"வான் பரப்பு எங்கள் கட்டுப்பாட்டில்" - இரானுக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

இரான் தலைநகரின் வான்பரப்பை கைப்பற்றியதாக கூறும் இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேல் - இரான் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் தெஹ்ரானின் முழு வான்பரப்பு தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

'' இரான் அரசின் தரையிலிருந்து ஏவக்கூடிய ஏவுகணை லாஞ்சர்களில் மூன்றில் ஒரு பகுதியை நாங்கள் அழித்துவிட்டோம்" என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இரான் இஸ்ரேலில் பல ஏவுகணைகளை ஏவியுள்ளது. இந்த தாக்குதலில் மத்திய இஸ்ரேலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர், டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இரானில், நிலம் மற்றும் கடலிலிருந்து ஏவுகணைகளை ஏவும் தளங்களை இஸ்ரேல் குறி வைத்துத் தாக்கியது, மேலும் இரானின் புரட்சிகர காவல் படையின் உளவுப்பிரிவு தலைவர் முகமது கஸமியை கொன்றது. இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் இரான் பதில் தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேலின் பெரிய நகரங்களான டெல் அவீவ், ஹைஃபா போன்ற நகரங்களையும் இரான் ஏவுகணை மூலம் தாக்கியுள்ளது.


இரான் தாக்குதலால் இஸ்ரேலில் சேதமடைந்த கார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் தாக்குதலால் இஸ்ரேலில் சேதமடைந்த கார்

ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், இரானின் புரட்சிகர காவல் படையின் உளவுப்பிரிவு தலைவர் முகமது கஸமி மற்றும் துணைத் தலைவர் ஹசன் மொஹாகெக் மற்றும் தளபதி மொஹ்சென் பகேரி ஆகியோர் கொல்லப்பட்டதாகப் புரட்சிகர காவல் படைக்கு ஆதரவான செய்திகளை வெளியிடும் தஸ்னிம் செய்தி நிறுவனமும், இரான் அரசு தொலைக்காட்சியும் தெரிவித்துள்ளன.

முன்னதாக ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "அவர்களின் தலைமை புலனாய்வு அதிகாரி மற்றும் துணைத் தலைவரை தெஹ்ரானில் நாங்கள் கொன்றுள்ளோம்'' எனக் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 224 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் 90% பேர் பொது மக்கள் எனவும் இரான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலுக்கு பிறகு இரானில் தீப்பற்றி எரியும் ஒரு கட்டடம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலுக்கு பிறகு இரானில் தீப்பற்றி எரியும் ஒரு கட்டடம்

அதிகரிக்கும் சண்டை

'' இரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நாளுக்கு நாள் விரிவுபடுத்தி வருகிறது. இது இரானின் அணுசக்தி மற்றும் ராணுவ உள்கட்டமைப்பைக் குறிவைத்துத் தாக்குதலை தொடங்கியது. இந்த தளங்களை மட்டுமல்ல, அவற்றை இயக்கும் நபர்களையும் தாக்கியது.இப்போது, ​​குடியிருப்பு பகுதிகள், எரிபொருள் கிடங்குகள், அமைச்சகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இஸ்ரேலிலிருந்து 2,000 கி.மீ தொலைவில் உள்ள மஷாத் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.இரான் இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தினால், இரான் தலைநகர் டெஹ்ரான் எரியும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அச்சுறுத்தியுள்ளார்'' என்கிறார் பிபிசியின் மத்திய கிழக்கு பிராந்திய ஆசிரியர் செபாஸ்டியன் அஷர்

மேலும் அவர், ''இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் இரானிய மக்களின் பக்கம் இருப்பதாகக் கூறி, சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நடந்த வெகுஜன போராட்டங்களின் பிரபலமான முழக்கமான - 'பெண், வாழ்க்கை, சுதந்திரத்தை' - மேற்கோள் காட்டினார். இதே நேரத்தில், Iron Dome எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தபோதிலும், இஸ்ரேலியர்கள் குடியிருப்புப் பகுதிகளில் அழிவுகளையும் உயிர் இழப்புகளையும் கண்டுள்ளனர். இத்தகைய சம்பவங்கள் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை இன்னும் கடுமையாகத் தூண்டும் என்று தெரிகிறது.

இது இஸ்லாமிய ஆட்சியின் மீதான மற்றும் அணு ஆயுதங்களை உருவாக்கும் அதன் ஆற்றலுக்கு எதிரான போர் என இஸ்ரேல் கூறி வரும் நிலையில், அந்நாடு தாக்குதல்களை கடுமையாக்கினால் இரானிய மக்களுக்கு எதிரான போராக மாறும் அபாயம் உள்ளது.'' என்கிறார்.

இஸ்ரேலில் சேதமடைந்த கட்டடம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலில் சேதமடைந்த கட்டடம்

வான் பரப்பு கட்டுப்பாட்டால் என்ன பலன்?

''இரான் தலைநகர் தெஹ்ரானின் வான் பரப்பை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. கடந்த சில நாட்களாக டெஹ்ரானில் இஸ்ரேலின் விமானப்படை நடத்திய பல தாக்குதல்களை வைத்துப் பார்க்கும்போது, அது உண்மையாகத் தெரிகிறது.இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் ஒப்பீட்டளவில் குறுகிய தூரத்தில் வழிகாட்டப்பட்ட குண்டுகளைவீசி வருகின்றன. அப்படியென்றால் குரூஸ் ஏவுகணைகள் போன்ற நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை அது நம்பியிருக்க வேண்டியதில்லை'' என்கிறார் பிபிசியின் பாதுகாப்பு பிரிவு செய்தியாளர் ஜோனாதன் பீல்

''இரானின் பழைய போர் விமானங்களால் எந்த எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை. இரானின் அணுசக்தித் திட்டத்தின் மீதான இந்த தாக்குதலுக்கு முன்பே, இஸ்ரேல் ஏற்கனவே இரானின் வான் பாதுகாப்புகளில் கணிசமான பகுதியை அழித்துவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலின் தாக்குதல்கள் இரானின் நீண்ட தூர, ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட S300 ஏவுகணை எதிர்ப்பு வான் பாதுகாப்பு அமைப்புகளைக் குறி வைத்தது.

ஆனால் வான் பரப்பை பொருத்தவரை தற்போது இஸ்ரேலின் கை இரானை விட மேலோங்கி இருக்கலாம் ஆனால், அது முழுமையான வான் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்கிறார் ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் என்ற பாதுகாப்பு சிந்தனைக் குழுவின் ஜஸ்டின் பிராங்க்

தோள்பட்டை அல்லது வாகனம் மூலம் ஏவப்படும் ஏவுகணைகள் போன்ற குறுகிய தூர வான் பாதுகாப்புகளை இரான் இன்னும் கொண்டுள்ளது, அவை ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும்

யேமனில் ஹூத்திகளை விட அமெரிக்கப் போர் விமானங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆனாலும், ஹூத்திக்களால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மெதுவாகச் செல்லும் அமெரிக்க டிரோன்களை வீழ்த்த முடிந்தது.

ஐஎஸ்ஐஎஸ் மீதான அமெரிக்கா தலைமையிலான தாக்குதல்கள் மற்றும் காஸாவில் ஹமாஸ் மீதான இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் உட்பட மத்திய கிழக்கில் நடந்த முந்தைய நடவடிக்கைகள், வான் கட்டுப்பாட்டில் சில வரம்புகள் இருப்பதைக் காட்டியுள்ளன.

வான் தாக்குதல் எதிர்ப்பு அமைப்புகளை அழித்தால், எதிரிகளை முழுமையாகத் தோற்கடிக்க முடியும் என்பது அவசியமில்லை.'' என்கிறார் ஜோனாதன் பீல்

வான் பகுதி கட்டுப்பாட்டால் என்ன பலன்?

பட மூலாதாரம், Getty Images

இரான் அதிபர் வேண்டுகோள்

'இரான் சந்திக்கும் தாக்குதலை எதிர்கொள்ளவும், ஒன்றாக நிற்கவும், விடாமுயற்சியுடன் இருக்கவும்' இரான் அதிபர் சூத் பெசெஷ்கியன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

திங்களன்று இரான் நாடாளுமன்றத்தில் பேசிய பெசெஷ்கியன், '' இரான் ஒரு ராஜ்ஜீய வாய்ப்பை அளித்துள்ளது, பேச்சுவார்த்தைகள் மற்றும் உரையாடலுக்கான வழியைத் திறந்துள்ளது" என்றார்.

"கொலை மற்றும் தீவிரவாதம் மூலம் எதிரி இரானையும் அதன் மக்களையும் அழிக்க முடியாது. ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் அந்த பாதையைத் தொடர நூற்றுக்கணக்கான வீரர்கள் தயார் ஆக இருப்பார்கள்" என்று அவர் கூறினார்.

தனது நாடு அணு ஆயுதங்களை வைத்திருக்க முற்படுவதில்லை என்றும் ஆனால் மக்களுக்குப் பயனளிக்கும் அணுசக்தி மற்றும் ஆராய்ச்சியிலிருந்து பயனடைய உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

டிரம்ப் கூறியது என்ன?

வான் பகுதி கட்டுப்பாட்டால் என்ன பலன்?

பட மூலாதாரம், Getty Images

இரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயியை கொல்லும் இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததாக, மூன்று அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர்.

காமனெயியை கொல்வது "நல்ல யோசனையல்ல" என்று டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கூறியதாக ஒரு அதிகாரி தெரிவித்தார். இந்த செய்தி குறித்து டிரம்ப் வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு