போட்டியானது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் நடைபெறும். இலங்கையில் இந்தப் போட்டிக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தப் போட்டியைப் பார்வையிட ஏராளமான ரசிகர்கள் வருவது வழக்கம்.

இந்தப் பந்தயம் 1993-ஆம் ஆண்டு முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஃபாக்ஸ் ஹில் போட்டியை ஏற்பாட்டாளர்கள் ‘விறுவிறுப்பு - பிரமிப்பு’ என்று விளம்பரப்படுத்தியிருந்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)