ராஜஸ்தான்: பா.ஜ.க.வுடன் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களும் சமஸ்கிருதத்தில் பதவியேற்றது ஏன்? பின்னணி என்ன?

    • எழுதியவர், மோஹர் சிங் மீனா
    • பதவி, பிபிசி நியூஸ்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் சட்டசபையில் டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பதவியேற்றனர். இதற்காக நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது இரண்டு முஸ்லிம் எம்.எல்.ஏக்களும் சமஸ்கிருத மொழியில் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சி நடந்த நாளில் இருந்து அந்த இருவரைப் பற்றியும் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. சமஸ்கிருதத்தில் பதவியேற்ற எம்.எல்.ஏ.க்களான, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜுபைர் கான் மற்றும் பாஜகவுக்கு எதிராக கிளர்ச்சி செய்து சுயேட்சையாக வெற்றி பெற்ற யூனுஸ் கான் ஆகியோர்தான் அந்த இருவரும்.

ராஜஸ்தான் சட்டசபையின் 200 தொகுதிகளில் 199 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 191 எம்.எல்.ஏ.க்கள் டிசம்பர் 20ஆம் தேதி சட்டப் பேரவையில் பதவியேற்றனர். 8 எம்.எல்.ஏ.க்கள் டிசம்பர் 21ஆம் தேதி பதவியேற்றனர்.

அல்வார் மாவட்டத்தின் ராம்கர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜுபைர் கான் மற்றும் பாஜகவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து டித்வானா தொகுதியில் இருந்து சுயேட்சையாக வெற்றி பெற்ற யூனுஸ் கான் ஆகிய இருவரும் சமஸ்கிருத மொழியில் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஜுபைர் கானின் மனைவி சஃபியா ஜுபைர் கான் கடந்த முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை காங்கிரஸ் கட்சி சஃபியா ஜுபைர் கானுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அவருக்குப் பதிலாக அவரது கணவர் ஜுபைர் கானுக்கு காங்கிரஸ் வாய்ப்பளித்தது. ஜுபைர் கான் நான்காவது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அசோக் கெலாட் அரசாங்கத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த சஃபியா ஜுபைர் கான், சட்டமன்றத்தில் மேவாட் வழக்கு மீதான விவாதத்தின்போது தன்னை ராமர் மற்றும் கிருஷ்ணரின் வழித்தோன்றல் என்று அவராகவே அறிவித்துக்கொண்டார்.

சமஸ்கிருதத்தில் பதவியேற்ற இரண்டாவது எம்எல்ஏவான யூனுஸ் கான், வசுந்தரா ராஜே அரசில் கேபினட் அமைச்சராக இருந்தார். வசுந்தரா ராஜேவின் ஆதரவாளராகக் கருதப்படும் யூனுஸ் கான், கடந்த சட்டமன்றத் தேர்தலில் சச்சின் பைலட்டை எதிர்த்து டோங்க் தொகுதியில் போட்டியிட்டார்.

யூனுஸ் கான் என்ன சொல்கிறார்?

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுப்பது தொடர்பான விவாதங்கள் குறித்து யூனுஸ் கான் பிபிசியிடம் பேசியபோது, "தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் சிறப்பாகப் பணியாற்றியதை முஸ்லிம்களும் மிகவும் பாராட்டினர்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் சமஸ்கிருதமும் ஒன்று. இது நமது இந்தியாவின் பழமையான மொழி," என்றார்.

சமஸ்கிருதத்தின் வரலாற்றை விவரிக்கும் கான், "வேதங்கள், புராணங்கள் மற்றும் ராமாயணம் போன்ற காவியங்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன. சமஸ்கிருதம் நம் இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய். நான் ஒரு இந்தியன். சமஸ்கிருதம் நம் நாட்டின் வளமான மற்றும் பழமையான மொழி. அதனால்தான் நான் சமஸ்கிருதத்தில் சத்தியப் பிரமாணம் செய்தேன்,” என்றார்.

மேலும், "சத்தியப் பிரமாணம் செய்ய எங்களுக்கு மூன்று வழிகள் இருந்தன. ஆங்கிலம் என்றால் ஆங்கிலேயர்களின் மொழியில் நான் சத்தியம் செய்யவேண்டும். இந்தி மற்றும் சமஸ்கிருதம் என்பது இந்திய மொழிகள். இதில் சமஸ்கிருதம் மிகவும் பழமையான மொழி. அதனால்தான் சமஸ்கிருதத்தை நான் தேர்வு செய்தேன்," என்று விளக்கினார்.

சமஸ்கிருதத்தில் மட்டும் ஏன் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்?

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த கான், "நமது பழமையான விஷயங்கள் படிப்படியாக மறைந்து வருவதால், சமஸ்கிருதத்தில் பிரமாணம் செய்வது பொருத்தமானது என்று நான் நினைத்தேன். அவற்றை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் வேறு யார் ஏற்றுக்கொள்வார்கள்? சமஸ்கிருதம் நமது இந்திய மொழி," என்றார்.

யூனுஸ் கான் பள்ளிப் படிப்பின்போது சமஸ்கிருதம் பயின்றுள்ளார். "எட்டாம் வகுப்பு வரை சமஸ்கிருதம் படித்துள்ளேன். 1976-77ஆம் ஆண்டு படிப்பறிவில்லாத எனது பெற்றோர்கள், என்னை அப்போது சமஸ்கிருதம் படிக்க வைத்தார்கள்."

முதுகலைப் பட்டம் வரை படித்த யூனுஸ் கான், பல மொழிகளில் புலமை பெற்றவராகவும் இருக்கிறார்.

"எனக்கு உருது, அரபி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளும் தெரியும். சமஸ்கிருதத்தை எடுத்துக்கொண்டால் அந்த மொழியை நன்றாகப் படிக்கவும் பேசவும் தெரியும்," என்கிறார் அவர்.

இதுகுறித்து மக்களின் எதிர்வினை தொடர்பாக விவரிக்கும் அவர், "சமஸ்கிருதத்தில் பிரமாணம் செய்துகொண்ட பிறகு, பலர் என்னைப் பாராட்டினர். அதை நான் நன்றாக உணர்ந்தேன். சமஸ்கிருத பள்ளி மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள், சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் மற்றும் சமஸ்கிருத அறிஞர்களும் என்னை அழைத்துப் பாராட்டினர்," என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சமஸ்கிருதத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது

ஜுபைர் கான் நான்காவது முறையாக எம்எல்ஏ ஆகியுள்ளார். 1993இல் இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் சமஸ்கிருதத்தில்தான் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதாகக் குறிப்பிட்ட அவர், அப்போது பாஜக என்ற கட்சி முழுமையாக உருவெடுக்கவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "சமஸ்கிருதம் எங்கள் பண்டைய மொழி. நாங்கள் இந்தியாவின் இந்திய முஸ்லீம்கள். நாங்கள் இங்குள்ள கலாசாரத்தையும் இங்குள்ள அரசமைப்பையும் நம்புகிறோம். இங்குள்ள சகோதரத்துவத்தை நாங்கள் நம்புகிறோம், எல்லா மதத்தையும் மதிக்கிறோம்," என்றார்.

மேலும், "மதங்கள் பின்னர் உருவாக்கப்பட்டன. சமஸ்கிருதம் மிகவும் முந்தைய மொழி. சமஸ்கிருதத்தின் மீது எந்த மதத்திற்கும் காப்புரிமை இல்லை. சமஸ்கிருதம் மதங்கள் அறியப்படாத காலத்தில் இருந்தே உள்ளது," என்றும் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

ஜுபைர் கான் 12ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத பாடம் படித்துள்ளார். அவர் கூறியபோது, "பள்ளியில் படித்தபோது சமஸ்கிருதம் எனது பாடமாக இருந்தது. நான் மூத்த இரண்டாம் நிலை வரை சமஸ்கிருதம் படித்தேன். நான் எம்எல்ஏவாக தற்போது இரண்டாவது முறையாக சமஸ்கிருதத்தில் சத்தியப் பிரமாணம் செய்துள்ளேன்," என்றார்.

மக்களின் எதிர்வினை என்ன?

சமஸ்கிருதத்தில் சத்தியப் பிரமாணம் செய்த பிறகு மக்களின் எதிர்வினை குறித்த கேள்விக்கு, "மக்கள் ஒரு முஸ்லிமாக இருப்பதை விரும்பினார்கள். ‘அவர்கள் சமஸ்கிருதத்தில் சத்தியம் செய்கிறார்கள்‘ என்றும் பாராட்டுகிறார்கள்," என்று கூறுகிறார்.

“சமஸ்கிருதம் என்பது எந்த ஒரு மதத்தின் மொழி அல்ல. அதன் மீது அனைவருக்கும் உரிமை உண்டு. எந்த மொழிக்கும், எந்த மதத்துக்கும் எதிராக எந்த மதமும் போதிக்கவில்லை.

மனிதநேயம், கருணை, அறம் ஆகியவற்றின் பாதையை அனைத்து மதங்களும் காட்டுகின்றன. இந்தியாவின் கலாசாரம் மற்றும் இந்தியாவின் வரலாறு குறித்து கல்வி கற்பது அனைவருக்கும் மரியாதையை அளிக்கும்," என்றார்.

முன்னாள் எம்எல்ஏ சஃபியா ஜுபைர் கான் கூறுகையில், “சமஸ்கிருதம் நமது நாட்டின் தொன்மையான மொழி. சிறுபான்மை எம்எல்ஏக்கள் சமஸ்கிருதத்தில் பதவியேற்பது, சிறுபான்மையருக்கு மதச்சார்பற்ற மனப்பான்மை இருப்பதைக் காட்டுகிறது. அனைவரையும் ஒருங்கிணைந்து அழைத்துச் செல்வதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதையும் இது காட்டுகிறது,” எனத் தெரிவித்தார்.

சமஸ்கிருதத்தில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ள தனி முயற்சி

இருபது பாஜக எம்எல்ஏக்கள், ஒரு சுயேட்சை மற்றும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ஆகியோர் சமஸ்கிருதத்தில் சட்டசபையில் பதவியேற்றுள்ளனர்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சித்தாந்தத்தை ஆதரிக்கும் அமைப்பான சமஸ்கிருத பாரதியின் ஜெய்ப்பூர் பிரிவில் பணியாற்றும் டாக்டர் கிருஷ்ண குமார், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தனது அமைப்பின் சார்பில் சந்தித்து சமஸ்கிருதத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறுகிறார்.

"நாங்கள் எங்கள் உறுப்பினர்கள் குழு ஒன்றை உருவாக்கி, பல எம்.எல்.ஏ.க்களை தொடர்புகொண்டு, சமஸ்கிருதத்தில் சத்தியப் பிரமாணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டோம். பால்முகுந்த் ஆச்சார்யா, கோபால் சர்மா உட்பட பல எம்.எல்.ஏ.க்களை நாங்கள் இதுகுறித்து தொடர்புகொண்டு பேசினோம்," என்றார் அவர்.

"சட்டசபை கோப்புகளில் இருந்து சத்தியப் பிரமாண வடிவத்தைப் பெற்று சமஸ்கிருதத்தில் சுற்றறிக்கை தயார் செய்தோம். உச்சரிப்பைத் திருத்தும் வகையில் பிரத்யேகமாக ஆடியோவும் தயார் செய்துள்ளோம்," என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "சமஸ்கிருதம் எந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் மொழி அல்ல; சமஸ்கிருதம் இந்தியத் தன்மையைக் கொண்ட மொழியாக இருக்கிறது. சமஸ்கிருதத்துடன் தொடர்புடைய சிறப்பு சமூகம், வர்க்கம் அல்லது மதம் என்று எதுவும் இல்லை. எல்லோரும் சமஸ்கிருதத்தை நம்புகிறார்கள் என்பதுடன் எல்லோரும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்," என்று முடித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)