You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போதைக்கு அடிமையான கபடி வீரரை மீட்ட மனைவி
- எழுதியவர், பாரத் பூஷன்
- பதவி, பிபிசிக்காக
“நான் மிகவும் குடிபோதையில் இருந்தேன். மக்கள் என்னைப் பார்த்து நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தார்கள்." இந்த வார்த்தைகள் பஞ்சாபின் பரித்கோட்டில் உள்ள துகியானா கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞரான லக்கி கில் என்ற ஹர்னேக் சிங் கூறியது. அவர் மாநில அளவில் கபடி வீரராக இருந்துள்ளார்.
ஐந்தாண்டுகளாக போதைப் பழக்கத்தால் அனைத்தையும் இழந்த ஹர்னேக் சிங், கடந்த இரண்டரை ஆண்டுகளாக போதைப் பழக்கத்தை முற்றிலுமாக கைவிட்டு தனது கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
விவசாயத்தில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, தினமும் பரித்கோட்டில் உள்ள 'குர்தீப் சிங் மல்லி கபடி கோச் மெமோரியல் ஹாலில்' தேசிய போட்டியில் விளையாடுவதற்காகத் தயாராகி வருகிறார்.
ஹர்னேக் சிங் போதைக்கு அடிமையானது எப்படி?
பிபிசியிடம் பேசிய ஹர்னேக் சிங், தனக்கு 17 வயதிலிருந்தே போதைப்பழக்கம் இருந்ததாகக் கூறினார்.
ஹர்னேக் தனது கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பள்ளிப் பருவத்தில் கபடி விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
ஒருமுறை பள்ளியில் இருந்து கபடி போட்டி விளையாட சென்ற அவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின் அவர் போதை மருந்துகளுடன் தொடர்புடைய 32 வயதுடைய நபருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.
பின், அவர் மூலமாக போதைக்கு அடிமையான ஹர்னேக் சிங், ஒரு நாளைக்கு நான்கைந்து ஊசிகளை எடுத்துக்கொண்டதாகக் கூறினார்.
“ஒரு நாள் அவர் என்னிடம் சிகரெட்டை விட்டுவிட்டு போதை தரும் ஊசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அதைப்பற்றி எனக்கு விளக்கினார். அவருடைய வார்த்தைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், அப்போது எனக்கு ஊசி போடத் தெரியாது எனச் சொன்னேன். அந்த நபர் தான் எனக்கு முதலில் ஊசி போட்டார். அன்றிலிருந்து எனக்குப் பழகி விட்டது," என்றார் ஹர்னேக் சிங்.
போதைப்பொருளுக்காக தினமும் ரூ 5000 செலவு செய்த கபடி வீரர்
ஹர்னேக் சிங் போதைப் பழக்கத்தை தொடர பணம் தேவைப்பட்டதாகக் கூறினார். இதற்காக சில சமயங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் சண்டையிட்டதோடு, வீட்டு உபயோகப் பொருட்களையும் விற்றுள்ளார்.
“முன்பு நான் போதைப்பொருளுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் செலவழித்தேன். பின்னர் போதைப்பொருள் உட்கொள்ளும் அளவு அதிகரித்து, ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் செலவழித்தேன்."
"நான் போதைப்பொருள் உட்கொள்வதைப் பார்த்து எனது குடும்பத்தினர் மிகவும் வருத்தப்பட்டனர், ஆனால் அவர்களின் கண்ணீர் என்னை பாதிக்கவில்லை. நான் எனது பெற்றோரிடம் பணம் கேட்டு துன்புறுத்தி வந்தேன். சில சமயங்களில் நான் அவர்களுடன் சண்டையிடுவதும் வழக்கம்."என்றார் அவர்.
குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் விலகி இருந்தார் ஹகேன் சிங்
போதையில் மற்ற கிராமங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டதாக கூறினார் ஹர்னேக் சிங்.
இவரைப் பார்த்ததும் அவர் விரைவில் இறந்துவிடுவார் என்று மக்கள் கூறியுள்ளனர்.
"மக்கள் என்னைப் பார்க்க விரும்பவில்லை. வீட்டில் என் பெற்றோர்கள் கூட என்னை அழைப்பதை நிறுத்திவிட்டனர்," என்றார் ஹர்கேன் சிங்.
“நான் வீட்டில் திருட ஆரம்பித்தேன். நான் காலையிலும் இரவிலும் ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டேன். அது குடிப்பழக்கம்," என்றார்.
இவரது தந்தை பஞ்சாப் காவல்துறையில் முதல்நிலை காவலராக பணியாற்றியவர்.
"எனக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் போதைப்பொருளைப் பெற எல்லாவற்றையும் விற்றேன்."என்றார் ஹர்கேன் சிங்
2019 ஆம் ஆண்டில், ஹர்னேக் சிங்கிற்கும் அவருடன் ஐந்தாம் வகுப்பிலிருந்து படித்த அர்ஷ்தீப் கவுருக்கும், அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
அவர்களது உறவைப் பற்றி ஹர்னேக் சிங் கூறும்போது, “நான் போதைப்பொருள் உட்கொள்வதை அர்ஷ்தீப்புக்கு தெரிந்ததும், அவர் என்னிடம் 2 மாதங்கள் பேசவில்லை. வீட்டில் விவாகரத்து குறித்து பேச்சு வார்த்தை கூட நடந்தது.அப்போது என் மனைவி என்னை ஆதரித்து விவாகரத்துக்கு மறுத்துவிட்டார். அவர் என்னை சீர்திருத்த முயற்சிக்க ஆரம்பித்தார்," என்றார் ஹர்னேக் சிங்.
தொடர்ந்து பேசிய அவர்,“எனது தாயும் மனைவியும் என்னை நஷமுக்தி கேந்திரா, ஹரிந்தர் நகர், பரித்கோட், காவ்ன் சோண்டியா நஷமுக்தி கேந்திரா, ஹனுமன்கர், மத்திலி (ராஜஸ்தான்) ஆகிய மறுவாழ்வு மையங்களுக்கு அழைத்துச் சென்றனர். நான் பல இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன்," என்றார் அவர்.
'என் மகன் திரும்பி வருவதற்காகக் காத்திருக்கிறேன்'
கடந்த ஐந்து-ஆறு ஆண்டுகளாக தான் மிகவும் சோகமாக இருந்ததாக ஹர்னேக் சிங்கின் தாயார் சரஞ்சித் கவுர் கூறினார்.
“எத்தனையோ தூக்கமில்லாத இரவுகள் இருந்தன. என் மகன் மீண்டும் எப்போது நல்ல வாழ்க்கை வாழ்வான் என்ற தருணத்திற்காக நான் காத்திருந்தேன். தற்போது அனைத்து பொறுப்புகளையும் தனது மகன் சுமப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது," என்றார் சரஞ்சித் கவுர்.
"போதைக்கு அடிமையானவர்கள் தங்கள் பெற்றோரைப் பார்க்க வேண்டும். யாரோ ஒருவர் எனது குழந்தை போதைக்கு அடிமையானவன் என்று அழைக்கும் போது, ஒரு தாயாக என் இதயம் எப்படித் துடிக்கும் என்பதை யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது," என்றார் சரஞ்சித் கவுர்.
தொடர்ந்து பேசிய அவர்,“போதைக்கு அடிமையானவர்கள் பற்றிய சிந்தனையையும் நமது சமூகம் மாற்றிக்கொள்ள வேண்டும். போதைப் பழக்கத்திலிருந்து மக்களை வெளியே கொண்டு வர அவர்கள் முயற்சிக்க வேண்டும். யாரையும் 'அடிக்ட்' என்று சொல்லக் கூடாது. இந்த வகை இளைஞர்கள் அன்புக்காக ஏக்கத்துடன் இருக்கிறார்கள். போதைக்கு அடிமையானவர்களை சமூகம் வெறுக்கக்கூடாது," என்றார்.
மனைவியின் ஆதரவால் திருந்திய ஹர்னேக் சிங்
இதுகுறித்து ஹர்னேக் சிங்கின் மனைவி அர்ஷ்தீப் கவுர் கூறுகையில், ‘‘திருமணத்திற்கு முன், அந்த பையன் குடிகாரன் என்றும், அவனை திருமணம் செய்யக்கூடாது என்றும் என் சகோதரிகள் என்னிடம் கூறினர்," என்றார்.
ஆனால், அர்ஷ்தீப் கவுர் இதில் அதிக கவனம் செலுத்தவில்லை.
“திருமணத்திற்குப் பிறகு, ஹர்னேக் சிங் தினமும் இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். அவர் என் மீது கை நீட்டினார். ஒரு நாள் நான் அவருடைய கையில் ஊசி போட்ட அடையாளங்களைப் பார்த்தேன், அப்போது தான் எனக்குத் தெரிந்தது. எனது ஏழ்மையான குடும்பத்தினர், என்னை விவாகரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டே இருந்தனர். ஆனால், நான் என் கணவரை சீர்திருத்த முடிவு செய்தேன்," என்றார் அர்ஷ்தீப் கவுர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)