You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி திடீரென இடைநீக்கம் செய்தது ஏன்? இதன் பாதிப்பு என்ன?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்புரிமையை உடன் அமலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் தமது கடமைகளை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று கூடிய போது இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம், அரசியல் தலையீடு ஆகிய காரணங்களே சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கூண்டோடு கலைத்த அரசு
இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்த பின்னணியில், உலகக்கோப்பை போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வி அடைந்தது. இது, இலங்கை அரசியலில் பல தாக்கத்தைச் செலுத்தியது.
இந்நிலையில், இந்திய அணியுடனான உலகக்கோப்பை போட்டிகளில் இலங்கை அணி படுதோல்வியைச் சந்தித்தது.
அதையடுத்து, இலங்கை அணியின் படுதோல்விக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளே காரணம் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பகிரங்க அறிக்கையொன்றின் மூலம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையடுத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் தனது ராஜினாமா கடிதத்தைக் கையளித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு புதிய இடைக்கால குழுவொன்றை விசேட வர்த்தமானி ஊடாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்திருந்தார்.
முன்னாள் அணித் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றம்
இந்த இடைக்கால குழு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணைகளை அடுத்து, இடைக்கால குழுவை தற்காலிகமாக இடைநிறுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சிகள் ஒன்றிணைந்து கொண்டு வந்த தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் சபையை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் தீர்மானம் சபைக்கு கொண்டு வரப்பட்டு, நேற்று காலை முதல் விவாதம் இடம்பெற்றது.
விவாதத்தின் பின்னர் நேற்று மாலை இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை இன்று தடை செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு
இலங்கை கிரிக்கெட்டை சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை செய்ததானது, நாட்டிற்கு அபகீர்த்தி என தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.
இலங்கையின் அரசியல் தலையீடு காரணமாக ஏற்படும் நிர்வாக சீர்கேடுக்கு இதுவொரு உதாரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.
சர்வதேச தரத்திலான அணியொன்றை இலங்கை உறுதி செய்தாலும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான நம்பிக்கை தற்போது இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான உதவிகளை எதிர்வரும் காலத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்காது எனவும், அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)