இந்தியாவில் 'வைர வேட்டை' நடக்கும் நகரம் - குடும்பம் குடும்பமாக பல ஆயிரம் பேர் என்ன செய்கிறார்கள்?

வைரம், பன்னா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சுவாமிதீன் பாலின் வீடு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது. அவரும் அவரது மகனும் பல வருடம் கடினமாக உழைத்ததற்கான பலன் கிடைத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் பன்னா நகரில் ஆரஞ்சு தோட்டத்தில் வசிக்கும் இந்தக் குடும்பம் சமீபத்தில் 32 காரட் 80 சென்ட் மதிப்புள்ள வைரத்தைக் கண்டுபிடித்துள்ளது.

இதன் மூலம் ரூ.1.5 கோடி வரை கிடைக்கும் என பால் குடும்பம் நம்புகிறது.

தீபாவளியை ஒட்டி, இந்த வைரங்கள் ஏலம் விடப்படும். அதில் கிடைக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை அரசு பிடித்தம் செய்து, மீதித் தொகையை சுவாமிதீன் கணக்கில் செலுத்தும்.

ஆனால் இவ்வளவு மதிப்புமிக்க வைரம் கிடைத்தபின்பும், பால் குடும்பம் ஓய்வெடுக்கும் அல்லது தேடுதலை நிறுத்தும் மனநிலையில் இல்லை.

பிபிசியிடம் பேசிய சுவாமிதீன் பால், “நாங்கள் நீண்ட காலம் கூலி வேலை செய்தோம். கூலி வேலை செய்து சொந்தமாகச் சிறிய வீடு ஒன்று கட்டினோம். பின்னர், என் மகனுடன் சேர்ந்து வைரங்களைக் கண்டுபிடிக்க ஒரு சுரங்கம் அமைத்தோம். நான்கைந்து ஆண்டுகள் ஆகியும் எதுவும் கிடைக்கவில்லை. இப்போது எங்கள் ஆசை நிறைவேறிவிட்டது. இப்போது எங்கள் நிலைமை சரியாகிவிடும் என்று நம்புகிறேன்,” என்றார்.

 தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வைரத்தைக் கண்டெடுத்த இரவு தன்னால் தூங்க முடியவில்லை என்று சுவாமிதீனின் மகன் ஜமுனா பால் கூறினார்.

அவர் மேலும் கூறும் போது, ​​"நான் இனி கூலி வேலை செய்ய மாட்டேன். வைரம் கிடைத்துவிட்டதால், நான் சுரங்கங்களில் மட்டுமே வேலை செய்வேன். சாப்பிட எதுவும் இல்லாவிட்டாலும் வைரச் சுரங்கத்தில்தான் வேலை செய்வேன்,” என்றார்.

சுவாமிதீன் போன்ற ஆயிரக்கணக்கானோர், இந்தியாவின் மூலை முடுக்கிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா என்ற சிறிய நகரத்திற்கு வந்து தங்களுடைய அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க வைரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு வரும் மக்களுக்கு வைரம் என்பது ஒரு கனவு, மோகம், போதை, அவர்களது வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றுவதற்கான வழி.

வைரம், பன்னா, இந்தியா
படக்குறிப்பு, பன்னாவில் வைரங்கள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மக்கள் தங்கள் தேடுதலை நிறுத்துவதில்லை
வைரம், பன்னா, இந்தியா
படக்குறிப்பு, இந்த (பாலின் கையில் இருப்பது) வைரம் மூலம் ரூ.1.5 கோடி வரை கிடைக்கும் என சுவாமிதீன் பால் குடும்பம் நம்புகிறது

தலைமுறைகள் கடந்த வைரத்தேடல்

இந்தியச் சுரங்க பணியகம் (Indian Bureau of Mines) இந்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் ஒரு பகுதி. அதன் 2022 ஆண்டு அறிக்கையின்படி, நாட்டின் வைர இருப்புகளில் 90%-க்கும் அதிகமானவை பன்னா நகரில் உள்ளன. அதாவது சுமார் 2.9 கோடி காரட் (28.597 மில்லியன் காரட்).

மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் இருந்து சுமார் 380 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரத்தில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை, உரையாடல், மற்றும் எதிர்பார்ப்புகளில் வைரங்கள் ஒரு முக்கியமான பகுதியாகும். காலை விடிந்ததும், ஆயிரக்கணக்கான மக்கள் வைரத்தைத் தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்கிறார்கள்.

இங்கிருக்கும் பல குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக வைரத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் ‘கக்கு’ என்றழைக்கப்படும் 67 வயதான பிரகாஷ் ஷர்மா. அவரது தந்தையும் வைரங்களைத் தேடி தனது வாழ்நாளைக் கழித்தார். பிரகாஷ் பன்னாவில் ஒரு கூடாரத்தில் வசிக்கிறார். தினமும் காலையில் வைரத்தை தேடிக் கண்டுபிடிக்கும் தனது கனவை நனவாக்கப் புறப்படுகிறார்.

பிரகாஷ், சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ஒரு வைரத்தைக் கண்டுபிடித்தார். பழைய நாட்களை நினைவு கூர்ந்த அவர், “1974-ஆம் ஆண்டு உயர்நிலைக் கல்வியை முடித்தேன். அந்தக் காலத்தில் எந்தத் துறையில் நல்ல வேலை கிடைத்தாலும் என் மனம் வேறு எதையோ தீர்மானித்திருந்தது. நான் இன்டர்மீடியட் தேர்ச்சி பெறுவதற்கு சில காலத்திற்கு முன்பு, எனது முதல் வைரத்தைக் கண்டுபிடித்தேன், அது சுமார் ஆறு காரட் இருந்தது. பின்னர் நான் வைரங்களை மட்டுமே தேடுவேன் என்று முடிவு செய்தேன்," என்கிறார்.

வைரங்கள் மீதான மோகத்தால், தனது வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பிரகாஷ் கூறுகிறார். அவர் இப்போது தனது சகோதரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் வசித்தபடி, வைரங்களைத் தேடுவதில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.

"இது எனக்கு ஒரு போதை. நான் வைரங்களை தேடச் செல்லவிலை என்றால், அன்று எனக்கு உடம்பு சரியில்லாததுபோல் தோன்றும்," என்கிறார்.

வைரம், பன்னா, இந்தியா
படக்குறிப்பு, பிரகாஷ், சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ஒரு வைரத்தைக் கண்டுபிடித்தார்

‘வாழ்க்கையை மாற்றிய வைரம்’

பன்னா அருகே உள்ள ரஹுனியா என்ற கிராமத்தில் வசிக்கும் முலாயம் சிங் என்பவர் 2020-ஆம் ஆண்டு சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வைரத்தைக் கண்டுபிடித்தார்.

இன்று முலாயம் சிங் ஒரு சிறிய கான்கிரீட் வீட்டைக் கட்டி தனது குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை சிறப்பாகக் கவனித்து வருகிறார்.

​​“நாங்கள் சிறுவயதிலிருந்தே வைரச் சுரங்கத்தில் வேலை செய்கிறோம். அப்பாவும் இங்குதான் வேலை செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, எங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. நாங்கள் நால்வரும் இணைந்து ஒரு வைரச் சுரங்கத்தை அமைத்திருந்தோம். வைரத்தைக் கண்டுபிடித்த போது, அதில் கிடைத்த பணத்தை வைத்து வீடு கட்டினோம், குழந்தைகளைப் படிக்க வைத்தோம், ஒரு விவசாய நிலம் வாங்கினோம்," என்கிறார் முலாயம் சிங்.

வைரம், பன்னா, இந்தியா
படக்குறிப்பு, ஒடிசாவிலிருந்து வந்த சுக்தேவ், பல ஆண்டுகளாக இங்கு வைரங்களைத் தேடி வருகிறார்

ஆண்டுகள் கடந்த போராட்டம்

ஆனால் இங்கு எல்லோருக்கும் சுவாமிதீன் அல்லது முலாயம் சிங்கைப் போல அதிர்ஷ்டம் அடிக்கவில்லை.

ஒடிசாவிலிருந்து வந்த சுக்தேவ், பல ஆண்டுகளாக இங்கு வைரங்களைத் தேடி வருகிறார். ஆனால் அவரது வாழ்வில் வைரங்கள் இன்னும் பிரகாசிக்கவில்லை.

"நான் யூடியூப்பில் ஒரு வீடியோவைப் பார்த்தேன், அதில் மக்கள் பன்னாவுக்கு வந்து தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேடிப் பார்க்கச் சொன்னார்கள். நான் என் சாமான்களை மூட்டை கட்டிக்கொண்டு இங்கு வந்தேன். ஆனால் இன்று வரை என் அதிர்ஷ்டம் கிட்டவில்லை," என்கிறார்.

பன்னாவின் சிங்பூர் பகுதியில் வசிக்கும் அமித் ஸ்ரீவஸ்தவா, பல ஆண்டுகளாக வைரங்களைத் தேடி வருகிறார்.

அவர், “எங்கள் பகுதியில் ருஞ்ச் ஆறு உள்ளது. அதில் பல வைரங்கள் காணப்படுகின்றன. அதில் வைரங்களைத் தேடுகிறேன். மழை நாட்களில் இங்கு வைரங்கள் கிடைக்கும். நான் இன்னும் அவற்றைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், வைரத்தின் மீதுள்ள பேராசையால் தான் இங்கு வருகிறேன்,” என்கிறார்.

ரமேஷ் குஷ்வாஹா என்ற காய்கறி வியாபாரி, ஒரே இரவில் பணக்காரர் ஆக வேண்டும் என்பதற்காக வைரங்களைத் தேடுவதாகக் கூறுகிறார்.

அவர், ​​“மழை நாட்களில் வைரத்தைத் தேடுவேன், மற்ற நாட்களில் காய்கறி விற்பேன். காய்கறிகளை விற்று யாரும் உடனடியாக பணக்காரராக முடியாது. எனவே வைரங்களைத் தேடுவதில் மும்முரமாக இருக்கிறேன். என்னுடைய நண்பர் ஒருவர் வைர வியாபாரியாக இருக்கிறார். நிறைய வைரங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்னும் அவற்றைக் கண்டுபிடிக்கவில்லை. எனது விதியில் அது இருந்தால், ஒரு நாள் வைரம் கிடைக்கும்,” என்றார்.

வைரம், பன்னா, இந்தியா
படக்குறிப்பு, பெரும்பாலும் ஆண்களே வைரம் தோண்டுவதில் ஈடுபட்டாலும், பெண்களும் சுரங்கத் தொழிலாளிகளாக வேலை செய்கிறார்கள்

வைரத்தை எப்படி கண்டுபிடிப்பது?

பன்னாவில் வைரங்களைக் கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

ஒருவர் அங்கு சென்று சட்டப்படி வைரங்களைக் கண்டுபிடிக்க விரும்பினால், அவர் என்ன நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்?

பன்னாவில் அமைந்துள்ள மஜ்கவான் சுரங்கம், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசியக் கனிம வளர்ச்சிக் கழகத்தால் (National Mineral Development Corporation - NMDC) இயக்கப்படுகிறது. இதுவே நாட்டின் ஒரே ஒழுங்கமைக்கப்பட்ட வைர உற்பத்தி அமைப்பாகும்.

இது தவிர, பன்னாவில், 8x8 மீட்டர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, யார் வேண்டுமானாலும் ஒரு வருடத்திற்குச் சட்டப்பூர்வமாக அங்கு வைரங்களைத் தேடலாம். இதற்காக அவர் ஆண்டுக்கு ரூ.200 மட்டுமே செலவிட வேண்டும். ஆனால் அவர் குத்தகைக்கு எடுத்த பகுதியில் வைரங்கள் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அத்தகைய சூழ்நிலையில், பலர் இந்த அதிகாரப்பூர்வ முறையைப் பின்பற்றுவதைத் தவிர்க்கிறார்கள்.

வைரம், பன்னா, இந்தியா
படக்குறிப்பு, வழக்கமாக பழைய சுரங்கங்களுக்கு அருகில் குழி தோண்டுகிறார்கள், பின்னர் அந்தக் குழியில் தண்ணீர் நிரப்பப்படுகிறது

வைரத்தைக் கண்டுபிடித்த பிறகு என்ன நடக்கும்?

அரசு குத்தகை நிலத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் யாராவது வைரம் கிடைத்தால், அவர் அந்த வைரத்தை பன்னாவில் உள்ள அரசு நியமித்துள்ள அரசு நகைக் கடைக்காரரிடம் எடுத்துச் செல்கிறார்.

அந்த நகைக் கடைக்காரர், வைரத்தின் நிறம், பிரகாசம், வடிவம், குறைபாடுகள் போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பிடுகிறார்.

பின்னர், வைரத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில், அதனைக் கண்டுபிடித்தவருக்கு அனைத்து விவரங்களும் அடங்கிய ரசீது வழங்கப்பட்டு, வைரம் அரசு நகைக்கடையில் வைக்கப்படுகிறது.

நகைக் கடைக்காரர் அந்த வைரத்திற்கான அடிப்படை விலையை முடிவு செய்கிறார். ஏலத்திற்கான காத்திருப்பு தொடங்குகிறது.

ஒவ்வொரு காலாண்டிலோ, வைரங்கள் கிடைப்பதைப் பொறுத்தோ, வைர அலுவலகம் பொது ஏலங்களுக்கு ஏற்பாடு செய்கிறது. அங்கு வைரங்களை யார் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம். அவை அதிக விலைக்கு விற்கப்படும்.

வைர ஏலத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானத்தில் 12.5%-த்தை இந்திய அரசு வைத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை வைர சுரங்கத் தொழிலாளியின் கணக்கில் அதாவது வைரத்தைக் கண்டுபிடிப்பவரது கணக்கில் டெபாசிட் செய்கிறது.

வைரம், பன்னா, இந்தியா
படக்குறிப்பு, 2016-ஆம் ஆண்டு 1,133 வைரங்கள் ஏலத்துக்கு வந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு 23 வைரங்கள் மட்டுமே ஏலம் போயின

பெருகி வரும் சட்டவிரோத வைரச் சுரங்கங்கள்

ஆனால் மேலே உள்ள செயல்முறை கதையின் ஒரு பக்கம் மட்டுமே.

இது தவிர, பன்னாவில் ஆயிரக்கணக்கானோர் குத்தகையின்றி அரசு நிலத்தில் வைரங்களைத் தேடி அலைவதை தினமும் பார்க்கலாம்.

எந்தப் பயமும் இல்லாமல், இவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் கூடாரங்கள், குடிசைகள், அல்லது வீடுகளில் இருந்து வெளியே வந்து வைரங்களைத் தேடுகிறார்கள்.

பெரும்பாலான சுரங்கத் தொழிலாளர்கள் வைரச் சுரங்கத்தில் முறையான பயிற்சி எதுவும் பெறுவதில்லை.

இவர்கள் வழக்கமாக பழைய சுரங்கங்களுக்கு அருகில் குழி தோண்டுகிறார்கள். சுரங்கத் தொழிலாளர்கள் கூழாங்கற்களைக் கொண்ட மண்ணின் அடுக்கை அடையும் வரை தோண்டுகிறார்கள். இது உள்ளூர் மொழியில் 'சால்' என்று அழைக்கப்படுகிறது.

பின்னர் அந்தக் குழியில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. ஈரமான மண் வடிகட்டி மூலம் வடிகட்டப்படுகிறது. பின்னர் அதைக் கழுவி உலர வைத்து வடிகட்டியில் படிந்துள்ள கற்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் தேடுதல் பணி தொடங்கும். இது வடிகட்டியில் இருக்கும் எண்ணற்ற கூழாங்கற்களில் இருந்து வைரத்தைத் தேர்ந்தெடுக்கும் முடிவற்ற செயல்முறை.

எங்களிடம் பேசும்போது, ருஞ்ச் ஆற்றின் கரையோரங்களில் அல்லது காலி நிலங்களில், மக்கள் காலையில் இருந்தே மண்வெட்டிகளைக் கொண்டு தோண்டத் தொடங்குகிறார்கள் என்று உள்ளூர் மக்களும், இதில் ஈடுபட்டுள்ள பலரும் கூறினர்.

இதேபோல், தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் எங்களிடம், “என் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய வைரத்தைக் கண்டுபிடித்தார். அந்தக் கதையைச் எங்களுக்குச் சொன்னார். அவர் வாழ்நாள் முழுவதும் வைரங்களைத் தேடினார். அவர் கொஞ்ச நாள் முன்பு காலமானார். இப்போது நான் அவரது பாதையில் வைரங்களைத் தேடுகிறேன்,” என்றார்.

தான் வைரம் தேடுவது சட்டவிரோதமானது என்று தனக்குத் தெரியும் என்றும் அந்த நபர் கூறுகிறார்.

அப்படியானால், வடிகட்டியில் படிந்திருக்கும் கற்களில் எது சாதாரண கூழாங்கல், எது வைரம் என்று எப்படி அடையாளம் காண்பது?

இதற்குப் பதிலளித்த சுரங்கத் தொழிலாளி ஒருவர், “நீங்கள் வைரத்தைப் பார்க்கும்போது அல்லது தொடும்போது, ​​உடலில் ஒரு மின்சாரம் பாய்வது போல் இருக்கும். கல்லுக்கு உயிர் வந்தது போல் தெரியும். வைரப் பிரியர்கள் இதைத் தவற விடமாட்டார்கள்,” என்றார்.

சட்டப்பூர்வமாக ஒரு வைரத்தைப் பெற்ற ஒருவர் அவர் அதை மதிப்பிடுவதற்கு அரசாங்க நகைக் கடைக்காரரிடம் சென்றால், அது சில சமயங்களில் ஆபத்தாக முடியும் என்கின்றனர் இவர்கள். ஏனெனில் அவர்கள் குற்றவாளிகளால் அணுகப்படும் ஆபத்து உள்ளது, என்கின்றனர்.

வைரத்திற்குப் பணம் பெறும் போது திருட்டு பயமும் உள்ளது. இதனால், அரசின் வழிமுறையைக் கடைப்பிடிக்க இம்மக்கள் அஞ்சுகின்றனர்.

சட்டவிரோதமாக வைரங்களை வாங்கி விற்பதில் ஈடுபட்டுள்ள உள்ளூர் நபர் ஒருவர் கூறுகையில், “பன்னாவில் கிடைத்த வைரங்களில் 10%-15% மட்டுமே வைர அலுவலகத்திற்கு வருகிறது. மீதமுள்ளவை தனியாருக்கு விற்கப்படுகின்றன. உடனடி மற்றும் வரியில்லா வருமானத்தின் கவர்ச்சியால் கருப்புச் சந்தை பெருகிவருகிறது. அதேசமயம், அரசு வைர அலுவலகத்தில் வைரத்தை டெபாசிட் செய்தால், ஏலம் வரை காத்திருக்க வேண்டும். அதன் பின்னரே பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

இப்படி சட்டவிரோதமாக வைரத்தை தேடும் நபர்களின் பட்டியலில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

வைரம், பன்னா, இந்தியா
படக்குறிப்பு, சுரங்க அதிகாரி ரவி படேல்

சட்டவிரோதச் சுரங்கம் பற்றி அரசாங்கம் என்ன சொல்கிறது?

பன்னாவில் சட்டவிரோத வைரச் சுரங்கம், மற்றும் வைரங்களின் கறுப்புச் சந்தை பற்றிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பன்னா மாவட்டச் சுரங்க அதிகாரி, ‘நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக்’ கூறினார்.

ருஞ்ச் ஆறு மற்றும் பன்னாவில் சட்டவிரோதச் சுரங்கம் தோண்டுவது குறித்து அரசு சுரங்க அதிகாரி ரவி படேலிடம் பிபிசி பேசியது.

​​“நாங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வைப் பரப்பி, பன்னாவில் கிடைக்கும் வைரங்களை வைர அலுவலகத்திற்குக் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கிறோம். வைரம் மிகவும் சிறியது, அதை யார் கண்டுபிடித்தார்கள் அல்லது யாருக்கு விற்றார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்,” என்றார்.

மேலும், “ருஞ்ச் ஆற்றங்க்கரையில் தோண்டப்பட்ட சுரங்கங்களைப் போல சட்டவிரோத சுரங்கங்களைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சட்டவிரோதச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளோம். இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் நிலைமை கட்டுக்குள் உள்ளது," என்கிறார்.

கறுப்புச் சந்தையில் வைர விற்பனை குறித்து எழுந்த குற்றச்சாட்டு பற்றி ரவி படேல் கூறும்போது, ​​“வைரத்தைக் கறுப்பு சந்தையில் விற்பது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும், சில நழுவிவிடுகின்றன என்பதுதான் உண்மை. கறுப்புச் சந்தையில் ஈடுபடக்கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதில் கவனம் செலுத்துகிறோம்,” என்கிறார்.

பன்னாவில் வைரங்களைத் தேடும் பெரும்பாலான மக்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலருக்கு வைரங்களைக் கண்டுபிடிப்பதற்கான சட்டப்பூர்வ வழி என்னவென்று கூட தெரியாது.

சட்டவிரோத வைரச் சுரங்கப் பிரச்னையை சமாளிக்கிறோம் என்று அதிகாரிகள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், பன்னாவுக்கு ஏலத்துக்கு வரும் வைரங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து குறைந்து வருகிறது.

2016-ஆம் ஆண்டு 1,133 வைரங்கள் ஏலத்துக்கு வந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு 23 வைரங்கள் மட்டுமே ஏலம் போயின.

வறுமை, வேலையின்மையால் பாதிக்கப்பட்ட பகுதி

வறுமையின் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மத்திய அரசு தயாரித்துள்ள குறியீட்டின்படி, மத்தியப் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் பன்னாவும் ஒன்று.

பன்னா பகுதி ஏழ்மை, தண்ணீர் பற்றாக்குறை, மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்னைகளுடன் தீவிரமாகப் போராடி வருகிறது. இங்கு வேலையில்லா திண்டாட்டமும் ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. உள்ளூர் மக்கள் வைரச் சுரங்கம், கூலித்தொழில் மற்றும் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.

பெரும்பாலும் ஆண்களே வைரம் தோண்டுவதில் ஈடுபட்டாலும், பெண்களும் சுரங்கத் தொழிலாளிகளாக வேலை செய்கிறார்கள். இருப்பினும், இங்கு பெரிதாக வேலைவாய்ப்புகள் இல்லை. தேசிய குடும்பச் சுகாதார ஆய்வின்படி, பன்னாவின் குழந்தைகளில் 23.2% பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். அதே சமயம் 15 முதல் 49 வயதுடைய பெண்களில் 59% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரம், பன்னா, இந்தியா
படக்குறிப்பு, பன்னாவில் வைரங்களைத் தேடும் பெரும்பாலான மக்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

சுற்றுச்சூழல் கவலைகள்

பன்னாவில் சுரங்கம் தோண்டப்படுவது தொடர்வதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலையையும் அதிகரித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தைத் தடுக்கும் வகையில் வைரச் சுரங்கத்தைக் கட்டுப்படுத்த அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள பன்னா புலிகள் காப்பகம் பற்றிய கவலைகளும் உள்ளன. அங்கு தற்போது சுமார் 50 புலிகள் உள்ளன.

இந்த பகுதியைச் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானதாக மாற்றச் சுரங்க செயல்முறைகளை மட்டுப்படுத்த அரசாங்கத்தின் மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும், அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்குத் தடை மற்றும் அபராதம் விதிக்கும் விதிமுறை உள்ளது.

பன்னாவில் பல ஆண்டுகளாக வைரங்களைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்போது இது அவர்களுக்கு பணம் சம்பாதிப்பது, வாழ்க்கையை மாற்றுவது ஆகிய காரணங்களையும் மீறிச் சென்றுவிட்டது.

வைர வேட்டை இப்போது அவர்களுக்கு அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. மீண்டும் ஜம்னா பால், அமித் ஸ்ரீவஸ்தவா, பிரகாஷ் ஷர்மா போன்ற பலர் வைரத்தைத் தேடி அடுத்த நாள் காலை வீட்டை விட்டு வெளியே செல்ல தான் போகிறார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)