சிவாஜியின் புலி நகம் லண்டனில் இருந்து மீட்பு - 'செங்கோல்' நிகழ்வுடன் அதை இணைத்து பேசுவது ஏன்?

    • எழுதியவர், மயுரேஷ் கொன்னூர்
    • பதவி, பிபிசி மராத்தி

சிவாஜியின் புலி நகம் மராட்டிய வரலாற்றில் அதிகம் பேசப்படும் ஆயுதங்களில் ஒன்று. இதற்குக் காரணமாக‌ அமைந்தது அப்சல் கானை வீழ்த்திய சண்டை.

அதில் சிவாஜி புலி நகத்தைப் பயன்படுத்தி அப்சல் கானை வீழ்த்திய கதை மராட்டிய மக்கள் ஒவ்வொருவருக்கும், அக்கால வரலாறு தெரிந்தவர்களுக்கும் அறிமுகமான‌ கதை.

சிவாஜியின் காலகட்டத்தில் மற்ற போர்களும் ஆயுதங்களும் பல நூற்றாண்டுகள் கடந்தும் மராட்டிய மக்களின் நினைவுகளில் பதிந்துள்ளன. சிவாஜியின் பவானி மற்றும் ஜகதம்பா வாள், பாஜி பிரபு தேஷ்பாண்டேவின் தண்டபாட்டா ஆகியவை இதற்குச் சில உதாரணங்கள்.

எனினும், சிவாஜிக்கும் அப்சல் கானுக்கும் இடையே நடந்த போர் வேறு எந்தப் போரையும் விட பிரபலம்.

சிவாஜி காலத்திய இந்தப் புலி நகத்தை 2026 நவம்பரில் இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வர மராட்டிய அரசு தற்போது லண்டனில்‌ உள்ள 'விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்துடன்' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அரசாங்கத்தின் சார்பாக லண்டனுக்கு சென்ற அமைச்சர்கள் சுதீர் முங்குந்திவார் மற்றும் உதய் சாமந்த் செவ்வாயன்று அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுகுறித்து மராட்டியத்தில் பெரும் விவாதம் நடந்து வருகிறது.

மராட்டிய மக்களின் மனதில் நிரந்தர இடத்தைப் பெற்றவரான சிவாஜியின் புலி நகம் போலத் தோற்றமளிக்கும் இந்த ஆயுதங்களை மட்டுமல்ல, பல வரலாற்றுப் பொருட்களையும், நினைவிடங்களையும், சின்னங்களையும் மராட்டிய வரலாற்றின்‌ மற்றும் கலாசாரத்தின் அடையாளங்களாக மாற்றினார்.

அவை உணர்ச்சிபூர்வமான பரிமாணத்தைப் பெற்றன. எனவே, அவை அடிக்கடி அரசியலில் பயன்படுத்தப்படுகின்றன. இது மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அரசியலிலும், பல்வேறு மாநிலங்களிலும் அங்குள்ள உணர்வுகளுக்கு ஏற்ப இத்தகைய வரலாற்று, கலாசாரச் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, இந்திய அரசியலில் மிக முக்கிய போக்காக தேசியவாதம் இருந்து வருகிறது. மதத்திலிருந்து வரலாறு வரை, அனைத்து அம்சங்களும் அரசியல் பிரசாரத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுதங்களும், அனைத்து பிற கலாசார சின்னங்களும் இடம் பெறுகின்றன.

அதனாலேயே புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் 'செங்கோல்' நிறுவப்பட்ட போது, அதன் பின்னால் உள்ள அரசியல் குறித்துக் கேள்வி எழுந்தது.

வரலாற்று நாயகர்களின் உடைமைகளை இந்தியாவிற்கு வெளியே இருந்து மீட்டுக் கொண்டு வருவதும், அதற்காக பாராட்டு பெறுவதும், அரசியலில் அதைப் பயன்படுத்துவதும் முன்பும் நடந்துள்ளது. உண்மையில், இந்த கலாசார, வரலாற்று சின்னங்கள் திரும்பப் பெறப்படுமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அதுபற்றிய வாக்குறுதிகளும் அறிவிப்புகளும், அரசியலின் ஒரு பகுதியாக எப்போதுமே‌ இருந்து வந்துள்ளன.

எனவே, சிவாஜியின் புலி நகம் சில ஆண்டுகளுக்குப் பிறகு மராட்டியத்திற்கு திரும்பும் நிலையில், அதன் மீதான அரசியல் போராட்டமும் நடக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் அரசியலில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியதா, இப்போது ஏதும் தாக்கம் இருக்குமா என்று பார்ப்போம்.

'பவானி வாளைக் கொண்டு வருவேன்' என்று அந்துலே கூறியபோது...

சத்ரபதி சிவாஜியின் 'பவானி வாள்' மராட்டிய வரலாற்றுப் பொக்கிஷங்களில் முக்கியமானது. இந்த வாள் மராட்டியத்தின் பெருமை. இதைப் பற்றிப் பல புராணங்களில் அறியப்படுகின்றன. பவானி வாள் மற்றும் ஜெகதாம்பா வாள் குறித்து வரலாற்றாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இந்த மகாராஜாவின் வாள்கள் பற்றிய உணர்வு மாறாமல் உள்ளது.

எனவேதான், பிரிட்டனில் இருப்பதாகக் கூறப்படும் இந்த வாளை மீண்டும் கொண்டு வருவதற்கான கோரிக்கை மராட்டியத்தில் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இதுகுறித்துப் பல விவாதங்களும், போராட்டங்களும் நடந்துள்ளன. இந்த பவானி வாளை மீட்டு கொண்டு வருவதற்கான அறிவிப்புகளும் பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது எப்போதும் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளில் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது.

ஒருமுறை இந்த வாக்குறுதி கிட்டத்தட்ட நிறைவேற்றப்படும் நிலை உருவானது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் காங்கிரஸின் அப்துல் ரஹ்மான் அந்துலே.

பவானி வாளை திரும்பக் கொண்டு வரும் இயக்கம் 80களில் நடந்தது. அந்துலே வாளை திருப்பிக் கொண்டு வருவதாக அறிவித்தார். இந்த வாள் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு பொருளைக் கொண்டு வர, பிரிட்டனில் உள்ள மற்ற அருங்காட்சியகங்களைவிட, அங்கு வேறுபட்ட செயல்முறை இருந்தது.

இதுதொடர்பாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ கடிதப் பரிமாற்றங்கள் மூலம் சந்திப்பு ஒன்றையும் அந்துலே ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே அது விஷயத்தில் நம்பிக்கைக் கீற்று தோன்றியிருந்தது.

ஆனால் இதற்கிடையில் அந்துலேவின் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. அரசு சிக்கலில் மாட்டிக்கொண்டு அந்துலே பதவி விலக நேரிட்டது. அவரது பதவிக் காலத்தில் சிவாஜியின் வாளை மீண்டும் கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட அந்த இயக்கம் நிறைவடையவில்லை. பின்னர் பாபா சாகேப் போஸ்லே அரசு வந்தது. ஆனால் இந்த முயற்சிகள் மேலும் முன்னேறவில்லை. எனவே வாளும் திரும்பக் கொண்டு வரப்படவில்லை.

பவானி வாள் எது, அது எங்கே உள்ளது, அது பிரிட்டனில் உள்ளதா? அது பவானி வாளா அல்லது ஜகதம்பா வாளா என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

சில அறிஞர்கள், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இளவரசர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது அவர்களுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட ஜகதம்பா வாள்தான் வெளிநாட்டில் உள்ள வாள் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சி நோக்கிலும் வரலாற்று நோக்கிலும் மகாராஜாவின் வாளுக்கு முக்கியத்துவம் மிகவும் அதிகம். அதை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற உணர்ச்சியும் வலுவாகவே உள்ளது. எனவே, இது அரசியல் விவாதங்களில் எப்போதும் இருக்கும்.

தற்போது சிவாஜியின் புலி நகம் குறித்து அனைத்துத் தரப்பிலும் விவாதம் நடந்து வருகிறது. இந்திரஜித் சவான் போன்ற அறிஞர்கள் இந்தப் புலி நகம் சிவாஜியோடு தொடர்புடையவையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். உணர்வுகளோடு விளையாடாமல் உறுதியான வரலாற்று ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்று அரசுக்கு சவால் விடுத்துள்ளது சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி.

'மகா-யுதி' அரசாங்கம் இந்தப் புலி நகத்தை லண்டனிலிருந்து மும்பைக்கு கொண்டுவர பெரிய திட்டத்தை வகுத்துள்ளது. இந்தப் புலி நகம் மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட உள்ளது.

இயல்பாகவே, இந்த நடவடிக்கையும் தேர்தலின் போது அரசியல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும். மராட்டியத்தின் வரலாறும், கலாச்சாரமும் இன்றும் சத்ரபதி சிவாஜியுடன் இணைக்கப்பட்டுள்ளதே காரணம். மராட்டிய தேசியவாதத்தில் சிவாஜியின் செல்வாக்கு மிக அதிகம்.

அவரின் அரண்மனைகளில் உள்ள வாள்கள், புலி நகம் மற்றும் அவரின் கோட்டைகள் உள்ளிட்டவற்றோடு மராட்டியத்தின் நவீன அரசியலிலும் இந்த செல்வாக்கை காணலாம்.

சிவசேனாவின் பெயரும், வளர்ச்சியும் சிவாஜியுடன் தொடர்புடையவை. ஜேம்ஸ் லேன் எழுதிய சிவாஜி பற்றிய நூலுக்கு எதிரான வழக்கின் பிறகு அரசியல் கணக்கீடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி நினைவுச்சின்னம் அமைப்பதற்கான கோரிக்கைகள், பாரதிய ஜனதா கட்சி 2014 தேர்தலில் நடத்திய 'சத்ரபதி சிவாஜியின் ஆசீர்வாதம்' என்ற‌ பிரச்சாரம் ஆகியவை சிவாஜியின் செல்வாக்கிற்கு சில உதாரணங்கள்.

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா எலும்புகளை மோதி மீட்ட போது...

சமூகத்தில் மதிக்கத்தக்க, உணர்வுப் பூர்வமான விஷயங்கள், வெளிநாடுகளில் இருந்தால் அவைகளை மீண்டும் கொண்டு வந்து, அவற்றை அரசியல் பிரசாரத்தில் பயன்படுத்துவது இந்தியாவில் வழக்கமாக உள்ளது. இதுபோன்ற சில உதாரணங்களை சமீப வரலாற்றிலும் காணலாம்.

உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோதி, 2003 ஆம் ஆண்டு, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, சுதந்திரப் போராட்டத்தின் பெரும் தலைவரான ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் எச்சங்களை சுவீடனில் இருந்து இந்தியாவுக்கு முதன்முறையாக கொண்டு வந்தார்.

1857 ஆம் ஆண்டு, இன்றைய குஜராத்தின் கட்ச் பகுதியில் பிறந்தவரான ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, சமஸ்கிருத ஆசிரியராக இங்கிலாந்திற்குச் சென்றார், ஆனால் அங்கிருந்து அவர் புரட்சி இயக்கத்தில் சேர்ந்தார்.

இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் நடத்தப்பட்ட இயக்கங்கள் 'இந்தியா ஹவுஸ்' இன் பங்களிப்புடனே முன்னேறின. ஷியாம்ஜி 1905 ஆம் ஆண்டு லண்டனில் 'இந்தியா ஹவுஸ்' ஐ நிறுவினார். சாவர்க்கர் உள்ளிட்ட பல புரட்சியாளர்கள் இங்கு தங்கியிருந்தனர்.

அவர் 'இந்திய சமூகவியலாளர் கழகத்தையும்', 'இந்திய சுயராஜ்ய சங்கத்தையும்' நிறுவினார். பின் அவர் லண்டனை விட்டு வெளியேறி பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தார். அவர் 1930 இல் இறந்தார். அவரது எச்சங்கள் சுவீடனின் ஜெனீவா நகரில் இருந்தன.

குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோதி இருந்தபோது வர்மாவின் எலும்புகளை மீட்டு கொண்டு வந்தார். அதற்காக 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெனீவா சென்ற மோதி, எலும்புகளை பெற்றார். இந்தியாவிற்கு‌ அவற்றை கொண்டு வந்த பிறகு, ஒரு 'வீர அஞ்சலி யாத்ரா'வை ஏற்பாடு செய்து மாநிலம் முழுவதும் பயணம் செய்தார். இந்த பயணம் 17 மாவட்டங்களின் வழியாக சென்றது. பின் அவை மண்டவி பகுதியில் வர்மாவின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டு அவருககு ஒரு நினைவுச்சின்னமும் அமைக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக தேசியவாத உணர்வும், குஜராத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா மீதான மாநில உணர்வும் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தின.

குஜராத்தைச் சேர்ந்தவரும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் பட்டேலின் உலகின் மிக உயரமான சிலை மோதியின் முயற்சியால் நிறுவப்பட்ட நிகழ்விலும் தேசியவாத உணர்ச்சித் தூண்டலைப் பற்றி அரசியல் விவாதிக்கப்பட்டது.

நரேந்திர மோதியும், பாரதிய ஜனதா கட்சியும் கலாசார தேசியவாதம் என்ற நோக்கில் இதுபோன்ற நிகழ்வுகளையும், மதத்துடன் தொடர்புடைய சின்னங்கள் உள்ளிட்டும் அரசியல் களத்தில் தீவிரமாகப் பயன்படுத்தி வருவதாக எப்போதும் விமர்சனம் எழுகிறது.

நினைவுச்சின்னங்கள், கோவில்கள், மதம் சார்ந்த வரலாற்று நபர்களின் நினைவுச்சின்னங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் புனிதர்கள் உள்ளிட்டவை எப்போதும் அரசியல் பிரசாரத்தில் இடம் பெறுகின்றன.

மேலும், இந்திய கலாசார சின்னங்கள் வெளிநாடுகளில் இருப்பதும் ஒரு பிரச்னை ஆகும். ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். நரேந்திர மோதி 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்ற போது, அமெரிக்காவின் வசம் இருந்த 157 இந்திய தொல்பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இவற்றில் இந்தியாவின் பல்வேறு கலாசார, மத தொடர்புகள் கொண்ட தொல்பொருட்கள் இருந்தன.

இதுபோன்ற பொருட்கள் சமூகத்தின் உணர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா அரசு, வெளிநாடுகளில் உள்ள இதுபோன்ற பொருட்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரும் விஷயத்தில், கொள்கையாகவே கொண்டு கவனம் செலுத்தி வருகிறது.

'தி இந்து'வில் வெளியான செய்தியின்படி, 2014 முதல் 2021 வரை உலகம் முழுவதிலும் இருந்து 200 வரலாற்றுச் சின்னங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்று மத்திய அரசு‌ அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த நாற்பது ஆண்டுகளில் எந்தவொரு அரசாங்கமும் கொண்டுவந்ததை விட இது அதிகம் என்றும், 2004 முதல் 2014 வரையிலான காலத்தில் 1 தொல்பொருள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் உள்ள கோஹினூர் வைரம், மயில் சிம்மாசனம் உள்ளிட்ட சில பொருட்களை திரும்ப கொண்டுவர வேண்டும் என பல ஆண்டுகளாகவே வலியுறுத்தப்படுகிறது.

இந்த கோரிக்கைகள் வெளியுறவு அமைச்சகங்கள் இடையிலான‌ தொடர்புகளை கொண்டு அரசாங்கங்கள் மூலம் ஒரு பெரிய செயல்முறை வழியாக நிறைவேற்றப்படலாம். இதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும்.

வரலாற்று, கலாசார சின்னங்களின் அரசியல்

சத்ரபதி சிவாஜி மராட்டியத்தின் மிக முக்கியமான அடையாளமாக உள்ளதால், ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதனோடு இணைந்துகொள்ள முயற்சிக்கிறது. இது நவீன மராட்டிய அரசியலில் அவ்வப்போது காணப்படுகிறது.

"ஒரு உதாரணமாக, மகாத்மா புலே சிவாஜியை 'குலவாடி பூஷண்' (சூத்திர குல‌ ரத்தினம்) என்று அழைத்தார். பூலேவின் செல்வாக்கு இன்றைய அரசியலிலும் உள்ளது. ஷரத் பவாரைப் பார்த்தால், அவர் மகாத்மா புலேவின் தலைப்பாகையை அணிந்திருப்பதையும், சில சமயங்களில் 'இது போன்ஸ்லே ராஜ்யம் அல்ல, ஆனால் மக்களின் ராஜ்யம்' என்று கூறுவதையும் பார்க்கலாம்.

"பாஜக தலைகீழான முறையில் அரசியல் செய்தது. 2014 ஆம் ஆண்டு, அவர்கள் 'சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஆசீர்வாதம்' என்ற பெயரில் பயணம் சென்றனர்," என்கிறார் அரசியல் பகுப்பாய்வாளர் பிரகாஷ் பவார்.

ஆனால் பிரகாஷ்‌ பவாரின் கருத்துப்படி, இந்த அரசியல் ஒரு சமூகத்தின் முகமாக உள்ள அனைத்து ஆளுமைகள் அல்லது சின்னங்களைப் பற்றியது.

"தேவேந்திர பட்னாவிஸ் ரஷ்யாவுக்குச் சென்று அண்ணா பாவ் சாத்தே நினைவுச்சின்னத்தைத் திறந்து வைத்தார். அது ஒரு கலாசார சின்னம். பிரிட்டனில் டாக்டர் அம்பேத்கர், லோக்மான்ய திலகர் போன்றவர்கள் வசித்த வீடுகளை, அவற்றை நினைவுச்சின்னங்களாக மாற்றியது‌ மாநில அரசாங்கம்," என்று பவார் உதாரணங்களை கூறினார்.

இப்போது புலி நகத்தின் வருகையும், தேர்தலும் நெருங்கி வருகிறது. நிலைமை சூடாகி வருகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் ஆளும் கூட்டணி எடுத்த முயற்சியின் விளைவு எப்படி இருக்கும்?

பிரகாஷ் பவாரின் கூற்றுப்படி, கட்சி சாராத வாக்காளர்களை ஈர்க்க முடியும். மேலும், தொழிலாளர் திரளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தவும் இதைப் பயன்படுத்தலாம்.

" அனைவருக்கும் புலி நகம் பற்றி தெரியும். காங்கிரஸ் இத்தனை காலம் ஆட்சியில் இருந்தாலும் ஏன் எதுவும் செய்யவில்லை என்ற எதிர்மறையாக கேட்கலாம். இந்த விவாதங்கள் மக்களை அவர்களின் முடிவுகளை மாற்ற அழுத்தம் தரக்கூடும்" என்று பவார் கூறுகிறார்.

'சிவராயாவின் துர்கா என்ன ஆனது?'

கொல்லாப்பூரைச் சேர்ந்த வரலாற்று அறிஞர் இந்திரஜித் சாவந்த், இந்தப் புலி நகத்தின் வரலாறு பற்றி சில கேள்விகளை எழுப்பி, பொதுமக்கள் முன்னிலையில் வைக்கிறார். வரலாற்றை உணர்ச்சிவசப்பட்ட பார்வையில் இருந்து பார்க்காமல், கல்விசார் பார்வையில் இருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

"மராட்டியத்தில், சிவாஜி தொட்ட பொருட்கள், ஆயுதங்கள், அவரது கோட்டைகள் ஆகியவை குறித்து மக்கள் மனதில் பெரும் உணர்ச்சிகள் உள்ளன. அரசியல்வாதிகள் இதைப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று அறிவிப்புகள் வெளியாகின்றன. ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் சிவாஜியின் கோட்டைகளில் ஒன்றைக்கூட சரிசெய்ய முடியவில்லை."

"அதாவது, உணர்ச்சிகள் மட்டுமே விளையாடப்படுகின்றன, ஆனால் உண்மையில் எதுவும் நடக்கவில்லை. அதற்கு‌ மற்றொரு முக்கிய உதாரணம் கடலில் சிவாஜிக்கு அமைக்கப்படவுள்ள உலகின் மிகப்பெரிய சிலை. அந்த விசயத்தில் என்ன நடந்தது? அதற்கு அடிக்கல்லை நாட்டுவதற்காக ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முந்தைய அரசாங்கமும் ஒரு நிகழ்வை நடத்தியது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது? அது நிறைவேறியதா?" என்று இந்திரஜித் சாவந்த் கேள்வி எழுப்புகிறார்.

சிவாஜி காலத்தின் முக்கியமான ஒரு பொக்கிஷம் திரும்பி வருகிறது. அதன் மீது அரசியல் விவாதமும் நடைபெற்று வருகிறது, இந்த வாதங்கள் சிறிது காலத்திற்கு நீடிக்கலாம். புலி நகத்தை வரலாறு மற்றும் ஆய்வு என்ற பார்வையில் அணுக வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். அது சாத்தியமாகுமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: