'நாட்டுக்காக 9வது இடத்திலும் விளையாடுவேன்' - 'சேட்டா' சஞ்சு சாம்சன் கதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிதின் சுல்தான்
- பதவி, பிபிசி
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக கடைசி இரண்டு முக்கியமான ஆட்டங்களில் தொடர்ச்சியாக 2 பெரிய இன்னிங்ஸ்களை ஆடியதன் மூலம் சஞ்சு சாம்சன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்திய டி20 அணியில் தனக்கான இடத்தைப் பிடிக்க பல வருடங்களாகப் போராடி வந்த அவருக்கு இந்த இரண்டு ஆட்டங்களும் பெரும் உத்வேகத்தை அளித்திருக்க வேண்டும்.
ஐபிஎல் போட்டிகளில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் திறனை அனைவரும் பார்த்திருப்பார்கள். அதைப் பார்த்த பிறகுதான் ராகுல் டிராவிட் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.
19 வயதில் நாட்டிற்காக சர்வதேச அளவில் அறிமுகமான சஞ்சு, முப்பது வயதை எட்டிய பிறகும் போராடி வருகிறார்.

பட மூலாதாரம், Getty Images
கிரிக்கெட்டில் அவரது ஃபார்மின் ஏற்ற இறக்கங்களாலும், இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் எக்கச்சக்கமாக இருந்ததாலும் அதிகரித்த போட்டி சஞ்சுவுக்கு ஒரு சவாலாக இருந்தது.
அவற்றையெல்லாம் கடந்து, சாம்பலில் இருந்து எழும் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் மீண்டும் உயர்ந்தார் சாம்சன்.
அவரது இந்த எழுச்சி இந்திய அணி டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை எட்டுவதற்கு பெரும் உதவியாக இருந்தது. கடைசி 2 போட்டிகளிலுமே அவர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
சஞ்சு அணியில் சேர்க்கப்பட்டதும், போட்டியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டதும், அணியிலிருந்து நீக்கப்பட்டு பிறகு தேர்வு செய்யப்பட்டதும்.... இப்படி அவரை சுற்றி சில சர்ச்சைகள் எழுந்தன.
இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே, சஞ்சு தனது முயற்சிகளைத் தொடர்ந்தார்.

பட மூலாதாரம், Alex Davidson-ICC/ICC via Getty Images
மகனுக்காக இடம்பெயர்ந்த தந்தை
90களில் பிறந்த கேரளாவைச் சேர்ந்த சஞ்சு, தனது குழந்தைப் பருவத்தை டெல்லியின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடுவதில் கழித்தார்.
அவரது தந்தை டெல்லி காவல்துறையில் இருந்தார். அவர் ஒரு விளையாட்டு வீரரும் கூட, ஆனால் அவர் கால்பந்து விளையாடினார்.
இருப்பினும், சஞ்சு சிறுவயதிலிருந்தே பேட்டோடும் பந்தோடும் விளையாடுவதை விரும்பினார். அதனால்தான் அவர் 5-6 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அவர் ஒரு இந்திய ஜாம்பவானிடமிருந்து உத்வேகம் பெற்றார்.
ஒருமுறை குழந்தையாக, சஞ்சு டெல்லி போலீஸ் குடியிருப்பில் அமர்ந்து டிவியில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஷார்ஜாவில் போட்டி நடந்து கொண்டிருந்தது. மைதானத்தில் ஒரே கோஷம் சச்சின்... சச்சின் என்று. அதைக் கேட்ட சஞ்சு, ஒருநாள் தன் ரசிகர்களும் மைதானத்தில் இதே போன்ற கோஷங்களை எழுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டார். சஞ்சுவின் கிரிக்கெட் பயணமும் அங்கிருந்துதான் தொடங்கியது.
சஞ்சு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். ஆனால் டெல்லி போன்ற நகரங்களில் கிரிக்கெட்டில் மிகப்பெரிய போட்டி இருந்தது. அதனால், சஞ்சுவின் தந்தை கேரளாவுக்குச் சென்று சஞ்சுவின் விளையாட்டில் கவனம் செலுத்த முடிவு செய்தார். ஏனென்றால் அவருக்கு கேரளாவில் ஒரு வீடு இருந்தது.
அவர் அதை மிக அவசரமாக செயல்படுத்தினார். வேலையை விட்டுவிட்டு, சஞ்சுவின் கிரிக்கெட் வாழ்க்கையின் பாதையைத் தேர்ந்தெடுத்தார் அவரது தந்தை.
கேரளாவில், சஞ்சு தனக்குப் பிடித்த விளையாட்டில் பெரும் வெற்றியைப் பெறத் தொடங்கினார். பிராந்திய கிரிக்கெட்டில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கத் தொடங்கினார். அவர் இளம் வயதிலேயே பலரின் கவனத்தை ஈர்த்தார்.
கிரிக்கெட்டில் அவர் பெற்ற பிரபலத்தின் காரணமாக, அவர் கேரளாவில் 'சேட்டா' என்று அழைக்கப்பட்டார். சேட்டா என்பது ஒரு மூத்த சகோதரனைக் குறிக்க அல்லது ஒருவருக்கு மரியாதை செலுத்தப் பயன்படுத்தப்படும் வார்த்தை.
தன் ஆட்டத்தில் தொடந்து முன்னேற்றம் கண்ட அவர் 19 வயதில் (2014-ம் ஆண்டு) இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 வயதில் இந்தியாவுக்காக தனது முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

பட மூலாதாரம், ANI
20 வயதில் கேரள கேப்டன்
மகனின் வாழ்க்கைக்காக டெல்லியிலிருந்து கேரளாவுக்கு இடம்பெயர்ந்த பிறகு, சஞ்சுவின் தந்தை தனது முழு நேரத்தையும் தன் மகனுக்காகவே அர்ப்பணித்தார்.
பயிற்சியுடன், அவரை போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதும் திரும்பவும் அழைத்துச் வருபதும், என தொடர்ந்து அவரது முன்னேற்றத்தைக் கண்காணிக்கத் தொடங்கினார்.
இதற்கிடையில், சஞ்சு உள்நாட்டு கிரிக்கெட்டிலும் தனக்கென ஒரு பெயரை உருவாக்கத் தொடங்கினார். ஜூனியர் மட்டத்தில், அவரது பேட்டிங் நுட்பம், அபாரமான ஷாட்-ஆடும் திறன் மற்றும் ஷாட் ஆடும்போது அவரது சிறப்பான 'டைமிங்' ஆகியவை அவரது அடையாளமாக மாறியது.
சஞ்சு 2011-12 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் கேரள அணிக்காக விளையாடியதன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் அறிமுகமானார்.
2013-14 ரஞ்சி சீசனின் முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்தது உட்பட அந்த சீசனில் மொத்தம் 530 ரன்கள் எடுத்தார். பின்னர், அடுத்த சீசனில், 475 ரன்கள் எடுத்து தனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தினார்.
2015-16 ரஞ்சி சீசனில் சஞ்சு சாம்சன் தனது 20 வயதில் கேரளாவின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள அணியை வழிநடத்தியபோது கிரிக்கெட் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்ததாக சஞ்சு கூறுகினார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில், விஜய் ஹசாரே டிராபியிலும் சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஜொலித்தது. 2019-ம் ஆண்டில், கோவாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 212 ரன்கள் எடுத்தார்.

பட மூலாதாரம், ANI
ஐபிஎல் அறிமுகம்
ரஞ்சி டிராபி போட்டிகளில் சஞ்சு சாம்சனின் பேட் ஜொலித்தது, அதனால்தான் ஐபிஎல் அணிகளும் அவர் மீது கவனம் செலுத்தின.
அந்த நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சுவை டிரயலுக்கு அழைத்திருந்தது. அப்போது அவரது ஆட்டத்தைப் பார்த்த, புகழ்பெற்ற இந்திய பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் அவரைப் பாராட்டினார்.
"என் பேட்டிங்கைப் பார்த்த பிறகு ராகுல் டிராவிட் என்னை நிறையப் பாராட்டினார். எனக்கு சிறப்புத் திறமையும், பெரிய போட்டிகளில் சிறப்பாகச் செயல்படும் திறனும் இருப்பதாக அவர் கூறினார். அதை விடப் பெரியது எனக்கு எதுவும் இல்லை. அந்தத் தருணம் நான் இறக்கும் நாள் வரை என்னுடன் இருக்கும்" என்று சஞ்சு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இளம் கிரிக்கெட் வீரர்களை ஆராய்ந்து அவர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் வல்லவரான ராகுல் டிராவிட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சுவைத் தேர்ந்தெடுத்தார். அவரது ஐபிஎல் வாழ்க்கை அங்கிருந்து தொடங்கியது.
சஞ்சு சாம்சன் முதன்முதலில் ராஜஸ்தான் அணிக்காக 2013 சீசனில் விளையாடினார். அவர் 11 போட்டிகளில் 206 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு அரை சதமும் அடங்கும். அந்த செயல்பாட்டின் காரணமாக 'சீசனின் வளர்ந்து வரும் வீரர்' விருதும் வாங்கினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 177 போட்டிகளில் விளையாடி 4,704 ரன்கள் எடுத்தார். இதில் 3 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் அடங்கும். பின்னர், அவர் ராஜஸ்தான் அணியையும் வழிநடத்தி 2022 இல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
முன்னதாக 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சஞ்சு இடம்பெற்றிருந்தார், ஆனால் அவர் அந்த அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டபோது சஞ்சு டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார்.

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள்
ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நீல நிற ஜெர்சியை அணிந்திருந்த சஞ்சு, அடுத்த ஓரிரு ஆண்டுகளிலேயே இந்திய அணியின் நீல நிற ஜெர்சியை அணியும் வாய்ப்பைப் பெற்றார்.
2015 ஆம் ஆண்டு தனது 20வது வயதில் இந்திய டி20 அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார் சஞ்சு. ஹராரேவில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார்.
இந்தப் போட்டியில் அவரால் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் அதைவிட இன்னும் மோசமானது, அடுத்த போட்டியில் விளையாட சஞ்சு நான்கரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த ஒரு போட்டியில் அவர் சிறப்பாக செயல்படாததால் பல வருடங்களாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
2020ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதிலும் நிலைத்தன்மை இல்லை, சஞ்சுவின் செயல்திறனும் சீராக இருக்கவில்லை.
ஆனால் 2024-ல் அவரிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த ஆண்டு அவருக்கு அவ்வளவு சிறப்பாகத் தொடங்கவில்லை, ஆனால் ஆண்டில் நாட்கள் செல்ல செல்ல சஞ்சுவின் பேட்டிங் தரம் மீண்டும் உயர்ந்தது.
சஞ்சு ஒரே தொடரில் இரண்டு சதங்களை அடித்தார், முதலில் வங்கதேசத்திற்கு எதிராகவும், பின்னர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராகவும். ஐந்து போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்ததால், சஞ்சுவால் என்ன செய்ய முடியும் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.
2024-ல் இலங்கைக்கு எதிரான இரண்டு தொடர்ச்சியான போட்டிகளில் சஞ்சு டக்-அவுட்டாகி ஆட்டமிழந்தார். அப்போது அவர் மிகவும் ஏமாற்றமடைந்தார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த முடியாத வேதனையை அவர் உணர்ந்தார். ஆனால் பின்னர், கௌதம் கம்பீர் காட்டிய நம்பிக்கை சஞ்சுவுக்கு விலைமதிப்பற்றதாக இருந்தது.
"கம்பீர் என்னிடம் வந்து என்ன நடந்தது என்று கேட்டபோது நான் விரக்தியடைந்து அமர்ந்திருந்தேன். நான் தொடர்ச்சியாக இரண்டு முறை டக் அவுட் ஆனதால் விரக்தியடைந்ததாக அவரிடம் சொன்னேன். அந்த நேரத்தில், ' ஒருவேளை 21 முறை டக் அவுட் ஆன பிறகு, வேண்டுமானால் நீங்கள் அணியிலிருந்து வெளியேறுவீர்கள். எனவே கவலைப்பட வேண்டாம், தொடர்ந்து விளையாடுங்கள் என்று கம்பீர் மிகவும் உறுதியாக என்னிடம் கூறினார்" என்று சஞ்சு கூறினார்.
அதன் பிறகு தான், சஞ்சு 5 போட்டிகளில் 3 சதங்களை அடித்தார்.

பட மூலாதாரம், ANI
தவறிப்போன வாய்ப்பு மீண்டும் கிடைத்தது
அதன் பிறகு, சஞ்சு மீண்டும் ஒரு மோசமான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் மோசமான நிலைகள் வரும், ஆனால் சஞ்சு அதை தனது வாழ்க்கையில் மிக முக்கியமான தருணத்தில் காண நேர்ந்தது.
சஞ்சு பல தொடர்களிலும் போட்டிகளிலும் அணியில் இருந்தார், ஆனால் அவருக்கு அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. எனவே, அவர் வெளியே அமர்ந்து அணியின் ஆட்டத்தைப் பார்ப்பதில் திருப்தி அடையவேண்டிய நிலை ஏற்பட்டது.
2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா வென்ற அணியில் சஞ்சுவும் இடம் பெற்றிருந்தார். ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
2026 டி20 உலகக் கோப்பையில் தொடக்க ஜோடியின் செயல்திறன் இந்திய அணிக்கு தலைவலியாக மாறிய பிறகு, சஞ்சுவின் பக்கம் பார்வை திரும்பியது.
முக்கியமான சூப்பர் 8 சுற்றின் கடைசி 2 போட்டிகளில் சஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் ஒன்றில், விரைவிலேயே ஆட்டமிழந்தார். ஆனால் அவர் அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார்.
பின்னர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 'வாழ்வா சாவா' போட்டியில், சஞ்சு ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்து இந்தியாவை தனி ஆளாக வெற்றிக்கு இட்டுச் சென்றார். சஞ்சுவின் இன்னிங்ஸ் மட்டும் இல்லையென்றால், இந்தியா அரையிறுதிக்கு சென்றிருக்காது.
போட்டிக்குப் பிறகு பேசிய சஞ்சு, தனக்கு முன் இருக்கும் சவால்களை எவ்வாறு நேர்மறையாகக் கையாள்கிறார் என்பதைக் காட்டினார்.
"கடந்த பல வருடங்களாக, நான் அணியில் இருந்தேன், ஆனால் விளையாடவில்லை. பெஞ்சில் அமர்ந்திருந்தபோது, சீனியர் வீரர்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதை நான் நேரடியாகக் கண்டேன். அதிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். போட்டிகளில் இந்த சீனியர் வீரர்களைப் பார்த்த அனுபவம் எனக்கு பயனுள்ளதாக இருந்ததால், இன்று இதைச் செய்ய முடிந்தது," என்று சஞ்சு கூறினார்.
பின்னர் அரையிறுதியிலும் சஞ்சு அபாரமாக விளையாடி 89 ரன்கள் எடுத்தார். அந்த பலத்தில், இந்தியா மலையளவு ரன்களைக் குவித்து, இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பட மூலாதாரம், ANI
'வாய்ப்பு, போட்டி, செயல்திறன்', உண்மையில் என்ன நடந்தது?
சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காதது, விளையாட வாய்ப்பு கிடைக்காதது பற்றி நிறைய விவாதங்கள் நடந்தன.
சஞ்சு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். அவரை ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் நினைத்திருந்தால், விராட், ரோஹித், சூர்யகுமார், ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சமீபத்தில் ஷுப்மான் கில் போன்ற பேட்ஸ்மேன்களின் நீண்ட பட்டியலில் சஞ்சு மட்டுமல்ல, இன்னும் பலருக்கும் அணியில் இடம் கிடைப்பது சாத்தியமில்லை.
மேலும், சஞ்சு விக்கெட் கீப்பராக விளையாடிய போதிலும், ரிஷப் பந்த், இஷான் கிஷன் மற்றும் கே.எல். ராகுல் போன்ற பெயர்கள் இருந்தன.
மேலும், எந்த நிலையில் விளையாடுவது, இடது கை மற்றும் வலது கை பேட்ஸ்மேன்களின் கணக்கீடுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அணி நிர்வாகம் முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. இது பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் சஞ்சு மீது அநீதி இழைக்கப்படுவதாக உணர வைத்தது.
அதனால்தான் 'சஞ்சு சாம்சனுக்கான நீதி' என்ற ஹேஷ்டேக் நீண்ட காலமாக சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தது. ஆனால் ரோஹித் மற்றும் விராட் ஓய்வு பெற்ற பிறகு, சஞ்சுவின் வாய்ப்புகள் அதிகரித்தன.

இத்தனை விஷயங்கள் இருந்தபோதிலும், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது. சில போட்டிகளிலும் தொடர்களிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அந்த நேரத்தில் சஞ்சுவால் அவற்றை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பதும் உண்மை.
"இந்திய ஜெர்சியை அணியும்போது, நீங்கள் எதற்கும் தயாராக இருக்கவேண்டும். ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டியிருந்தாலும், அதில் எந்தப் பிரச்னையும் இல்லை" என்று சஞ்சு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
சஞ்சு வெறும் பேச்சோடு மட்டும் நின்றுவிடவில்லை; அதை நிஜமாகவே வாழ்ந்து காட்டினார் என்று சொல்வது தவறாகாது. இறுதியில் அவருக்கு சரியான நேரத்தில் வாய்ப்பு கிடைத்தது, இப்போது அவர் அதை வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று சொல்லலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












