You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சதிகாரர்கள் தப்பமாட்டார்கள்' - டெல்லி வெடிப்பு குறித்து பிரதமர் மோதி கூறியது என்ன?
இரண்டு நாள் பயணமாக பூடானுக்குச் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, டெல்லி கார் வெடிப்புக்கு பின்னால் உள்ள 'சதிகாரர்கள்' தப்பிக்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி முதல்முறையாக பேசியுள்ள மோதி, மிகவும் கனத்த இதயத்துடன் பூடானுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
"டெல்லியில் நேற்று மாலை நிகழ்ந்த இந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இன்று ஒட்டுமொத்த நாடும் அவர்களுடன் நிற்கிறது." என்றார் மோதி.
தனது உரையின்போது ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாறிய மோதி, "இதற்கு பொறுப்பானவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்." எனத் தெரிவித்தார்.
"நேற்று இரவு முழுவதும் இந்தச் சம்பவத்தை விசாரித்து வரும் அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறேன். இந்தச் சதித் திட்டத்தை நமது அமைப்புகள் ஆழம் சென்று விசாரிப்பார்கள்." எனத் தெரிவித்தார்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பால் சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. அருகே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்தன.
வெடிப்பு ஏற்பட்ட காரிலும் பயணிகள் இருந்ததாக டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்தார்.
வெடிப்புக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் கார் எங்கிருந்து வந்தது? அதன் உரிமையாளர் யார் என்பன போன்ற விவரங்களை கண்டறியும் முயற்சியில் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வெடிப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதுதொடர்பாக அனைத்து சாத்தியக்கூறுகளையும் மனதில் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
(எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உள்ள சில விவரங்கள் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும்)
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நேரில் கண்டது என்ன?
பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் நேற்றிரவு பேசிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முகமது ஆசாத், சம்பவ இடத்திற்கு வந்தபோது குறைந்தது நான்கு உடல்கள் தரையில் இருப்பபதைக் கண்டதாக கூறினார்.
"உடல்களுக்கு அருகில் இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. நானும் வேறு சில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் உடல்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்." என்று அவர் கூறினார்.
டெல்லி காவல் ஆணையர் கூறியது என்ன?
டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ''செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே மாலை 6.52 மணிக்கு கார் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அதில் பயணிகள் இருந்தனர்'' என கூறியுள்ளனர்.
"வெடிப்பு அருகிலுள்ள வாகனங்களையும் சேதப்படுத்தியது. எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன், டெல்லி போலீஸ், என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி குழுக்கள் உள்ளிட்ட அனைத்து புலனாய்வு அமைப்புகளும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்டு வருகின்றன. வெடிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
கார் வெடிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் அரசு கட்டடங்கள், விமான நிலையங்கள் மற்றும் பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையான சிஐஎஸ்எஃப், சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், "செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, டெல்லி மெட்ரோ, செங்கோட்டை, அரசு கட்டடங்கள் மற்றும் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் உள்பட தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) எங்களது பாதுகாப்பின் கீழ் உள்ள அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளது.
நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
அமித் ஷா கூறியது என்ன?
வெடிப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்வையிட்டார். லோக்நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் நேரில் சந்தித்தார்.
தொடர்ந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "என்எஸ்ஜி மற்றும் என்ஐஏ குழுக்கள், உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் குழுவினருடன்(FSL) உடன் இணைந்து, தற்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. அருகில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்கள் மற்றும் பிற உபகரணங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
"நான் டெல்லி காவல் ஆணையர் மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடம் பேசினேன்; அவர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து சாத்தியக் கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், மேலும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் மனதில் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும்" என்றும் அவர் கூறினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு