வேணுகோபால் தூத்: வீடியோகான் உரிமையாளரின் வீழ்ச்சிக்கு காரணமான கடன் மோசடி

வீடியோகான் கடன் மோசடி குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நிகில் இனாம்தார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர்களுள் ஒருவரான வேணுகோபால் தூத் அண்மையில் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ அவர் மீது குற்றவியல் சதி மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்தது. ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி சந்தா கோச்சார் அவரது கணவர் தீபக் ஆகியோர் கைதை தொடர்ந்து வேணுகோபாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தா கோச்சார் 2009 இல் தனது கணவரின் புதுப்பிக்கத்தக்க வணிகத்தில் முதலீடு செய்வதற்கு ஈடாக தூத்தின் நிறுவனத்திற்கு அதிக மதிப்புள்ள கடன்களை அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி வழக்கில் தான் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடன் வழங்கும் வங்கிகளில் இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கியாக ஐசிஐசிஐ உள்ளது. அதன் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த சந்தா கோச்சார் இந்திய வங்கித்துறையில் மதிக்கக் கூடிய பெண்ணாக பார்க்கப்பட்டார். 

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை கோச்சார் மற்றும் அவரது கணவர் ஆகியோர் மறுத்தனர். தூத் நிறுவனத்தில் இருந்து கிடைத்த முதலீடு என்பது நேர்மையான வழியில் கிடைத்தது என்றும் தெரிவிக்கின்றனர். 

2019ஆம் ஆண்டில் விசாரணை அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர் அதன் பிறகும் தொடர்ந்து அவர்கள் விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கின் முதல் கைது என்பதால் இந்த நடவடிக்கை முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை தூத் மறுத்துள்ளதாகவும், அப்ரூவர் ஆக அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஒரு சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

“பண்டோரா பெட்டியை இது திறக்கும்” என்று இந்த மோசடி குறித்து கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பேசிவரும் ஐசிஐசிஐ பங்குதாரர் அரவிந்த் குப்தா பிபிசியிடம் தெரிவித்துள்ளார். 

 “விசாரணை சரியான பாதையில் தொடங்கி நடந்து வருகிறது. எனினும் கடன்களுக்கு ஒப்புதல் வழங்கும் ஐசிஐசிஐ கடன் குழுவில் சந்தா கோச்சார் மட்டுமே உறுப்பினர் இல்லை என்பதால், விசாரணையை விரிவுப்படுத்த வேண்டும் ” என்று அரவிந்த் குப்தா கூறுகிறார். 

மேலும், குற்றம்சாட்டப்பட்ட மோசடியின் சிக்கலான தன்மையை பார்க்கும்போது, வழக்கின் அடிநாதத்தை கண்டுபிடிக்க இந்தியாவின் அனைத்து புலனாய்வு அமைப்புகளுக்கும் இடையில் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

வேணுகோபால் தூத்தின் எழுச்சி

1990கள் மற்றும் புதிய மில்லினியத்தின் ஆரம்ப ஆண்டுகளில், வேணுகோபால் தூத் தொழில்துறை நிகழ்வுகள், கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் மற்றும் பட்ஜெட் ஆலோசனைகளில் எங்கும் காணப்பட்டார். எளிதாக தொடர்புகொள்ள முடிவது, உடனடியாக கருத்துகளை தெரிவிப்பது போன்றவை காரணமாக வர்த்தகம் சார்ந்து எழுதும் நிருபர்களின் விரும்பப்படும் நபராக வேணுகோபால் இருந்தார். அவரது கருத்துகள் மிகவும் விரும்பப்பட்டன. 

விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வேணுகோபால். அவரது குடும்பம், அவுரங்காபாத் மற்றும் மஹராஷ்டிராவின் மேற்கு பகுதிகளில் பஜாஜ் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்கு உரிமம் வைத்திருந்தனர்.

1990களில் வீடியோகானை ஒரு நுகர்வோர் பொருட்கள் நிறுவனமாக மாற்றியதில் தூத் முக்கிய பங்கு வகித்தார்.

வீடியோகான் கடன் மோசடி குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனங்களில் வீடியோகானும் ஒன்று. பின்னர் படிப்படியாக துணி துவைக்கும் இயந்திரம், குளிர்பதன இயந்திரம், ஏ.சி. இயந்திரம் என நுகர்வோர் சார்ந்த பிற பொருட்களையும் அந்நிறுவனம் தயாரிக்க தொடங்கியது. இதன் காரணமாக இந்தியாவின் வெள்ளைப் பொருட்களின் சந்தையின் "ராஜா" என்ற பெயர் வேணுகோபால் தூத்துக்கு கிடைத்தது. 

தூத் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவர். ஆரம்ப காலத்தில் ஆங்கிலத்தில் பேசவே சிரமப்பட்டார். ஆனால், அரசியல்வாதிகள் மற்றும் பிற தொழிலதிபர்களுடன் நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதில் அவை தடையாக இருந்ததில்லை. 

1990கள் வரை இறக்குமதிக்கு அதிக வரிகள் விதிக்கப்பட்டதால் வீடியோகான் நிறுவனத்துடன் போட்டிப்போடுவது சர்வதேச நிறுவனங்களுக்கு கடினமாக இருந்தது. அதன் பலன்களை தூத் அனுபவித்தார் என்கிறார் டெக்னோபாக் அட்வைசர்ஸ் என்ற சில்லறை ஆலோசனை நிறுவனத்தின் தலைவரான அர்விந்த் சிங்கால்.

ஆனாலும், சந்தையில் உள்ள மற்ற உள்நாட்டு பிராண்டுகளை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக விஞ்சியதற்கு விளம்பர மற்றும் விநியோக உத்தியும் முக்கிய காரணம் ஆகும். 

“ கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் உடன் கைகோர்த்த அவர்கள் இந்தியா முழுவதும் விநியோகம் மற்றும் சர்வீஸ் கடைகளை அமைக்க முதலீடு செய்தனர். அவர்கள்தான் சந்தையில் முதல் இடத்தில் இருந்தனர். 2008-09 ஆண்டு வரை அவர்கள் 2 அல்லது 3 என்ற கவுரவமான இடத்திலேயே இருந்தனர் ” என்றும் சிங்கால் கூறுகிறார். 

வீழ்ச்சி அடைந்தது எப்படி?

எல்ஜி மற்றும் சாம்சங் போன்ற தென் கொரிய நிறுவனங்களின் கடுமையான போட்டி மற்றும் தங்களது பிரதான தொழிலை பாதுகாக்க வேண்டிய சமயத்தில் எண்ணெய் மற்றும் வாயு, தொலைத்தொடர்பு போன்றவற்றில் கவனம் செலுத்தியது ஆகியவை தூத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது என்கிறார் சிங்கால். 

வணிக செயல்பாடுகளுக்காக ஸ்பெக்டரமை பயன்படுத்த உரிமத்தை பெற்ற நிலையில், 2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்குவதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களில் வீடியோகான் தொலைத்தொடர்பு நிறுவனமும் ஒன்று. வீடியோகான் சில மாநிலங்களில் உரிமத்தை மீண்டும் வென்றது, ஆனால் இறுதியில் ஸ்பெக்ட்ரத்தை பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்ற பிறகு தனது செயல்பாடுகளை முடக்கியது.

எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாக உருமாற்றம் செய்யும் தூத்தின் லட்சியமும் நிறைவேறவில்லை. அவரது காப்பீட்டு வணிகமும் இதேபோன்ற நிலையை சந்தித்தது.

2012ம் ஆண்டுவாக்கில், எஸ்ஸார் குரூப், ஜிவிகே, ஜிஎம்ஆர் மற்றும் ரிலையன்ஸ் ஏடிஏஜி உட்பட அதிக கடன்பட்டுள்ள மற்ற நிறுவனங்களின் பட்டியலில் வீடியோகான் நிறுவனமும் இருந்தது.

வீடியோகான் கடன் மோசடி குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images

இந்த 10 குழுமங்களின் மொத்தக் கடன் வங்கிக் கடன்களில் 13% மற்றும் வங்கி அமைப்பின் நிகர மதிப்பில் 98% ஆகும்.

இந்த சூழல் குறித்து கிரெடிட் சூயிஸ்ஸி நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு பின் மதிப்பாய்வு செய்தது. அப்போது, வீடியோகான் மற்றும் ஜிஎம்ஆர் குழுமங்கள் சொத்துகளை விற்பனை செய்வது மூலம் கடன்களை குறைக்க முயற்சித்தபோதிலும், அவற்றின் நிதி அழுத்தம் தீவிரமடைந்துள்ளது என்றும் தூத் நிறுவனத்தின் கடன் மேலும் அதிகரித்தது என்றும் கண்டறியப்பட்டது. 

2018 வாக்கில், இந்தியாவின் திவால் நீதிமன்றம் வீடியோகான் மீது திவால் நடவடிக்கைகளைத் தொடங்கியது. ஒரு வருடத்திற்குள், தான் காவலில் வைக்கப்பட்ட காரணமாக இருந்த ஐசிஐசிஐ வங்கிக் கடன் தொடர்பான விசாரணைகளை எதிர்த்து தூத் போராடினார். 

நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாடுகள் தொடர்பான விசாரணை தொடங்கியபோதும், ஐசிஐசிஐ வங்கி மீண்டும் எழுச்சிபெறும் சக்தியாகவே விளங்குகிறது. கோச்சாரை தவிர்த்து, நெருக்கடியை பின்னுக்கு தள்ளிவிட்டு நகர்ந்ததாக தெரிகிறது.

ஆனால் வேணுகோபாலை பொருத்தவரை ஒருகாலத்தில் தான் கொலோச்சிய இடத்துக்கு மீண்டும் செல்வது என்பது எட்டாத தூரத்தில் உள்ளது. 

அவரது வானுயர வெற்றிகள் மற்றும் வியத்தகு தோல்வி என்பது, 2000 களில் கடன்கள் மூலம் பன்முகப்படுத்தப்பட்ட பல இந்திய தொழிலதிபர்களிடமிருந்து பல வழிகளில் வேறுபட்டவை அல்ல, என்று ஆலோசனை நிறுவனமான IIAS நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் அமித் டாண்டன் கூறுகிறார்.

ஏற்கெனவே தொழிலை இழந்தோ அதன் தாக்கத்தை அனுபவித்தோ வந்த பலர் மீது, இந்த வலுவிழந்த நோக்கமும், மந்தமான பொருளாதாரமும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: