செக்ஸ், பேய்: 'பி கிரேடு' சினிமாக்கள் எப்படி எடுக்கப்பட்டன?

    • எழுதியவர், செரிலன் மோலன் & மெரில் செபாஸ்டின்
    • பதவி, பிபிசி நியூஸ்

'பாலிவுட் பி கிரேடு' சினிமா ஒன்றை தயாரிப்பதற்கான அடிப்படை என்ன என்பதை விளக்கும் இயக்குநர் திலீப் குலாட்டி, "ஒரு படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும் ஒன்று உங்கள் மூளையையோ இதயத்தையோ தொடவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் பெல்டுக்கு கீழே தொடவேண்டும்," என்கிறார்.

பாலிவுட் திரையுலகின் மரியாதைக் குறைவான படங்களாக பார்க்கப்படும் இந்த பி கிரேடு படங்கள், குறைவான செலவில், குறைந்த காலக்கெடுவில் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் பெயர் தெரியாத கலைஞர்களால் உருவாகும் இந்தப் படங்களில் பலவீனமான கதைக் கரு, வெகு சாதாரணமான வசனங்கள், உவப்பற்ற அழகியல், பாலியல் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

இத்தகைய படங்கள் உச்சம் பெற்றிருந்த 1990களில் ஆயிரக் கணக்கானோர் இவற்றைப் பார்க்க வந்தார்கள். ஆனால், இத்தகைய படங்களைத் தயாரிக்கும் தொழில் 2004 வாக்கில் நலிவடைந்ததது.

இத்தகைய பி கிரேடு படங்களைப் பற்றி அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள 6 பாகங்களைக் கொண்ட ஆவணப் படத் தொடரான, Cinema Marte Dum Tak, இத்தகைய படங்களை நகர்த்திய உணர்வுகள் என்ன, இத்தகைய படங்கள் ஏன் வெளியாயின, இவை எப்படி அழிந்தன என்ற கேள்விகளுக்கு விடை காண முயல்கிறது.

இப்படி ஹிட் படங்களைத் தந்த நான்கு இயக்குநர்களான வினோத் தல்வார், ஜெ. நீலம், கிஷன் ஷா, திலீப் குலாட்டி ஆகியோருக்கு சொற்ப பணமும், குறுகிய காலக்கெடுவும் தந்து தங்கள் ஸ்டைலில் படம் தயாரிக்க சொன்னார்கள்.

பல பத்தாண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய ஸ்டைலில் படம் எடுக்கும் வாய்ப்பைப் பெற்ற இந்த இயக்குநர்கள், உடனடியாக பழைய நண்பர்களையும், கூட்டாளிகளையும் தொடர்பு கொண்டு வேலையைத் தொடக்குகிறார்கள்.

இந்த இயக்குநர்கள் தங்கள் படமெடுக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதை படமாக்குகிறது இந்த ஆவணப்படக் குழு. இந்தக் காட்சிகள் பார்வையாளர்களை 1990களுக்கு கொண்டு செல்கிறது.

மரணத்துக்குப் பின் மரணம் (மௌத் கே பீச்சே மௌத்), கன்னி சூனியக்காரி (குன்வரி சுடைல்), நானொரு கன்னி மணப்பெண் (மே ஹூன் குன்வரி துலான்) போன்ற கவர்ச்சித் தலைப்புகளைக் கொண்ட பழைய படங்களின் காட்சித் துணுக்குகளைக் காட்டுகிறார்கள்.

இந்தப் படங்கள் ஒரே செட்டில் எடுக்கப்படும். இயக்குநர்களே கலை இயக்குநர்களாகவும், ஆடை வடிவமைப்பாளர்களாகவும், சில நேரங்களில் நடிகர்களாகவும் செயல்படுவார்கள். அவ்வப்போது படத்தின் பெயர்கள் மேலும் கவர்ச்சியாகத் தோன்றும்படி மாற்றப்படும். திடீரென இயக்குநருக்குத் தோன்றினால், கதைக் கருவேகூட மாற்றப்படும். சில நேரங்களில் ஒரு சில காட்சிகளில் பாலிவுட் நட்சத்திரங்கள் தோன்றுவார்கள். அப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பதற்கு இந்த நடிகர்களுக்கு நாள் அடிப்படையில் அப்போதே சம்பளம் ரொக்கமாக சம்பளம் வழங்கப்படும்.

இது போன்ற பி கிரேடு படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவரும், இந்த ஆவணப்படத் தொடரில் இடம் பெற்றிருப்பவருமான கான்தி ஷா தாம் கோவிந்தாவாக, மிதுன் சக்ரவர்த்தியாக, தர்மேந்திராவாக தமது படங்களில் நடித்தது எப்படி என்று விளக்குகிறார். செய்யக்கூடாத செயல், இடம் பெற முடியாத விந்தை, ஏற்கமுடியாத கவர்ச்சி என்று எதுவும் இந்தப் படங்களுக்கு இல்லை.

பாலியல் ஆதிக்கம் செலுத்தும் கொள்ளைக்காரி, மசாஜ் செய்வதற்காக தனது கூட்டத்தில் ஆண்களை வைத்துக்கொள்வது, பாலினத்தை மாற்றிக்கொள்ளும் பேய்கள் பணிப்பெண்களோடு உடலுறவு கொள்வது என்று எல்லா விந்தையான, பாலியல் கவர்ச்சி கூடிய விஷயங்களும் இந்தப் படங்களில் இடம் பெறும்.

கூனி டிராகுலா (ரத்த டிராகுலா) என்ற ஒரு படத்தில் ஒரு குடிசைப் பகுதி வழியாக செல்லும் ஒரு ரத்தக்காட்டேரி, வெளியில் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதாக ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும் என்று நினைவு கூர்கிறார் அசீம் சந்தாவர் என்ற சினிமா ஆராய்ச்சியாளர்.

"ஒரு மைய நீரோட்ட சினிமாவில் பேய் ஒன்று மனிதர்களோடு உடலுறவு கொள்வதாக இருந்தாலும், அது ஒரு உயர்தரமான இடமாக, குளியல் தொட்டி போன்ற இடமாக இருக்கும்," என்கிறார் அவர். "ஆனால், இந்த இயக்குநர்கள் தங்கள் ரசிகர்கள் தொடர்பான எதார்த்த நிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப காட்சிகளை அமைக்கத் தயங்குவதில்லை."

இத்தகைய படங்களை ஓட்டும் சினிமா தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லாக இருக்கும். சில நேரங்களில் கூடுதல் நாற்காலிகள் போட்டு ரசிகர்களை அமரவைக்கவேண்டியிருக்கும். ஓட்டுநர்கள், வீதி உணவுக் கடை நடத்துவோர், கடுமையான தொழில்களில் ஈடுபடும் தொழிலாளிகள், குறைந்தபட்சக் கூலிக்கும் குறைவாக ஊதியம் பெறுகிறவர்கள், தொலைதூர சிறு நகரங்களில் வசிப்போர் போன்றோரே இத்தகைய படங்களின் ரசிகர்கள்.

அவர்களுக்கு, தங்கள் துயரம் மிகுந்த தினசரி வாழ்க்கையில் இருந்து தப்பிக்கும் வழியே இத்தகைய சினிமாக்கள். சினிமா தியேட்டரின் மங்கலான ஒளியில், தங்களை பரவசப்படுத்தும், பாலியல் ரீதியில் கிளுகிளுப்பூட்டும் இத்தகைய சினிமாக்களில் இவர்கள் சில மணி நேரம் தங்களை மறந்திருப்பார்கள்.

இத்தகைய செலவு குறைவான பயங்கரப் படங்களில் வேலை செய்தவர்கள், அதனால் எதிர்கொள்ள நேர்ந்த பாகுபாடு, போராட்டம் ஆகியவற்றையும் இந்த தொடர் பதிவு செய்துள்ளது. இந்தப் படங்களில் வேலை செய்தவர்களுக்கு மைய நீரோட்ட சினிமாவில் வேலை செய்ய, கொஞ்சம் சீரியசான ரோல்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருந்தது. சில நேரங்களில் இத்தகைய படங்களே சென்சார் போர்டில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. விநியோகஸ்தர்கள் மேலும் கவர்ச்சிகரமான காட்சிகள் வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பார்கள்.

ஆனால், சென்சார் போர்டில் இத்தகைய காட்சிகளுக்கு அனுமதி கிடைக்காது என்பதால், இயக்குநர்கள் இத்தகைய அதி கவர்ச்சி அல்லது ஆபாசக் காட்சிகளைத் தனியாகப் படமெடுத்துவைப்பார்கள். திரையரங்கில் இந்தக் காட்சிகளை இடையில் பிட்டுகளாக செருகித் திரையிடுவார்கள்.

உடன் பிறந்தோர் தொடர்புடைய காட்சிகளில் பாலுறவுக் காட்சி ஒன்றை பிட்டாகப் போட்டதால், சிக்கல் எழுந்தது. இதனால், எழுந்த கொந்தளிப்பால், இத்தகைய படங்களை கடுமையாக கையாண்டது போலீஸ். 2004 வாக்கில் இந்த பி கிரேடு படத் தொழில் முற்றாக அழிந்தது. நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்வாதாரமும் இதனால் அழிந்தது.

இத்தகைய பி கிரேடு படங்களின் பொற்காலம் முடிந்துவிட்டாலும், அதைப் பற்றித் தொடர்ந்து பேசும் ரசிகர்கள் மூலமும், மீம்கள், நகைச்சுவைகள் போன்றவற்றின் மூலமும் அந்தப் பாரம்பரியம் இன்னும் உயிரோடு உள்ளது. இத்தகைய படங்களின் கவர்ச்சித் தலைப்புகள் சைகை விளையாட்டுகளுக்கு சூட்டப்பட்டன.

இத்தகைய படங்களின் கரடுமுரடான சாதுர்யம், மதிப்பீடுகளை துச்சம் செய்வது, வரம்பு மீறிய அழகியல் ஆகியவற்றால், தங்களுக்கென ஒரு ரசிகப் பண்பாட்டை உருவாக்கிக்கொண்டன என்கிறார் திரைப்படம் தொடர்பான ஆய்வாளரான விபூஷன் சுப்பா.

"வெகுஜனப் பண்பாட்டில் இத்தகைய படங்கள் தங்களுக்கென ஓர் இடத்தை, அது மிகச் சிறிதாக இருந்தாலும், ஏற்படுத்திக்கொண்டன," என்கிறார் சுப்பா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: