You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலவரையறை நிர்ணயிக்க முடியாது': உச்சநீதிமன்றம் கூறுவது என்ன?
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கோ, ஆளுநருக்கோ காலக்கெடுவை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் ஆளுநர்கள் காலவரையறையின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்றும், அப்படி செய்தால் கட்டுப்படுத்தப்பட்ட/ குறுகிய (limited) நீதிமன்ற மறு ஆய்வு செய்யப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்காவிட்டால், மசோதாக்கள் சட்டமாகிவிடும் என்று ஏப்ரல் மாதம் வழங்கிய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியது அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவய் தலைமையிலான அமர்வு இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் செயல்பட காலக்கெடு விதிப்பது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் கருத்து குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டிருந்த நிலையில், இதுகுறித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்த விளக்கம் குறித்த தகவல்களை barandbench வெளியிட்டுள்ளது. அதன் படி, "ஆளுநருக்கு மசோதாக்களை (முடிவெடுக்காமல்) வைத்திருக்க முழுமையான அதிகாரம் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம் .. எனவே, அவ்வாறு வழங்கப்பட்ட விருப்புரிமை அவரை நிரந்தரமாக மசோதாக்களை வைத்திருக்க அனுமதிக்க முடியாது. அவரிடம் உள்ள மூன்று தெளிவான தெரிவுகள் -ஒன்று ஒப்புதல் வழங்குவது, ஒப்புதலை நிறுத்தி வைப்பது மற்றும் கருத்து தெரிவிக்க சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்புவது அல்லது குடியரசு தலைவருக்கு பரிந்துரைப்பது. இந்த மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க முடியும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், அமைச்சரவைதான் ஓட்டுநர் இருக்கையில் (இயக்குபவராக) இருக்க வேண்டும், மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகாரங்கள் இருக்க முடியாது என்று நாங்கள் கருதுகிறோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் குடியரசு தலைவரின் பங்கு ஒன்றியத்திற்கு பிணைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் ஒரு ஒருங்கிணைந்த அலகு முக்கியமானது. ஆளுநர் தனது ஒப்புதலுக்காக மசோதாவை வழங்காவிட்டால் குடியரசு தலைவர் இந்த விருப்பத்தைப் பயன்படுத்த முடியாது. மசோதாவை திருப்பித் தருமாறு அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்புமாறு அமைச்சரவை ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவது சாத்தியமில்லை. பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு விருப்புரிமை இல்லை என்று கருதுவது புரிந்துகொள்ள முடியாதது.
எனவே, இந்த நீதிமன்றத்தின் முந்தைய முன்னுதாரணங்களிலிருந்து விலகிச் செல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கருதுகிறோம். மசோதாக்கள் சட்டமாகிவிட்டால் மட்டுமே நீதித்துறை மறுஆய்வு மற்றும் ஆய்வு செய்ய முடியும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கடந்த ஏப்ரல் மாதம் கூறிய உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது.
இது குறித்து விளக்கம் கோரி அரசியல் சாசனத்தின் 143 வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறிப்பு வழங்கியிருந்தார். அது குறித்த வழக்கில் தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விளக்கம் அளித்துள்ளது.
'ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மாநில மசோதாக்களைக் கையாளும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி காலக்கெடுவை விதிக்க முடியுமா' என உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே மாதம் அனுப்பிய 'குறிப்பு' (Presidential reference) ஒன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்திய அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட இந்தக் குறிப்பில், "மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாவை, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியுமா?" என்பது உள்பட 14 கேள்விகளையும் முன்வைத்திருந்தார் குடியரசுத் தலைவர்.
தமிழ்நாடு அரசின், பல்கலைக்கழகங்கள் தொடர்பான 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது 'சட்டவிரோதம்' எனக்கூறி, சட்டப்பிரிவு 142-ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
அதோடு, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பும் நிர்ணயித்தது.
குடியரசுத் தலைவர் குறிப்பு என்பது என்ன?
குடியரசுத் தலைவரின் குறிப்பு என்பது அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் அனுப்பப்படுகிறது. அதன் படி, "எந்த சமயத்திலும், ஒரு சட்டம் தொடர்பான ஒரு கேள்வி எழுந்துள்ளதாகவோ அல்லது எழ வாய்ப்புள்ளதாகவோ குடியரசுத் தலைவருக்கு தோன்றினால், அது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுவது பொருத்தமானதாகவும் இருந்தால், அவர் அந்தக் கேள்வியை நீதிமன்றத்திற்குப் பரிசீலனைக்காக அனுப்பலாம்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு