You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடும்பஸ்தன் விமர்சனம்: மணிகண்டன், நக்கலைட்ஸ் கூட்டணி வெற்றி பெற்றதா?
ஜெய் பீம், குட் நைட், லவ்வர் போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் இன்று (ஜனவரி 24) வெளியாகியுள்ள திரைப்படம் 'குடும்பஸ்தன்'.
எஸ்.வினோத்குமாரின் 'சினிமாகாரன்' நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு பிரசன்னா பாலச்சந்திரன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். வைஷாக் இசையமைத்துள்ளார், சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் உள்படப் பலர் நடித்துள்ள இந்தப் படம், யூட்யூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான 'நக்கலைட்ஸ்' குழுவினரின் முதல் படம்.
படத்தின் பெயர், போஸ்டர்கள் மற்றும் முன்னோட்டத்தின் மூலம், குடும்பம் சார்ந்து கதாநாயகன் சந்திக்கும் சிக்கல்களை மையப்படுத்திய திரைப்படம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அப்படியிருக்க இந்த 'குடும்பஸ்தன்', குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறுமா? நடிகர் மணிகண்டனுக்கு, குட்நைட், லவ்வர், படங்களைத் தொடர்ந்து இது 'ஹாட்ரிக்' வெற்றியாக அமையுமா? ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?
- விடாமுயற்சி திரைப்படம் 1997-ல் வெளியான இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா? அதன் கதை என்ன?
- மதகஜராஜா: 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது எப்படி?
- நேசிப்பாயா விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? விஷ்ணுவர்தனின் கம்பேக் படமாக அமையுமா?
- காதலிக்க நேரமில்லை: இன்றைய இளைஞர்களின் மனக் குழப்பங்களை காட்டுகிறதா? ஊடக விமர்சனம்
குடும்பஸ்தன் படத்தின் கதை என்ன?
தனியார் நிறுவனம் ஒன்றில் கிராபிக்ஸ் டிசைனராக பணிபுரியும் நவீன் (மணிகண்டன்) மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான வெண்ணிலாவை (சான்வே மேகனா) அவசர அவசரமாக இரு குடும்பங்களின் எதிர்ப்பையும் மீறி பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்.
கர்ப்பமாக இருக்கும் மனைவி, பழைய பூர்வீக வீட்டைப் புதுப்பிக்க விரும்பும் அப்பா (ஆர்.சுந்தர்ராஜன்), ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பும் அம்மா ஆகியோர் அடங்கிய குடும்பத்தை தனது வருமானத்தின் மூலம் காப்பாற்றுகிறார் நவீன். இன்னொரு புறம் எந்நேரமும் தன்னுடைய அந்தஸ்தை வைத்து நாயகனின் குடும்பத்தை குத்திக் காட்டிக் கொண்டே இருக்கும் நாயகனின் அக்கா கணவர் ராஜேந்திரன் (குரு சோமசுந்தரம்).
திடீரென அலுவலகத்தில் ஏற்படும் ஒரு பிரச்னையால் ஹீரோ வேலையை விட்டு துரத்தப்படுகிறார். வேலை போன விஷயத்தை வீட்டில் சொல்ல பயந்து ஏராளமான கடன்களை வாங்குகிறார். கடன் மற்றும் வட்டி பெருகி கழுத்தை நெறிக்க, இறுதியில் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே குடும்பஸ்தன் படத்தின் கதை.
"இப்படி ஒரு குடும்பக் கதையை எடுத்துக்கொண்டு அதை நெஞ்சைப் பிழியும் சோகக் கதையாக எடுக்காமல், எந்த அளவுக்கு ஜாலியாக ரசிக்கும்படி சொல்ல முடியுமோ அந்த அளவுக்குச் சொல்லி, இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி வெற்றி பெற்றுள்ளார்" என்று இந்து தமிழ் திசை விமர்சனம் கூறுகிறது.
படத்தின் திரைக்கதை மக்களை ஈர்த்ததா?
குடும்பஸ்தன் படத்தின் பலமே, நகைச்சுவையை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதை தான் என்றும், படம் முடிந்து திரையரங்கை விட்டு வெளியேறும்போது, பார்வையாளர்கள் முகத்தில் சிரிப்புடனும் ஒருவித திருப்தியுடனும் தான் வெளியேறுவார்கள் என்றும் 'இந்தியா டுடே' விமர்சனம் கூறுகிறது.
தனக்கு வேலை இல்லாததை நாயகன் மறைப்பது, அவரது நண்பர்கள் கொடுக்கும் மோசமான யோசனைகள், ஒரு பிரச்னை தீர்ந்ததும் புதிதாக ஒன்று முளைப்பது என அடுத்தடுத்த காட்சிகள் பார்வையாளர்களை நாயகனுடன் ஒன்றவும் வைக்கிறது, சிரிக்கவும் வைக்கிறது என்று அந்த விமர்சனம் கூறுகிறது.
திரைக்கதை விறுவிறுப்பாகச் செல்வதற்கு, பார்வையாளர்களைத் தொடர்ந்து சிரிக்க வைப்பதற்கு, படத்தின் வசனங்கள் பெரும் பங்காற்றியுள்ளதாக 'டைம்ஸ் ஆப் இந்தியா' விமர்சனம் கூறுகிறது.
"படத்தில் ஹீரோ எதிர்கொள்ளும் பிரச்னைகளை நாமோ அல்லது நம்மைச் சுற்றி இருப்பவர்களோ வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில் எதிர்கொண்டிருக்கக் கூடும். படம் முழுக்க அப்படியான பிரச்னைகளைக் கொண்டே காட்சிகளை நகர்த்தி பார்வையாளர்கள் எளிதில் தங்களுடன் தொடர்புபடுத்துக் கொள்ளும்படி திரைக்கதையை எழுதியிருப்பதே படக்குழுவின் வெற்றி" என்று இந்து தமிழ் திசை பாராட்டியுள்ளது.
கோவையில் நடக்கும் கதை என்பதால் வட்டார மொழியில் வரும் நகைச்சுவை வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் அரங்கமே விழுந்து விழுந்து சிரிப்பதாகவும், ஒரு சீரியசான காட்சியில்கூட சோகத்தைத் திணிக்காமல் மிகவும் ஜாலியாகவும் அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத வகையிலும் காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது என்றும் அந்த விமர்சனம் கூறுகிறது.
மணிகண்டன்- குரு சோமசுந்தரம் கூட்டணி
நடிகர் குரு சோமசுந்தரம் ஏற்று நடித்துள்ள ராஜேந்திரன் எனும் கதாபாத்திரம்தான் படத்தின் முக்கிய அம்சம் என்றும், அந்த கதாபாத்திரம் நாயகன் நவீனுடன் (மணிகண்டன்) உரையாடும் காட்சிகள் ஒருவித பதற்றத்தையும் அதேநேரம் சிரிப்பையும் வரவழைப்பதாகவும் 'டைம்ஸ் ஆப் இந்தியா' விமர்சனம் கூறுகிறது.
படத்தில் வரும் ஒரு குடும்ப விழா தொடர்பான காட்சி உள்படப் பல காட்சிகளில், குரு சோமசுந்தரம் மற்றும் மணிகண்டனின் கெமிஸ்ட்ரி பெரும் பங்காற்றியிருப்பதாக அந்த விமர்சனம் கூறுகிறது.
"ஒவ்வொரு முறையும் கடன் வாங்கியாவது தனது குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும், அக்கா கணவர் முன்பாகத் தலை குனிந்துவிடக்கூடாது என நாயகன் செய்யும் அனைத்தும், அந்த குடும்ப விழா காட்சியில் உடைவது என்று படத்திற்கு இவர்களின் கூட்டணியே பலம்" என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா' தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
மணிகண்டனின் நடிப்பை அற்புதம் என்று சொல்வதுகூடக் குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கும் எனப் பாராட்டியுள்ளது இந்தியா டுடே. அவர் தனது அக்கா கணவர் ராஜேந்திரனை (குரு சோமசுந்தரம்) பழிவாங்க செய்யக் கூடியவை அனைத்துமே ரசிக்கும்படி உள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
அதேவேளையில், "இரண்டாம் பாதியில் ஹீரோவுக்கு ஒரே மாதிரியான பிரச்னைகள் திரும்பத் திரும்ப வருவது, அதுவரை மோசமானவர்களாகக் காட்டப்பட்ட கடன்காரர்கள் திடீரென சாதுவானவர்களாக மாறுவது போன்றவை ஏற்கும்படி இல்லை" என்று இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.
ஹீரோ பேக்கரி வைப்பதும், அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் மீண்டும் மீண்டும் 'ரிப்பீட்' ஆவதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் அந்த விமர்சனம் கூறுகிறது.
படம் சீரியஸான பாதைக்கு நகரும்போது, அது சற்று தடுமாறுகிறது, ஆனால் மீண்டும் விரைவாக நகைச்சுவையின் பக்கம் திரும்பி பார்வையாளர்களை ஏமாற்றாத வகையில் முடிகிறது என்று இந்தியா டுடே விமர்சனம் கூறுகிறது.
'மொத்தத்தில் நம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை எந்தவித சீரியஸ் தன்மையும் இன்றி முழுக்க முழுக்க ஜாலியாக சொன்னதற்காக, இந்த 'குடும்பஸ்தனை' தாராளமாக குடும்பத்தோடு கண்டு ரசிக்கலாம்' என்று இந்து தமிழ் திசை பாராட்டியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)