You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"சிக்கிக் கொண்ட சிறுவர்கள், தாமதமாக வந்த தீயணைப்பு வாகனங்கள்" - குஜராத் தீ விபத்தில் நடந்தது என்ன?
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள டிஆர்பி வணிக வளாகத்தில் சனிக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தில் குழந்தைகள், பெரியவர்கள் விளையாடுவதற்காக உள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. ராஜ்கோட் காவல்துறை ஆணையர் இதுவரை 27 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
பிபிசி செய்தியாளர் பிபின் தங்கரியா அளித்த விவரத்தின்படி, தீவிபத்து நேரிட்ட மாலில் இருந்து வெளிவரும் புகையை 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்க்கும் அளவுக்கு தீ மிகக் கடுமையாக இருந்தது. அங்கே மேலும் பலர் சிக்கியிருப்பதாக அவர் கூறினார்.
வணிக வளாகத்தில் உள்ள கேம் மண்டலத்தில் வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்ததாகவும், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் பிபின் தங்கரியா தெரிவித்தார்.
ஆனால், தீவிபத்திற்கான சரியான காரணம் என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.
பிபிசி செய்தியாளர் பிபின் தங்கரியாவிடம் ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் பிரபாவ் ஜோஷி பேசுகையில், "டிஆர்பி மாலில் விளையாட்டு மண்டலத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக மாலை 4.30 மணியளவில் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது." என்று கூறினார்.
20 பேர் உயிரிழந்ததை ராஜ்கோட் காவல்துறை ஆணையர் ராஜு பார்கவா உறுதி செய்துள்ளார். அவர் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசுகையில், "இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கேம் சோன் உரிமையாளர் யுவராஜ் சிங் சோலங்கி ஆவார். அவர் மீது மரணம் விளைவித்தல் மற்றும் அலட்சியமாக இருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். மீட்புப் பணிகள் முடிந்த பிறகு மேலும் விசாரணை நடத்துவோம்" என்றார்.
"இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். நாங்கள் உள்ளே சென்று முழு பகுதியையும் ஆய்வு செய்வோம். நாங்கள் தடயவியல் குழுவையும் அழைத்துள்ளோம். தடயவியல் குழு வந்து ஆய்வு செய்து தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய முயற்சிக்கும்" என்று காவல் ஆணையர் கூறியதாக பிபிசி செய்தியாளர் பிபின் தங்கரியான் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் தற்போது சிகிச்சை, டிஎன்ஏ சோதனை மற்றும் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன." என்றார்.
தீவிபத்தின் முழுவிவரம் என்ன?
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள டிஆர்பி வணிக வளாகத்தில் இயங்கி வரும் விளையாட்டு மையத்தில் நேற்று (25.5.2024) மாலை 4.30 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து காற்று வேகமாக வீசியதால் தீ பரவும் வேகம் அதிகரித்து தற்காலிக கட்டுமானங்கள் இடிந்து விழுந்துள்ளன.
இதனால், உள்ளிருந்த சிறுவர்கள் உட்பட பலரும் வெளியே வரமுடியாமல், இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டு தீ விபத்தில் மாட்டிக் கொண்டனர்.
சம்பவம் நடந்த உடனேயே தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த சமயத்தில் சம்பவ இடத்தில் இருந்த உள்ளூர்வாசி ஒருவர் தீவிபத்து ஏற்பட்டு நீண்ட நேரம் கழித்தே தீயணைப்பு வாகனங்கள் வந்ததாக பிபிசியிடம் கூறினார்.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுவது என்ன?
தீவிபத்து நடந்த சமயத்தில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த திலீப் சிங் வஹேலா தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை அடைய 45 நிமிடங்கள் ஆனதாக கூறுகிறார்.
அவர் பிபிசியிடம் பேசுகையில், "நான் இந்த வழியாக சென்று கொண்டிருக்கும் போது புகை வருவதை பார்த்துவிட்டு இங்கே வந்தேன். அப்போது இங்கு தீ தீவிரமாக எரிந்துக் கொண்டிருந்தது. மக்கள் பலரும் கூடியிருந்த போதும் மீட்பு பணிகளில் ஈடுபட எந்த வழியும் இல்லாமல் இருந்தது."
அந்த சமயத்தில் இரண்டு காவல்துறை வாகனங்களும், அவசர ஊர்திகளும் மட்டுமே இருந்தன. ஆனால், ஒரு தீயணைப்பு வாகனம் கூட இல்லை. சம்பவம் நடந்து 45 நிமிடங்கள் கழித்தே தீயணைப்பு வாகனம் வந்து சேர்ந்தது" என்றார்.
இந்த சம்பவத்தை தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்துள்ளார் திலீப்.
தொடர்ந்து பேசிய அவர், " இங்கு சுவர்கள் உட்பட பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த டயர்கள் காரணமாகவும், மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த தெர்மாகோல் காரணமாகவும், வேகமாக வீசிய காற்றினாலும் தீ வேகமாக பரவிக் கொண்டே இருந்தது" என்றார்.
தீவிபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் வாசிகளும், அங்கிருந்த டயர்களின் காரணமாகவே தீ வேகமாக பரவியதாக கூறுகின்றனர்.
'இறந்தவர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்'
சம்பவ இடத்தில் மாலை 5.45 மணியில் இருந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்த நபர், "தான் 30க்கும் மேற்பட்ட இறந்த உடல்களை பார்த்ததாகவும், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்" என்றும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இதுவரை 27 இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. காயமடைந்த பலரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு
இந்த தீவிபத்து சம்பவம் குறித்து விசாரிக்க 5 உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை காவல் அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையில் அமைத்துள்ளது குஜராத் அரசு.
இந்த குழு அடுத்த 72 மணிநேரத்தில் தனது முதல் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும். பின் பத்து நாட்களுக்குள் விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்கும்.
மேலும், இந்த சம்பவத்தில் பலியான மற்றும் காயமடைந்த நபர்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குஜராத் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)