காணாமல் போகும் 2,000 ரூபாய் தாள்கள்: கருப்புப் பணமாக மாறுகிறதா?

2,000 ரூபாய் நோட்டுகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பாரா பத்தையா
    • பதவி, பிபிசி தெலுங்குக்காக

ஆறு ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால் இந்த நாட்களில் வங்கிகள் மற்றும் ஏடிஎம் வாசல்களில் இந்தியர்கள் நின்றுகொண்டிருந்தனர். ஏடிஎம்களில் 100 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தன.

2,000 ரூபாய் நோட்டாக இருந்தால் ஒருவருக்கு இரண்டு நோட்டுகள் மட்டுமே கிடைக்கும். அந்த இரண்டு நோட்டுகளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் வெகுநேரமாக காத்திருந்தனர். சிலர் அந்த வரிசையில் நிற்கும் போதே உயிரிழக்கவும் செய்தனர்.

அந்த நேரத்தில் அனைவரின் கைகளிலும் பார்க்க முடிந்த 2,000 ரூபாய் நோட்டுகளை, தற்போது அதிகம் பார்க்க முடிவதில்லை.

அந்த நோட்டுகளெல்லாம் தற்போது எங்கே? இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கருப்புப் பணமாக பதுக்கப்பட்டுவிட்டது என்ற பரவலான குற்றச்சாட்டில் உண்மையுள்ளதா?

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி வெளியான பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரத்தில் பல விஷயங்கள் மாறிவிட்டன.

ஒருபுறம், நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரொக்கப் புழக்கமும் அதிகரித்திருக்கிறது.

நாட்டில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, 2,000 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிற்கு வந்தன. மிகக் குறுகிய காலத்திலேயே பணப்புழக்கத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த அந்த நோட்டுகளை தற்போது அதிகம் பார்க்க முடிவதில்லை.

“2,000 ரூபாய் நோட்டுகளை நான் பார்த்தே நீண்ட காலமாகிவிட்டது” என்கிறார் ஹைதராபாத்தில் மளிகைக்கடை நடத்திவரும் ராகவா.

2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திய ரிசர்வ் வங்கி

இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகள், பெங்களூருவில் உள்ள ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட், மகாராஷ்டிராவில் உள்ள கரன்சி நோட் பிரஸ், மத்திய பிரதேசத்தில் உள்ள பேங்க் நோட் பிரஸ் ஆகியவை மூலமாக அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.

எனினும், சமீபத்தில் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளித்த ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட், 2019ஆம் ஆண்டு முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை எனத் தெரிவித்தது.

 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images

தாங்கள் வகுத்த வியூகத்தின்படி, 2016 முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதாக அதன் சமீபத்திய ஆண்டறிக்கை கூறுகிறது.

2017ஆம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, நாட்டின் பொருளாதாரத்தில் 2,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு 50.2 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இந்தாண்டு மார்ச் 31இல் அந்த சதவிகிதம் 13.8ஆக சரிந்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகள் எங்கு சென்றன?

  • உண்மையிலேயே 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளனவா?
  • இந்த நோட்டையும் மத்திய அரசு விரைவில் செல்லாது என அறிவிக்குமா?
  • அனைத்து 2,000 ரூபாய் நோட்டுகளும் பெரும்புள்ளிகளின் இரும்புப் பெட்டியில் கருப்புப் பணமாக உள்ளனவா?

இது மாதிரியான பல சந்தேகங்கள் சாதாரண மக்களுக்கு எழுவது உண்டு.

2016ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்திருப்பது உண்மைதான். புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாதது இதற்கு முக்கிய காரணம். 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 274 கோடி எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 214 கோடியாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை கூறுகிறது.

கருப்புப் பணமாக மாறியதா 2,000 ரூபாய் நோட்டுகள்?

கருப்புப் பணமாக மாறிய 2,000 ரூபாய் நோட்டுகள்

பட மூலாதாரம், Getty Images

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காரணமாக நரேந்திர மோதி அரசு கூறிய காரணங்களில் கருப்புப் பண ஒழிப்பு முதன்மையானது.

கடந்த ஓராண்டில் மத்திய அரசின் புலனாய்வு அமைப்பினர் நாடு முழுவதும் நடத்திய பல்வேறு சோதனைகள் மற்றும் பல மாநிலங்களின் சட்டமன்ற மற்றும் இடைத் தேர்தல் நேரத்தில் நடந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணங்கள் பெரும்பாலும் 2,000 ரூபாய் நோட்டுகளே.

இது, பெரிய அளவிலான தொகையை மறைத்து வைப்பதை 2,000 ரூபாய் நோட்டுகள் எளிமைப்படுத்தியுள்ளன என்பதை தெளிவுபடுத்துகிறது.

கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதை பெரும்பாலும் 2,000 ரூபாய் நோட்டுகளாக பதுக்கி வைத்திருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக வங்கித் துறை நிபுணர் சூர்ய நாராயணா கூறுகிறார்.

2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருவதைப் பார்த்தால், இதை நீண்ட காலத்திற்கு தொடரும் எண்ணம் ரிசர்வ் வங்கிக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பொருளாதார நிபுணர் கௌரசென்.

சிறிய மதிப்பிலான நோட்டுகளையே வங்கிகளும் கேட்பதாக Money Control தளத்தின் செய்தியாளரிடம் பேங்க் ஆஃப் பரோடா ஊழியர் சோனல் பந்தன் தெரிவித்தார்.

2,000 ரூபாய் நோட்டுகள் முழுமையாக காணாமல் போய்விடுமா?

டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்தாலும், வழக்கமான பண நோட்டுகளும் நாட்டின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்தாண்டு மார்ச் 18 நிலவரப்படி, நாட்டில் ரூ. 31.05 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

இது ரொக்கப் பரிவர்த்தனையில் எப்போதும் இல்லாத உச்சபட்ச அளவாகும்.

இந்த அளவைப் பார்க்கும்போது, 2,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அச்சடிக்க வேண்டிய தேவையில்லை என நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கமும் அதிகரித்திருக்கிறது.

இந்த நிதியாண்டில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிப்பு 55 சதவிகிதம் அதிகரித்திருப்பதை ரிசர்வ் வங்கி கவனித்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்படாவிட்டாலும்கூட, அவற்றை நாட்டின் பொருளாதாரத்தில் பயன்படுத்துவதை படிப்படியாக குறைப்பதற்கான வேலைகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாகவே தெரிகிறது.

காணொளிக் குறிப்பு, ஜிஎஸ்டி: வரமா? சாபமா? - ஓர் அலசல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: