You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சபரிமலையில் திருப்பதி மாடல் - கேரள அரசின் புதிய முயற்சி தோல்வியா? தரிசனம் செய்ய 20 மணி நேரம் ஏன்?
- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு, பெரும் கூட்ட நெரிசல் உருவாகி, 20 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க நேர்ந்திருக்கிறது.
இதனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகளில் கேரள அரசு தோல்வியை சந்தித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உண்மையில் சபரிமலையில் என்ன நடக்கிறது?
பக்தர்கள் குற்றம்சாட்டும் கேரள அரசு உண்மையிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளதா?
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் பக்தர்கள் 41 நாட்கள் மாலை அணிந்து விரதமிருந்து செல்வர். குறிப்பாக, மண்டல மற்றும் மகர பூஜை நடக்கும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சபரிமலைக்கு அதிகப்படியான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்தாண்டு தரிசனத்துக்காக நவம்பர் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் அங்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலையில் திருப்பதி மாடல்
இப்படியான நிலையில், பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கேரள அரசு, திருப்பதி கோவிலின் வழிமுறைகளை பின்பற்றத் துவங்கியுள்ளது.
திருப்பதி கோவிலைப் போன்று ‘டைனமிக் க்யூ’ எனப்படும் முறையை பின்பற்றி கம்பித்தடுப்புகள் அமைத்து பக்தர்களை அனுப்புகிறது.
மரகூட்டத்தில் இருந்து சன்னிதானம் வரையில், ‘டைனமிக் க்யூ’ வரிசைகள் அமைக்கப்பட்டு, கொட்டகைகள் அமைத்துள்ளனர். இதுதவிர தரிசன நேரம் மாற்றம், சில இடங்களில் பக்தர்கள் வாகன அனுமதி மறுப்பு என பல மாற்றங்களைச் செய்துள்ளது கேரள அரசு.
ஆனால், இந்த புதிய முயற்சியில் கேரள அரசு தோல்வியை சந்தித்துள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றனர் பக்தர்கள்.
பக்தர்கள் கட்டுக்கடங்காத பெருங்கூட்டத்துக்குள் தள்ளப்பட்டு சிக்கித்திணறி 24 மணி நேரம் வரையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
உண்மையில் என்ன தான் நடக்கிறது சபரிமலையில், கேரள அரசின் புதிய முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதா, என, தரிசனம் செய்து வந்த பக்தர்கள் சிலரிடம் பிபிசி தமிழ் விசாரித்தது.
‘கூட்ட நெரிசலில் சிக்கித் திணறினோம்’
பிபிசி தமிழிடம் பேசிய கோவையை சேர்ந்த தமிழ்வாணன், "23வது ஆண்டாக சபரிமலை சென்று வந்துள்ளேன். ஆனால் இந்த ஆண்டைப்போல ஒரு போதும் சிரமங்களை சந்தித்தது இல்லை. முன்பெல்லாம் நிலக்கல் பகுதியில் இருந்து எந்த நேரமும் சொந்த வாகனத்தில் பம்பைக்கு செல்வோம். பம்பையில் நீராடிவிட்டு வெறும் 2 –3 மணி நேரங்கள் நடந்து சன்னிதானத்தில் ஐயப்பனை தரிசிப்போம்," என்றார்.
"ஆனால், புதிய வழிமுறைகள் எனக்கூறி நிலக்கல் பகுதியிலேயே எங்கள் வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர். நிலக்கல்லில் இருந்து கேரள அரசின் சொந்த பஸ்சில் தான் பம்பை அழைத்துச் செல்கின்றனர். அதிலும் இரவு, 10:00 மணிக்கு மேல் நிலக்கல்லில் பஸ் சேவையை ரத்து செய்துவிட்டு, அதிகாலை தான் இயக்குகின்றனர். இதனால் நிலக்கல் பகுதிக்கு வந்து காத்திருந்து பஸ் வசதி பெற்று பம்மை செல்லவே, 10 மணி நேரம் வீணாணது," என்கிறார் தமிழ்வாணன்.
மேலும் தொடர்ந்த அவர், ‘‘நிலக்கல் பகுதியில் மாலையில் இருந்து அதிகாலை வரையில் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துவிடுகின்றனர். பஸ் வசதியும் குறைவு என்பதால், 50 – 70 பேர் பயணிக்க வேண்டிய ஒரு பஸ்சில், 150 – 200 பேர் மூச்சுத்திணறலுக்கு மத்தியில் பயணித்து பம்பை செல்கின்றனர்," என்கிறார் தமிழ்வாணன்.
‘தரிசனம் செய்யவே 20 மணி நேரம் ஆனது’
கோவையைச் சேர்ந்த மற்றொரு பக்தரான விஜயகுமார், "ஏழாவது ஆண்டாக சபரிமலைக்கு சென்றுள்ளேன். முன்பு சன்னிதானத்துக்கு சில மீட்டர்கள் தொலைவில் தான் கம்பித்தடுப்புகளுடன் க்யூ இருக்கும். எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் சரி பக்தர்கள் சிரமமின்றி நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆனால் தற்போது திருப்பதி போன்று டைனமிக் க்யூ எனக்கூறி பம்பையில் இருந்து சன்னிதானம் வரையில் கம்பித்தடுப்புகள் அமைத்து அதில் அனுப்புகின்றனர்," என்றார்.
"முன்பு பம்பையில் இருந்து 2 – 3 மணி நேரத்தில் சன்னிதானத்தை அடைந்த நாங்கள், இந்த முறை 10 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சன்னிதானத்தை அடைந்தோம். நிலக்கல் – பம்பைக்கும், பம்பை – சன்னிதானம் செல்லவும், 20 மணி நேரத்துக்கு மேலானது. பெருங்கூட்டத்துக்கு மத்தியில் மூச்சுத்திணறலை பொறுத்துக்கொண்டு தான் ஐயப்பனை பார்த்து சுவாமி தரிசனம் செய்தோம். இந்த ஆண்டு ஏற்பாடுகள் முறையாக இல்லாதது தான் கூட்ட நெரிசலுக்கு காரணம்," என்கிறார் அவர்.
‘பலர் பாதியிலேயே வீடு திரும்பினர்’
பிபிசி தமிழிடம் பேசிய சாமிநாதன் (இவர் ஒரு குருசாமி – 18 ஆண்டுகள் மாலை அணிந்தவர்), "19 ஆண்டாக தற்போது சபரிமலைக்குச் சென்று வந்துள்ளேன். இந்த முறை கேரள அரசின் புதிய முயற்சிகளால் தான், இவ்வளவு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால் மாலை அணிந்து பல நாட்கள் விரதமிருந்து வந்த வயதான பக்தர்கள், குழந்தைகளுடன் வந்த பக்தர்கள், கூட்டத்தில் நிற்க முடியாமலும் உயிருக்கு பயந்தும் பந்தளம், எருமேலி பகுதியுடனே ஐயப்பனை காண முடியாமல் மன விரக்தியில் பாதியிலேயே வீட்டுக்கு திரும்பிவிட்டனர்," என்கிறார் அவர்.
இப்படி நம்மிடம் பேசிய பக்தர்கள் அனைவரும் கேரள அரசின் புதிய முயற்சி தோல்வி என்ற குற்றச்சாட்டைத்தான் முன்வைத்தனர்.
சபரிமலை விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறதா?
இப்படியான நிலையில், சபரிமலை விவகாரத்தை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
டிசம்பர் 10-ஆம் தேதி சபரிமலை கூட்ட நெரிசலில் காத்திருந்த சேலத்தை சேர்ந்த 11 வயதான பத்மஸ்ரீ என்ற குழந்தை மயங்கி விழுந்து மரணித்தது. மூன்று நாட்கள் முன்பு கூட்டத்தில் தந்தையை காணவில்லை என ஒரு சிறுவன் கதறி அழும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவியது.
ஆனால், ஊடகங்கள் அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்ததில், அந்த வீடியோவில் சிறுவன் அழுது வெறும் 14 நொடிகளில் அவரின் தந்தை சிறுவனிடம் வந்து விடுவது கண்டறியப்பட்டது.
ஆனால், இந்த இரண்டு சம்பவங்களையும் இணைத்து, ‘இது தான் கேரளாவில் இந்துக்களின் நிலை’ எனக்கூறி சமூக வலைதளங்களில் கேரள பா.ஜ.கவினர் பரப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி, டிசம்பர் 13-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தின் முன்பு பா.ஜ.கவினர் பெரும் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர்.
இது ஒரு புறமிருக்க, காங்கிரஸ் கட்சியினரும் இந்த விவகாரங்களை கையிலெடுத்து, கேரள கம்யூனிஸ்ட் அரசு மீது கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால், சபரிமலையில் எல்லாம் சரியாக உள்ளது, சபரிமலையை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
ஆனால், இதை எதிர்க்கட்சிகள் மறுத்து வருவதுடன், அரசு மீது கடுமையாக கண்டனங்களை முன்வைக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு
சபரிமலை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கேரள காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் வி.பி.சஜீந்திரன், "கேரள கம்யூனிஸ்ட் அரசு சபரிமலை தரிசனத்துக்கான ஏற்பாடுகளில் இம்முறை ‘டோட்டல் பெய்லியர்’ சந்தித்துள்ளது," என்றார்.
"திருப்பதி மாடலை பின்பற்றுகிறோம் எனக்கூறி சொதப்பியுள்ளது. தரிசனத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய வழக்கமாக அனைத்து துறைகளையும் கூட்டி ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும். இம்முறை அதைக்கூட செய்யவில்லை. குறைந்த அளவு போலீஸார், மின், குடிநீர், கழிப்பிட வசதி, வரிசைகளை அமைக்கும் கட்டமைப்புகள் என எந்த அடிப்படை வசதியும் முறையாக இல்லை. லட்சணக்கணக்கான பக்தர்கள் பாதிப்பை சந்தித்துள்ளதே இதற்கு சாட்சி, சபரிமலையை வைத்து அரசியல் செய்ய எங்களுக்கு அவசியமில்லை," என்கிறார் அவர்.
‘இந்துக்களுக்கு எதிரானது கேரள அரசு’
பிபிசி தமிழிடம் பேசிய கேரள பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நாராயணன் நம்பூதிரி, "சபரிமலையில் தரிசனம் செய்யப் பல கட்டுப்பாடுகளை பல ஆண்டுகளாக இந்து பக்தர்கள் கடைபிடிக்கிறார்கள். இந்துக்களின் நம்பிக்கையை தகர்க்கும் நோக்கில் பெண்களை கம்யூனிஸ்ட் அரசு தரிசனத்துக்கு அனுமதித்தில் இருந்தே, அவர்கள் இந்துக்களுக்கு எதிரானது என்பது உறுதியானது. தற்போது, வேண்டுமென்றே சபரிமலையில் ஏற்பாடுகளை முறையாகச் செய்யாமல் விட்டு, இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்,"என்றார்.
"சபரிமலையில் நாங்கள் ஆய்வு செய்த வரையில், எந்த அடிப்படை வசதியும், ஏற்பாடும் இந்த ஆண்டு முறையாக இல்லை. இந்த கூட்ட நெரிசலுக்கு கேரள அரசின் அலட்சியப்போக்குதான் காரணம், நாங்கள் நடப்பதை சுட்டிக்காட்டுகிறோம், அரசியல் செய்யவில்லை," என்கிறார்.
கேரள அறநிலையத்துறை அமைச்சர் விளக்கம்
இத்தனை குற்றச்சாட்டுகள், கண்டனங்கள் குறித்து கேரள தேவசம் போர்டு (அறநிலையத்துறை) அமைச்சர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது பிபிசி தமிழ்.
பிபிசி தமிழுக்கு விளக்கமளித்த அமைச்சர் ராதாகிருஷ்ணன், "சபரிமலையில் முந்தைய ஆண்டுகளை விட இந்தாண்டு அதிக பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். தினமும் 1 லட்சம் பேர் பாதுகாப்பாக தரிசனம் செய்யும் அளவுக்கு நாங்கள் ஏற்பாடுகளை செய்துள்ளோம்," என்றார்.
"பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பொய்யான தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை பரப்பி வேண்டுமென்றே சபரிமலையை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். பொய்யான வீடியோக்களை பரப்பி அமைதியை குலைத்தவர்களை கண்டறிந்து கைது செய்ய, சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சபரிமலையில் அரசின் புதிய முயற்சி ‘பெய்லியர்’ என்று சொல்வதெல்லாம் பொய், சபரிமலையில் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது," எனக்கூறி குற்றச்சாட்டுகளை மறுத்தார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)