குண்டு ரெட்டியூர்: தமிழ் பிராமி எழுத்துகள், கல் வட்டங்கள் கண்டுபிடிப்பு - இன்னொரு கீழடியாகுமா?

பட மூலாதாரம், Prabu
- எழுதியவர், சுஜாதா
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருப்பத்தூர் மாவட்டம் நீண்ட நெடிய வரலாற்று சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ளது. ஆதியூர் முதல் கோடியூர் வரை எட்டு திசைகளிலும் 10 திருத்தலங்கள் அமைந்திருப்பதால் திருப்பத்தூர் என்ற பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர்.
பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மன்னர்கள் திருப்பத்தூரை ஆட்சி செய்துள்ளனர். அப்போது பிரம்மபுரம், திருப்பேரூர், திருவனபுரம் என பல பெயர்களில் திருப்பத்தூர் அழைக்கப்பட்டுள்ளது.
இரண்டு மலைகளை ஆட்சி செய்த நன்னன் சேய் நன்னன்
கி.பி 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் திருவனபுரம் என்ற பெயரை திருப்பத்தூர் என்று மாற்றியதாக கூறப்படுகிறது. சங்க காலத்தில் நன்னன் சேய் நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்த ஜவ்வாது மலை மற்றும் ஏலகிரி மலை ஆகிய 2 பெரிய மலைகளால் சூழப்பட்ட பகுதியே திருப்பத்தூர். ஜவ்வாது மலையில் இருந்து செய்யாறு , ஆரணியாறு, கமண்டல ஆறு, நாகந்தி ஆறு, மிருகாண்ட நதி ஆகிய ஆறுகள் உற்பத்தியாகின்றன.
ஜவ்வாது மலை இயற்கை எழில் கொஞ்சும் அருவிகள், நீரோடைகள், காடுகள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.

பட மூலாதாரம், prabu
சந்தன மாநகரம் என்று அழைக்கப்படும் திருப்பத்தூர்
ஜவ்வாது மலையை ஒட்டியுள்ள பகுதி மிக சிறந்த சந்தன மரங்கள் விளையும் பூமியாக திகழ்ந்தது. இதனால் ஆசியாவிலேயே 2வது பெரிய சந்தன கிடங்கு திருப்பத்தூரில் அமைக்கப்பட்டது. சந்தனம் விளையும் ஜவ்வாது மலையை ஒட்டி அமைந்துள்ளதாலும் பெரிய சந்தன கிடங்கு உள்ளதாலும் திருப்பத்தூரை சந்தன மாநகரம் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
இவ்வாறான நிலவியல் அமைப்பு கொண்ட திருப்பத்தூர் மாவட்டம் பழங்கற்கால முதல் புதிய கற்காலம், பெருங்கற்காலம், பல்லவர்கள், சோழர்கள், கங்கர்கள், நாயக்கர்கள் காலத்தை சேர்ந்த எண்ணற்ற தடயங்கள் கொண்டதாக திகழ்கிறது என்று கூறுகிறார் தமிழ் ஆய்வு துறையின் உதவி பேராசிரியரான பிரபு.
10 ஆண்டுகளில் 90க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள்
இது தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளில் 90க்கும் மேற்பட்ட வரலாற்று சான்றுகளை பிரபு மற்றும் அவரது குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக திருப்பத்தூரில் உள்ள குண்டு ரெட்டியூர் என்னும் சிற்றூரில் பல தொல்லியல் தடயங்கள் உள்ளதாக பிரபு கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ திருப்பத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்டு ரெட்டியூரானது ஏலகிரி மலையின் பின் பக்க சரிவின் அடிவாரமாகும். அவ்விடத்தில் கி.பி 10, 11ம் நூற்றாண்டை சேர்ந்த 5 நடுகற்கள் உள்ளன. அவற்றில் 4 ஏற்கனவே ஆய்வுகள் செய்யப்பட்டவை ஆகும்.
குண்டு ரெட்டியூரில் கடந்த 2018ஆம் ஆண்டு நானும் எனது மாணவர்களும் ஆய்வு செய்தபோது, அங்குள்ள மலை அடிவாரத்தில் சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான மண்பானை ஓடுகள் சிதறு கிடந்ததை கண்டோம். அவற்றை சேகரித்து சுத்தம் செய்யும்போது பார்ப்பதற்கு பழமையான ஓடுகள் என்பது தெரிய வந்தது. 8 நாட்கள் மேற்கொண்ட மேற்பரப்பு களஆய்வின் முடிவில் பல அரிய பொருட்களை சேகரித்தோம்” என்றார்.
சுடுமண் ஊது குழாய்கள், (Blowers) கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள் (Black and Redwares), சிவப்பு வண்ணபூச்சு பானை ஓடுகள் (Red Slippedwares) உடைந்த கெண்டிகல் (Spouts), இரும்பு தாதுக்கள் (Iron Ores), கழுத்தில் அணியும் ஆபரணத்தின் மணி (Beads), புதிய கற்கால கருவிகள், (Neolithic Celt), எலும்பு துண்டுகள், பெரிய சுட்ட செங்கற்களின் ஒரு பகுதி ஆகிய பொருட்கள் நிலத்தின் மேற்பரப்பில் கிடைத்ததாகவும் நிலத்தை உழவுப் பணி மேற்கொள்கையில் இவை அனைத்தும் வெளிவந்ததாகவும் பேராசிரியர் பிரபு தெரிவிக்கின்றார்.

பட மூலாதாரம், Prabu
குகைகளில் தமிழ் பிராமி எழுத்துகள்
மனிதர்கள் வாழ உகந்த சூழல் உள்ள பல் கற்குகைகள் இம்மலையில் இருப்பது தெரிய வந்ததாகவும் கூறிய பிரபு, “அவற்றில் இரண்டு குகைகளை ஆய்வு செய்தோம். ஒன்று மலை அடிவாரத்தில் நிலப்பரப்பில் உள்ள குகையாகும். இக்குகையானது 10 பேர் வசிக்க ஏற்ற குகையாக உள்ளது. குகைகளின் முன் உள்ள பெரிய கல்லில் உணவுப் பொருட்களை அரைத்த தடம் உள்ளது. மேலும் குகை முகப்பில் புருவ அமைப்பு (Cave Eyebrow) செதுக்கப்பட்டு அதில் பழமையான தமிழ் பிராமி எழுத்துகளைப் போல் தோற்றம் கொண்ட குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கிடைத்த ஒரு மண்பானை ஓட்டில் குறியீடு கண்டறியப்பட்டுள்ளது. அக்குகையினை அப்பகுதி மக்கள் "கெவி கல்" என்கின்றனர். இக்குகைக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு பாறையில் விளையாடுவதற்கு பயன்படும் கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
பெரும்பாலும், மனித வாழ்விடங்கள் நீர் நிலைகளுக்கு அருகாமையில்தான் அமைந்திருக்கும். அதுபோலவே, இந்த குகையின் ஓரத்தில் ‘எகிலேரி’ என்ற மிகப்பெரிய நீர் நிலை உள்ளது. ஏலகிரி மலையில் இருந்து வரும் காட்டாறுகள் பல இங்கு வந்து சேர்கின்றன.

பட மூலாதாரம், Prabu
சுடுமண் ஊது குழாய்கள் கண்டெடுப்பு
இக்குகைக்கு அருகாமையில் உள்ள புதர் மண்டிய மேட்டுப்பகுதியை இரும்பினை உருக்க பயன்படுத்தியதற்கு உறுதியான சான்றுகள் கிடைத்ததாகவும் பிரபு தெரிவித்தார். இரும்பை உருக்க பயன்படுத்தும் ஏழு சுடுமண் ஊதுகுழாய்கள் கிடைத்துள்ளதாக அம்மேட்டினை சுற்றிலுமாக இரும்பு தாதுக்கள் குவிந்து இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இதேபோல், மலை அடிவாரத்தில் 4 குத்துக்கற்கள், 5 அரவை கற்கள், 1 கற்கோடாரியின் மேல் பகுதி என 10 புதிய கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இவை அனைத்தையும் திருப்பத்தூர் தூய நெஞ்சக கல்லூரி நூலகத்தில் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரபு நம்மிடம் கூறினார்.
கல் வட்டங்கள் கண்டெடுப்பு
குண்டு ரெட்டியூரைப் போலவே வேலூரில் உள்ள சேங்குன்றம் என்ற சிற்றூரில் தங்களது குழு கள ஆய்வு செய்தபோது கல்வட்டங்களை கண்டறிந்ததாக பிரபு தெரிவித்தார்.
“ தனியார் விவசாய நிலத்தில் மேற்கொண்ட கள ஆய்வில் 15க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் கண்டறியப்பட்டது. அவற்றில் ஒரு கல்வட்டத்தினை சில சமூக விரோதிகள் புதையல் கிடைக்கும் என்ற நோக்கில் தோண்டி பார்த்துள்ளனர். அவ்வாறு அவர்கள் தோன்றிய இடத்தின் உள்ளே கல்பதுக்கை உள்ளது. அக்கல் பதுக்கையானது ஆறடி ஆழத்தில் நான்கு புறமும் உறுதியான பலகை கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சில கருப்பு சிவப்பு வண்ண மட்கலத்தின் ஓடுகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. இவை ஈமப்பேழையில் வைக்கப்பட்ட ஈமப்பொருட்களாகும். அவ்விடத்தில் மேலும் பத்திற்கும் மேற்பட்ட கல் வட்டங்கள் நல்ல நிலைகளில் காணப்படுகின்றன. கல்திட்டை ( Dolmonoid Cist) கல் பதிக்கை (Slab Cist) கல்வட்டம் (Cairn Circle) ஆகிய மூன்று வடிவங்களும் அவ்வூரில் கிடைத்துள்ளது” என்கிறார்.
இங்கே அகழாய்வு செய்தால் இது இன்னொரு கீழடியாக உருவெடுக்கும் வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.

பட மூலாதாரம், Prabu
எனவே குண்டு ரெட்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு சார்பில் அகழாய்வு நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் பிரபு. “கடந்த 2018ஆம் ஆண்டு இது தொடர்பாக அப்போதைய தொல்லியல் துறை அமைச்சருக்கும் மீண்டும் தற்போதைய தொல்லியல் துறை அமைச்சருக்கும் முதன்மை செயலாளர் & ஆணையர் ஆகியோருக்கும் மனு அளித்துள்ளேன். ஆனால், இதுவரை பதில் கிடைக்கவில்லை” என்று கூறுகிறார்.
தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநரின் பதில் என்ன?
தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசியபோது, தங்களுக்கு எந்தவித கோரிக்கை மனுவும் வரவில்லை என்று குறிப்பிட்டார். மேலும் அவர், “ இது தொடர்பாக எங்களுக்கு மனு வந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏதேனும் மனு கிடைக்கும் பட்சத்தில் அதற்குரிய மாவட்ட வாரியான அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பர். அந்த அறிக்கையின் அடிப்படையில் அவ்விடத்தில் மேற்படி கள ஆய்வுகளை மேற்கொள்வோம்” என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












