இலங்கை கடல் எல்லையில் மீட்கப்பட்ட 104 'மியான்மர் குடிமக்கள்'

பட மூலாதாரம், sri lanka navy
இலங்கையின் வடக்கு கடற்பரப்பிற்கு விபத்துக்குள்ளான வெளிநாட்டுப் படகொன்றிலிருந்து 104 மியான்மர் குடிமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை நேற்றைய தினம் மீட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. எனினும், மீட்கப்பட்டவர்கள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களா இல்லையா என்பது குறித்து இலங்கையில் உள்ள மியான்மர் தூதரகம் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3.5 கடல் மைல் தொலைவில் குறித்த படகு நேற்றைய தினம் விபத்துக்குள்ளானது; மியான்மரிலிருந்து இந்தோனீசியா நோக்கி, குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 104 மியான்மர் குடிமக்களுடன் இந்தப் படகு பயணித்துள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. ஆனால், மியான்மரிலிருந்து இந்தோனீசியா செல்ல நேரடியாகவே கடல்வழி இருக்கும்போது, பல நூறு கடல் மைல் தொலைவில் உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் அவர்கள் ஏன் வந்தார்கள் என்று இன்னும் தெரியவில்லை என பிபிசி தமிழிடம் இலங்கை கடற்படை தெரிவிக்கிறது. யாழ்ப்பாணத்தை அண்மித்த கடற்பரப்பில் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக இலங்கையின் வடக்கு கடற்படை முகாமிற்கு நேற்றைய தினம் தகவலொன்று கிடைத்துள்ளது.
இதையடுத்து, இலங்கை கடற்படையின் வடக்கு முகாமிற்கு சொந்தமான உதார கப்பல் மற்றும் அதிவிரைவு படகுகளை பயன்படுத்தி, வெளிநாட்டு குடிமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை கடற்படை அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.
அதிக கடல் சீற்றத்திற்கு மத்தியில், விபத்துக்குள்ளான படகிலுள்ள மியான்மர் குடிமக்களை தாம் பாதுகாப்பாக மீட்டெடுத்ததாக இலங்கை கடற்படை கூறுகின்றது. இவ்வாறு மீட்கப்பட்ட மியான்மர் குடிமக்கள், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், sri lanka navy
கரைக்கு அழைத்துவரப்பட்டவர்களுக்கு தற்போது மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சட்டவிரோத குடியேறிகளா என்பது தொடர்பில் தமக்கு தற்போது கூற முடியாது எனவும், விசாரணைகளின் பின்னரே அதனை தம்மால் கூற முடியும் எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
எனினும், தமது கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையிலேயே பிரவேசித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். படகு விபத்துக்குள்ளான நிலையில், இவர்கள் மீட்கப்பட்டுள்ளமையினால், மீட்கப்பட்டவர்களைக் கைது செய்யாது, பாதுகாப்பாக மீட்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய குறிப்பிடுகின்றார்.
மீட்கப்பட்டவர்கள் ரோஹிஞ்சா முஸ்லிம்களா?

பட மூலாதாரம், sri lanka navy
இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள படங்களில் இருப்பவர்கள் இஸ்லாமியர்களுக்கான அடையாளங்களுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இவர்கள் ரோஹிஞ்சா முஸ்லிம்களா, மியான்மரின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது உள்ளிட்ட விவரங்கள் இலங்கை கடற்படையால் இன்னும் வெளியிடப்படவில்லை. மியான்மரின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ரோஹிஞ்சா முஸ்லிம்கள் ஓர் இன சிறுபான்மையினர். பௌத்த பெரும்பான்மை நாடான மியான்மர், ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு குடியுரிமையை மறுப்பதுடன், 2014இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை.
ஆகஸ்ட் 2017இல் ரோஹிஞ்சா ஆர்சா தீவிரவாதிகள் மியான்மர் காவல் மையங்களில் நடத்திய 30க்கும் மேற்பட்ட தாக்குதல்களால், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை மியான்மர் ராணுவம் தொடங்கியது. இதன்போது குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும், பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாகவும் ஐக்கிய நாடுகள் மன்றம் உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் கூறுகின்றன. ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இருந்து தப்ப வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அகதிகளாகச் செல்லத் தொடங்கினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













