2022-இல் திமுகவை சோதித்த 'தலைவலி' தருணங்கள்

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/MKSTALIN

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்து செல்லும் இந்த 2022ஆம் ஆண்டில் தி.மு.க. சில சாதனைகளைச் செய்திருந்தாலும் பல சோதனைகளையும் சறுக்கல்களையும் சந்தித்திருக்கிறது. ஆளும் கட்சியான தி.மு.கவிற்கு இந்த ஆண்டு எப்படி அமைந்தது?

இந்த ஆண்டின் துவக்கமே சோதனைகளில்தான் துவங்கியது. ஜனவரி மாதத்தில் பொங்கல் திருநாளை ஒட்டி குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு 21 பொருட்களை இலவசமாக வழங்கியது தமிழ்நாடு அரசு.

ஆனால், இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டதில் பல குளறுபடிகள் ஏற்பட்டன. பலருக்கு வழங்கப்பட்ட வெல்லம் போன்ற பொருட்களின் தரம் மிக மோசமாக இருந்தது.

இதனைச் சரிசெய்யவும் பொருட்களை மாற்றிக் கொடுக்கவும் அரசு எவ்வளவோ முயன்றும், கடைசிவரை இது தொடர்பான புகார்கள் வந்துகொண்டேயிருந்தன. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை கையில் எடுக்க, பெரும் சிக்கலாக அமைந்தது பொங்கல் பரிசுப் பொருள் விவகாரம்.

அந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பாகவே, அரியலூர் மாணவியின் தற்கொலை விவகாரம் பூதாகரமாக எழுந்தது. அரியலூரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், பள்ளிக்கூட விடுதியிலேயே தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மதமாற்ற முயற்சி காரணமாகவே இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாக பாரதீய ஜனதா கட்சியும் இந்து அமைப்புகளும் பிரச்சனையைப் பெரிதாக்கின. இது தொடர்பாக, பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த அருட்சகோதரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பல நாட்களுக்கு இந்த விவகாரம் ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தது. அந்தத் தருணத்தில் மாநிலத்தின் சில இடங்களில் கிறிஸ்தவர்கள் அவர்களது வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டதும் நடந்தது.

மனித உரிமை மீறல் புகார்

ஆனால், இந்த விவகாரத்தை மிக நிதானமாகக் கையாண்டதன் மூலம், பெரிய சிக்கலுக்கு உள்ளாகாமல் தப்பியது தி.மு.க. அரசு. காவல்துறையால் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் இந்த ஆண்டிலும் தி.மு.க. ஆட்சிக்குக் களங்கமாக அமைந்தன.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சாத்தான் குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகன் கொல்லப்பட்ட விவகாரத்தை மிகப் பெரிய அளவில் கையில் எடுத்த தி.மு.க, தனது ஆட்சிக் காலத்திலும் அது போன்ற தவறுகள் நடக்கும்போது, கடும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

காவல் நிலையங்களிலோ, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர் வீடு திரும்பிய பிறகோ உயிரிழக்கும் சம்பவங்கள் இந்த ஆட்சியிலும் தொடர்ந்து நடந்துவருகின்றன.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த ஆண்டில் மூன்று பேர் இதுபோல உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடக்கும் மிக மோசமான மனித உரிமை மீறலாக இது பார்க்கப்படுகிறது.

அன்னூர் சிப்காட்டிற்கு நிலம் எடுக்கும் விவகாரம், பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் விவகாரம் ஆகியவை மிகப் பெரிய சோதனையாக தி.மு.க. அரசுக்கு அமைந்தன.

ஆனால், அன்னூரில் வலுக்கட்டாயமாக நிலங்களைக் கையகப்படுத்தப்போவதில்லை என்று கூறிய தி.மு.க. அரசு, பரந்தூரிலும் ஒட்டியுள்ள பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்வதால், இந்த விவகாரத்தில் என்ன செய்வது என கையைப் பிசைந்து வருகிறது.

ஆளுநருடன் அதிகார மோதல்

ஆர்.என்.ரவி

அதேபோல, ஆளுநர் ஆர்.என். ரவியை சமாளிப்பது மிகப் பெரிய சிக்கலாக மாறியது இந்த ஆண்டில்தான். இந்த ஆண்டின் துவக்கத்திலேயே, தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை குறித்து விமர்சித்துப் பேசினார் ஆளுநர். அதற்கு, அரசுத் தரப்பிலிருந்து மறுப்பு வந்தது.

இதுபோல, பல தருணங்களில் ஆளுநருக்கு அரசும் தி.மு.கவும் தொடர்ந்து மறுப்புகளைத் தெரிவிக்க வேண்டியிருந்தது. ஆனால், இதை எல்லாம்விட பெரிய சிக்கலாகிப் போன விஷயம், மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதியளிக்காமல் இருப்பதுதான்.

குறிப்பாக, நீட் தொடர்பான சட்டம், ஆன்லைன் ரம்மியைத் தடைசெய்யும் சட்டம் ஆகியவை இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் இருக்கின்றன. இவற்றுக்கு ஒப்புதல் அளிக்கும்படி அரசு பல முறை கோரியும் ஒப்புதல் அளிக்கப்பவில்லை.

கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை 3 ஆண்டுகளாகக் குறைக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், மசோதாவையே திரும்பப் பெற்றிருக்கிறது அரசு.

வரும் ஆண்டிலும் ஆளுநர் ஆர்.என். ரவியுடனான சிக்கல்கள் தொடரவே செய்யக்கூடும். அதனை, தி.மு.க. அரசு எப்படி எதிர்கொள்கிறது என்பதில்தான் இந்த அரசின் நீண்ட கால வெற்றி என்பது இருக்கும்.

பாஜகவை சமாளிப்பதில் சவால்

அண்ணாமலை

அரசியல் ரீதியாகப் பார்த்தால், இந்த ஆண்டில் பா.ஜ.கவைச் சமாளிப்பதுதான் தி.மு.கவுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது. ஆண்டுத் துவக்கத்தில் பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோது, உளவுத் துறையின் ஏடிஜிபியைக் குறிவைத்து குற்றம்சாட்டினார் அண்ணாமலை.

இதற்குப் பிறகு, போலி பாஸ்போர்ட் விவகாரத்திலும் கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்திலும் உளவுத் துறை ஏடிஜிபி பா.ஜ.கவால் குறிவைக்கப்பட்டார். பா.ஜ.க. கொடுத்த அழுத்தங்களுக்கு பணிந்து தி.மு.க. உளவுத் துறை ஏடிஜிபியை மாற்றவில்லை என்றாலும், அரசியல் ரீதியாக அதற்கான பதிலடியைக் கொடுத்ததாகச் சொல்ல முடியாது.

கடந்த ஆண்டுத் துவக்கத்தில் இணைய கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள், தலைவர்களை இணைந்து அகில இந்திய சமூக நீதி சம்மேளனத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தார். ஆனால், அந்தத் திசையில் இதுவரை பெரிதாக எதுவும் நடக்கவில்லை.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி

பெரிய விமர்சனங்களைச் சந்திக்கக்கூடிய விஷயமாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட விவகாரம் அமைந்திருக்கிறது. கட்சிக்குள் அவருக்கு தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கப்பட்ட நிலையில், சட்டமன்ற உறுப்பினரான ஒன்றரை ஆண்டுகளுக்குள் அமைச்சராகவும் அவர் ஆக்கப்பட்டிருப்பது, கட்சியின் அடுத்த கட்டத் தலைவராக அவர் முன்னிறுத்தப்படுவதையே சுட்டிக்காட்டியது. இது கட்சியின் தலைவர் பதவிக்கு முதலமைச்சர் குடும்பத்தைத் தவிர்த்த பிறர் போட்டியிடுவதற்கான ஜனநாயக வெளியை அடுத்த 20 ஆண்டுகளுக்கு மூடியிருக்கிறது.

ஆனால், இந்த ஆண்டில் சில சொல்லத்தக்க சாதனைகள் இந்த ஆண்டில் செய்யப்பட்டிருக்கின்றன. அதில் முக்கியமான சாதனையாக அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்ததைச் சொல்ல முடியும். செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் பரவலான பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.

அடுத்ததாக, உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்த வெற்றிகளைக் குறிப்பிடலாம். தமிழ்நாட்டில் ஏற்கனவே கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டுவிட்ட நிலையில், நடத்தப்படாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தியது தி.மு.க. அரசு. அதில் பெரும்பலான இடங்களைக் கைப்பற்றியது தி.மு.க. அதுவரையிலான தி.மு.க. ஆட்சிக்குக் கிடைத்த ஒப்புதலாக, இந்த வெற்றியை முன்னிறுத்தியது தி.மு.க. அரசு.

"திராவிட மாடல் அரசு"

மு.க.ஸ்டாலின்

இந்த காலகட்டத்தில்தான், தனது அரசு குறித்துப் பேசும்போது, திராவிட மாடல் அரசு எனக் குறிப்பிட ஆரம்பித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

அதேபோல, உலகெங்கிலுமிருந்து வீரர்கள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக நடத்திக் காட்டியது தமிழ்நாடு அரசு. இது உலக விளையாட்டு வரைபடத்தில் தமிழ்நாட்டின் பெயரை குறிப்பிடத்தக்கவகையில் இடம்பெறச் செய்தது.

வரும் ஆண்டில் தி.மு.க. அரசுக்கு பல சோதனைகள் காத்திருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முன்வைக்கும் சவால்களை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது இதில் முக்கியமானது.

2024ல் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பா.ஜ.கவின் தாக்குதல்களை அரசியல் ரீதியாக சமாளித்தாக வேண்டிய நிலையிலும் இருக்கிறது தி.மு.க.

இந்த ஆண்டில் அ.தி.மு.க., எடப்பாடி பழனிச்சாமி Vs ஓ. பன்னீர்செல்வம் என பிளவுபட்டிருந்ததால், எதிர்க்கட்சியாகச் சிறப்பாகச் செயல்பட்டதாகச் சொல்ல முடியாது.

ஆனால், அ.தி.மு.கவின் பொதுக்குழு தொடர்பான வழக்கில், அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பு வரும்பட்சத்தில், வெற்றிபெறும் தரப்பு தி.மு.க. அரசு மீதான பாய்ச்சலைத் துவங்கும். அதனையும் தி.மு.க. எதிர்கொண்டாக வேண்டும்.

அதேபோல, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. அளித்த முக்கியமான வாக்குறுதிகளான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் போன்ற முக்கிய வாக்குறுதிகளும் தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கின்றன.

காணொளிக் குறிப்பு, அரியணை ஏறும் உதயநிதி - இனி இவர் சூப்பர் அமைச்சராக முன்னிறுத்தப்படுவாரா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: