தென்கொரியாவின் ‘மாரத்தான்’ கோலும் ரொனால்டோவின் தவறுகளும்

பட மூலாதாரம், Getty Images
போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்த தவறுகளை தென் கொரிய அணி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.
தென்கொரிய வீரர் தங்களது கோல் பகுதியில் இருந்து எதிரணியின் கோல் பகுதி வரைக்கும் பந்தைக் கடத்திக் கொண்டு வந்து கோலடிக்க உதவியது அந்நாட்டு ரசிகர்களை உணர்ச்சிப் பெருக்கில் மூழ்கடித்தது.
இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணி வெற்றி பெற்றது. தென் கொரிய அணியினரை கோல் அடிக்க விடாமல் தடுக்க முயன்ற ரொனால்டோ தவறுதலாக கோலை நோக்கியே பந்தைத் திருப்பியதால், அந்த வாய்ப்பை தென்கொரியா பயன்படுத்தி கோலாக்கியது.
ரொனால்டோவின் தவறைத் தொடர்ந்து அவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் எளிமையாக வெல்லும் எனக் கருதப்பட்ட போர்ச்சுகல் அணி தோல்வியடைந்தது.

பட மூலாதாரம், Getty Images
ரொனால்டோ செய்த தவறுகள் என்னென்ன?
எச் பிரிவில் போர்ச்சுகல் அணியைத் தவிர அடுத்த சுற்றுக்குச் செல்லும் மற்றொரு அணி எது என்பதில் தென்கொரியா, உருகுவே, கானா ஆகிய மூன்று அணிகளுக்கும் இடையே போட்டி இருந்தது.
இரு போட்டிகளுமே ஒரே நேரத்தில் நடந்ததால், இரு போட்டிகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தென்கொரியாவைப் பொறுத்தவரை இந்தப் போட்டியில் வென்றால் அடுத்த சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்ற சூழல்.
ஆனால் 5-ஆவது நிமிடத்திலேயே போர்ச்சுகல் அணியின் ஹோர்ட்டோ அந்த அணிக்கான முதல் கோலை அடித்து தென்கொரியாவுக்கு அதிர்ச்சியளித்தார். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு முறை பந்து கோலுக்குள் புகுந்தது. ஆனால் அது ஆப்சைட் என அறிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
26-ஆவது நிமிடத்தில் தென் கொரியாவுக்கு கார்னர் வாய்ப்புக் கிடைத்தது. கார்னர் இருந்து பந்தை அடித்ததும் அது கோலுக்கு முன்பு பறந்து வந்தபோது, போர்ச்சுகல் வீரர்கள் அதைத் தடுக்க முயன்றனர். ரொனால்டோவும் அந்தப் பகுதியில் இருந்தார்.
பறந்து வந்த பந்து இரு போர்சுகல் வீரர்களைக் கடந்து ரொனால்டோவின் முதுகுப்புறத்தில் பட்டு போர்ச்சுகலின் கோலுக்கு அருகே சென்றுவிட்டது. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய தென்கொரிய வீரர் கிம் லாவகமாக அதை கோலுக்குள் அடித்தார்.
ரொனால்டோ செய்து தவறு, ட்விட்டரில் மிக மோசமாகக் கேலி செய்யப்பட்டது. அந்தக் கணம் முதல் போட்டி முடியும்வரை ரொனால்டோ இறுகிய முகத்துடனேயே காணப்பட்டார்.
42-ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் அடித்த பந்தை தென்கொரிய கோல்கீப்பர் தடுத்தார். அப்போது அங்கிருந்து தப்பி வந்த பந்தை தலையால் முட்டி கோலாக்குவதற்கு ரொனால்டோ முயன்றார் ஆனால் பந்து கோலுக்கு வெளியே தொலைவில் சென்றுவிட்டது. பார்ப்பதற்கு மிக எளிமையாகக் கோல் அடிக்கும் வாய்ப்பாகவே இது கருதப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
தென்கொரியாவின் ‘மாரத்தான்’ கோல்
90 நிமிடங்கள் முடிந்து இப்பீடாக வழங்கப்பட்ட முதலாவது நிமிடத்தில் தென்கொரிய அணி போர்ச்சுகலுக்கு மற்றொரு அதிர்ச்சியை அளித்தது. தங்களது பெனால்ட்டி பகுதிக்கு சற்று வெளியே இருந்து போர்சுகல் கோலை நோக்கி பந்தைக் கடத்திக் கொண்டு வந்தார் சோன் ஹுவாங் மின்.
போர்சுகல் வீரர்கள் சூழ நெடுந்தொலைவுக்கு அவர் பந்தைக் கடத்தி வந்தபோது, கூடவே ஓடி வந்தார் மற்றொரு வீரரான ஹுவாங் ஹீ-சான். கடைசியில் போர்சுகல் வீரர்களின் கால்களுக்கு நடுவே பந்தைக் கடத்தினார் சோன். அதை அற்புதமாகக் கோலாக்கினார் ஹூவாங்.
அந்த கோல் போர்ச்சுகலுக்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்தது. மைதானத்தில் கூடியிருந்த தென்கொரிய ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளினார்கள். பலரது கண்களில் தாரை தாரையாக நீர்பெருக்கெடுத்தது.

பட மூலாதாரம், Getty Images
உருகுவே வென்றாலும் வெளியேறியது ஏன்?
உருகுவே - கானா ஆட்டம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில்தான் வலிமையான போர்ச்சுகல் அணியை தென்கொரிய அணி சந்தித்துக் கொண்டிருந்தது. இந்தப் போட்டியில் தென் கொரிய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது.
இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை பெற்றிருந்த நிலையில், கடைசி சில நிமிடங்களில் தென்கொரிய அணி மற்றொரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்தச் செய்தி நேரலையாக உருகுவே-கானா ஆட்டம் நடந்து கொண்டிருந்த மைதானத்தில் காட்டப்பட்டது.
அதே நிலை நீடித்தால் புள்ளிகள் அடிப்படையிலும், கோல் வேறுபாட்டிலும் இரு அணிகளும் சமநிலையில் இருந்தாலும் மொத்தம் அடித்த கோல்களின் அடிப்படையில் தென்கொரியா வென்றுவிடும் நிலை இருந்தது.
அதனால் கடைசி நிமிடங்களில் உருகுவே அணி மிகத் தீவிரமாக ஆடியது. ஆனால் கடைசி வரை அந்த அணியால் கூடுதலாகக் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. அதனால் வெற்றி பெற்றாலும்கூட அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஆசிய அணிகள் சாதனை
கத்தார் உலகக் கோப்பை போட்டிகளில் ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று அணிகள் 16 அணிகள் பங்கேற்கும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. ஜப்பான், தென் கொரியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள்தான் அவை.
ஏ பிரிவில் இருந்து நெதர்லாந்து, செனகல் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்குச் செல்கின்றன. பி பிரிவில் இங்கிலாந்தும் அமெரிக்காவும் அடுத்த சுற்றில் ஆடுகின்றன.
சி பிரிவில் அர்ஜென்டினா, போலாந்து ஆகிய அணிகளும், டி பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும், ஈ பிரிவில் ஜப்பான், ஸ்பெயின் ஆகிய அணிகளும் அடுத்த சுற்றில் ஆடுகின்றன.
எஃப் பிரிவில் மொராக்கோவும், குரோஷியாவும் அடுத்த சுற்றுக்குச் செல்ல தகுதி பெற்றுள்ளன. ஜி பிரிவில் போர்ச்சுகல், தென்கொரியா ஆகிய அணிகளும் எச் பிரிவில் பிரேசில், தென்கொரியா ஆகிய அணிகளும் நாக் அவுட் சுற்றில் ஆடுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
இன்று நடைபெறும் போட்டிகள் என்னென்ன?
குழு அளவிலான போட்டிகள் நிறைவடைந்து இன்று முதல் நாக் அவுட் சுற்று தொடங்குகிறது. இதில் இந்திய நேரப்படி 8.30 மணிக்குத் தொடங்கும் முதல் போட்டியில் நெதர்லாந்தும் அமெரிக்காவும் மோதுகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில் அர்ஜென்டினாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
நெதர்லாந்து அணி ஏ பிரிவில் முதலிடமும் ஆஸ்திரேலிய அணி பி பிரிவில் இரண்டாவது இடமும் பெற்றவை. இந்தப் போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற 48 சதவிகிதமும் அமெரிக்கா வெற்றி பெற 23 சதவிகித வாய்ப்புகளும் இருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன. கலிஃபா அரங்கில் இந்தப்போட்டி நடைபெறுகிறது.
மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் அர்ஜென்டினா அணி சி பிரிவில் முதலிடம் பெற்றது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற 78 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. அஹ்மத் பின் அலி அரங்கில் இந்தப் போட்டி நடக்கிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








