You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திமுக மூத்த அமைச்சர் எ.வ.வேலு இடங்களில் வருமானவரித்துறை சோதனை - முழு விவரம்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
திமுகவின் மூத்த தலைவர்களில் பலம் பொருந்திய நபரான எ.வ.வேலு(72) தற்போது வருமான வரித்துறை சோதனையை சந்தித்து வருகிறார்.
அமைச்சர் வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகின்றது. திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.
ஏற்கனவே மூத்த அமைச்சர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கடந்த மாதம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. தற்போது அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் அமைச்சர் வேலு.
தமிழ்நாடு அமைச்சரவையில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகளை தன்வசம் வைத்துள்ளவர் எ.வ.வேலு. 1984ல் அதிமுக சார்பாக திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
தனது அரசியல் வாழ்வை அதிமுகவில் தொடங்கியிருந்தாலும், அதிமுகவில் ஜானகி, ஜெயலலிதா அணியாக கட்சி பிரிந்தபோது, ஜானகி அணியில் இருந்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் 2000ல் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு, தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறார். தற்போது அவர் ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டுவருகிறார்.
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் ஐந்து வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றவர் எ.வ.வேலு என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இவருக்கு சொந்தமான சுமார் 50 இடங்களில், சோதனை தற்போது நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வேலுவின் துறையான பொதுப்பணித்துறையில் இதுவரை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரியவந்துள்ளது. 2021ல் ஏற்கனவே வேலுவுக்குச் சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை குறித்து திமுக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதையும் வெளியிடவில்லை.
சோதனைகள் குறித்து எந்த பதற்றமுமில்லை- திமுக
திமுக அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை சோதனை தொடரந்து நடைபெறுவது குறித்து பிபிசிதமிழிடம் பேசிய திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், எதிர்க்கட்சியான பாஜக திமுக மீது என்ன குற்றம் சுமத்தலாம் என இரவு பகலாக யோசித்துவருவதாக சொல்கிறார்.
''பலமுயற்சிகள் எடுத்துப்பார்க்கிறார்கள், அவை அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. முதலில் அமலாகக்துறை தற்போது வருமானவரித்துறை சோதனை. இதுபோல பல சோதனைகளில் அவர்களால் எதையும் நிறுவமுடியவில்லை. திமுக ஊழல் கட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்த பலவகையில் முயற்சி செய்கிறார்கள். இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதுபோன்ற சோதனைகளை செய்கிறார்கள். மக்கள் இதில் இருந்து பாஜகவின் செயல்பாடு பற்றி தெரிந்துகொள்கிறார்கள். எங்களுக்கு பலம் சேர்க்கும் வகையில்தான் இந்த சோதனைகள் அமைகின்றன,''என்கிறார் சரவணன்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் அறிவித்ததும், அந்த மாநில முதல்வரின் மகன் வீட்டில் சோதனை செய்தார்கள். அதேபோல டெல்லி, தமிழ்நாடு என எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் சோதனை செய்கிறார்கள் என்று பட்டியலிடுகிறார் சரவணன். அதனால், வருமானவரித்துறை சோதனை குறித்து எந்த பதற்றமும் கட்சியில் ஏற்படவில்லை என்கிறார் அவர்.
சோதனை நடைபெறும் இடங்கள்
திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் வேலுவின் இல்லம், அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள், கம்பன் மகளிர் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், அருணை கிரானைட், ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளி ஆகிய இடங்களில் சோதனை தொடங்கியுள்ளது. கல்வி நிறுவங்களில் வருமானவரி துறையின் சோதனை தொடர்வதால், அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. சென்னையில் உள்ள இரண்டு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் அமைச்சர் வேலுவுக்கு உள்ள பங்குகள் குறித்தும் சோதனை நடைபெறுகிறது. இந்த நிறுவனங்களின் கோவை அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது.
விழுப்புரத்தில் அமைச்சர் வேலுவிற்கு நெருக்கமானவரின் கோல்டன் கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர் பிரேம்குமார் வீடு, கடை, கெஸ்ட் ஹவுஸ் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
விழுப்புரத்தில் வேலுவிற்கு ஆதரவாக உள்ள, ஆளவந்தார் மோட்டார்ஸ் மற்றும் கோல்டன் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் கோல்டன் மார்பிள்ஸ் நிறுவனங்களை நடத்தி வரும் பிரேம்குமாரின் வீடு மற்றும் கடை ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.
கோவையில் அமைச்சர் எ வ வேலுவுக்கு சொந்தமான ஐந்து இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தில்
திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபகுதியில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீ ராமின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல் சிங்காநல்லூர் பகுதியில் திமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.எம்.சாமி இல்லத்தில் 4 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடந்தி வருகின்றனர்.
மீனா ஜெயக்குமார் மற்றும் எஸ்.எம்.சாமி ஆகியோர் அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளர்கள் என்பதுடன், ரியல்எஸ்டேட் தொழிலிலும் தொடர்புயவர்களாக இருந்து வருகின்றனர். மீனா ஜெயக்குமாரின் கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் உட்பட வேறு சில தொழில்களிலும் தொடர்புடையவர்கள் என்பதால் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.
இதேபோல சவுரிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள காசாகிராண்ட் கட்டுமான அலுவலகத்திலும் பீளமேடு பகுதியில் உள்ள Sheffield tower என்ற இயற்கை உணவு மற்றும் கட்டுமான நிறுவனத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்தினர்.
திமுக பிரமுகர் மீனா ஜெயகுமாரின் மகன் ஸ்ரீராம் Sheffield tower நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள நிலையில் இந்த நிறுவனத்திலும் காலை முதல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
ஏற்கனவே, திமுகவில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் வைத்துள்ளது. அடுத்ததாக, சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இரண்டு நாட்கள் விடியவிடிய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
அடுத்ததாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த மாதம் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெறும் இந்த சோதனைகள் நாடாளுமன்றதேர்தல் நெருங்கிவருவதால் நடத்தப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
திமுகவில் எ.வ.வேலுவின் பங்கு என்ன?
அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனைகள் குறித்தும், தேர்தலில் அவரின் பங்கு குறித்தும் மூத்த பத்திரிகையாளர் பிரியனிடம் கேட்டோம்.
கடந்த மாதம் திருவண்ணாமலையில், பூத் ஏஜென்ட்கள் மற்றும் கடைநிலை உறுப்பினர்களை இணைத்து பெரிய சந்திப்பு ஒன்றை வேலு நடத்தியதாகவும் அந்த நிகழ்வு அனைத்து கட்சியினர் மத்தியிலும் கவனம் பெற்றது என்கிறார் பிரியன். கல்லூரி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் என பல நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திவருவதால், திமுகவின் தேர்தல் நிதிக்கான பங்கில் இவரது பங்கும் முக்கியம் பெறுகிறது என்கிறார்.
''வேலு தொடக்கத்தில் அதிமுகவில் இருந்தாலும், 2000ல் இருந்து திமுகவில் தொடர்ந்து நீடித்துவருகிறார். திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் நல்ல உறவை பேணுபவர். கடந்த மாதம் சுமார் 15,000 உறுப்பினர்களை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை அவர் நடத்தியிருந்தார். உற்சாகமான வரவேற்பு அளித்து, தொண்டர்களிடம் தேர்தல் வெற்றி குறித்து பேசி, மேலும் கட்சிக்கு பலத்தை சேர்த்திருக்கிறார். கட்சி மேலிடத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கமான நபராக இருப்பவர். அதனால் வேலுவின் இருப்பு கட்சிக்கு தேர்தல் சமயத்தில் பெரிய பலமாக இருக்கும்,''என்கிறார் பிரியன்.
செந்தில் பாலாஜி தொடங்கி, திமுகவில் சோதனையை சந்திக்கும் மூத்த அமைச்சர்கள் பட்டியலில் சேர்ந்துள்ள வேலு, தற்போது நடைபெறும் சோதனை வலையில் சிக்காமல் இருந்தால், அவருக்கான பலம் மேலும் அதிகரிக்கும் என்றும் கணிக்கிறார் பிரியன்.
''கருணாநிதியை காட்டிலும், ஸ்டாலின் பொறுப்புக்கு வந்தபின்னர்தான் வேலுவின் கை கட்சியில் ஓங்கியுள்ளது என்று சொல்லலாம். தற்போது கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் கூட்டங்களில், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியவர்களோடு, வேலுவும் அழைக்கப்படுகிறார் என்பதால் இவரின் முக்கியத்துவம் கூடியிருக்கிறது என்பதுதான் அர்த்தம். அதனால், அமைச்சர் வேலுவின் இடங்களில் நடைபெறும் சோதனைகளை திமுக கவனத்துடன் பார்த்துவருகிறது,''என்கிறார் அவர்.
மேலும் திருவண்ணாமலை தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக வேட்பாளர் எஸ்.தணிகைவேலுக்கு எதிராக போட்டியிட்ட வேலு, அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். அந்த வெற்றி என்பது, இதுவரை திருவண்ணாமலை தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில், பதிவான வாக்கு வித்தியாசங்களில், அதிக பட்ச வாக்குவித்தியாசத்தை பெற்ற தேர்தலாக அமைந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)