இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்பது சரியா?

ரவி

பட மூலாதாரம், TNDIPR

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தால், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றும் மத்திய அரசு, அதிகாரிகளை தேர்வு செய்வதால் அவர்கள் அதே பக்கம் நிற்பதில் எந்த குழப்பமும் இருக்க வேண்டாம் என்றும் ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்த கருத்து அரசியலமைப்புச் சட்டப்படி தவறானது என இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளாக பதவியில் உள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த செவ்வாயன்று, இந்திய ஆட்சிப்பணிக்கான இறுதி நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்கு தேர்வான நபர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பேசிய ஆளுநர் ரவி, "யூனியன் கவர்மெண்ட் என்ற சொல், இந்திய அரசைக் குறிப்பிடுகிறது, அதை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ஒன்றிய அரசு என்ற தமிழ் மொழிபெயர்ப்பை ஏற்க முடியாது என்றார். அந்த சொல் தமிழில், ஒரு மாவட்டத்தில் இருக்கும் சிறுபகுதியை குறிக்கிறது என்பதால், ஒன்றிய அரசைக் குறைத்து மதிப்பிடும் நோக்கில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினால் அதனை ஏற்கமுடியாது," அவர் கூறினார்.

மற்றொரு தேர்வரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, ''மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே வேறுபாடு இருந்தால், நீங்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மத்திய அரசு உங்களை தேர்வு செய்வதால் அதில் எந்த குழப்பமும் இருக்க வேண்டாம்,'' என்றார்.

இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கு வகுக்கப்பட்ட விதிகளில் ஆளுநர் ரவி தெரிவித்த கருத்து தொடர்பாக எதுவும் சொல்லப்பட்டுள்ளதா என்று அதிகாரிகளிடம் பேசினோம்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரனிடம் விளக்கம் கேட்டோம். ''ஆளுநரின் கருத்து முற்றிலும் தவறு. இந்த கருத்து, இந்திய அரசின் கூட்டாட்சி அமைப்புக்கு (federal structure)எதிரானது. இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளுக்கு சில விதிகள் உள்ளன. ஆனால் ஆளுநர் ரவி சொல்வதை போல, மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு இடையே குழப்பம் இருந்தால், அவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக நிற்கவேண்டும் என்ற நிலைப்பாடு எந்த விதிகளிலும் சொல்லப்படவில்லை,''என்கிறார்.

'' இதுவரை இரண்டு விதமான சித்தாந்தங்களை கொண்ட இரண்டு கட்சிகள் மத்திய அரசாகவும், மாநில அரசாகவும் செயல்பட்டிருக்கின்றன. இரண்டு அரசுகளுக்கும் ஒரு பிரச்னையில் இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அதில் ஒன்று சரி ஒன்று தவறு என்ற கண்ணோட்டத்தில் அதிகாரிகளான நாங்கள் வேலை செய்ததில்லை. எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது நிர்வாக பணி என்பதால், அதை தாண்டி சரி, தவறு என்ற நோக்கத்தில் வேலை செய்ததில்லை,''என்கிறார் பாலச்சந்திரன்.

35 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணியில் பணிபுரிந்தவர் பாலச்சந்திரன். மேற்கு வங்கத்தில், துணை கலெக்டர் பதவியில் தொடங்கி, பின்னர் ஓய்வு பெறுகையில், மேற்கு வங்கத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியை வகித்தவர்.

ஒரு மாநிலத்தில் உள்ள அதிகாரி தங்களுடைய பணிகளுக்கு தேவை என்று கருதினால், அந்த மாநில அரசிடம் கேட்கவேண்டும். அந்த அதிகாரியை மத்திய அரசின் பணிக்கு அனுப்புவதை மாநில அரசுதான் முடிவு செய்யும். இந்திய அரசியலமைப்புச்சட்டம் மாநில அரசுகளுக்கு தேவையான சுதந்திரத்தை அளித்துள்ளது. அதாவது கூட்டாட்சி தத்துவத்தில், மாநில உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பன்முகதன்மையை கருத்தில்கொண்டு இந்த விதிகளை உருவாக்கியுள்ளார்கள். அதிகாரிகள் மத்திய அரசின் நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று எந்த விதிகளும் இல்லை,''என்கிறார் பாலச்சந்திரன்.

தமிழகத்தில் பொறுப்பில் இருக்கும் பல ஐஏஎஸ் அதிகாரிகளிடம் ஆளுநரின் கருத்தை பற்றி பிபிசி தமிழ் பேசியது. பலரும் ஆளுநரின் கருத்து அவரது சொந்த கருத்தாக இருக்கலாம் என்றும் எந்த விதிகளிலும் மத்திய அரசின் பக்கம் அதிகாரிகள் இருக்கவேண்டும் என்ற விதி இல்லை என்றும் தெரிவித்தார்கள்.

பெயர் கூறவிரும்பாத மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், ''ஆளுநர் ரவி பல ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். அவரது சொந்த அனுபவத்தில் கூட அவருக்கு புரிதல் ஏற்படவில்லை என்பதைதான் இந்த கருத்து காட்டுகிறது. அவர் கூறும் கருத்து அடிப்படை விதிகளுக்கு புறம்பானது. இந்திய ஆட்சிப் பணியில் உள்ள அதிகாரிகள், அவர்கள் தேர்வான கேடர் மாநிலம் எதுவோ, அந்த மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்கள்.

மத்திய அரசின் தேவை இருப்பின், அது ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் வழியாகதான் அதிகாரிகளுக்கு சொல்லப்படும். எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு கேடரில் உள்ள அதிகாரிகள் ஒன்றிய அரசின் பொறுப்புகளை வகிக்கலாம், ஆனால் அவர்கள் தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் ஒரு வேலையைச் செய்யவேண்டும் என்ற தேவை ஏற்பட்டால், தலைமைச் செயலாளர் மூலம் உத்தரவு வந்தால், அதனை பின்பற்றவேண்டும், மீண்டும் அந்த மாநிலத்திற்கு வந்துவிடவேண்டும். 'unity of command' என்று சொல்வார்கள், ஒரு தலைமையின் கீழ் ஒரு மாநிலத்தின் அதிகாரிகள் இருப்பார்கள் என்பதால், அவர்கள் ஒன்றிய அரசின் சார்பாக இருக்கவேண்டும் என்பது தவறு,'' என்கிறார்.

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

மற்றொரு அதிகாரி பேசுகையில், 2001ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை ஒன்றிய அரசின் வேலைகளுக்காக அனுப்பிவைக்க மறுத்துவிட்டதை நினைவுகூர்ந்தார்.

 ''2001ல் சென்னை நகர காவல் ஆணையர் கே.முத்துக்கருப்பன், இணை ஆணையர் எஸ். ஜார்ஜ் மற்றும் துணை ஆணையர் கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோரை மத்திய அரசின் பணிக்காக அனுப்பவேண்டும் என்ற கேட்டார்கள். இவர்கள் மூவரும், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரை கைது செய்து தாக்கியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பான நிகழ்வுகளில் ஈடுபட்டவர்கள். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அந்த மூன்று அதிகாரிகளை அனுப்ப மறுத்துவிட்டார். அவர்களின் தேவை தமிழ்நாட்டில் இருப்பதால், அனுப்ப முடியாது என்று தெரிவித்தார். அதனால், அதிகாரிகள் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்கமுடியாது,''என்றார்.

மேலும், ''மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையில் நடக்கும் அதிகார சண்டைகளுக்கு அதிகாரிகளை இலக்காக மாற்றுவது தவறு. அதிலும் குறிப்பாக, அதிகாரியாக இருந்த ஒருவரான ரவி, இதுபோன்ற தேவையற்ற கருத்துக்களை சொல்வதை தவிர்க்கவேண்டும்,'' என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: