பிலாவல் பூட்டோவின் கோவா பயணம் : 12 வருடங்களுக்கு பிறகு இந்தியா வரும் பாகிஸ்தான் அமைச்சர்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
அடுத்த மாதம் கோவாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஸர்தாரி இந்தியா வரவுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
எஸ்சிஓ என்பது பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பாகும். இது ஜூன் 2001இல் ஷாங்காயில் உருவாக்கப்பட்டது. ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதன் உறுப்பு நாடுகளாகும்.
மே 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கோவாவில் நடைபெறும் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பது குறித்தும் எஸ்சிஓ சாசனம் மற்றும் அதன் முறைகள் குறித்தும் இப்பிராந்தியத்தில் பாகிஸ்தான் வெளியுறவு கொள்கைக்குத் தொடர்ந்து அளித்து வரும் முன்னுரிமை பாகிஸ்தானின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியா வந்த பிறகு பாகிஸ்தான் தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு நீண்ட காலமாக மோசமடைந்தே உள்ளது. 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து, பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
ஆகஸ்ட் 2019 இல், ஜம்மு காஷ்மீரில் இருந்து சட்டப்பிரிவு 370 ஐ நீக்கும் மோதி அரசாங்கத்தின் நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்தது, தொடர்ந்து, இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தியது.
டிசம்பர் 2022 இல் நியூயார்க்கில், பிலாவல் பூட்டோ ஸர்தாரி, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் குஜராத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதும் இந்தியா அதைக் கடுமையாக எதிர்த்தது என்பதும் நினைவிருக்கலாம்.
பிலாவல் பூட்டோ மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பிரதமர் மோதியை நோக்கித் தொடர்ந்து கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும் சமீபத்திய பேட்டியில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பேச்சுவார்த்தை மூலம் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த உத்தேச பயணம் குறித்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, "எஸ்சிஓ தலைமையின் கீழ், அனைத்து எஸ்சிஓ உறுப்பு நாடுகளையும் வருமாறு நாங்கள் அழைத்துள்ளோம். மே 4-5 தேதிகளில் கோவாவில் இந்தக் கூட்டம் கூடவுள்ளது.
இந்தக் கூட்டம் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் எந்த ஒரு நாட்டின் பங்கேற்பு குறித்தும் கவனம் செலுத்துவது பொருத்தமாக இருக்காது.” என்று குறிப்பிட்டிருந்தார்.
பிலாவல் பூட்டோவின் உத்தேச இந்திய விஜயம் பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு அரசியல் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிலாவலின் இந்திய பயணத்தின் சமிக்ஞை

பட மூலாதாரம், PAKISTAN INFORMATION DEPARTMENT/ANADOLU AGENCY
பிபிசி உடனான உரையாடலில், பாகிஸ்தான் பாதுகாப்பு நிபுணர் ஆயிஷா சித்திக்கா, நியூயார்க்கில் தனது சர்ச்சைக்குரிய அறிக்கையைத் தொடர்ந்து பிலாவல் பூட்டோவின் இந்த உத்தேச பயணத்தை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த "முற்போக்கான நடவடிக்கை" என்று விவரித்தார். பாகிஸ்தானின் பாதுகாப்பு நிபுணர்களும் முன்னாள் தூதர் ஆசிப் துரானியும் அதை வரவேற்றனர்.
"நீங்கள் எங்களை அவதூறாகப் பேசினீர்கள், நாங்களும் உங்களைப் பேசினோம். ஆனால் நாங்கள் எஸ்சிஓ மன்றத்தில் உரையாற்ற விரும்புகிறோம். இப்போது நீங்கள் எங்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது,” என்று பூட்டோ கூற விரும்புகிறார்” என்கிறார் ஆயிஷா சித்திக்கா.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் வெளிநாட்டு ஆசிரியரும் பாகிஸ்தானைச் சேர்ந்த நிருபருமான ரசாவுல் ஹசன் லஸ்கர், "மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு வருகிறார். இதுவே முக்கியமானது. அவர் இந்தியாவில் இருப்பது, பேச்சுவார்த்தைக்கான கதவு தானாகவே திறக்கப்படுவதற்கு ஒரு பெரிய வாய்ப்பு," என்கிறார்.
பாகிஸ்தானின் ராஜதந்திரம்

பட மூலாதாரம், Getty Images
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், ஐஎம்எப், சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா போன்ற நாடுகளின் கதவுகளைத் தட்டி உதவி கேட்டு வருகிறது.
இது தவிர, சில நாட்களுக்கு முன்பு நியூயார்க்கில் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பிலாவல் இப்படிப்பட்ட நேரத்தில் இந்தியா வருவது ஏன்?
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இப்படிப் பட்ட தீவிரமான கருத்துகள் சாதாரணமாகவே நிலவி வருபவை தான் என்கிறார் பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்தியத் தூதர் ஷரத் சபர்வால்,
"இரு தரப்புக்கும் சம பலன்கள் என்ற பேச்சு வரும் போது, இது போன்ற தீவிரக் கருத்துகள் அடங்கிப் போகும். கடந்த காலங்களில் பல கூரிய சொற்கள் பகிரப்பட்டிருந்தாலும், அதையும் மீறி, நேரம் வரும்போது பேச்சுவார்த்தை முன்னேறி வந்துள்ளது." என்றார்.
எஸ்சிஓ கூட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து இந்திய ஊடகங்களில் நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்தியத் தூதர், “கோவாவில் எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு முக்கியமானது, பாகிஸ்தான் அங்கு தனது இருப்பைப் பதிவு செய்ய விரும்புகிறது. பாகிஸ்தான் தனது இடத்தை விட்டு வெளியேற விரும்புமென்றோ இந்த அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று ஒரு செய்தியை வெளியிட விரும்புமென்றோ நான் கருதவில்லை” என்று கூறுகிறார்.
ராணுவத்துக்கும் உடன்பாடு உண்டா?

பட மூலாதாரம், AFP
பாகிஸ்தானைச் சேர்ந்த நிருபர் ரசாவுல் ஹசன் லஸ்கர் கூறுகையில், "எஸ்சிஓவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டங்களில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்று தெளிவாக முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், இந்தச் சந்திப்புகள் ஆன்லைனில் நடக்குமா நேரில் நடக்குமா என்பது தெளிவாகத் தெரியாமல் இருந்தது. இதில் பிலாவல் பூட்டோ ஸர்தாரி பங்கு பெறுவாரா அல்லது ஹினா ரப்பானி கார் பங்கு பெறுவாரா என்பதும் முடிவு செய்யப்படாமல் இருந்தது.’ என்றார்.
ஆனால், இப்போது ஸர்தாரியின் வருகை உறுதியானது, இந்தக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இருப்பினும் பெயர் குறிப்பிட விரும்பாத பாகிஸ்தான் பாதுகாப்பு நிபுணர் ஒருவர், கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்த தனது முடிவை மறு பரிசீலனை செய்ய பிலாவல் அறிவுறுத்தப்படலாம் என்று கூறினார்.
வெளியுறவு அமைச்சகத்தின் ட்வீட், பூட்டோ, எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க விரும்புவதையும் அவர் தனது அமைச்சகத்தை சுதந்திரமாக நடத்த விரும்புவதையும் இந்தியாவுடன் சிறந்த உறவை விரும்புவதையும் காட்டுகிறது. இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட வேண்டியது தான் பாக்கி என்றும் கூறுகிறார்.
ஆனால், ஆயிஷா சித்திகா இந்த வாதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. பிலாவல் பூட்டோவின் இந்தியா வருவதற்கான முடிவு அவருடையதாக மட்டும் மட்டும் இருக்காது என்பது அவரது கருத்து.
"யார் வருவது என்ற முடிவை ஒன்றாக அமர்ந்து தான் எடுத்திருக்க வேண்டும். அறிவுரைகள் பெறப்பட்டிருக்கும். முறைப்படி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும். இது பிலாவல் பூட்டோ மட்டும் எடுத்த முடிவாக இருக்க முடியாது. இதில் பிரதமரும் ஈடுபட்டிருப்பார், ராணுவமும் ஈடுபட்டிருக்கும்" என்றார் அவர்.
பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்தியத் தூதர் ஷரத் சபர்வால், “பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் பிலாவல் பூட்டோவின் இந்திய வருகை குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ட்வீட் செய்திருக்க வேண்டும்.” என்றார்.
இரு தரப்பு பேச்சுக்கான வாய்ப்புகள்?

பட மூலாதாரம், ANI
பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பு அபாய கட்டத்தில் உள்ளது. பொருளாதாரமும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணெய், உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்து, டாலருக்கு எதிராக பாகிஸ்தான் ரூபாய் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த நிலைக்கும் பூட்டோவின் வருகைக்கும் தொடர்பு இருக்கக்கூடுமா?
பாதுகாப்பு நிபுணரும் பாகிஸ்தானின் முன்னாள் தூதருமான ஆசிப் துரானி, ‘பாகிஸ்தான் உதவிக்காக இந்தியாவைச் சார்ந்திருக்கவில்லை. எங்கள் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்தியா உதவ முடியாது, இந்தியாவும் உதவும் எண்ணத்தில் இல்லை, அத்தகைய முயற்சியையும் எடுக்கவில்லை." என்றார்,
இந்த விஜயத்தின் அறிவிப்புக்குப் பிறகு, இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உள்ளதா என்ற ஊகங்களும் தொடங்கியுள்ளன.
ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, இரு தரப்பு பேச்சு குறித்து எதையும் இப்போது கூற முடியாது என்று கூறினார்.
“இப்போது இது குறித்துப் பேசுவது வெறும் ஊகங்களாகத் தான் இருக்கும், குறிப்பாக, பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் சூடு பிடித்து, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து ஷாபாஸ் ஷெரிஃப் அரசுக்குச் சவால்களை விடுத்துவரும் நேரத்தில்,” என்று ஷரத் சபர்வால் கூறுகிறார்.
ஷரத் சபர்வால் கூறுகையில், "தேர்தலுக்குப் பிறகுதான் பாகிஸ்தானில் நிலைமை மேம்படும். அப்படிப்பட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் (இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் போன்ற) அவர்கள் இப்போது எடுக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்." என்றார்.
ஆயிஷா சித்திக்காகா, “இந்த உத்தேசப் பயணம்பாகிஸ்தானின் அரசியலில் என்ன நடக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், பாகிஸ்தான் அரசாங்கம் தனது சொந்த நலனுக்காகவும், உறவை மேம்படுத்தவும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளது என்பதற்கான சமிக்ஞை” என்கிறார்.
"பேச்சுவார்த்தையைக் குறித்துச் சிந்திப்பதற்கு இன்னும் காலம் கனியவில்லை. பாகிஸ்தான், பந்தை இந்தியாவின் கோர்ட்டில் போட்டுவிட்டு, உங்கள் கோபத்திற்கு அப்பாற்பட்ட நிலைப்பாட்டை எடுக்க முடியுமா என்று கேட்கிறது”
ஆசிஃப் துரானி, "இது இருதரப்பு விஜயம் இல்லை என்றாலும், பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் இருக்கலாம். இந்தியா இவ்வளவு பெரிய நாடு, இந்தியாவின் இதயம் எவ்வளவு பெரியது, அது எவ்வாறு முன்னோக்கி வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும்." என்கிறார்.
பயணம் தரும் நம்பிக்கை

பட மூலாதாரம், Getty Images
ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் வெளிநாட்டு ஆசிரியரும் பாகிஸ்தானைச் சேர்ந்த நிருபருமான ரசாவுல் ஹசன் லஸ்கர், "பிலாவல் பூட்டோ இந்தியாவிற்கு வரும்போது, எந்த கதவுகளையும் திறக்கக்கூடிய ஒரு புதிய கண்ணோட்டத்தை அவர் கொண்டு வருகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும். கடந்த காலத்தைப் பார்க்கும்போது, பிலாவல் பூட்டோவின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்த நிறையப் பணிகளைச் செய்துள்ளது." என்கிறார்.
ஆசிஃப் துரானி, "எவ்வளவு பதற்றம் இருந்தபோதிலும், பிப்ரவரி 2021 இல், இரு நாட்டு டிஜிஎம்ஓக்களுக்கு இடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இப்போது அமைதி நிலவுகிறது. இது உரையாடல் மூலம் மட்டுமே நடந்தது. இரு நாடுகளும் பேச வேண்டும். மோதல் போக்குக்குத் தீர்வு காண, பேச வேண்டும்.” என்று நினைவூட்டுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












