You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜப்பான் விமர்சனம்: கார்த்தி திருடனாக வந்து ரசிகர்களை வசீகரித்தாரா?
தீபாவளியை முன்னிட்டு ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் நடித்திருக்கும் `ஜப்பான்` திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மேலும் இதில், ஜெய்லர் படத்தில் நடித்த தெலுகு நடிகர் சுனில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், எழுத்தாளர் பவா செல்லதுரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் நடிகர் கார்த்திக்கு வெற்றிப் படமாக அமைந்துள்ளதா? ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?
கார்த்தி நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் வணிகரீதியாக பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன. இந்த நிலையில் ராஜு முருகனோடு ஜப்பான் படத்தில் கார்த்தி ஜோடி சேர்ந்திருப்பது அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இயக்குநர் ராஜுமுருகனை பொறுத்தவரை 2014இல் வெளியான அவரது முதல் படமான குக்கூ விமர்சன ரீதியாகவும் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றதையடுத்து ராஜுமுருகன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2016இல் வெளியான அவரது ஜோக்கர் திரைப்படம் அதன் அரசியல் கருத்துகளுக்காகப் பெரிய வரவேற்பைப் பெற்று தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. அவரது கடைசி படமான ஜிப்சி தோல்விப் படமாக அமைந்தது.
இந்த நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கமெர்சியல் ஹீரோவான கார்த்தியோடு ராஜுமுருகன் சேர்ந்த ஜப்பான் படத்தின் அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்தின் முன்னோட்டங்களில் கார்த்தியின் உடல்மொழி, அவரின் வசன உச்சரிப்பு ஆகியவை சுவாரஸ்யமாக இருந்தன. மேலும், இந்தப் படத்தின் கதை, சில ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் என்ற நீராவி முருகனின் கதை எனவும் கூறப்படுகிறது.
ராஜுமுருகனின் முதல் முழுநீல கமெர்ஷியல் படமும் நடிகர் கார்த்தியின் 25வது படமுமான ஜப்பான் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.
ஜப்பான் படத்தின் கதை என்ன?
கோவையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு கொள்ளையர்கள் சிலரால் ரூ.200 கோடி மதிப்பிலான நகைகள் திருடப்படுகின்றன. கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடையில் உள்துறை அமைச்சர் கதாபாத்திரத்தில் வரும் கே.எஸ். ரவிக்குமாரும் பார்ட்னர் என்பதால் கொள்ளையர்களை காவல்துறை தீவிரமாகத் தேடுகிறது.
இந்தப் புள்ளியில்தான் காவல்துறைக்கு ஜப்பான் முனி (கார்த்தி) மீது சந்தேகம் வருகிறது. ஜப்பான் முனி ஒரு பெரிய திருடன். நாடு முழுவதும் சென்று பல்வேறு மாநிலங்களில் நகைகளைக் கொள்ளையடித்து அந்தப் பணத்தில் திரைப்படம் எடுத்து ஜாலியான வாழ்க்கை வாழ்பவன்தான் ஜப்பான் முனி.
காவல்துறை தன்னைத் தேடுவதைத் தெரிந்துகொண்டு தனது காதலியான சஞ்சுவை(அனு இம்மானுவேல்) கடத்திக்கொண்டு பல பகுதிகளுக்கு காவல்துறையிடம் இருந்து தப்பித்து ஓடுகிறான் ஜப்பான் முனி.
அந்தக் கொள்ளை சம்பவத்தில் நிஜமாகவே ஈடுபட்டது ஜப்பான் முனிதானா? அல்லது வேறு யாருமா? காவல்துறையினர் ஜப்பானை பிடித்தார்களா? இதுதான் படத்தின் மீதி கதை.
ஹீரோ கார்த்திக்கு ஜப்பான் எனும் பெயர் எப்படி வந்தது?
படத்தில் ஜப்பான் முனி பல ஆண்டுகளாக காவல்துறையால் பிடிக்க முடியாத திருடன். ஆனால், "படத்தில் ஒரு இடத்தில்கூட அதை பார்வையாளர்களை நம்ப வைக்கும் விதமாக எந்தக் காட்சியும் வைக்கவில்லை.
வெறும் வசனங்கள் மூலமாகவே ஜப்பான் முனி கதாபாத்திரத்திற்கான மாஸ் உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்த இயக்குநர் முயன்றுள்ளார். படம் பார்ப்பவர்கள் மத்தியில் அது எடுபடவில்லை," என இந்து தமிழ் திசை விமர்சனம் எழுதியிருக்கிறது.
மேலும், ஒரு காட்சியில் இரண்டாம் உலகப் போரில் குண்டுகள் போட்டு அழித்த பின்பும் எழுந்து நின்ற ஜப்பானின் பெயரைத் தனது அம்மா தனக்கு வைத்ததாகச் சொல்வார் கார்த்தி. இந்த வசனத்துக்கு "நியாயம் செய்யவேனும் ஒரு காட்சியை இயக்குநர் வைத்திருக்கலாம்," எனவும் தனது விமர்சனத்தில் இந்து தமிழ் திசை குறிப்பிட்டுள்ளது.
படத்தில் இருக்கும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்களாக இந்து தமிழ் திசை குறிப்பிடுவது கார்த்தியின் நடிப்பு மற்றும் வசனங்கள்தான். மொத்த படத்தையும் ஒற்றை ஆளாகத் தனது அலட்சியமான நடிப்பின் மூலம் கார்த்தி சுமந்துள்ளார் என்று பாராட்டியுள்ளது.
"அவர் இழுத்து இழுத்துப் பேசுவது ஆரம்பத்தில் துருத்திக் கொண்டு தெரிந்தாலும் போகப் போக ரசிக்க வைக்கிறது. படம் முழுக்க கார்த்தியின் அடிக்கும் ஒன்லைன் கவுன்ட்டர்கள் ரசிக்க வைக்கிறது," எனவும் இந்து தமிழ் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
படத்தின் முதல் பாதி பார்வையாளர்களை சோர்வடையச் செய்கிறதா?
ஜப்பான் திரைப்படம் ஒரு திருடன் போலீஸ் கதை. பொதுவாக ஒரு திருடன் போலீஸ் கதையில் இருக்க வேண்டிய விறுவிறுப்பு இந்தப் படத்தில் இல்லை என்று தினமணி விமர்சித்துள்ளது.
"படத்தின் முதல் பாதியிலேயே பார்வையாளர்கள் சோர்ந்துபோகும் அளவிற்கு இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதை சூடுபிடிக்கிறது. இருப்பினும் பல லாஜிக் மீறல்கள், தொய்வான பின்னணி இசை, தேவையற்ற பாடல்கள் படத்தின் மீதான ஈர்ப்பைக் குறைக்கின்றன," என தினமணி தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
தினமணியும் ஜப்பான் படத்தின் வசனங்கள் குறித்து நேர்மறையாக எழுதியுள்ளது. முக்கியமாக, "ஓட்டு போடும்போது லாஜிக் பார்க்காத நீங்க 'ஓட்டை' போடும்போது லாஜிக் பார்க்கறீங்களா?", "என்ன சொன்னாலும் நம்புற பொதுஜனமா நீ?", "கால நக்கறதே ஏறி மிதிச்சு மேல போகத்தான்" போன்ற அரசியல் வசனங்கள் ரசிக்க வைப்பதாக தினமணி குறிப்பிட்டுள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக இருந்தாலும் ஜிவி பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் ஈர்க்கவில்லை என தினமணி கூறியுள்ளது.
ராஜுமுருகன் பார்வையாளர்களை பழிவாங்கியிருக்கிறாரா?
தனது முந்தைய படங்களைப் போல் அல்லாமல் முழுக்க முழுக்க கமர்ஷியல் சினிமாபாணியில் ஜப்பான் படம் எடுக்கப்பட்டுள்ளது. தனது முந்தைய படமான ஜிப்சி தோல்வியடைந்ததற்கு பழிவாங்கும் வகையில் ராஜுமுருகன் இந்தப் படத்தை எடுத்திருப்பதுபோல் இருக்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
"உங்களுக்கு மாஸ் சினிமாதானே வேண்டும் இதோ வைத்துக் கொள்ளுங்கள் என ராஜுமுருகன் எடுத்ததுபோல் உள்ளதாக," அதன் விமர்சனத்தில் கூறியுள்ளது.
மேலும், ராஜுமுருகனின் முதல் கமர்ஷியல் படமான ஜப்பானின் திரைக்கதை அடுத்து என்ன நடக்கும் என யூகிக்க முடியும் வண்ணம் இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. ஒரு கதையாக சுவாரஸ்யமாக இருக்கும் ஜப்பான் திரைப்படத்தை திரையில் காட்சிகளாக பார்க்கும்போது அதே சுவாரஸ்யம் இல்லை எனவும் கார்த்தி இடம்பெறும் காட்சிகள் மட்டும் பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை உண்டாக்குவதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
ராஜுமுருகனின் முந்தைய படங்களில் ரசிகர்களை ஈர்த்த மனதை உருக்கும் காதல் காட்சிகளையும் அரசியல் பேசும் கதைக் களத்தையும் ஒட்டுமொத்தமாக ஒரு சுவாரஸ்யமான கமெர்ஷியல் படத்தையும் எதிர்பார்த்துச் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் தெரிவிக்கின்றது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)