பாகிஸ்தானில் இருந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோத 'மரணப் பயணம்' - பிபிசி ரகசியப் புலனாய்வு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹா கன்சாரா, சாம்ரா ஃபாத்திமா மற்றும் ஜாஸ்மின் டயர்
- பதவி, பிபிசி நியூஸ்
பாகிஸ்தானிலிருந்து பொதுமக்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்ப ஒரு மனித கடத்தல்காரர் குவெட்டாவில் இருந்துகொண்டு ஏற்பாடு செய்கிறார்.
இந்த மனித கடத்தல்காரர் தனது இந்த சட்டவிரோத வணிக ரீதியிலான நடவடிக்கைகளை ஒரு ரகசிய பிபிசி செய்தியாளரிடம் விளக்கினார். இந்த தகவல்களைப் பெறுவதற்காக பிபிசி சில ரகசிய செய்தியாளர்களை அனுப்பியது.
25 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் (ஒன்பதாயிரம் டாலர்கள்) செலவில், சுமார் மூன்று வாரங்களில் ஒரு நபரை 'பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும்' ஐரோப்பாவிற்கு அனுப்ப முடியும் என்கிறார்கள், இவரைப் போன்ற நபர்கள்.
அப்படிப்பட்டவர் பகிஸ்தானிலிருந்து நடந்தே இரானுக்குள் நுழைய வேண்டும் என்று அவர் கூறுகிறார். அங்கிருந்து துருக்கி மற்றும் இத்தாலிக்கு சாலை வழியாக அவர் பயணிக்கமுடியும். இந்த மனித கடத்தல்காரர் பேசும் போது, அவருடைய பேச்சின் தொனி உறுதியான ஒரு விஷயத்தை வெளிப்படுத்துகிறது.
ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பும் ஒருவருக்கு, "அவர் காலை உணவை அவருடன் எடுத்துச் செல்ல வேண்டும், அவர் தரமான காலணிகளை வைத்திருக்க வேண்டும், அவருக்கு இரண்டு மூன்று ஜோடி ஆடைகள் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
அவர் குவெட்டாவில் தேவைப்படும பொருட்களை வாங்கலாம். அவர் குவெட்டாவை அடைந்த பிறகு அழைத்தால், எங்கள் ஆள் ஒருவர் வந்து அவரை வரவேற்பார்," என அவரது தொழில் குறித்து விளக்கினார்.
ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி இரானுக்குள் நுழைவதாக ஆசம் என்ற மனித கடத்தல்காரர் கூறுகிறார். இந்தப் பயணத்தின் போது ஏற்படும் இடர்பாடுகள் குறித்து பிபிசி செய்தியாளரிடம் பேசிய அவர், அவற்றைக் குறைத்து மதிப்பிடுகிறார்.
இந்த ரகசிய செய்தியாளர், தனது சகோதரரை இங்கிலாந்துக்கு அனுப்ப விரும்பும் நபராக அவரை அடையாளப்படுத்தியிருந்தார்.

மக்கள் ஏன் பாகிஸ்தானை விட்டு வெளியேறுகிறார்கள்
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால், பலர் நாட்டை விட்டு வெளிநாடு செல்ல விரும்புகின்றனர். 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சுமார் பதின்மூன்றாயிரம் பேர் லிபியா அல்லது எகிப்துக்குச் செல்ல பாகிஸ்தானை விட்டு வெளியேறியதாக பாகிஸ்தான் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அதேசமயம், 2022ல், அத்தகையவர்களின் எண்ணிக்கை ஏழாயிரமாக இருந்தது.
இப்படிப்பட்டவர்கள் அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்கள் ஆபத்தானவை. இந்த ஆண்டு ஜூன் மாதம், கிரீஸ் கடற்கரையில் ஒரு சிறிய மீன்பிடி படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் இறந்தனர். இந்த படகில் குறைந்தது 350 பாகிஸ்தானியர்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
"வழியில் பிடிபட்டாலும் திருப்பி அனுப்பப்படும் வாய்ப்புகள் தான் இருக்கின்றன. யாரும் அவரைக் கடத்திப் பணயத்தொகை கட்டுமாறு கேட்க மாட்டார்கள்" என்கிறார் ஆசம்.
ஆனால் லிபியா வழியாக பயணிக்க முயலும் புலம்பெயர்ந்தோர் போராளிகள் மற்றும் கிரிமினல் கும்பல்களிடம் சிக்கும் அபாயம் உள்ளது. நாங்கள் பேசிய பாகிஸ்தானியர் இத்தாலிக்கு செல்ல மனித கடத்தல்காரர்களின் உதவியைப் பெற்று அதன் மூலம் பயணம் மேற்கொண்டார்.
இப்பயணத்தின் போது தான் கடத்தப்பட்டதாகவும், லிபியாவில் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். சயீத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவரது குடும்பத்தினர் 2500 டாலர் பிணைத் தொகை செலுத்திய பின்னரே அவர் விடுவிக்கப்பட்டதாக கூறினார்.
ஐரோப்பா செல்ல முயன்றபோது லிபியாவில் கடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

மனித கடத்தல்காரர்கள் எப்படி ஆள்களை பிடிக்கிறார்கள்?
பாகிஸ்தானில் பல மனித கடத்தல்காரர்கள் ஃபேஸ்புக் மற்றும் டிக்டாக் போன்ற முக்கிய சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்கின்றனர். இது போன்ற நபர்களின் கணக்குகளை ஆயிரக்கணக்கானவர்கள் பின்தொடர்கின்றனர்.
மனித கடத்தலை ஊக்குவிக்கும் இந்த சமூக ஊடக கணக்குகளை பிபிசி மே மாதம் முதல் கண்காணித்து வருகிறது. இந்த நேரத்தில், மனித கடத்தல்காரர்கள் நேரடியாக செய்தி அனுப்புவது அல்லது வாட்ஸ்ஆப் மூலம் பயணங்கள் மற்றும் கட்டணம் செலுத்துவது போன்ற செயல்களில் தனிப்பட்ட முறையில் ஈடுபடுவதை நாங்கள் கண்டறிந்தோம்.
'டிங்கி' மற்றும் 'கேம்' போன்ற சொற்கள் இந்த சட்டவிரோத வணிகங்களை ஊக்குவிக்க ரகசிய சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. படகில் பயணத்தை முடிக்க 'டிங்கி' பயன்படுத்தப்படுகிறது. ஒரு நபரின் வெற்றிகரமான வருகையை விவரிக்க 'விளையாட்டு' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
ஐரோப்பா, துருக்கி, இரான் மற்றும் லிபியாவில் உள்ள எந்த நாட்டையும் அடைய பாகிஸ்தானில் மூன்று பிரபலமான வழிகள் உள்ளன. இந்த பொதுமக்கள் இந்த வழிகளைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.
கிரீஸில் இடம்பெயர்ந்த படகு பேரழிவில் சிக்கியதைத் தொடர்ந்து இது போன்ற மனித கடத்தல்காரர்களைப் பிடிக்கும் முயற்சிகளை அரசுகள் மேற்கொண்டன. அதன் பின் நாங்கள் கண்காணித்த கடத்தல்காரர்கள் இப்போது 'டாக்ஸி விளையாட்டு' என்ற (சாலை வழியில் பயணிக்கும்) முறையை ஒரு விருப்பமான கடத்தல் முறையாக ஊக்குவித்து வருகின்றனர். இது கிழக்கு ஐரோப்பாவிற்குள் நுழைய ஒரு குறுகிய சாலை வழியாக இருக்கிறது.

வீடியோக்களை காட்டி மக்களை ஈர்க்கும் மனித கடத்தல்காரர்கள்
புலம்பெயர்ந்தோர் குழுக்கள் காடுகளில் ஒளிந்துகொண்டு மினிவேன்களில் வெளியேறும் வீடியோக்கள் கடத்தல்காரர்களின் சமூக ஊடக கணக்குகளில் வெளியிடப்படுகின்றன. இந்த பதிவுகளில் முகவர்களின் பெயர்கள் மற்றும் மொபைல் போன் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வாட்ஸ்அப்பில், வாடிக்கையாளர்களும் முகவர்களும் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன் அடுத்த 'கேம்' குறித்து செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
ஆசம் 'டாக்ஸி கேம்'களில் நிபுணத்துவம் பெற்றவர். கடல் வழிகளை விட 'டாக்ஸி கேம்' பாதுகாப்பானது என்று கூறுகின்றனர். ஆனால் சாலை வழியும் தனிப்பட்ட ஆபத்துகளைக் கொண்டுள்ளது.
குளிர்காலத்தில் குளிர் மற்றும் வெப்பநிலை மாறுவதன் காரணமாக, புலம்பெயர்ந்தோர் நடந்தே எல்லையை கடக்க முயல்கிறார்கள் என்றும், மேலும் அப்போது சாலை விபத்துக்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது என்றும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பிரிவு (UNHCR) கூறுகிறது.
நாங்கள் பேசிய பிற ஐந்து மனித கடத்தல்காரர்களும் 'டாக்ஸி வழியை' மட்டுமே பரிந்துரைத்தனர். அவர்களில் ஒருவர், பிரான்சிலிருந்து யாரையும் இங்கிலாந்துக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவில் அழைத்து வரமுடியும் என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
புகாருக்குப் பிறகு பக்கங்களை அகற்றிய 'மெட்டா'
எங்களின் ஆதாரத்தை சமூக ஊடகமான மெட்டாவிடம் கொடுத்துள்ளோம். மெட்டா நிறுவனம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய்நிறுவனம். சட்டவிரோத ஆட்கடத்தலை ஊக்குவிக்க அவர்களின் தளம் பயன்படுத்தப்படுவதாக நாங்கள் அவர்களிடம் புகார் தெரிவித்தோம்.
நாங்கள் அடையாளப்படுத்திய ஃபேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்களுக்கான அனைத்து இணைப்புகளையும் அதன் பின் மெட்டா நிறுவனம் அகற்றியது, ஆனால் அவற்றுடன் தொடர்புடைய சுயவிவரங்களை அகற்றவில்லை.
மேலும், வாட்ஸ்அப் குழுக்களையும் இந்நிறுவனம் அகற்றவில்லை. ஏனெனில் அதன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் கொள்கை, கணக்கு வைத்திருப்பவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கிறது என்பதுடன் அவற்றை மாற்ற அனுமதிக்காது.
நாங்கள் எச்சரிக்கை விடுத்த கணக்குகளுக்கான இணைப்புகளை டிக்டாக் நிறுவனம் அகற்றியது. மனிதக் கடத்தலை ஊக்குவிக்கும் விதத்திலான தகவல்களை டிக்டாக் நிறுவனம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று அந்நிறுவனம் கூறுகிறது. அதன் கொள்கைகளை மீறும் கணக்குகளையும், பதிவுகளையும் அந்நிறுவனம் அகற்றியது.

பட மூலாதாரம், Getty Images
சயீத் எதற்காக காத்திருக்கிறார்?
சயீத் தற்போது இத்தாலியில் உள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் சயீத் ஒரு வருடத்திற்கு முன்பு தனது நகரத்தை விட்டு வெளியேறினார். அவர் வசித்து வந்த பகுதியில் வேலை வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும், இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் எல்லையிலும் மோதல்கள் தொடர்ந்தன. அவரது வீடு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ளது. அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற இவர் கடந்த 10 மாதங்களாக இத்தாலியில் இருந்துவருகிறார்.
அவர் ஆன்லைனில் பார்த்த டிக்டாக் வீடியோக்கள் மற்றும் கடந்த ஆண்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறிய ஒரு நண்பர் மூலம் அவருக்கு ஐரோப்பா பயணம் செய்யும் எண்ணம் ஏற்பட்டதாகக் கூறுகிறார்.
அவர் பேசியபோது, "இங்கே வருவது மிகவும் எளிதானது என்றும், இப்பயணத்தை முடிக்க சுமார் 20 நாட்கள் ஆகும் என்றும் நான் கேள்விப்பட்டேன். ஆனால் அது பொய்யானது. இங்கு வந்து சேர எனக்கு ஏழு மாதங்களுக்கு மேல் ஆனது," என்றார்.
சயீத் இத்தாலியில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளார். அவர் தனது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார். மேலும், அவர் இப்போது 'சட்டவிரோதப் பயணம்’ மேற்கொண்டதற்கு வருந்துவதாகக் கூறுகிறார்.
அதை 'மரணப் பயணம்' என்கிறார். அவர் இத்தாலியில் தனது தற்போதைய புதிய வாழ்க்கை குறித்த வீடியோக்களை டிக்டாக்கில் தொடர்ந்து வெளியிட்டுவருகிறார்.
மனித கடத்தல்காரரை முதலில் தொடர்பு கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அவரை அழைத்தார் எங்களது இரகசிய செய்தியாளர்கள். இந்த முறை நாங்கள் பிபிசி செய்தியாளர்கள் என்று அவரிடம் சொன்னோம்.
அவர் விளம்பரப்படுத்தும் சட்டவிரோத வழித்தடங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாங்கள் ஆசாமிடம் கூறியபோது, அவர் தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












