இஸ்ரேல்-இரான் இடையே தொடரும் மோதல் : அமெரிக்கா தலையிடுமா?- டிரம்ப் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் - இரான் ஆகிய இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலைத் தொடர்வதால் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது.
இரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகம், எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
அதே நேரத்தில், இரான் ஒரே இரவில் அலையலையாக இரு முறை ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் இரு நாடுகளிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் - இரான் அதிபர்

பட மூலாதாரம், Reuters
இரானின் சமீபத்திய தாக்குதல்களுக்கு முன்பு, இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால் அந்நாடு மிகவும் பலமான மற்றும் கடினமான பதிலடியை எதிர்பார்க்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் எச்சரித்திருந்தார்.
இராக் பிரதமருடன் தொலைபேசியில் பேசியவர், இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தால் இந்தப் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளும் ஆபத்தில் சிக்கக்கூடும், எனவே இஸ்லாமிய நாடுகளிடமிருந்து "உறுதியான நிலைப்பாடு" வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
இரான் இந்த மோதலை தொடங்கவில்லை, ஆனால் உறுதித்தன்மையுடன் பதிலடி கொடுத்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் இரான் ஒப்பந்தம் மேற்கொள்வார்கள் - டிரம்ப்

பட மூலாதாரம், EPA
"இஸ்ரேல் மற்றும் இரான் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும், அவர்கள் மேற்கொள்வார்கள்" எனத் தெரிவிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனை தான் தான் சாத்தியமாக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சமூக ஊடகப் பதிவில், உலகம் முழுவதும் நாடுகளுக்கு இடையேயான பதற்றங்களை நிறுத்த தான் உதவியதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்கா, யுக்ரேன் - ரஷ்யா மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவி வருகிறது. இரண்டு போர்களும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
"அதே போல், நாம் விரைவில் இஸ்ரேல் மற்றும் இரான் இடையே அமைதியைப் பெறுவோம்" எனத் தெரிவித்தார் டிரம்ப்
"தற்போது நிறைய அழைப்புகளும் சந்திப்புகளும் நடைபெற்று வருகின்றன. நான் நிறைய செய்கிறேன். ஆனால் எதற்குமே எனக்குப் பெயர் கிடைப்பதில்லை. ஆனால் அது பரவாயில்லை, மக்களுக்குப் புரிகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
128 பேர் உயிரிழப்பு, 900 பேர் காயம் - இரானிய ஊடகங்கள்

பட மூலாதாரம், Getty Images
நேற்று மதியம் வரை இஸ்ரேலின் தாக்குதலில் 128 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுமார் 900 பேர் காயமடைந்துள்ளதாகவும் இரான் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் சில அமைப்புகளும் தங்களின் சொந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளன. இரானுக்கு செய்தியாளர்களை அனுப்ப முடியாததால் பிபிசியால் இந்த எண்களை உறுதிசெய்ய முடியவில்லை. இந்த எண்ணிக்கைகளில் ஏதேனும் முரண்பாடு உள்ளதா என்றும் தெரியவில்லை.
நேற்று டெஹ்ரானில் ஒரு கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 60 பேர் கொல்லப்பட்டதாக இரான் அரசு ஊடகம் தெரிவிக்கிறது. மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் கவர்னர் 30 ராணுவ வீரர்கள் மற்றும் இரான் ரெட் கிரசண்ட் உறுப்பினர் ஒருவர் உட்பட 31 பேர் அங்கு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
கிழக்கு அஜர்பைஜானில் ஆம்புலன்ஸ் மீது நடந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக இரானின் ரெட் கிரசண்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
இரான் மிகப்பெரிய விலை கொடுக்கும் - நெதன்யாஹு

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, இஸ்ரேலிய பொதுமக்களின் இறப்புக்கு இரான் மிகப்பெரிய விலை கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
பேட் யாமில் ஏவுகணைத் தாக்குதலில் தரைமட்டமான குடியிருப்பு பகுதிக்குச் சென்றவர் அதனை, "பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான திட்டமிட்ட கொலை" எனத் தெரிவித்தார். மேலும், இரான், இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
"கொல்லப்பட்டவர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன், அவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் உள்ளோம்" எனத் தெரிவித்தவர் பொதுமக்கள் அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
டெஹ்ரானில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
டெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதாக இரானிய எண்ணெய் அமைச்சகமும் கூறுகிறது. இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.
அதில் எரிபொருள் அதிகமாக இல்லை என்றும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
டெஹ்ரானில் மக்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கு அமைந்துள்ளதால், அது அதிக ஆபத்து நிறைந்தது என்று டெஹ்ரானின் தீயணைப்புத் துறை முன்பு எச்சரித்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
இரானின் அணுசக்தி உள்கட்டமைப்பை தாக்கினோம் - இஸ்ரேல் ராணுவம்
இரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய டெஹ்ரானில் உள்ள உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
இரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமும் தங்களது இலக்குகளில் அடங்கும் என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது இரான் சரமாரி ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் மீது சரமாரியாக ஏவுகணைகளை இரான் ஏவியது. ஒரே இரவில் இரண்டு முறை அலையலையாக இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல் அவிவ் நகருக்கு தெற்கே உள்ள பாட் யாமில் ஒரு கட்டடம் இரான் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று இஸ்ரேலிய அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
டெல் அவிவ் அருகே நடந்த மற்றொரு தாக்குதலில் 60 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அவசர சேவையான மேகன் டேவிட் அடோம் (MDA) தெரிவித்துள்ளது.
அதே பகுதியில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர், அதே போல் யூடியன் அடிவாரத்தில் நடந்த தாக்குதலில் 24 பேர் காயமடைந்துள்ளனர் என்று MDA இன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இஸ்ரேலின் வடக்கே ஹைஃபா அருகே ஒரு குடியிருப்பு பகுதியை ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக பல இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கைகளை இந்த நேரத்தில் பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.

இஸ்ரேலுக்கு இரான் எச்சரிக்கை
இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
"இஸ்ரேலில் போர் விமான எரிபொருள் மற்றும் எரிசக்தி விநியோக மையங்களை குறிவைத்து தாக்கியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் இரானின் தாக்குதல் "மேலும் தீவிரமடையும்" என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












