You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீரப்பனிடம் சந்தன மரங்களை வாங்கியது யார்? சந்தன கடத்தலின் பின்னணியில் இருந்தது யார்?
- எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
- பதவி, பிபிசி தமிழ்
கூச முனிசாமி வீரப்பன் என்ற பெயரில் மறைந்த வீரப்பன் கதையை அடிப்படையாக வைத்து சமீபத்தில் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை வீரப்பன் குறித்து பல விதமான கதைகள் படமாக, தொடராக, ஆவணப்படமாக எடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம் வீரப்பன் வரலாற்றில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.
குறிப்பாக இந்த தொடர் முழுவதும் வீரப்பன் தனது வாழ்க்கை குறித்து தானே பேசியுள்ள வீடியோக்கள் பலவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதோடு சேர்த்து வீரப்பன் பெயரை சொல்லி காவல் மற்றும் வனத்துறை படைகள் ஒர்க் ஷாப்பில் வைத்து அப்பாவி மக்களுக்கு நடத்திய கொடுமைகளும் இந்த தொடரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் முழுவதும் இந்த ஆவணப்பட தொடர் திடீர் கவனம் பெறுவதற்கு புதிதாய் இதில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.
நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
கூச முனிசாமி வீரப்பன் ஆவணப்பட தொடர் ஜெயச்சந்திர ஹாஷ்மி, பிரபாவதி ஆர்வி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரால் உருவாக்கப்பட்டு ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ளது. மற்ற வீரப்பன் தொடர்களை காட்டிலும் இதில் என்ன வித்தியாசம் உள்ளது என்ற முதல் கேள்வியை அந்த குழுவிடம் முன் வைத்தோம்.
அதற்கு “இதுவரை வந்த வீரப்பன் குறித்த படங்கள் அல்லது தொடர்கள் அனைத்துமே அவரை பற்றி காவல்துறை என்ன சொல்கிறது அல்லது மூன்றாம் நபர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்தே வந்துள்ளன. ஆனால், இதுவே முதல் முறையாக வீரப்பன் திரையில் தோன்றி தன் வாழ்க்கையில் என்ன நடந்தது, தான் யார் என்று சொல்லும் ஆவணப்படம்” என்று கூறுகிறார் ஜெயச்சந்திர ஹாஷ்மி.
“பொதுவாகவே அதிகார வர்க்கம் எப்போதும் ஒரு விஷயம் குறித்து ஒரு கதையை சொல்லி கொண்டே இருக்கும். ஆனால், ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் போல அந்த கதைக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். அதற்காக வீரப்பன் ஒரு போராளி, மக்களுக்காக போராடியவர் என்று நக்கீரன் சொல்லவில்லை. அவர் சட்டப்படி ஒரு குற்றவாளி என்பதை நக்கீரன் எப்போதும் மறுத்ததில்லை. இந்த ஆவணப் படத்திலும் கூட அப்படி ஏதும் அவர் நல்லவர் என்று சொல்லப்படவில்லை."
"ஆனால், இதற்கு முன் வந்த கதைகள் அனைத்துமே வீரப்பன் இதைச் செய்தார், அதைச் செய்தார் என காவல்துறை சொன்னது மட்டுமே உள்ளது. எனவே, என்ன நடந்தது என்பதை வீரப்பனே வந்து சொல்வது மிக முக்கியம். வீரப்பன் நக்கீரனுக்கு இந்தப் பேட்டிகளை கொடுக்க விருப்பப்பட்டதே அவரைப் பற்றி உலாவும் பேய்க் கதைகளைப் பொய்யாக்கத்தான். யார் யாரோ செய்த குற்றங்கள் எல்லாம் அந்த நேரத்தில் அவர் மீது எழுதப்பட்டது என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. இதை வெளிப்படுத்தவே அவர் பேச நினைத்தார்."
"உதாரணத்திற்கு அவர் யானைகளை கொன்றார் என்பது உண்மைதான். ஆனால், எத்தனை யானை என்பது அவருக்கு தெரியும். இவர் 2000 யானையை கொன்றுள்ளார் என்று யார் யாரோ செய்த குற்றத்திற்கு இவரை குற்றவாளி ஆக்கிய போதுதான் அவர் வெளிவந்து உண்மையை பேச நினைத்தார். எனவே, எப்போதுமே அதிகாரம் சொல்வதை மட்டும் கேட்காமல், எதிர் தரப்பு கதையும் தெரிய வேண்டும்” என்கிறார் ஜெயச்சந்திர ஹாஷ்மி.
வீரப்பன் நோக்கில் சொல்லப்பட்டுள்ளதா கதை?
இந்த புதிய தொடர் வீரப்பன் பார்வையில் இருந்து சொல்லப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதுவே இந்த தொடருக்கு புது வெளிச்சத்தை பாய்ச்சும் நிலையில், அது அல்ல இந்த தொடரின் பிரதான நோக்கம் என்கிறார் ஜெயச்சந்திர ஹாஷ்மி.
“இந்த கதை வீரப்பன் நோக்கில் இருந்து சொல்லப்படவில்லை. வீரப்பன் வீடியோ என்பது நமக்கு கிடைத்த ஒரு முக்கியமான ஆவணம். அதை கதை சொல்லும் கருவியாக வைத்து கொண்டு அந்த மக்கள் அனுபவித்த பிரச்சனைகளை தான் இந்த ஆவணப்படம் பேசியுள்ளது. இதில் வீரப்பன் எப்படி உருவாகிறார், அவரால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அவரை தேடும் நடவடிக்கையில் அதிகாரிகளால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அதன் இறுதி தீர்வு என்ன என்பதை தான் இந்த கதை பேசியுள்ளது” என்கிறார் அவர்.
வீரப்பன் சொல்வது ஒன்று, களநிலவரம் வேறு
இந்த தொடரை எடுப்பதில் படக்குழு சந்தித்த சவால்கள் குறித்து அதன் ஆய்வு பணிகளை மேற்கொண்ட வசந்த் பாலகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அதில் பல புதிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் அவர்.
“வீரப்பனின் தனிப்பட்ட குணம், திறமைகள், செயல்கள் குறித்த வீடியோக்கள் அனைத்தையும் பார்த்தாலே நீங்கள் வீரப்பன் ஹீரோ என்ற நிலைக்கு சென்று விடுவீர்கள். அவருக்கு எதிரான கோணத்தை கண்டறியவே சவாலாக இருக்கும். அதே சமயம் களத்திற்கு செல்லும்போது அங்கு அந்த நிலைப்பாடு கேள்விக்குள்ளாகும். காரணம், வீரப்பன் வீடியோ முழுவதும் அவர் தன்னுடைய பார்வையில் இருந்து கதையை சொல்லியிருப்பார்.
வீரப்பன் ஊரான கோபிநத்தம் சென்ற போது இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. அந்த பகுதி மக்கள் சிலர் வீரப்பனின் முக்கிய எதிரியான வனத்துறை அதிகாரி ஸ்ரீனிவாசுக்கு சிலை வைத்து இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். அந்த கிராமத்தில் வீரப்பன் குறித்த எந்த பெரிய தடயங்களும் இருக்காது. அதற்கு அரசின் அழுத்தம் உள்பட பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் வீரப்பன் பிம்பம் சார்ந்தே பல குழப்பங்கள் ஏற்படும்.
"இந்நிலையில் இதில் எந்த சார்பிலும் கதையை நகர்த்தாமல் ஒரு அடி தள்ளி நின்று இருபக்க கதையை சொன்னதே இந்த தொடரின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. அதுவே முக்கிய சவாலாகவும் இருந்தது. மேலும் அந்த கிராம மக்களை வெளிப்படையாக பேச வைப்பதும் பெரும் சவாலாக இருந்தது. அதற்கு உதவியது மூத்த பத்திரிக்கையாளர்கள் சுப்பு மற்றும் ஜீவாதான்” என்று தெரிவிக்கிறார் வசந்த்.
‘நான் கண்ட அதிர்ச்சி’
“இந்த சம்பவத்தில் பெண்களுக்கு மிக மோசமான கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளன. அதற்கு இணையாக ஆண்களும் கொடுமைப் படுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்த மக்களை சந்தித்த போது, ஆண்கள் பலர் காவல்துறை அடியால் உடல் குன்றி, நோய்வாய்ப்பட்டு, ஒரு வரியை கூட ஒழுங்காக பேச முடியாத நிலையில் இருப்பதை பார்த்தது அதிர்ச்சியாக இருந்தது” என்கிறார் வசந்த்.
பார்வையாளர்கள் போற்றும் மேக்கிங்
பார்வையாளர்களுக்கு தொய்வு ஏற்படுத்தாத சினிமா அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே முடிவெடுத்தோம். இதில் முக்கிய பங்கு வகித்தது ஷூட்டிங் நடந்த இடங்கள் தான். அதற்காக வழக்கமான சினிமா மலைகளை விட்டுவிட்டு, இது வரை சினிமா எடுத்திராத அந்தியூர் பகுதியில் உள்ள மலைகளில் ஷூட்டிங் செய்ததாக கூறுகிறார் வசந்த். இந்த பகுதிகளுக்கு வீரப்பன் வந்து சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
“படப்பிடிப்பு தளமே ஒரு தரமான அனுபவத்தை வழங்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும், வீரப்பன் முகத்தை யாராலும் நிகர் செய்ய முடியாது என்பதற்காவே தொடர் முழுவதும் வீரப்பனாக நடித்தவரின் முகத்தை காட்டியிருக்க மாட்டோம். அதற்கு காரணம் நிஜ வீரப்பன் இந்த தொடரில் அதிகம் வருகிறார். அதே சமயம், அவரின் முக பாவனைகளும், கதை சொல்லும் திறனும் யாராலும் ஈடு செய்ய முடியாதது. அது மட்டுமின்றி இந்த தொடரில் பணியாற்றிய அனைத்து தொழிநுட்ப கலைஞர்களும் தங்களின் முழு உழைப்பை இதில் போட்டதே இதன் வெற்றிக்கு காரணம்” என்கிறார் வசந்த்.
வீரப்பனின் விருப்பமா இது?
தன்னை பற்றி ஒரு படம் ரஜினிகாந்த் எடுக்க வேண்டும் என்பதும், சரணடைந்து வெளியே வந்து மக்கள் பிரதிநிதியாக ஆக வேண்டும் என்பதும் வீரப்பனின் ஆசைகளாக இருந்தது எனத் தெரிவிக்கிறார் வசந்த்.
“அதற்காக தனது சிறையை அவரே வடிவமைத்த சம்பவங்கள்கூட நடந்தன. அது குறித்து விரிவாக அடுத்த தொடரில் வரும். தன் பெயரைச் சொல்லி கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும் அவரது ஆசையாக இருந்ததாக” கூறுகிறார் வசந்த்.
நெட்ஃப்ளிக்ஸ் வீரப்பன் vs ஜீ 5 வீரப்பன்
தற்போதைய வீரப்பன் தொடர் வெளிவந்ததும் இதற்கு முன்னால் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான வீரப்பன் தொடரும் எதிர்மறையாக அதிகம் பேசுபொருளானது. இதில் நெட்ஃப்ளிக்ஸ் தொடர் அரசு தரப்பு ஆதரவு என்றும், புதிய தொடர் வீரப்பன் ஆதரவு என்றும் விமர்சிக்கப்பட்டது.
“5 வருடங்களுக்கு முன்பு இந்த ஆவணப்பட தொடரை எடுக்க முடிவு செய்த போதே ஒரு ட்ரைலர் கட் செய்து பல ஓடிடி தளங்களுக்கும் அதை அனுப்பினோம். அதில் ஜி5 தளம் தான் முதலில் இந்த தொடரின் ஆழமான நோக்கத்தை புரிந்து கொண்டு அதற்கான ஒப்புதலை கொடுத்தது. அதன் பின்புதான் இயக்குனர் சரத் ஜோதி, எடிட்டர் ராம் பாண்டியன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களை உள்ளே கொண்டு வந்தோம்” என்கிறார் ஜெயச்சந்திர ஹாஸ்மி.
“மற்ற ஓடிடி தளங்கள் இந்த தொடரை ஏற்றுக்கொள்ளாமல் போனதற்கு காரணம் இதுதான் முதல் முறை தமிழில் ஆவணப்பட தொடராக வந்தது. எனவே இது இங்கு விரும்பப்படுமா அல்லது படாதா என்ற சந்தேகம் இருந்திருக்கலாம். அதை தாண்டி இருவேறு கலைப்படைப்புகளும் வெவ்வேறு சார்புகளை எடுத்துள்ளன என்று சொல்லலாமே தவிர, இரு வேறு ஓடிடி தளங்கள் சார்பு நிலையில் உள்ளன என்று முத்திரை குத்த வேண்டியதில்லை” என்கிறார் அவர்.
வீரப்பனிடம் சந்தன மரங்களை வாங்கியது யார்?
பொதுவாகவே வீரப்பன் குறித்து எழும் கேள்வி அவர் சந்தனம் மரம் கடத்தியவர் என்றால் அதை வாங்கியவர்கள் யார் என்பது தான் அது குறித்து ஆதாரங்கள் ஏதும் வருமா என்ற கேள்விக்கு, இந்த தொடரிலேயே சிலரை வீரப்பனே வெளிப்படையாக மற்றும் மறைமுகமாக கூறியுள்ளார்.
“இத்தனை ஆண்டுகள் அவர் காடுகளில் இருந்து சமவெளிக்கு கட்டைகளை எடுத்து வந்து அரசு ஆதரவு இல்லாமல் கடத்தி இருக்க முடியாது. இவ்வளவு பெரிய வலையமைப்பை அவரால் உருவாக்க முடிந்தது எப்படி? இவ்வளவு கோடி செலவு செய்தும் அவரது குழுவில் ஒருவரை கூட பிடிக்க முடியாது எப்படி என்பதே இந்த தொடர் வைக்கும் கேள்வி."
"வீரப்பன் நூற்றுக்கணக்கான கொலைகளை செய்துள்ளார் என்பதை அவரே வீடியோவில் கூறியுள்ளார். அதே சமயத்தில் , அவரின் பேரை வைத்து கொண்டு சிறப்பு அதிரடி படை ஆயிரக்கணக்கான மக்களை துன்பப்படுத்தியதை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதும் இதன் முக்கிய நோக்கம்.” என்று தனது கருத்துக்களை பதிவு செய்கிறார் ஜெயச்சந்திர ஹாஸ்மி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)