இனி சிங்கப்பூரில் கார் வாங்க ரூ.90 லட்சம் அதிகம் செலவாகும்

காணொளிக் குறிப்பு, சிங்கப்பூரில் கார் வாங்க ரூ.90 லட்சம் கூடுதல் செலவு செய்ய வேண்டியது ஏன்?
    • எழுதியவர், மரிகோ ஓய்
    • பதவி, வணிகச் செய்தியாளர்

நீங்கள் இனிமேல் சிங்கப்பூரில் ஒரு பெரிய குடும்பக் கார் வாங்கவேண்டுமென்றால், காரின் விலையை விடக் கூடுதலாக கிட்டத்தட்ட 90 லட்சம் இந்திய ரூபாயைச் செலவு செய்ய வேண்டும்.

ஏன் தெரியுமா?

அந்தக் காரை வைத்திருப்பதறகான உரிமைச் சான்றிதழின் விலைதான் அது.

சிங்கப்பூரில் கார் வைத்திருப்பதற்கான உரிமைச் சான்றிதழின் (certificate of entitlement - COE) விலை வரலாறு காணாத அளவில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் (1,46,002) சிங்கப்பூர் டாலர்களை எட்டியுள்ளது. இந்தியப் பண மதிப்பில் இது 88.8 லட்சம் ரூபாய்.

இந்தச் சான்றிதழ் முறையை சிங்கப்பூர் அரசு 1990-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. வாகன நெரிசலுக்கு எதிரான நடவடிக்கையாக இது கொண்டுவரப்பட்டது. இது 10 ஆண்டுகளுக்கான உரிமைச் சான்றிதழ் (COE) முறையை அறிமுகப்படுத்தியது.

சிங்கப்பூரில் கார் வாங்கவேண்டுமெனில், இந்தச் சான்றிதழைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

உலகிலேயே அதிகபட்ச விலை

சிங்கப்பூர், கார், போக்குவரத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சராசரி சம்பளம் வாங்கும் சிங்கப்பூர் மக்களால், இந்த உரிமைச் சான்றிதழ் திட்டம் காரணமாக, ஒரு கார் வாங்குவது மிகவும் கடினம்

இந்த வாகன உரிமைச் சான்றிதழ்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஏலத்தில் விற்கப்படுகின்றன. அவற்றின் எண்ணிக்கையை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது.

வரிகள் மற்றும் இறக்குமதி கட்டணங்களுடன் சேர்த்து, இந்த உரிமைச் சான்றிதழ் முறை, சிங்கப்பூரில் கார்கள் விற்கப்படும் விலையை உலகிலேயே அதிகபட்சமானதாக மாற்றியுள்ளது.

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் ஒரு புதிய டொயோட்டா காம்ரி ஹைப்ரிட் கார் வாங்கவேண்டுமென்றால், சுமார் 1.5 கோடி இந்திய ரூபாய் செலவாகும். இது இந்திய விலையை விடக் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.

சிறிய கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வணிக வாகனங்களுக்கென பல்வேறு வகையான உரிமைச் சான்றிதழ்கள் உள்ளன.

கோவிட் தொற்றுக்குப் பின் அதிகரித்த கார்களின் தேவை

சிங்கப்பூர், கார், போக்குவரத்து

பட மூலாதாரம், Getty Images

சிங்கப்பூரின் வாகன உரிமைச் சான்றிதழ்களின் விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளன. கோவிட் தொற்றுநோய்க்குப் பின் வாகனங்களின் தேவை அதிகரித்திருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு சான்றிதழ்களுக்கான தள்ளுபடியை அரசாங்கம் குறைக்கவிருக்கிறது.

உரிமைச் சான்றிதழ்களின் ஆரம்ப விலை சுமார் 63 லட்சம் இந்திய ரூபாய் ஆகும் (1,04,000 சிங்கப்பூர் டாலர்கள்). 2020-ஆம் ஆண்டு, கோவிட் தொற்றுநோய் காலகட்டத்தின் போது, புதிய கார்களுக்கான தேவை குறைவாக இருந்த ஆண்டில் இருந்ததைவிட இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

‘திறந்த’ வகை சான்றிதழ்கள் என்று அழைக்கப்படுவற்றை, எந்த வகைக் கார்கள் வாங்கவும் பயன்படுத்தலாம். இவற்றின் விலையும் வரலாறு காணாத அளவில் சுமார் 92 லட்சம் ரூபாயை (1,52,000 சிங்கப்பூர் டாலர்கள்) எட்டியுள்ளது.

மாதச் சம்பளக்காரர்களுக்கு எட்டாக் கனியான கார்கள்

டொயோட்டா போர்னியோ மோட்டார்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஆலிஸ் சாங் பிபிசியிடம் பேசுகையில், புதிய கார்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால், உரிமைச் சான்றிதழ்களின் விலை உயர்வை அவர்கள் எதிர்பார்த்ததாகக் கூறினார்.

"எங்களிடம் சொகுசு கார்கள் இருக்கும்போதெல்லாம், அவற்றை வாங்க வாடிக்கையாளர்கள் எங்கள் கடைக்கு வெளியே வரிசையில் நிற்கிறார்கள்," என்கிறார் அவர்.

சிறிய நாடாக இருப்பினும், சிங்கப்பூர் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் உள்ள நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

இருப்பினும், சராசரியாக ஆண்டுக்கு 42 லட்சம் ரூபாய் (70,000 சிங்கப்பூர் டாலர்கள்) சம்பளம் வாங்கும் சாதாரண சிங்கப்பூர் மக்களால், இந்த உரிமைச் சான்றிதழ் திட்டம் காரணமாக, ஒரு கார் வாங்குவது மிகவும் கடினம்.

சிங்கப்பூர், கார், போக்குவரத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிங்கப்பூரின் ரயில் சேவையை விரிவுபடுத்தவும், புதுப்பிக்கவும் 6000 கோடி சிங்கப்பூர் டாலர்களுக்கும், அதிகமான தொகை கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது

உலகிலேயே சிறந்த பொதுப்போக்குவரத்து

உலகிலேயே சிறந்த ஒன்றாகத் தரப்படுத்தப்பட்டுள்ள சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க அரசாங்கம் முனைப்பாக உள்ளது.

அடுத்தப் பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் ரயில் சேவையை விரிவுபடுத்தவும், புதுப்பிக்கவும் 6000 கோடி சிங்கப்பூர் டாலர்களுக்கும், (மூன்றரை லட்சம் கோடி இந்திய ரூபாய்) அதிகமான தொகை கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டது.

சுமார் 55 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட சிங்கப்பூரில், கடந்த ஆண்டின் இறுதியில் 10 லட்சத்துக்கும் குறைவான தனியார் கார்களே இருந்தன.

இவற்றில் எத்தனைப் பழைய கார்கள் சாலைகளிலிருந்து நீக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே எத்தனை புதிய உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பது அமையும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)