You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: எஸ்.ஜே.சூர்யா அசத்தினாரா? கேங்ஸ்டராக ராகவா லாரன்ஸ் எப்படி?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'ஜிகர்தண்டா' படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதே கதைக்களத்துடன் வெளியாகியுள்ளது 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளதா?
இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது? ஜிகர்தண்டாவை போலவே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் வெற்றி பெறுமா?
படத்தின் கதை என்ன?
படத்தின் கதை, 1973இல் தொடங்குகிறது. மதுரையில் பிரபல ரெளடியாக இருக்கும் ராகவா லாரன்ஸுக்கு தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வருகிறது.
முதலமைச்சர் பதவியில் அமர ஆசைப்படுகிறார் இளவரசு. அதற்கு காவல்துறையில் பதவியில் இருக்கும் தன் தம்பியை பகடைக்காயாக உபயோக்கிக்கிறார்.
இன்னொரு பக்கம், போலீஸ் அதிகாரியாக ஆசைப்படும் கிருபய ஆரோக்கியராஜ் கதாபாத்திரத்தில் வரும் எஸ்.ஜே சூர்யா. மதுரையில் ’ஜிகர்தண்டா’ கேங்காக ரெளடியிசம் செய்யும் அல்லியன் சீசர் கதாபாத்திரல் வரும் ராகவா லாரன்ஸ்.
இந்த மூன்று பேரும் எதிர்பாராதவிதமாக ஒரு புள்ளியில் இணைய, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் 'ஜிகர்தண்டா- டபுள் எக்ஸ்'.
இறுதியில், சினிமா என்ற ஆயுதம் லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் வாழ்வை எப்படி புரட்டிப் போட்டது, அதிகாரம் எப்படி ஒரு இனத்தையே அழிக்கிறது என்பதைச் சொல்லி இருக்கிறது இந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எப்படி இருக்கிறது?
“அல்லியன் சீசராக ராகவா லாரன்ஸ் அலட்டல் இல்லாத நேர்த்தியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இருப்பினும் உணர்ச்சிமயமான காட்சிகளில் சில இடங்களில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றாமல் இல்லை,” என்கிறது இந்து தமிழ் திசை.
ரவுடியைக் கொல்லப் போகிறோம் என்ற பயத்தையும் மீறி போலீஸ் ஆசை உந்தித்தள்ள, சினிமா இயக்குநராக உள்ளே நுழைபவரை சூழ்நிலை எப்படி மாற்றுகிறது என்பதை எஸ்.ஜே.சூர்யா தனது நடிப்பில் சிறப்பாகக் கொண்டு வந்துள்ளார் என்றும் இந்து தமிழ் பாராட்டியுள்ளது.
“வழக்கமாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் படங்களில் சில இடத்தில் அவரது மிகை நடிப்பு எட்டிப்பார்க்கும். இதில் அப்படி எதுவும் இல்லாமல் ஒரே மீட்டரில் நடித்திருப்பது ஆறுதல்.
லாரன்ஸின் மனைவி மலையரசியாக வரும் நிமிஷா, போலீஸ் அதிகாரியாக வரும் நவீன் சந்திரா, அமைச்சராக வரும் ஷைன் டாம், இளவரசு, சத்யன் என அத்தனை நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்,” என்றும் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
சந்தோஷ் நாராயணின் இசை தேவையான இடத்தில் மாஸ் கூட்டி பாடல்களில் ஆட்டம் போட வைப்பதாகவும், ஆனால், கிளைமாக்ஸில் வரும் ஒரு பாடல் பொறுமையைச் சோதிப்பதாகவும் இந்து தமிழ் விமர்சித்துள்ளது.
மேலும், முடிந்துவிட்டதாக நினைக்கும் நேரத்தில் கிளைமாக்ஸில் வரும் சிறு திருப்பமும் அதற்குப் பின்னான உணர்ச்சிமயமான காட்சிகளும் ரோலர் கோஸ்டர் ரைடாக அமைந்திருப்பது படத்திற்கான பலம் என்றும் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பு எப்படி இருந்தது?
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தியுள்ளார். அவரது தோற்றம், நடை, உடை, உடல் மொழி அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதாகவும் சண்டைக் காட்சிகளில் மிரட்டியுள்ளதாகவும் மாலை மலர் அதன் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “மற்றொரு கதாநாயகனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவும் போட்டி போட்டுத் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொடை நடுங்கியாகவும் படம் எடுக்கும் இயக்குநராகவும் கவனிக்க வைத்துள்ளார்.
குறிப்பாக லாரன்ஸை காப்பாற்றும் காட்சியில் நெகிழ வைத்துள்ளார். ரகவா லாரன்ஸும் எஸ்.ஜே.சூர்யாவும் கிளைமேக்ஸில் பட்டையைக் கிளப்பியுள்ளனர். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்,” என்கிறது மாலை மலர் விமர்சனம்.
படத்தின் காட்சிகள் எப்படி இருந்தன?
படத்தை 1975ஆம் ஆண்டு காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் இயக்கியிருப்பது அதன் தனிச் சிறப்பு என்றும் மாலை மலர் பாராட்டியுள்ளது.
முதல் பாதியில் நகரத்தின் ரவுடி வாழ்க்கையையும், இரண்டாம் பாதியில் காடு, காட்டுவாசிகளின் வாழ்க்கையையும் படமாக்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
கேங்ஸ்டர் கதையில் காட்டைக் கெடுக்கும் அரசியலை சொல்லியிருப்பது சிறப்பு என்றும் யானை வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மாலை மலர், “கிளைமேக்ஸ் காட்சி மூலம் பார்வையாளர்களின் பாராட்டை பெறுகிறார்,” எனவும் கூறியுள்ளது.
ஜிகர்தண்டா முதல் பாகத்தின் சாயல் தெரிகிறதா?
கார்த்திக் சுப்புராஜ், தமிழ் திரைப்பட இயக்குநர்களில் ஓர் அரிய வகையைச் சேர்ந்தவர் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளது.
“சமீபகாலமாக நம் படங்களில் நாடகத்தனம் விடுபட்ட ஒன்றாக உள்ளது. சினிமா என்பது சில மெல்லிய கதை, உணர்ச்சிவசப்பட்ட காட்சிகள், வரிசைகட்டி நிற்கும் அதிரடி என மாறிவிட்ட நிலையில், நாடகத்தனத்தை தூண்டும் அழகான, உணர்ச்சிகரமான படைப்பை உருவாக்குவதில் கார்த்திக் மகிழ்கிறார்,” என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டியுள்ளது.
மேலும், இரண்டாம் பாகம் என்ற பெயரில் முதல் பாகத்தின் கதைக்களத்தை அப்படியே வைத்து கதையை நகர்த்தாமல், முற்றிலும் வேறு கதைக்களத்தைத் தொட்டிருப்பதாக கார்த்திக் சுப்புராஜை ஹிந்துஸ்தான் டைம்ஸ் பாராட்டியுள்ளது.
மேலும், பழங்குடிகளின் வாழ்க்கையை அவர்களின் நிலைமையை ஈரத்துடன் காட்சிப்படுத்தி இருப்பதாகவும் யானை தொடர்பான கிராஃபிக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக இருப்பதாகவும் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
“சண்டைக்காட்சிகளில் காட்டப்பட்ட வித்தியாசம் கவனிக்க வைக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் இருந்த வேகம், முதல் பாதியில் இல்லாதது பலவீனம்,” என்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசை மாயம் செய்ததா?
படத்திற்கு பெரிய பலமே சந்தோஷ் நாராயணனின் இசைதான் என்று மாலை மலர் தனது விமர்சனத்தில் கூறியுள்ளது. பல காட்சிகளுக்கு இசை மூலம் உயிர் கொடுத்து இருக்கிறார். திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு நகரத்தையும், காட்டையும் அழகாக படமாக்கி இருக்கிறது என பாராட்டுகிறது மாலை மலர் இணையதளம்
சந்தோஷ் நாராயணின் இசை, திருவின் ஒளிப்பதிவு, பாலசுப்ரமணியம், குமாரின் கலை இயக்கம் கதைக்களம் நடக்கும் 1975 காலக்கட்டத்திற்கு நம்மையும் அழைத்துச் செல்வதாக இந்து தமிழ் திசை தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.
“எழுபதுகளின் கதை என்பதற்கேற்ப கலர் டோனும் ரெட்ரோ ஸ்டைல் மேக்கிங்கும் கண்களை உறுத்தாமல் கதை நகர்த்த உதவி இருப்பதாகவும்” இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.
படத்தின் பலவீனம் என்ன?
காடுகள் பாதுகாப்பு, அங்குள்ள மக்களின் வாழ்வு போன்றவற்றை அதிகாரம் எப்படி தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என்பதை பேசத் துணிந்திருப்பது சிறப்பு என்றாலும் அதை இன்னும் அழுத்தமாகப் பேசியிருக்கலாம் என இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.
'ஜிகர்தண்டா' படம் பல இடங்களில் நம்மை சிரிக்க வைத்திருக்கும். ஆனால், இந்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' நம்மை உணர்ச்சிமயமாகப் பல இடங்களில் கலங்கடித்திருக்கிறது என இந்து தமிழ் திசை கூறுகிறது.
அதேநேரம், “மதுரையையே ஆட்டிப் படைப்பவனுக்கு ஒருமுறைகூட தன்னைக் கொல்ல வந்திருக்கும் எஸ்.ஜே. சூர்யா மீது சந்தேகம் வராமல் இருப்பது உறுத்தல். எதிர்பாராத விதமாக கொலைப்பழியால் சிறைக்குச் செல்லும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு அது குறித்தான கவலை இருப்பதாக ஒரு இடத்தில்கூட காட்டவில்லை.
லாரன்ஸ் தன் மனைவியை கை நீட்டி அடிப்பது, திட்டுவது போன்ற காட்சிகளுக்கான தேவையே இல்லாதபோது அதை வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியும் எழுகிறது,” என்று இந்து தமிழ் விமர்சித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)