You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"நீ எங்கே ஹீரோ ஆகப்போகிறாய், கவிதை எழுது" அமிதாப் பச்சனிடம் கூறிய தயாரிப்பாளர்
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
1940 களில் பிரபல அமெரிக்க பாடகரும் நடிகருமான ஃபிராங்க் சினாட்ராவை பிரபலமாக்க, அவரது பத்திரிகை முகவர் ஜார்ஜ் இவான்ஸ் ஒரு மிகப்பெரிய நகர்வை மேற்கொண்டார்.
அவர் பன்னிரண்டு இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தினார். ஃபிராங்க் பாடத் தொடங்கும் போது 'ஓ ஃபிராங்கி, ஓ பிரான்கி' என்று கத்தவும், சிறிது நேரம் கழித்து மயக்கம் வருவது போல் நடிக்கவும் கற்றுக் கொடுத்தார்.
'மயக்கமடைந்த' பெண்களை தியேட்டரில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஒன்றையும் இவான்ஸ் ஏற்பாடு செய்திருந்தார். அதை படமெடுக்க புகைப்படக் கலைஞர்களையும் ஏற்பாடு செய்தார். அதன் மூலம் மேலும் விளம்பரம் கிடைக்கும் என்று அவர் கருதினார். இதற்காக அந்த பெண்களுக்கு தலா ஐந்து டாலர்கள் வழங்கப்பட்டது. இவான்ஸ் மேற்பார்வையில் மூன்று நாட்கள் ஒத்திகையும் பார்க்கப்பட்டது.
நியூயார்க்கில் உள்ள பாரமவுண்ட் தியேட்டரில் ஃபிராங்க் சினாட்ராவின் நிகழ்ச்சி முடிவதற்கு முன்பு இவான்ஸ் அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் மயக்கம் அடைய 12 பெண்களை மட்டுமே அவர் வேலைக்கு அமர்த்தியிருந்தார். ஆனால் அங்கே 30 பெண்கள் மயக்கமடைந்தனர்.
இந்தக் கதையை அமிதாப் பச்சனிடம் சொன்னவுடன் முதலில் புன்னகைத்த அவர், "யாரையாவது பிடித்து ஹீரோவாக ஆக்கமுடியும். ஆனால் அதுவரைதான் செய்யமுடியும். கேமரா உருள ஆரம்பித்தவுடன் அவர் தனித்துவிடப்படுவார். அவர்தான் நடிக்க வேண்டும்," என்றார்.
விளம்பரம் ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே அழைத்துச் செல்லும். ஆனால் அதைத் தாண்டிச் செல்ல, திறமையும் அவசியம் என்பதை விளக்க அமிதாப் முயன்றார்.
அதிர்ஷ்டவசமாக அமிதாப் தனது தொழில் வாழ்க்கையை உயர்த்த இந்த வித்தைகளை நாட வேண்டியிருக்கவில்லை.
பெயர் சூட்டிய சுமித்ரானந்தன் பந்த்
அமிதாப் 1942 அக்டோபர் 11 ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். பிறந்த அன்றே அவருக்கு பெயரும் சூட்டப்பட்டது.
அவரது பெற்றோரின் குடும்ப நண்பரான பண்டிட் அமர்நாத் ஜா, அந்த நேரத்தில் நாட்டின் சூழலைக் கருத்தில் கொண்டு அவருக்கு 'இன்குலாப்' என்று பெயரிட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
"அமிதாப் பிறந்த அந்த நாளில், பிரபல கவிஞர் சுமித்ரானந்தன் பந்த் அவரை பார்க்க நர்ஸிங் ஹோமுக்கு வந்தார். குழந்தையைப் பார்த்து, அவர் கூறினார், 'பச்சன், குழந்தையை பாருங்கள். தியானம் செய்யும் அமிதாப்பைப் போல (அணையாத ஒளி) எவ்வளவு அமைதியாக இருக்கிறது என்று சொன்னார்,” என்று அமிதாப் பச்சனைப் பற்றி சமீபத்தில் வெளியான 'அமிதாப் பச்சன் தி ஃபாரெவர் ஸ்டார்' புத்தகத்தின் ஆசிரியர் பிரதீப் சந்திரா கூறுகிறார்.
தேஜி பச்சன் தன் மனதிற்குள் பண்டிட்ஜி சொன்ன வார்த்தைகளை, 'அமிதாப்', 'அமிதாப்' என்று திரும்பத் திரும்பச் சொல்லி, ஆஹா என்ன நல்ல பெயர் என்றார்.
ஹரிவன்ஷ் மற்றும் தேஜி இருவரும் தங்கள் மகனுக்கு அமிதாப் என்று பெயரிட முடிவு செய்தனர். குடும்பப்பெயர் ஸ்ரீவஸ்தவா என்றாலும், அமிதாப்பிற்கு அவரது தந்தை ஹரிவன்ஷ்ராய் பச்சனின் பெயரில் உள்ள 'பச்சன்', அவரது பெயருடன் இணைக்கப்பட்டது.
வீட்டில் அவரை அமித் என்று அழைத்தாலும் அவரது தாய் அவரை முன்னா என்றுதான் அழைப்பார்கள். அமிதாப்பின் தம்பி அஜிதாப்பின் வீட்டுப் பெயர் 'பண்டி'.
கிரோரி மல் கல்லூரி நாடக சங்கத்தில் இணைந்து தொடங்கிய நடிப்புத் தொழில்
நைனிடாலில் உள்ள ஷேர்வுட் பள்ளியில் ஆரம்பக் கல்விக்குப் பிறகு, அமிதாப் பச்சன் டெல்லியில் உள்ள கிரோரி மல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு நாடகங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.
அந்தக் கல்லூரியின் நாடக சங்கத் தலைவர் ஃபிராங்க் தாக்கூர்தாஸ் அமிதாப்பின் கம்பீரமான குரலால் ஈர்க்கப்பட்டார். பிரபல நாடக கலைஞரான பிரதாப் ஷர்மாவின் சகோதரர் ஒரு நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சில சொந்த காரணங்களால் நாடகத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டார்.
இப்போது அவருடைய பாத்திரத்தை யாருக்கு வழங்குவது என்று தாகுர்தாஸ் சிந்திக்க ஆரம்பித்தார். அந்த வேடத்தில் நடிக்க அமிதாப் முன்வந்தார். இதற்கு தாகுர்தாஸ் ஒப்புக்கொண்டார். இதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட அமிதாப் அற்புதமாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.
பின்னர் மிராண்டா ஹவுஸில் நடந்த ‘ரேப் ஆஃப் தி பெல்ட்’ நாடகத்திலும் அமிதாப் நடித்தார்.
அப்போது மும்பை நாடக உலகில் பெயர் பெற்ற டோலி தாக்கூர், மிராண்டா ஹவுஸில் படித்து வந்தார். அமிதாப்பை நினைவு கூர்ந்த அவர், "அந்த நாட்களில் அமிதாப் ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்திருப்பார். அவர் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர். அவரது தம்பி அஜிதாப் அவரை விட அழகாக இருந்தார்" என்றார்.
அமிதாப் பிஏ முடித்த பிறகு கொல்கத்தாவில் உள்ள திபேர்ட் & கம்பெனியில் வேலை செய்யத் தொடங்கினார். அங்கு இரண்டு வருடங்கள் வேலை பார்த்தபிறகு, 'பிளாக்கர் & கம்பெனி'யில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு சம்பளம் அதிகரித்தது மட்டுமின்றி, அலுவலகம் சென்று வருவதற்கும் ஒரு மோரிஸ் மைனர் காரும் வழங்கப்பட்டது.
ஃபிலிம்பேர் - மாதுரி போட்டியில் தோல்வி
அமிதாப்பின் நடிப்பு ஆர்வத்தைப் பார்த்த அவரது தம்பி அஜித்தாப், ‘ஃபிலிம்பேர்-மாதுரி டேலண்ட் காண்டெஸ்ட்’க்கு அவரது புகைப்படத்தை அனுப்பினார்.
”இந்த போட்டியின் வெற்றி பெறுபவருக்கு 2500 ரூபாயும், இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பும் வழங்கப்பட இருந்தது. ஆனால் அமிதாப்புக்கு வேளை வரவில்லை. ஆகவே அவர் தேர்வு செய்யப்படவில்லை. சஞ்சய் மற்றும் பெரோஸ் கானின் சகோதரர் சமீர், அந்த போட்டியில் வெற்றி பெற்றார்," என்று பிரதீப் சந்திரா குறிப்பிட்டுள்ளார்.
"முன்னதாக, தர்மேந்திரா மற்றும் ராஜேஷ் கன்னா இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தனர். தனது கம்பீரக்குரலால் அனைவரையும் வசீகரிக்கும் அமிதாப், ஆல் இண்டியா ரேடியோவின் 'ஸ்வர் பரீக்ஷா'வில் தோல்வியடைந்தது ஒரு முரண்பாடாகவும் சொல்லப்படுகிறது."
தேஜி பச்சனுக்கும், சுனில் தத் மற்றும் நர்கிஸ் தத் ஆகியோருக்கு இடையேயான நட்பின் காரணமாக அமிதாப் இந்தி படங்களில் நுழைந்தார்.
இதற்கு முன்பு தேஜி பச்சன், 1968-ம் ஆண்டு டெல்லியில் பிரபல திரைப்பட இயக்குனர் சாவன் குமார் தக்கை சந்தித்தார். அவர் சாவன் குமாரிடம், தனது மகன் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினார்.
அந்த நாட்களில் மிர்ஸா காலிப் பற்றி படம் எடுக்க சாவன் திட்டமிட்டிருந்தார். அமிதாப்பிற்கு மிர்ஸா காலிப் வேடத்தை கொடுக்கவும் அவர் முடிவு செய்திருந்தார். ஆனால் அமிதாப் மிகவும் உயரமானவர், அதே சமயம் காலிப்பின் உயரம் மிகக் குறைவு என்பதால் அந்த கதாபாத்திரத்தில் அமிதாப் பொருந்தமாட்டார் என்று அவரை அறிந்தவர்கள் வாதிட்டனர்.
புறக்கணித்த திரைப்பட தயாரிப்பாளர்கள்
சுனில் தத்தின் பரிந்துரையின் பேரில், பிரபல இயக்குனர் பி.ஆர்.சோப்ரா அமிதாப்பின் ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்க ஒப்புக்கொண்டார். ஸ்க்ரீன் டெஸ்டில் அமிதாப்பின் வரிகள் ’இப்படி என்னைப் பார்க்கும் போதெல்லாம், நான் எல்லாவற்றையும் மறந்து விடுகிறேன், எனக்கு எதுவும் புரியவில்லை, நான் என்ன, நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.’ என்று இருந்தன.
ஆனால் அமிதாப்பிற்கு பிஆர் சோப்ராவிடம் இருந்து அழைப்பு வரவில்லை. இருப்பினும் 'ஜன்ஜீர்' படம் வெளியான பிறகு அமிதாப்பை தனது 'ஜமீர்' படத்திற்கு அவர் ஒப்பந்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நாட்களில், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தாராசந்த் பர்ஜாதியாவை சந்திக்க அமிதாப் சென்றார். ஆனால் அங்கும் எதுவும் நடக்கவில்லை.
பர்ஜாதியா அவரிடம், "நீ மிகவும் உயரமாக இருக்கிறாய். உன் தந்தையின் தொழிலை நீ பின்பற்ற வேண்டும். அவரைப்போல் நீயும் ஒரு நல்ல கவிஞராகலாம்" என்றார்.
சில வருடங்களுக்குப் பிறகு அதே பர்ஜாதியா தனது ‘சௌதாகர்’ படத்தில் அமிதாப்பை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தார். இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான 'ஊச்சாயியான்' படத்தில் அமிதாப்பிற்கு முக்கிய வேடத்தை கொடுத்தார் தாராசந்தின் பேரன் சூரஜ் பர்ஜாதியா.
குவாஜா அகமது அப்பாஸ் கொடுத்த முதல் வாய்ப்பு
அமிதாப்பிற்கு முதல் படத்தை பிரபல திரைப்பட இயக்குனர் குவாஜா அகமது அப்பாஸ் வழங்கினார்.
இயக்குனர் டீனு ஆனந்தின் தோழி நீனா சிங், அமிதாப்பின் சில படங்களை அப்பாஸிடம் காட்டும்படி அவரை கேட்டுக்கொண்டார்.
"படங்களைப் பார்த்த அப்பாஸ், அமிதாப்பிற்கு அழைப்பு அனுப்பினார். அமிதாப், அப்பாஸைச் சந்திக்க கல்கத்தாவிலிருந்து பிரத்யேகமாக வந்தார்,”என்று பிரதீப் சந்திரா குறிப்பிடுகிறார்.
“அமிதாப் போன பிறகு அப்பாஸ் டீனுவிடம், படம் ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்தில் எடுக்கப்பட்டாலும் சரி, அமிதாப்பிற்கு 5000 ரூபாய் தருவதாக கூறினார். இதை அமிதாப்பிடமும் அவரது சகோதரரிடமும் டீனு சொன்னபோது, அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடையவில்லை. இந்த தொகை அமிதாப்பின் இரண்டு மாத சம்பளத்திற்கு சமம்.
குவாஜா அகமது அப்பாஸுடனான அமிதாப்பின் சந்திப்பு குறித்து அப்பாஸின் சகோதர் மகள் சையதா சயீதேன் ஹமீதும் பிபிசியிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
"அப்பாஸ் தனது செயலர் அப்துல் ரெஹ்மானை அழைத்து, அமிதாப்பின் ஒப்பந்தத்தை தான் சொல்லச்சொல்ல எழுதுமாறு கேட்டுக்கொண்டார். மீண்டும் அமிதாப்பிடம் முழுப்பெயர் மற்றும் முகவரியைக் கேட்டார். அமிதாப் தனது பெயரைச் சொன்னார். பின்னர் இடைநிறுத்தி டாக்டர் ஹரிவன்ஷ் ராய் பச்சனின் மகன் என்றார்.
பொறு... என்று கத்தினார் அப்பாஸ். உன் தந்தையின் அனுமதி கிடைக்கும் வரை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது. அவர் எனக்கு அறிமுகமானவர். சோவியத் லேண்ட் நேரு விருதுக் குழுவில் என்னுடன் இருப்பவர். இன்னும் இரண்டு நாட்கள் நீ காத்திருக்க வேண்டும் என்றார்.
இதன் பிறகு குவாஜா அகமது அப்பாஸ் ஒப்பந்தத்திற்குப் பதிலாக ஹரிவன்ஷ் ராய் பச்சனுக்கு ஒரு தந்தியை டிக்டேட் செய்தார். "உங்கள் மகனை நடிகராக்க நீங்கள் தயாரா?"என்று அதில் கேட்டார்.
"எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. நீங்கள் தொடரலாம்." என்று இரண்டு நாட்களுக்குப் பிறகு ஹரிவன்ஷ் ராய் பச்சனின் பதில் வந்தது.
பின்னர் அமிதாப் தனது முதல் படமான 'சாத் ஹிந்துஸ்தானி' க்காக 1969 பிப்ரவரி 15 ஆம் தேதி ஒப்பந்தமானார்.
அப்பாஸ் நடத்திய உருது டெஸ்ட்
இந்த படத்தில் டீனு ஆனந்தும் நடிக்கவிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் சத்யஜித் ரே அவரை தன்னிடம் அழைத்தார். விளைவு டீனு ஆனந்தின் வேடம் அமிதாப் பச்சனுக்கும், முன்பு அமிதாப் நடிக்க இருந்த வேடம் மெஹ்மூத்தின் சகோதரர் அன்வர் அலிக்கும் கொடுக்கப்பட்டது.
அந்த நாட்களில் அமிதாப், ரிஷி கபூரை சந்தித்தார்.
ரிஷி கபூர் தனது சுயசரிதையான 'குல்லம்குல்லா'வில் அவரை நினைவு கூர்ந்துள்ளார். "நான் டீனு ஆனந்தின் நண்பன். அடிக்கடி அவரது வீட்டிற்குச் செல்வேன். ஒருமுறை ஒரு மெலிந்த அழகான மனிதர் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து குவாஜா அஹ்மத் அப்பாஸ் கொடுத்த எழுத்து தேர்வை எழுதிக்கொண்டிருந்தை பார்த்தேன்."
"உண்மையில் அப்பாஸ் அமிதாப்பை உருது தேர்வு எழுதச்சொன்னார். ஏனென்றால் படத்தில் பல வசனங்கள் உருது மொழியில் இருந்தன. அமிதாப்பும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி, 'அப்போது எனக்கு உருது தெரியாது. 'சுவை' என்று பொருள்படும் ஜைகா என்ற சொல்லை முதல் முறையாக அப்போதுதான் தெரிந்துகொண்டேன்’ என்றார்."
மதுவிடமிருந்து விலகல்
அமிதாப் தனது முதல் படமான ‘சாத் ஹிந்துஸ்தானி’யிலேயே தேசிய விருது பெற்றார்.
பிரதீப் சந்திரா தனது புத்தகத்தில் எழுதுகிறார், "அப்பாஸ் அவர்கள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் திரைப்படங்களைத் தயாரித்தார். ஆனால் சில நேரங்களில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அவர் தனது சக ஊழியர்களில் ஒருவருக்கு 50 ரூபாய் கொடுத்து சந்தோஷமாக கொண்டாடு என்று சொல்வார்."
இந்த 50 ரூபாயை ஒருமுறை அமிதாப் பெற்றார். பணம் கிடைத்தவுடன், பச்சன், ஜலால் ஆகா மற்றும் அன்வர் அலி ஆகிய மூன்று நண்பர்களும் அதை மறக்கமுடியாத மாலையாக மாற்ற முடிவு செய்தனர். மூவரும் அதிகமாக குடித்தனர்.
அடுத்த நாள், அன்வர் அலி பச்சனிடம், நீங்கள் திரைத்துறையில் பெயர் பெறும் வரை மதுவைத் தொடாதீர்கள் என்று அறிவுறுத்தினார். அதே நேரத்தில் குடிப்பழக்கத்தை கைவிட அமிதாப் முடிவு செய்தார்.
இந்த முடிவை அவர் தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். ஆனால் அவரது தம்பி அஜிதாப்பிற்கு திருமணம் ஆனபோது சிறிது மது அருந்தினார் என்பதும் உண்மை.
மிருணாள் சென் கொடுத்த ’வாய்ஸ் ஓவர்’ வேலை
அந்த நாட்களில், பிரபல திரைப்பட இயக்குனர் மிருணாள் சென், அமிதாப் பச்சனுக்கு ஒரு வாய்ஸ் ஓவர் வேலை கொடுத்தார்.
சென் அப்பாஸின் வீட்டிற்கு வந்திருந்தார். ‘புவன் ஷோம்’ படத்தில் கதையை கூறுபவராக பயன்படுத்தக்கூடிய நல்ல குரல் வளமுள்ள ஒருவரை அவர் தேடிக்கொண்டிருந்தார்.
இதைக் கேட்ட அமிதாப் தனக்கு பெங்காலி தெரியும் என்று மிருணாளிடம் கூறினார். மிருணாள் அவரது குரலைக் கேட்டார். அவருக்கு குரல் பிடித்திருந்தது ஆனாலும் அமிதாப் பெங்காலி பேசும் தொனி பிடிக்கவில்லை.
அவர் தனது படத்தில் இந்தியில் கதை சொல்ல பச்சனை தேர்வு செய்தார். இந்த வேலைக்காக சென் பச்சனிடம் 300 ரூபாய் கொடுத்தார்.
'புவன் ஷோம்' வெளியானபோது அதில் அமிதாப்பின் பெயரும் இருந்தது. இந்தப் படம் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இது மூன்று தேசிய விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம், இயக்குனர் மற்றும் சிறந்த நடிகர் விருதுகள் அப்படத்திற்கு கிடைத்தன.
அனைவர் கவனத்தையும் கவர்ந்த 'ஆனந்த்' கதாபாத்திரம்
'சாத் ஹிந்துஸ்தானி'க்குப் பிறகு அமிதாப் பச்சனுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. அவரது பத்து படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தன.
1971 இல், நவீன் நிஷ்சல் ஹீரோவாக நடித்த 'பர்வானா' திரைப்படம் வந்தது. அதில் அமிதாப் 'நெகட்டிவ்' பாத்திரத்தில் நடித்தார்.
இதற்கிடையில், சுனில் தத் தனது 'ரேஷ்மா அவுர் ஷேரா' படத்தில் பணியாற்ற அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அது ஒரு ஊமை வேடம்.
பின்னர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் தனது சுயசரிதையில் எழுதினார், "இது அமிதாப்பின் நடிப்புத் திறமையின் உண்மையான சோதனை. ஏனெனில் அவர் தனது உணர்வுகளை ஒரு வார்த்தை கூட உச்சரிக்காமல் பார்வையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டியிருந்தது".
ஒருமுறை அமிதாப் பச்சன் மற்றும் குவாஜா அகமது அப்பாஸ், ஹிருஷிகேஷ் முகர்ஜியை சந்திக்க அவரது வீட்டிற்குச்சென்றனர். அந்த நாட்களில் அவர் தனது 'ஆனந்த்' படத்திற்கு ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார்.
அமிதாப்பைப் பார்த்ததுமே அவர் தனது 'பாபு மோஷாயை' கண்டுபிடித்துவிட்டதாக உணர்ந்தார்.
முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் பிரபல பெங்காலி நடிகர் உத்தம் குமாரை நடிக்கவைக்க அவர் விரும்பினார். பின்னர் ஹிருஷிகேஷ் முகர்ஜி அளித்த பேட்டியில், "அமிதாப்பின் குரல் மற்றும் ஆழமான கண்களைப்பார்த்து அவரை தேர்வு செய்தேன். இந்த படத்தில் ராஜேஷ் கன்னாவுக்கு அமிதாப் சவால் விடுத்தார் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை" என்று கூறினார்.
அமிதாப் - ஜெயா இடையே நெருக்கம்
இந்த சிறப்புக்கள் இருந்தபோதிலும் அமிதாப்பிற்கு இதுவரை தனி ஹிட் எதுவும் கிடைக்கவில்லை. ஜெயா பாதுரியுடன் அமிதாப்பின் நெருக்கம் அதிகரித்து, இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பித்தனர்.
1971 ஆம் ஆண்டில், ஹிருஷிகேஷ் முகர்ஜி தனது ‘குட்டி’(Guddi) படத்தில் இருவரையும் நடிக்க வைக்க விரும்பினார், ஆனால் கடைசி நேரத்தில் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இதனால் இருவரும் பெரிதும் வருத்தமடைந்தனர்.
அடுத்த ஆண்டு, பி.ஆர்.இஷாரா, அமிதாப்புக்கும் ஜெயாவுக்கும் தனது ‘ஏக் நஸர்’ படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார்.
தர்மேந்திராவின் செயலாளர் தீனாநாத் சாஸ்திரியின் வேண்டுகோளின் பேரில் அவர் இந்த படத்தை அமிதாப் மற்றும் ஜெயாவுக்கு வழங்கினார். ஆனால் ஸ்கிரிப்டைக் கேட்டு ஜெயா படத்தில் நடிக்க மறுத்துவிட வேண்டும் என்று மனதிற்கு உள்ளே ஆசைப்பட்டார். ஆனால் இஷாராவின் ஆசை நிறைவேறவில்லை. இருவரும் படத்தில் நடிக்க முடிவு செய்தனர்.
இருவரும் மற்றொரு படமான ‘ஏக் தி சுதா, ஏக் தா சந்தர்’ படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இது பிரபல இந்தி எழுத்தாளர் டாக்டர் தரம்வீர் பாரதியின் ‘குனஹோன் கா தேவ்தா’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் பண நெருக்கடி காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க முடியவில்லை.
தொடர்ந்து 12 படங்கள் தோல்வி
அமிதாப்பின் ஆரம்பகால படங்கள் வெற்றியடையாமல் இருக்கலாம். ஆனால் அவரது நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
”அமிதாப்பிற்கு திறமை இல்லையென்றால் ஒன்றன் பின் ஒன்றாக பன்னிரெண்டு படங்கள் வந்திருக்காது. மூன்றாவது படத்திற்குப் பிறகே திரை உலகை விடவேண்டி வந்திருக்கும்,” என்கிறார் பிரதீப் சந்திரா.
அவருடன் பணியாற்றிய நடிகர்கள் அவரைப் பாராட்டத் தொடங்கினர். முதலில் அவருடன் 'பர்வானா' படத்தில் பணியாற்றிய ஓம் பிரகாஷ் அவரது நடிப்பைப் பாராட்டினார்.
பச்சனுடன் 27 படங்களில் பணியாற்றிய பிரபல வில்லன் பிரேம் சோப்ரா அவரது நடிப்பைப் பாராட்டியுள்ளார். ஆனால் ஹிட் கொடுக்க முடியாமல் போனதால் பல படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
1972 இல், அவர் 'அப்னே பராய்' படத்தில் ஒப்பந்தமானார். இதை குந்தன் குமார் இயக்கினார். படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்ட பிறகும் பச்சன் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சஞ்சய் கான் தேர்வு செய்யப்பட்டார். படத்தின் பெயரும் 'துனியா கா மேளா' என மாற்றப்பட்டது.
ஜாவேத் அக்தரின் பரிந்துரையின் பேரில் கிடைத்த 'ஜன்ஜீர்' வேடம்
பிரகாஷ் மெஹ்ரா 'ஜன்ஜீர்' படத்தைத் தயாரிக்கத் தொடங்கியபோது, தர்மேந்திரா, ராஜ் குமார் மற்றும் தேவானந்த் ஆகியோர் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி இந்தப் படத்தை நிராகரித்தனர்.
"பின்னர் ஜாவேத் அக்தர் எங்கிருந்தோ அமிதாப்பின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவரை அழைத்து, ஸ்கிரிப்டை அவரிடம் சொல்ல விரும்புவதாகக் கூறினார். அமிதாப் அந்த நாட்களில் அவ்வளவு பிஸியாக இல்லை. எனவே அவரை உடனடியாக வரச் சொன்னார். ஜாவேத் அக்தர் டாக்ஸியில் அமிதாப் தங்கியிருந்த 'மங்கள்' வீட்டை அடைந்தார்," என்று பிரதீப் சந்திரா எழுதியுள்ளார்.
"ஸ்கிரிப்டைக் கேட்ட அமிதாப், ஜாவேத் அக்தரிடம், 'இந்த வேடத்தில் நடிக்க எனக்குத் திறமை இருக்கிறதா? என்று கேட்டார். 'யாராவது இந்த பாத்திரத்தை செய்ய முடியும் என்றால், அது நீங்கள்தான்' என்று ஜாவேத் அவரிடம் கூறினார்."
பல வருடங்களுக்குப் பிறகு, அமிதாப் பச்சன் ஜாவேத் அக்தரிடம், "என்ன நினைத்து என்னை படத்தில் நடிக்க வைக்க பிரகாஷ் மெஹ்ராவைக் கேட்டீர்கள்?" என்று வினவினார். "நான் 'பாம்பே டு கோவா' பார்த்தேன். அதில் உங்களுக்கு, ஷத்ருகன் சின்ஹாவுக்கும் இடையே ஒரு சண்டைக்காட்சி இருந்தது . நீங்கள் சண்டையின் தொடக்கத்தில் சூயிங் கம் மென்று கொண்டிருந்தீர்கள். அடி வாங்கி கீழே விழும்போதும் சூயிங்கம் மென்று கொண்டிருந்தீர்கள். அந்த காட்சியை பார்த்ததும் ‘ஜன்ஜீர்’ படத்தை உங்களைத்தவிர யாராலும் செய்யமுடியாது என்று நினைத்தேன்,” என்று ஜாவேத் பதிலளித்தார்.
ஜாவேத் அக்தர், பிரகாஷ் மெஹ்ராவுடன் ரூப்தாரா ஸ்டுடியோவை அடைந்தார், அங்கு அமிதாப், ஜீதேந்திரா மற்றும் ஹேமா மாலினியுடன் 'கெஹ்ரி சால்' படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அங்கு அமிதாப் தனது கேரியரின் 13வது படத்தில் கையெழுத்திட்டார்.
இதுமட்டுமின்றி இந்த படத்தில் அவரது வருங்கால மனைவி ஜெயா பாதுரி ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அமிதாப்பிடம் 'ஜன்ஜீர்' கிடைக்கவில்லையென்றால் என்ன செய்திருப்பீர்கள் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமிதாப், "என்னிடம் மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை. யாரும் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. அப்போது என் கையில் இருந்த ஒரே படம் 'ஜன்ஜீர்',” என்று சொன்னார்.
Caption- ஜன்ஜீர் படத்தில் அமிதாப் மற்றும் ஜெயா.
'கோபக்கார இளைஞனின்' எழுச்சி
1973 இல் வெளியான 'ஜன்ஜீர்' ஒரு சூப்பர்ஹிட் படமாக ஆனது. இது பிலிம்பேர் விருதுகளில் ஒன்பது பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. பிரான் மீது படமாக்கப்பட்ட 'யாரி ஹை இமான் மேரா' பாடல் அந்த ஆண்டின் மிகவும் பிரபலமான பாடலாக ஆனது.
இந்த திரைப்படம் பெயர் தெரியாத நடிகர் என்ற நிலையில் இருந்து சூப்பர் ஸ்டாராக அவரை உயர்த்தியது. இங்கிருந்து அவருக்கு 'ஆங்கிரி யங் மேன்' என்ற இமேஜ் தொடங்கியது.
ஆயினும் ஹிருஷிகேஷ் முகர்ஜி இயக்கிய ‘நமக்கராம்’ படத்தின் போதுதான் ‘ஆங்கிரி யங் மேன்’ என்பதற்கான விதை விதைக்கப்பட்டதாக அமிதாப் பச்சன் கருதுகிறார்.
'ஆனந்த்' படத்தில் அமிதாப்பை இயக்கும் போது அவரது ஆன் ஸ்க்ரீன் பிரெஸன்ஸை உணர்ந்ததாக ஹிருஷிகேஷ் முகர்ஜி கூறுகிறார்.
"தன் தோற்றத்தாலும், குரலாலும் ஒரு பாத்திரத்தை சக்திவாய்ந்ததாக மாற்றும் அற்புதமான திறமை அவருக்கு இருப்பதாக நான் உணர்ந்தேன். அதனால்தான் அவருக்கு 'நமக்கராம்' படத்தில் கோபக்கார இளைஞன் பாத்திரத்தை கொடுத்தேன்,” என்று அவர் ஒருமுறை கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்