You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேசிப்பாயா விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? விஷ்ணுவர்தனின் கம்பேக் படமாக அமையுமா?
பில்லா, ஆரம்பம், அறிந்தும் அறியாமலும் போன்ற ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கியுள்ள திரைப்படம் 'நேசிப்பாயா'. இந்தத் திரைப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நேற்று (ஜனவரி 14) திரையரங்குகளில் வெளியானது.
மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப் படத்தில், அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சரத் குமார், பிரபு, குஷ்பு, கல்கி கோச்லின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நடிகர் விஜயின் 'மாஸ்டர்' திரைப்படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் இரண்டாவது திரைப்படம் இது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியாகியுள்ள தமிழ்ப் படமான 'நேசிப்பாயா', நேசிக்க வைத்ததா அல்லது ரசிகர்களை ஏமாற்றியதா? ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?
- காதலிக்க நேரமில்லை: இன்றைய இளைஞர்களின் மனக் குழப்பங்களை காட்டுகிறதா? ஊடக விமர்சனம்
- டாக்கு மகாராஜ் விமர்சனம்: படம் எப்படி உள்ளது? பாலையா வெற்றி பெற்றாரா?
- 12 ஆண்டுக்கு பிறகு வெளியான மத கஜ ராஜா கவனத்தை ஈர்த்ததா - இன்றைய சூழலில் கதை ஒத்துப்போகிறதா?
- வணங்கான் பாலாவின் பாணியில் இல்லையா? படம் எப்படி இருக்கிறது? - ஊடக விமர்சனம்
நேசிப்பாயா படத்தின் கதை என்ன?
அர்ஜுன் (ஆகாஷ் முரளி), தியா ராமலிங்கம் (அதிதி சங்கர்) ஆகிய இருவரும் கல்லூரிப் பருவத்தில் இருந்து காதலித்து வருகின்றனர். இவர்களிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தொலைக்காட்சி செய்தி ஒன்றில் தனது முன்னாள் காதலி தியா (அதிதி ஷங்கர்) போர்ச்சுகல் நாட்டில் கைது செய்யப்பட்டதை அறிந்து கொள்கிறார் அர்ஜுன். கார்த்திக் ஆதிநாராயணன் என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காக தியா போர்ச்சுகல் சிறையில் அடைக்கப்படுகிறார்.
அர்ஜுன், தியாவை காப்பாற்ற உடனடியாக போர்ச்சுகல் நாட்டுக்குச் செல்கிறார். அங்கு பல்வேறு தடைகளைக் கடந்து தனது காதலியை கொலைக் குற்றத்தில் இருந்து மீட்டாரா? தியா, உண்மையில் அந்தக் கொலையைச் செய்தாரா? அவர்களுக்குள் மீண்டும் காதல் மலர்ந்ததா? இதுதான் படத்தின் மீதிக் கதை.
திரைக்கதை ரசிகர்களை ஈர்த்ததா?
"நேசிப்பாயா, காதலை மையமாகக் கொண்ட ஒரு சஸ்பென்ஸ் டிராமா. தியா மற்றும் அர்ஜுன் இடையிலான காதல் காட்சிகளில் பல இடங்களில் எதார்த்தமாகவும், சில இடங்களில் முதிர்ச்சியற்றதாகவும் உள்ளன. சஸ்பென்ஸ் என்று வரும்போது, நேசிப்பாயா தடுமாறுகிறது. முழு திரைக்கதையும், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு இல்லை" என்று 'இந்தியா டுடே' விமர்சனம் கூறுகிறது.
'போர்ச்சுகல் நாட்டில் கொலை வழக்குடன் தொடர்புடையவர்களை அர்ஜுன் எளிதாகக் கண்டுபிடிக்கிறார். ஒரு புதிய நாட்டில், எந்த சிரமுமின்றி தொடர்புடையவர்களின் வீடுகளுக்கே சென்று கொலை குறித்து விசாரிக்கிறார்' என்று திரைக்கதையில் இருக்கும் குறைகளை அந்த விமர்சனம் எடுத்துக் கூறுகிறது.
நடிகர் ஜெயம் ரவி, லட்சுமிராய் நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் கதையில் சிறு மாற்றங்கள் செய்து எடுக்கப்பட்ட திரைப்படம் போன்ற உணர்வை நேசிப்பாயா தருவதாகவும் இந்தியா டுடே விமர்சனம் கூறுகிறது.
"நேசிப்பாயா, இரண்டு விதமான கதைகளைச் சொல்கிறது. ஒன்று அர்ஜுன்-தியா இடையிலான காதல் மற்றும் முறிந்த காரணம் குறித்தது. இரண்டாவது, கார்த்திக் கொலை வழக்கில் உண்மையைக் கண்டறிய அர்ஜுன் போராடுவது. இரண்டுமே நாம் ஏற்கெனவே பார்த்தவைதான்" என 'தி இந்து' ஆங்கில நாளிதழின் விமர்சனம் கூறுகிறது.
காதல் காட்சிகள் இயக்குநர் விஷ்ணுவர்தனின் 'சர்வம்' திரைப்படத்தை நினைவுபடுத்துவதாகவும், கொலை வழக்கில் இருந்து காதலியை மீட்கப் போராடும் காட்சிகள் 'தாம் தூம்' படத்தை நினைவுபடுத்துவதாகவும் 'தி இந்து' விமர்சனம் கூறுகிறது.
'தியாவை காப்பாற்ற வழக்கறிஞர் இந்திரா (கல்கி கோச்லின்) எடுக்கும் முயற்சிகள், அர்ஜுனின் காரணமற்ற செயல்களால் வீணாகின்றன. ஆனாலும் அவர் நாயகன் என்பதால், அவரது செயல்கள் வழக்கின் சிக்கல்களைத் தீர்க்க ஏதோவொரு வகையில் உதவுகின்றன. இதே காட்சிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன' என்றும் அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"நாயகனுக்கு ஐரோப்பா செல்வதற்கான விசா 15 நாளில் கிடைப்பது, ஒரு நாட்டின் மொழி, சட்டம், நிலப்பரப்பு குறித்து எதுவுமே தெரியாத நாயகன் அங்கு சென்று நினைத்ததைச் செய்வது என லாஜிக் இல்லாமல் திரைக்கதை நகர்வதாக" தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் கூறுகிறது.
"ஃபிளாஷ்பேக்கில் அர்ஜுன்- தியா இடையிலான காதல் காட்சிகள் அழகாக எழுதப்பட்டு இருந்தாலும் அதில் அழுத்தம் இல்லை" என்றும் அந்த விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, அர்ஜுனின் காதலை தியா நிராகரித்தாலும், அர்ஜுன் அவரை விடாமல் துரத்துகிறார், வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகனைப் போல.
ஆகாஷ் முரளியின் நடிப்பு எப்படி உள்ளது?
நேசிப்பாயா, ஆகாஷ் முரளிக்கு ஒரு சிறந்த அறிமுகமாக இருக்காது என்றாலும், தனக்கு திறமை இருப்பதை அவர் உறுதிப்படுத்தி இருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது.
மேலும், ஸ்டண்ட் காட்சிகள், காதல் காட்சிகள் என அனைத்திலும் தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்துள்ளதாகவும் பாராட்டியுள்ளது. அதேவேளையில் சில காட்சிகளில், அவரது நடிப்பு செயற்கையாக உள்ளதாகவும் தி இந்து நாளிதழ் தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.
மறுபுறம், அதிதி காதல் காட்சிகளில் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் போதுமான நடிப்பை வழங்கத் தவறிவிட்டதாகவும் தி இந்து விமர்சித்துள்ளது.
"நாம் பலமுறை பார்த்த காதல் காட்சிகள் என்றாலும், ஆகாஷ் முரளி- அதிதி ஜோடியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அதற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ஒரு முக்கியக் காரணம்" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் கூறுகிறது.
"ஆகாஷ் முரளி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், தனக்கான இடத்தை அடையாளம் காண அவருக்கு இன்னும் சில படங்கள் தேவைப்படும். அவரது குரலும், நடிப்பும், நடிகர் அதர்வாவை நினைவூட்டுகிறது" என்று இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
அதிதி சங்கர் காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார், ஆனால் ஒரு சில உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பு உறுத்தலாக இருப்பதாகவும் இந்தியா டுடே விமர்சித்துள்ளது.
"கல்கி கோச்லின், சரத்குமார், குஷ்பு, ராஜா ஆகியோர் சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில், சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தாலும்கூட, திரையில் அவர்களுக்கான நேரம் குறைவாக உள்ளது. அவர்களது கதாபாத்திரங்களுக்கு இன்னும் சில நல்ல காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கலாம்" என்கிறது இந்தியா டுடே விமர்சனம்.
விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் படத்தின் காட்சிகள் ஸ்டைலிஷாக எடுக்கப்பட்டு இருந்தாலும், யுவன் சங்கர் ராஜாவின் இரு பாடல்கள் மற்றும் அட்டகாசமான பின்னணி இசை இருந்தாலும், பலவீனமான திரைக்கதை, கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை பார்வையாளர்களுக்கு கடத்தத் தவறிவிட்டதாக தி இந்து விமர்சித்துள்ளது.
"மொத்தத்தில் நேசிப்பாயா திரைப்படம், விஷ்ணுவர்தனின் ரோஜா. அதாவது, தனது காதலைக் காப்பாற்ற மரணத்தின் எல்லைக்கே சென்று காதலியை மீட்கும் காதலன் என்ற கதை ஒரு சில இடங்களில் ரசிக்க வைக்கிறது" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)