அமைச்சராகும் உதயநிதி - தமிழ்நாட்டில் வாரிசு அரசியலை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா?

- எழுதியவர், க .சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய அரசியல் களம் முழுவதுமே வாரிசு அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியில் தொடங்கி தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாமக வரையிலும் அது நீண்டுள்ளது.
திமுகவை பொருத்தவரை, கருணாநிதியின் மகன் ஸ்டாலின், மு.க. அழகிரி, மகள் கனிமொழி என்று அனைவரையும் நேரடி அரசியலில் ஈடுபடுத்தினார். இவர்களின் வரிசையில் கருணாநிதியின் பேரனும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினும் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு இப்போது முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்க ஆயத்தமாகி வருகிறார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத்தை முன்பே அரசியல் களத்திற்குள் கொண்டு வந்தார். அந்த கட்சியில் விவி ராஜன் செல்லப்பாவின் மகன் விவிவிஆர் ராஜசத்யன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், பி.ஹெச் பாண்டியனின் மகன் பிஹெச் மனோஜ் பாண்டியன் என்று பல அரசியல் தலைவர்களின் வாரிசுகள் உள்ளனர். இந்த பட்டியல் மேலும் நீள்கிறது.
மற்றொரு முக்கிய கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியிலும் இதேநிலை தான். பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் இப்போது அந்த கட்சிக்கு தலைவராக உள்ளார். இவற்றில், அந்தந்த கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், வாரிசு அரசியல்படி எந்த வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை, தகுதி உள்ளவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று அவ்வப்போது கூறினாலும், வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் ஓய்ந்தபாடில்லை.
இந்தச் சூழலில், தமிழக அரசியல் களத்தில் வாரிசு அரசியல் என்பது தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.
'வாரிசுகளின் அரசியல் வரவை தடுக்க முடியாது'
ஆனால், “இன்றைய நவீன தாராளவாத சமூகத்தில், தமிழகத்தில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கூட பண பலமும் அதிகார பலமும் இருந்து, அவற்றுடன் நன்கு செயல்படும் திறனும் ஒருசேர அமைந்தால் அரசியலில் அவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை மறுக்க முடியாது,” என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற அரசியல் ஆய்வாளர் ஆனந்தி.
மேலும், “அரசியலைப் பொறுத்தவரை, இன்றைய சூழலில் பின்புலம் அவசியமாகிறது. ஜனநாயகத்தில் முதலாளித்துவத்தின் அங்கம் வலுவாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தலில் பங்கெடுக்க அது தேவைப்படுகிறது. ஆனால், அது இருப்பது மட்டுமே ஒருவருக்கு வாய்ப்புகளை வழங்கிவிடாது. தனக்கு இருக்கும் அதிகார பின்புலத்தை, வளங்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம்.
உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை, போட்டி மிகுந்த சமூகத்தில் தனிமனிதராக அவரிடம் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி, அரசியலில் தனது திறமையையும் காட்டியுள்ளார்.
கடந்த ஓராண்டில் தன்னால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதைக் காட்டி, தன்னை நிரூபித்திருக்கிறார். அப்படியிருக்கும்போது இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதை வாரிசு அரசியல் என்ற குறுகிய நோக்கோடு பார்ப்பது சரியல்ல,” என கூறுகிறார்.
“மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதுதான் கேள்வி”
“ஜனநாயகம் என்பது அடிப்படையில் மக்களுடைய தேர்வு. ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு வெல்கிறார்கள் என்றால், அவர் ஓர் அரசியல் தலைவரின் வாரிசு என்பதாலேயே பிறப்பால் அந்த வாய்ப்பை மறுப்பது எப்படி சரியாகும்?” என கேட்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

பட மூலாதாரம், @DRRAMADOSS/TWITTER
“ஒருவர் தலைமையின் வாரிசாக இருப்பதாலேயே அவருக்கு வாய்ப்பைக் கொடுப்பது வேறு. ஆனால், தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை எப்படித் தவிர்க்க முடியும்?
ஜி.கே.வாசன் எடுத்த பாதை வாரிசு அரசியல். மாநிலங்களவை போன்றவற்றுக்கு தேர்வாவதில் வாரிசு அரசியல் பங்கு வகிப்பதாகக் கூற முடியும். அதையே சட்டமன்ற தேர்தலிலும் குறிப்பிட்டுவிட முடியாது. ஏனெனில், இங்கு, போட்டி உள்ளது, அதிலிருந்து மக்கள் தான் முடிவெடுக்கிறார்கள்.
ஒரு செங்கலை வைத்துக்கொண்டு மத்திய அரசின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்கியதைப் போன்ற அவருடைய அரசியல் நடவடிக்கைகள் கட்சிக்குள் கவனம் பெற்றன. இவருடைய முறைகள் ஆழமான அச்சுறுத்தலை உண்டாக்குவதாலேயே இப்படியான விமர்சனம் வைக்கப்படுகிறது.
வாரிசு அரசியல் என்பது ஜனநாயகரீதியான பார்வையே இல்லாத ஒன்று. ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், யாருடைய வாரிசாக இருந்தாலும் வெற்றி கிடைக்காது” என்கிறார் பன்னீர்செல்வன்.
மேலும், “ஒருவர் தலைமையின் வாரிசாக இருப்பதாலேயே வாய்ப்பு கொடுப்பது எப்படி சரியில்லையோ, அதேபோல் ஒருவர் தலைமையின் வாரிசு என்பதாலேயே வாய்ப்பை நிராகரிப்பதும் தவறு. அவருடைய அரசியலில் விமர்சனங்கள் இருந்தால் முன்வைக்க வேண்டும். மக்கள் அங்கீகாரம் உள்ளதா, கிடைக்கும் பொறுப்புக்கு உரிய திறமை உள்ளதா, நன்றாகச் செயல்படுபவரா என்பதைத்தான் கணக்கில் கொள்ள வேண்டும்.

பட மூலாதாரம், FACEBOOK / UDHAYANIDHI STALIN
கட்சிகளுக்குள் அதிகாரத்திற்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு, அதிகாரத்திடமிருந்து விலகியிருப்பவர்களைவிட சற்று அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பது இயல்பான உண்மை. இதைத் தவிர்க்க முடியாது. இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். அரசியல் மட்டுமின்றி அனைத்துத் துறைகளுக்கும்கூடப் பொருந்தும்.
ஆனால், வாரிசுகளுக்கு அப்படி விரைவாகவும் சுலபமாகவும் வாய்ப்பு கிடைத்தாலும் அதை மக்களும் ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தான் கேள்வி,” என்கிறார் பன்னீர்செல்வன்.
“இன்றைய நிலையில் இதைத் தவிர்க்க முடியாது”

“அண்ணா காலத்தில் அடிமட்ட தொண்டர் முதல் உழைத்துதான் வரவேண்டியிருந்தது. ஆனால், இன்றைய தேர்தல் அரசியலில் பின்புலம் இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
எந்த அடையாளமும் இல்லாத ஒருவரை முன்னிறுத்தி அடையாளம் காட்டினாலும், அவரிடம் பின்புலம் இல்லாமல் செயல்பட முடியாத சூழல் நடைமுறையில் நிலவுகிறது,” எனக் கூறுகிறார் ஆனந்தி.
மேலும், “இந்நிலையில், சில கட்சிகள் அதனூடாக சமூக நீதி பொறுப்புகளையும் சித்தாந்தங்களையும் ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றன. உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை, அவர் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர். இன்றைய நிலை மாறியிருப்பதால், பண பலம் முக்கியமாக உள்ளது. அதைத் தவிர்க்க முடியாது.
ஆனால், அந்த வளங்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். இனி வாரிசு அரசியல் என்று கூற முடியாது. அப்படி வருபவர்கள் தனிப்பட்ட முறையில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.
அதேநேரம் வாரிசு அரசியல் என்பது குடும்பத்திற்குள் இருந்து வருபவர்கள் மட்டுமே இல்லை. அனைத்துக் கட்சிகளிலும் தலைமையில் இருப்பவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மத்தியிலிருந்து தான் சரியான நபரைத் தேர்ந்தெடுக்கிறார்கள், அடுத்த வாரிசாகக் குறிப்பிடுகிறார்கள்.
அதையும் வாரிசு அரசியலில் குறிப்பிட முடியும். ஆனால், அப்படி வாரிசு அரசியல் எனக் கூறி அதற்குள் சுழன்று கொண்டிருக்காமல், அவர்கள் நன்கு செயல்படக்கூடியவரா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்,” என்கிறார் ஆனந்தி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













