அமெரிக்காவில் மாணவர் போராட்டம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது - லாஸ் ஏஞ்சலஸில் இரு தரப்பினர் மோதல்

அமெரிக்காவில் மாணவர் போராட்டம்

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், மேட் மர்ஃபி
    • பதவி, பிபிசி செய்திகள்

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் பாலத்தீனத்திற்கு ஆதரவாகப் போராடி வரும் மாணவர்களைக் கலைப்பதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் உள்ளே நுழைந்தனர்.

பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஒரு கூடத்தில் இருந்த மாணவர்களை அகற்றுவதற்காக போலிசார் ஏணியில் ஏறிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகின. மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாகவே, போராடும் மாணவர்கள் இடத்தைக் காலிசெய்ய வேண்டும் அல்லது அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கொலம்பியா பல்கலைக்கழகம் எச்சரித்திருந்தது.

இஸ்ரேல் காஸா மீது நடத்திவரும் தாக்குதலால் மனிதாபிமானச் சிக்கல்கள் தீவிரமடைந்து வருவதால், கொலம்பியா பல்கலைக்கழகம் இஸ்ரேலில் இருக்கும் தனது மூலதனங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என போராடும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பல முக்கிய பல்கலைக் கழகங்களிலும் மாணவர்கள் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்தும், பாலத்தீனத்திற்கு ஆதரவகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் புறக்கணிக்கக் கோரி அமெரிக்கா முழுவதும் பல்வேறு நகரங்களிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் மாணவர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், பல முக்கியப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளுகக்கு எதிராகப் போராடும் மாணவர்களை 'யூத வெறுப்பாளர்கள்' என்று யூத மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொலம்பியா மற்றும் வேறு சில பல்கலைக் கழகங்களில் உள்ள யூத மாணவர்கள் தங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைப் போல் உணர்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

ஆயினும் பல யூத மாணவர்களும் இஸ்ரேலுக்கு எதிரான இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.

இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் கூடத்திற்குள் நுழையும் நியூ யார்க் நகரக் காவல்துறையினர்

'போலீசார் மாணவர்களை மோசமாகக் கையாண்டனர்'

மாணவப் போராட்டக்காரர்கள், கலைந்து செல்வதற்குக் கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடுவை மீறியதால், நியூ யார்க் காவல் துறை (NYPD) அதிகாரிகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய, பல்கலைக்கழக அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 80-100 போலீசார் கட்டிடத்திற்குள் நுழைந்ததாக ஒரு மாணவர் பிபிசி-யிடம் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளகத்தில் இருந்த ஹாமில்டன் கூடம் 'ஆக்கிரமிக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு, முற்றுகையிடப்பட்ட பிறகு, எங்களுக்கு வேறு வழியில்லை' என்று கொலம்பியா பல்கலைக்கழகம் கூறியது. நியூ யார்க் காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில், பல்கலைக் கழகத் தலைவர் மினூஷ் ஷபிக், 'மிகுந்த வருத்தத்துடன்' காவல்துறை உதவியைக் கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் வளாகத்தினுள் நுழைந்தவுடன் அதிகாரிகள் 'போராட்டக்காரர்களை திசைதிருப்ப' வீரியம் குறைந்த 'ஸ்டன் கையெறி குண்டுகளைப்' பயன்படுத்தினர் என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்
படக்குறிப்பு, ஒரு மாணவர் பிபிசி-யிடம் காவல்துறை அத்துமீறல்களை விவரித்துக்கொண்டிருந்த போதே, ஒரு காவலர் ஜன்னலை மூடினார்

கட்டடத்திற்குள் நுழைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களைப் பிடித்து இழுத்தும் தள்ளியும் மோசமாக நடத்தியதாக சில மாணவர்கள் குற்றம் சாட்டினர். அவர்களில் ஒருவர் ஜன்னல் வழியே பிபிசி-யிடம் பேசினார். நியூ யார்க் காவல் அதிகாரிகள் மூன்று மாணவர்களை படிக்கட்டுகளில் இருந்து கீழே தள்ளியதாகக் கூறினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு காவல் அதிகாரி குறுக்கிட்டு ஜன்னலை வலிந்து மூடியதால், நேர்காணல் தடைப்பட்டது.

இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கைது செயப்பட்ட மாணவர்கள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்

50 மாணவர்கள் கைது

நியூ யார்க் காவல்துறையின் பொதுத் தகவல் உதவி ஆணையர், கார்லோஸ் நீவ்ஸ், காவல் அதிகாரிகளுக்கு ஆதரவாகப் பேசினார். மாணவர்கள் ஹாமில்டன் கூடத்தின் கதவுகளை 'மேசைகள், நாற்காலிகள் அல்லது சோடா இயந்திரங்களைக்' கொண்டு 'தடுத்து' வைத்திருந்ததாக அவர் கூறினார். அதிகாரிகள் உள்ளே 'பார்க்க முடியாதபடி' செய்தித்தாள்கள் கொண்டு ஜன்னல்களையும் மூடிவைத்திருந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

இச்சம்பவத்தில் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டதாக சிபிஎஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொலம்பியா பல்கலைக் கழகத்தில் இருந்து செய்தியறிக்கை அளித்த பிபிசி-யின் அமெரிக்கச் செய்தியாளர் நோமியா இக்பால், பல நியூ யார்க் காவல்துறைப் பேருந்துகள் பல்கலைக் கழக வளாகத்திலிருந்து வெளியேறுவதைக் கண்டதாகக் கூறினார். அவற்றில் போராட்டக்காரர்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் தங்கள் கைகள் கட்டப்பட்டு அணிவகுத்து அழைத்துச் செல்லப்பட்டபோது, போராட்டக்காரர்கள் அவர்களுக்கு ஆதரவாகப் பெரும் கோஷங்களை எழுப்பினர். `அவர்களைப் போக விடுங்கள்` என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

அந்தக் கட்டடத்தில் இருந்தபடி போராடிய மாணவர்கள் அனைவரும் அகற்றப்பட்டதாகவும், யாருக்கும் எந்த காயங்களும் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை என்றும் நியூ யார்க் காவல்துறை கூறியது.

கொலம்பியா பல்கலைக் கழக மாணவர்கள் கிட்டத்தட்ட கடந்த இரண்டு வாரங்களாக பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரம் அமைத்துப் போராடி வருக்கின்றனர்.

இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் திரண்டிருக்கும் காவலர்கள்

மற்ற பல்கலைக்கழகங்களிலும் கைது நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை இரவு நியூ யார்க்கில் கருப்பினத்தவர் அதிகம் வசிக்கும் ஹார்லெம் பகுதியில் உள்ள நகரக் கல்லூரியிலும் போலீசார் நுழைந்து பல மாணவர்களைக் கைது செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ், கலிபோர்னியா, ஜார்ஜியா, வட கரோலினா, யூட்டா, வர்ஜீனியா, நியூ மெக்ஸிகோ, நியூ ஜெர்சி, கனெக்டிகட் மற்றும் லூசியானா ஆகிய மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களிலும், 1,000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இஸ்ரேல்-பாலத்தீனம், அமெரிக்க மாணவர் போராட்டம்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இஸ்ரேல் ஆதரவு மற்றும் பாலத்தீன ஆதரவு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது

கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் மோதல்

அமெரிக்காவின் மேற்கு கரையில், லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் நிர்வாகிகள் 'சட்ட விரோதமானவை' என்று அவர்கள் அழைக்கும் போராட்டக்காரர்களின் முகாமை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். அதைத்தொடர்ந்து இஸ்ரேல் ஆதரவு மற்றும் பாலத்தீனர் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தன. இது நீண்ட நேரம் தொடர்ந்தது.

கறுப்பு உடை அணிந்த இஸ்ரேல் ஆதரவாளர்கள் அமெரிக்க நேரப்படி நள்ளிரவில் வளாகத்திற்கு வந்தனர். அவர்கள் முகாமைச் சுற்றியிருந்த தடுப்புகளை அகற்ற முயற்சித்தனர், என்று 'லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோ காட்சிகள் கலவரங்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் சுடர்கள் மற்றும் பட்டாசுகள் வெடிப்பதைக் காட்டின. மற்ற வீடியோ காட்சிகள் இரு குழுக்களிடையே நடந்த மோதலைக் காட்டின.

அமெரிக்காவில் மாணவர் போராட்டம்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, நள்ளிரவில் மோதிக் கொண்ட மாணவர்கள்

லாஸ் ஏஞ்சலஸ் மேயர் கரேன் பாஸ் இந்த காட்சிகளை 'வெறுக்கத்தக்கவை, மன்னிக்க முடியாதவை' என்று விவரித்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் வளாகத்திற்கு வந்ததாகக் கூறினார்.

சில அதிகாரிகள் மாணவப் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மற்றவர்கள், காவல்துறையினரை அழைத்தனர்.

தேசிய அரசியல்வாதிகள் சிலர், இந்தப் போராட்டங்களில் யூத வெறுப்பு வெளிப்படுவதாகக் கூறி, கல்லூரிகள் இதனைச் சமாளிக்க மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் மாணவர் போராட்டம்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இஸ்ரேல் ஆதரவு மாணவர்களின் தாக்குதலுக்குப் பிறகு பாலத்தீனர் ஆதரவு மாணவர்கள் தங்களது போராட்ட முகாமை காவல் காத்து நின்ற காட்சி

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)