முகத்தில் பூசும் 'புரோபயாடிக்' அழகு சாதனப் பொருட்களில் பாக்டீரியாக்கள் உயிருடன் இருக்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் - ஸ்கெல்லி
நம்முடைய சருமத்தில் வாழும் பாக்டீரியாக்களும், பூஞ்சைகளும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க பல்வேறு வகைகளில் உதவுகின்றன. அத்தகைய அந்த நுண்ணியிரிகளை ஊக்குவிக்க இயலுமா?
சருமத்தின் மேற்பரப்பை கீறினால், அங்கு வாழும் பாக்டீரியாக்களின் பெருங்குடும்பத்தையே காண இயலும். இது நல்லது. ஏனெனில் "சரியான" நுண்ணுயிரிகள் இருப்பது நமது சருமத்தை இளமையாகவும், மிருதுவாகவும், மென்மையாகவும் நீண்ட காலம் வைத்திருக்க உதவும் என்பதை பல ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.
வெறுமனே நம்முடைய சருமத்தில் இத்தகைய பாக்டீரியாக்கள் இருப்பது நோய்கிருமிகள், தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களில் இருந்து நமக்கு பாதுகாப்பை வழங்குகிறது. காயங்களை குணமாக்கும். புற ஊதாக்கதிர்களிடம் இருந்து நமக்கு பாதுகாப்பை வழங்கும்.
நம்முடைய சருமத்தில் உள்ள நுண்ணுயிர்களை பராமரிப்பதற்கான தேவைகள் அதிகமாக உள்ளன. ஆனால் அவற்றை நாம் எப்படி செய்வது? தற்சமயத்தில் அதிகமாக புகழ்பெற்று வரும் ஒன்று சரும புரோபயோட்டிக்குகளை பூசிக்கொள்வதாகும். அதாவது உயிருடன் வாழும் நுண்ணுயிர்களை நம்முடைய சரும ஆரோக்கியத்திற்காக சருமத்தில் பூசிக் கொள்வது.
முகப்பரு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் செதில்களை ஏற்படுத்தி சிவப்பான, எரிச்சலூட்டும் சருமத்தை உருவாக்கும் செபோரியா போன்ற தோல் அழற்சி நோய்க்கு 1912-ஆம் ஆண்டு வரை ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாக்களை முகத்தில் தடவும் போக்கைக் கொண்டிருந்தனர்.
இன்று ஒரு டஜன் தோல் பராமரிப்பு நிறுவனங்கள் சீரம் முதல் கிளென்சர்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்கள் வரை புரோபயோடிக் பொருட்களை விற்பனை செய்கின்றன . இந்த அழகுசாதனப்பொருட்கள், மென்மையான நம்முடைய சருமத்தின் நுண்ணுயிர்களை சமநிலைப்படுத்தி, சருமத்தை புதுப்பித்து, புத்துணர்ச்சியூட்டுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இதில் உள்ள சவால்கள் என்ன?
பல நிறுவனங்கள் அவர்களின் தோல் பராமரிப்புப் பொருட்களை பெரும்பாலும் "புரோபயோடிக்" என்று கூறினாலும், மிகக் குறைவான பொருட்களில் மட்டுமே உயிருள்ள பாக்டீரியாக்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், புரோபயோடிக் சரும சிகிச்சைகளை, மருத்துவ சிகிச்சை என்று வகைப்படுத்தவில்லை. மாறாக அது அழகுசாதனப் பொருட்களாகவே அறியப்படுகிறது. எனவே இந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அந்த பொருட்களை வைத்து நடத்திய சோதனைகளின் முடிவுகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. இத்தகைய பொருட்களால் நமக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வது கடினமான ஒன்றாகும்.
யுசி சான் டியாகோ மருத்துவப் பள்ளியின் தோல் மருத்துவர் ரிச்சர்ட் காலோ, இது குறித்து பேசும் போது, ''சரும பராமரிப்பு பொருட்களுக்கான விதிமுறைகள் மருந்துப் பொருட்கள் உற்பத்திக்கான விதிமுறைகளில் இருந்து மிகவும் வேறுபட்டவை. கடுமையான சோதனைகளை மேற்கொள்ளாமலேயே, இத்தகைய பொருட்கள் நல்ல பலனை தருகின்றன என்ற சரும பராமரிப்புப் பொருட்களை நிறுவனங்களால் அறிவிக்க இயலும்" என்றார்.
பெரும்பாலான "புரோபயோடிக்" தோல் பராமரிப்புப் பொருட்களில், தோலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்களான ப்ரீபயோடிக்குகள் அல்லது, புரதங்கள் மற்றும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களால் உருவான இதரப் பொருட்களைக் கொண்ட போஸ்ட்பயோடிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
"சருமத்தில் உள்ள நுண்ணுயிரிகளை பாதிக்க முயற்சிக்கும் அணுகுமுறைகளைத் தான் நாம் அதிகமாகப் பார்க்கிறோம்," என்கிறார் பெர்ன்ஹார்ட் பேட்சோல்ட். அவர் எஸ் பயோமெடிக் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் தலைமை அறிவியல் அதிகாரியாகவும் பணியாற்றுகிறார். அவரின் நிறுவனம், பாக்டீரியாக்களை 'மாற்றி' சருமத்தின் நுண்ணுயிர் அமைப்பை மீட்டெடுப்பதன் மூலம் சிகிச்சை அளிப்பது எப்படி என்று ஆய்வு செய்து வருகிறது.
பேட்சோல்ட், புரோபயோடிக் பொருட்களை உற்பத்தி செய்து, சேமித்து, அதனை விநியோகச் சங்கிலியில் இணைப்பது வரை பாக்டீரியாவை உயிருடன் வைத்திருப்பது மிகவும் கடினமானது என்று கூறுகிறார். அதையும் தாண்டி, சருமத்தில் இதனைப் பயன்படுத்தும் போது அது சருமத்தில் நிலைத்திருக்கும் என்பதையும் உறுதியாக கூற இயலாது. ஏன் என்றால் ஏற்கனவே சருமத்தில் இருக்கும் மில்லியன் கணக்கான இதர நுண்ணுயிர்களுடன் இது போட்டியிட வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆராய்ச்சிகள் கூறுவது என்ன?
ஆரோக்கியமான சருமத்தில் வாழும் நுண்ணுயிர்களை ஊக்குவிக்கும் இந்த யோசனையானது, நமது சருமத்தில் வாழும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் நமக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நுண்ணுயிர்களில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகின்றன என்ற எண்ணத்தில் இருந்து உருவானது.
ஆனால் சில கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் எவ்வாறு சருமப் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதன் பின்னால் உள்ள அறிவியல் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. தோலழற்சி (eczema), ரோசாசியா (rosacea), முகப்பரு மற்றும் சொரியாசிஸ் போன்ற சருமப் பிரச்னை உள்ள மக்களின் சருமத்தில் அனைவரும் வெவ்வேறு வகையான அல்லது வெவ்வேறு அளவிலான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்பது நமக்குத் தெரியும்.
"நம்மால் நினைத்துப் பார்க்கக் கூடிய அளவிலான ஒவ்வொரு சருமப் பிரச்னையும் நம்முடைய சருமத்தில் வாழும் நுண்ணுயிர்களில் ஏற்படும் மாற்றத்தோடு தொடர்புடையவை என்பதை நிரூபிக்க போதுமான பல ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன," என்று தெரிவிக்கிறார் பேட்சோல்ட்.
"ஆனால் இது வெறுமனே சருமப் பிரச்னைக்கும் நுண்ணுயிர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை மட்டுமே காட்டுகின்றது தவிர, இந்த மாற்றமே சருமப் பிரச்னைகளை தோற்றுவிக்கிறது என்று கூறவில்லை. சருமப் பிரச்னைகள் காரணமாக சருமத்தின் தன்மை மாறும் போது, பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் மாறுபடலாம்," என்ற கருத்தையும் அவர் முன்வைக்கிறார்.
ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியா ஒரு நோயை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்க, நீங்கள் ஒரு ஆரோக்கியமான நபரின் முகத்தில் "கெட்ட பாக்டீரியாவை" தடவுவதன் மூலம் சருமப் பிரச்னையை அவருக்கு ஏற்படுத்த வேண்டும். அல்லது "நல்ல" பாக்டீரியாவைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு சரும நோயை சரியாக்க வேண்டும். முதலில் கூறப்பட்ட ஆய்வை மேற்கொள்ளும் போது நெறி சார்ந்த தடைகள் ஏற்படலாம். ஆனால் இரண்டாவதாக கூறப்படும் ஆராய்ச்சியை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், குறைவான அளவில் நடத்தப்பட்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் வண்ணத்தில் இருக்கின்றன. அடோபிக் டெர்மடிடிஸ் என்று அழைக்கப்படும் தோலழற்சி நோய்க்கு சிகிச்சை அளிக்க உயிருள்ள பாக்டீரியாக்களை பயன்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துகின்றன பல ஆராய்ச்சிகள்.
இந்த தோலழற்சி நோயுள்ளவர்களின் சருமத்தில் பெரும்பாலும் நோய்க்கிருமியாக செயல்படும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் (Staphylococcus aureus) என்ற பாக்டீரியாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தோலழற்சி போன்ற நோய்களில், சருமத்தில் உள்ள பெரிய பிரச்னை என்னவென்றால் பாக்டீரியா எஸ். ஆரியஸ் போன்ற நோய்க்கிருமிகள் சருமத்தின் மேற்பரப்பில் வாழ்கின்றன. தடிப்புகளையும் நோய்த்தொற்றையும் ஏற்படுத்துகின்றன என்று கூறுகிறார் காலோ. அவரின் ஆராய்ச்சிக்குழுவானது தோழலற்சி நோயாளிகளின் சருமத்தில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட சருமத்தில் காணப்படும் நுண்ணுயிரிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று ஆய்வு செய்து வருகிறது.
கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடத் தேவையான அம்சங்களை உருவாக்கும் பாக்டீரியாக்களை கண்டுப்பிடிக்க ஆரோக்கியமான சருமத்தில் வாழும் பாக்டீரியா வகைகளை ஆய்வு செய்கிறோம் என்றும் கூறுகிறார் காலோ.
காலோவின் குழுவினர் ஸ்டேஃபிளோகோகஸ் ஹோமினிஸ் மீதும் கவனம் செலுத்துகின்றனர். இது இயற்கையாகவே சருமத்தில் வாழும் பாக்டீரியாக்களில் ஒன்று. 21% ஆரோக்கியமான மனிதர்கள் மத்தியில் இந்த பாக்டீரியா காணப்படுகிறது. ஆனால், அடோபிக் டெர்மடிடிஸ் நோயாளிகளில் வெறும் 1% பேரிடம் மட்டுமே இந்த பாக்டீரியா காணப்படுகிறது.
"நம்முடைய சருமம் எஸ். ஹோமினிஸ் போன்ற பிற பாக்டீரியாக்கள் வாழ பாதுகாப்பான இடத்தை வழங்குகிறது. ஹோமினிஸ் பாக்டீரியாக்களை அழிக்க முயற்சிக்கும் சில கெட்ட பாக்டீரியாக்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஹோமினிஸ் தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளது," என்றும் காலோ கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
சரும பாக்டீரியாக்கள் மூலம் சருமப் பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்படுகிறது?
எஸ். ஹோமினிஸ், எஸ். ஆரியஸை நேரடியாகக் கொல்லும் நுண்ணுயிர் எதிர்ப்பு பெப்டைடுகளை உற்பத்தி செய்கிறது. பெப்டைட்டுகள் புரதத்தின் சிறு துண்டுகளாகும். அவை ஆட்டோ இண்டியூசிங் பெப்டைட்டுகள் என்று அழைக்கப்படும் ரசாயனங்களையும் உற்பத்தி செய்கின்றன.
இந்த ரசாயனங்கள் பாக்டீரியா செல்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்வதைத் தடுக்கின்றன. எஸ். ஆரியஸ் போன்ற பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட அளவில் பெருகியவுடன் ஒன்றுக்கொன்று சமிக்ஞை செய்கின்றன. 'கோரம் சென்சிங்' (quorum sensing) என்று அழைக்கப்படும் இந்த வழிமுறை, தோல் அழற்சியை ஏற்படுத்தும் நஞ்சுகள் சுரப்பதை தூண்டுகிறது. எனவே இந்த பாக்டீரிய செல்களுக்குள் நடைபெறும் சமிக்ஞையைக் குறைப்பதன் வாயிலாக நஞ்சுகள் வெளியேறுவதை தடுக்க இயலும்.
2021-ஆம் ஆண்டில், காலோவின் குழு, அடோபிக் டெர்மடிடிஸ் நோயுள்ள 54 நபர்களிடம் சோதனை ஒன்றை நடத்தியது. அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு எஸ். ஹோமினிஸ் பாக்டீரியத்தைக் கொண்ட 'க்ரீம்' தடவ பரிந்துரை செய்யப்பட்டது. இந்த க்ரீம் தடவிய பின்னர் அவர்களின் சருமத்தில் இருந்த எஸ். ஆரியஸ் பாக்டீரிய குழுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
மேலும் போலியான க்ரீமை (placebo cream) பயன்படுத்திய நோயாளிகளைக் காட்டிலும், எஸ். ஹோமினிஸ் அடங்கிய க்ரீமை பயன்படுத்தியவர்களின் சருமத்தில் எரிச்சல் குறைந்தது என்பதையும் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டின.
உயிருள்ள பாக்டீரியாக்களின் சிறப்பு கலவைகளை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் வாழும் நுண்ணுயிர்களை ஆரோக்கியமானதாக மாற்ற உதவும் என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதை சிகிச்சையாக அறிமுகம் செய்வதற்கு முன்பு அதன் செயல்திறனை நிரூபிக்க இன்னும் அதிக ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். 14 வார கால அளவில் சிகிச்சையின் செயல்திறனை மதிப்பிடும் இரண்டாம் கட்ட சோதனைக்கு தயாராகி வருகிறது காலோவின் குழு.
மற்ற இடங்களிலும், ஆராய்ச்சியாளர்கள் தோலழற்சிக்கு புரோபயோடிக் மூலம் சிகிச்சையளிப்பதில் வெற்றி கண்டுள்ளனர். 2003ஆம் ஆண்டு அடோபிக் டெர்மடிடிஸ் சருமப் பிரச்னை கொண்ட 11 நோயாளிகளிடம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபில்ஸ் (Streptococcus thermophiles) என்ற பாக்டீரியாவைக் கொண்ட 'க்ரீம்' அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அதை அவர்கள் இரண்டு வாரங்களுக்குப் பயன்படுத்தினர். இந்த க்ரீம், சருமத்தை 'ஹைட்ரேட்டடாக' வைத்திருக்க உதவும் லிப்பிடான செராமைடுகளின் உற்பத்தியை ஊக்குவித்தன என்று ஆய்வு முடிவில் கண்டுபிடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
முகப்பருக்களை குறைக்கும் பாக்டீரியாக்கள்
2018-ஆம் ஆண்டில், அடோபிக் டெர்மடிடிஸ் சருமப் பிரச்னை கொண்ட 10 பெரியவர்களுக்கும் ஐந்து குழந்தைகளுக்கும் "நுண்ணுயிர் மாற்று சிகிச்சை" மேற்கொள்ளப்பட்டது. அதாவது, ஆரோக்கியமான சருமங்களைக் கொண்ட தன்னார்வலர்களின் சருமத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட உயிருள்ள ரோசோமோனாஸ் முகோசா பாக்டீரியா (Roseomonas mucosa bacteria ) வாரத்திற்கு இருமுறை நோயாளிகளின் சருமத்தில் செலுத்தப்பட்டது. 16 வாரங்களுக்குப் பிறகு, அந்த சிகிச்சை அவர்களின் நோய் அறிகுறியை 50%-க்கும் மேல் சீராக்கியது.
இதர சருமப் பிரச்னைகளை மையமாகக் கொண்ட மருத்துவ ஆய்வுகள் குறைவாகவே நடைபெற்றாலும் கூட அதன் முடிவுகளும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. உதாரணத்திற்கு முகப்பருவானது குட்டிபாக்டீரியம் ஆக்னஸோடு (Cutibacterium acnes) தொடர்புடையது. ஆராய்ச்சியாளர்கள் இந்த பாக்டீரியாவின் பரவலைத் தடுக்க அல்லது கொல்ல ஆண்டிமைக்ரோபியல் பெப்டைட்களை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஒரு பரிசோதனையில், கடுமையான முகப்பருவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு என்டோரோகோகஸ் ஃபேகாலிஸ் (Enterococcus faecalis) என்ற பாக்டீரியாவைக் கொண்ட ஒரு லோஷன் வழங்கப்பட்டது. ஆய்வு முடிவில் அவர்களின் முகப்பருக்கள் கணிசமான அளவு குறைந்தது கண்டறியப்பட்டது.
பேட்சோல்ட் மற்றும் அவருடைய எஸ் பயோமெடிக் நிறுவனம், 2019-ஆம் ஆண்டு ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டது. அந்த ஆய்வில் முகப்பருக்களைக் கொண்ட நபர்களுக்கு குட்டிபாக்டீரியம் ஆக்னஸின் குறிப்பிட்ட திரிபைக் கொண்ட 'க்ரீம்' ஒன்றை வழங்கினார்கள். ஆய்வு முடிவுகள் முகப்பருக்கள் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டின.
ஸ்டேஃபிளோகோகஸ் கேபிடிஸ் (Staphylococcus capitis) பாக்டீரியாவின் ஒரு திரிபை முகப்பரு சிகிச்சைக்கு பயன்படுத்தலாமா என ஆய்வு செய்கிறார் காலோ. விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் நம்பிக்கையான முடிவுகளை வழங்குவதாக தெரிவிக்கிறார் அவர்.
"இந்த செயல்பாட்டின் அடிப்படை மிகவும் நேரடியானது. இந்த பாக்டீரியா சி. ஆக்னஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது. முகப்பருக்களுக்கு க்ரீம்கள் மூலமாகவோ, மாத்திரைகள் வழியாகவோ வழங்கப்படும் ஆண்டிபயோடிக்ஸ் செயல்படுவதைப் போன்று தான் இதுவும் செயல்படுகிறது. தோல் வழியாக வழங்கப்படும் ஆண்டிபயோடிக்ஸ் போன்றில்லாமல் இந்த சிகிச்சை முழுக்க முழுக்க சி. ஆக்னஸை மட்டுமே குறிவைக்கிறது. இதன் மூலம் சருமத்தில் உள்ள மற்ற நுண்ணுயிரிகளுக்கு எந்த விதமான சேதமும் ஏற்படாமல் இருக்கும்," என்று கூறுகிறார் காலோ.
சூரியனால் தூண்டப்படும் தோல் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய மூலக்கூறுகளை உற்பத்தி செய்யும் ஸ்டேஃபிளோகோகஸ் எபிடெர்மிடிஸ் (Staphylococcus epidermidis) பாக்டீரியாவின் ஒரு குறிப்பிட்ட வகையைக் கூட காலோவின் குழு கண்டுபிடித்துள்ளது.
"இந்த பாக்டீரியா ஒரு சிறிய மூலக்கூற்றை உருவாக்குகிறது. இது உருமாறிய அல்லது மியூட்டஜெனிக் தோல் செல்களின் டி.என்.ஏ. சிந்தெஸிஸை தடுக்கிறது," என்று தெரிவிக்கிறார் காலோ. " புற ஊதாக் கதிர்வீச்சின் சேதத்திற்கு உள்ளாகும் எலிகளின் மேற்பரப்பில் இந்த பாக்டீரியாக்கள் இருக்கும் போது அதில் சில தோல் கட்டிகள் ஏற்படுகின்றன. ஆனால் ஆண்டி-மெடாபோலைட்டை உருவாக்கும் மரபணுக்கள் இல்லாமல் இருக்கும் இதே பாக்டீரியாக்களைக் கொண்ட எலிகளைக் காட்டிலும் மேற்கூறிய எலிகளின் உடலில் குறைவான எண்ணிக்கையில் கட்டிகள் காணப்படும்."
இது போன்ற சிகிச்சையானது மனிதர்களில் இதே விளைவைக் கொண்டிருக்கலாம் என்பதை நிரூபிக்க பல கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
சில குறிப்பிட்ட சருமப் பிரச்னைகளுக்கு புரோபயோடிக்ஸ் கொண்டு சிகிச்சை அளிப்பது எப்படி என்று பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு சில ஆய்வுகள் மட்டுமே ப்ரீ மற்றும் போஸ்ட்பயோடிக்ஸ்கள் மூலமாக சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த இயலுமா என்பதை ஆராய்கிறது.
உதாரணத்திற்கு, அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் டையட்டரி நாரிழையான இன்யூலினை, மாத்திரையாகவோ அல்லது சருமத்தில் பூச்சாகப் பயன்படுத்தப்படும்போதும் ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.
ஆரம்பகட்ட முடிவுகள், இன்யூலின் சருமத்தை மிகவும் மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது என்றும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் செழித்து வளர மிகவும் சாதகமான சூழலை வழங்குகிறது என்றும் தெரிவிக்கின்றன.
புளித்த பால் பொருட்கள் மற்றும் தயிரில் பொதுவாகக் காணப்படும் ஸ்டேஃபிளோகோகஸ் தெர்மோபிலஸ் (Staphylococcus thermophilus) போன்ற பாக்டீரியாக்கள் மூலம் உற்பத்தியாகும் ஸ்பிங்கோமைலினேஸ் போன்ற நொதியை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கத் தேவையான செராமைடுகளின் உற்பத்தியை அதிகரிக்கும் என்று மற்ற ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இருப்பினும் அனைத்து சந்தர்ப்பங்களிலும், இந்த க்ரீம்களால் ஏதேனும் பயனுள்ளதா என்பதை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைகள் உயர்தர மருத்துவ ஆராய்ச்சிகள் தேவை.
உதாரணமாக, ஒரு சமீபத்திய ஆய்வு, இதுவரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து, "மாத்திரைகள் மற்றும் சருமப்பூச்சாக பயன்படுத்தப்படும் புரோபயாடிக்குகள் சில சரும நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாகத் தோன்றினாலும், காயத்தை குணப்படுத்துதலில் நம்பிக்கைக்குரிய பங்கைக் கொண்டிருப்பதாகக் காட்டினாலும் இந்த முடிவுகளை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை" என்று முடிவு செய்தது.
அதிக ஆராய்ச்சி தேவை என்பதை காலோ ஒப்புக்கொள்கிறார், ஆனால் இத்துறையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார் அவர்.
இது சரியான திசையில் செல்கிறது என்கிறார் அவர். "இந்த பாக்டீரியாக்கள் என்ன செய்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு துறையாக இதை நாங்கள் உணர்ந்துள்ளோம். மேலும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதே போல் நமக்கு நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை வடிவமைக்க பிற வழிகளும் உள்ளன. எனவே புரோபயாடிக்குகளுடன் சில ஆண்டுகளில் நம்முடைய ஆராய்ச்சி எங்கே இருக்கும் என்பது குறித்து நான் நம்பிக்கையோடு இருக்கிறேன்," என்றார் அவர்.
சரும நோய் இல்லாதவர்களுக்கு, சருமத்தின் மென்மையை அதிகரிக்க, சுருக்கங்களைத் தடுக்க, ஹைட்ரேட் செய்ய விரும்புவோருக்கு, கடைகளில் எளிதாகக் கிடைக்கும் புரோபயாடிக் க்ரீம்கள் நன்மையளிக்கும் என்பதற்கான சான்றுகள் குறைவே.
"இப்போது சந்தையில் உள்ள பல புரோபயாடிக்குகளுக்குப் பின்னால் மிகவும் வலுவான ஆய்வுகள் இல்லை என்று நம்புகிறேன். எனவே அவற்றை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன்," என்கிறார் காலோ. "நீங்கள் அவற்றை முயற்சி செய்யலாம். ஆனால் உங்கள் பணத்தை செலவிடும் சரியான முறை அதுவல்ல.
உங்களுக்கு வயதாகும் போதோ அல்லது வெவ்வேறு சூழல்களை எதிர்கொள்ளும்போதோ தோல் நுண்ணுயிரியல் மாறினாலும், உங்கள் சருமத்தின் இயற்கை நுண்ணுயிரியல் செழிக்க நீங்கள் செய்யக்கூடிய சில வேலைகள் இருக்கின்றன.
"நமது சருமத்தை ஈரப்பதமாக்க அல்லது புற ஊதாக்கதிர் சேதத்திலிருந்து பாதுகாக்க நாம் ஏற்கனவே பின்பற்றும் நடைமுறைகள் நன்மை பயக்கும்," என்கிறார் காலோ.
"எனவே சாதாரண சருமப் பராமரிப்பு, பொருத்தமான மாய்ஸ்சரைசிங் மற்றும் சுத்தம் செய்யும் முறைகள் தான் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்," என்றார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












