You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ரஃபா மீது நடத்தும் தாக்குதலை நிறுத்தவும்' - சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
ரஃபா நகரில் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. அதனுடன் இஸ்ரேலுக்கு பல்வேறு உத்தரவுகளையும் அந்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ஹமாஸ் வரவேற்றுள்ள நிலையில், இஸ்ரேல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, தெற்கு காஸாவில் உள்ள ரஃபாவில் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிடுமாறு ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமை (மே 24) அன்று சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் நீதிபதி நவாஃப் சலாம் தலைமையேற்று நடத்தினார்.
அப்போது, “காஸா முனையில் மக்களின் பேரழிவுகரமான வாழ்க்கை நிலை மேலும் மோசமடைந்துள்ளது," எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக நீடித்த மற்றும் பரவலான உணவுப் பற்றாக்குறையை நீதிமன்றம் வருத்தத்துடன் கவனித்ததாகத் தெரிவித்தார்.
மேலும், ரஃபாவில் நடக்கும் ராணுவத் தாக்குதல் நடவடிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டிய பல்வேறு ஐ.நா. அதிகாரிகளை நீதிபதி மேற்கோளிட்டு காட்டினார்.
ரஃபாவில் மே 7 அன்று இஸ்ரேல் ராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், மே 18 வரை சுமார் 8 லட்சம் பாலத்தீன மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
நீதிமன்றம் கூறியது என்ன?
விசாரணையை தொடர்ந்து, பாலத்தீன மக்களுக்கு 'உடனடி ஆபத்து' எனக்கூறி, ரஃபாவில் இஸ்ரேல் ராணுவ தாக்குதல் மற்றும் மற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அங்கு நிலவும் தற்போதைய சூழல், 'காஸாவில் உள்ள மக்களின் உரிமைகளுக்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவிக்கும்' என நீதிபதி சலாம் தெரிவித்தார்.
மேலும், இன்றைய உத்தரவின் அடிப்படையில் அங்கு ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இஸ்ரேல் இன்னும் ஒரு மாதத்தில் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, மனிதாபிமான உதவிகள் நுழைவதற்காக எகிப்து-காஸா இடையிலான ரஃபா எல்லையைத் திறக்க வேண்டும் என்றும், விசாரணை அமைப்புகள் மற்றும் உண்மை கண்டறியும் குழுக்கள் காஸாவுக்குச் செல்வதற்கான அணுகலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹமாஸால் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாதது குறித்தும் நீதிபதி சலாம் கவலை தெரிவித்தார்.
"பணயக்கைதிகளின் நிலை குறித்து நீதிமன்றம் மிகுந்த கவலையை வெளிப்படுத்துகிறது. மேலும் அவர்களை உடனடியாக, நிபந்தனையின்றி விடுவிக்க அழைப்பு விடுக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.
"இன்னும் பலர் சிறைபிடிக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது," என்றும் அவர் கூறினார்.
ஹமாஸ், இஸ்ரேல் கூறியது என்ன?
சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு “(தாக்குதல்) நிறுத்தத்திற்கான தெளிவான அழைப்பு" என தென்னாப்பிரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் நலேடி பண்டோர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறுகையில், "சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ரஃபா நகரில் எங்கள் மக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இந்த தீர்ப்பு கோருகிறது," என தெரிவித்தார்.
இதற்கிடையில் இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் கூறுகையில், “ரஃபாவில் ராணுவ நடவடிக்கையின் முடிவை, பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்கும் சர்வதேச நீதிமன்றம் நேரடியாக இணைக்கவில்லை என்பது ஒரு மோசமான தார்மீகத் தோல்வியாகும்," என அதிருப்தி தெரிவித்தார்.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்த சில நிமிடங்களிலேயே, ரஃபா நகரின் மையத்தில் உள்ள ஷபூரா முகாம் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
வழக்கு விவரம்
இந்த வழக்கு விசாரணையின் போது, தென்னாப்பிரிக்கா தரப்பு வழக்கறிஞர்கள், பாலத்தீன மக்களின் வாழ்க்கையை உறுதி செய்வதற்கு தேவையான தற்காலிக நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.
மேலும், காஸாவுக்குள் நிவாரண பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், விசாரணையாளர்களுக்கு 'தடையற்ற அனுமதியை' வழங்க இஸ்ரேலை வலியுறுத்தினர்.
தென்னாப்பிரிக்காவின் இந்த வழக்கை 'முற்றிலும் ஆதாரமற்றது' என்று கூறியுள்ள இஸ்ரேல், அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு மீதமுள்ள ஹமாஸ் படையினரை அழிக்க ரஃபாவில் தங்கள் நாடு மேற்கொண்டுள்ள தாக்குதல் முக்கியமானது என தெரிவித்துள்ளது.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகள் சட்டபூர்வமானது என்றாலும், நடைமுறையில் உத்தரவுகளை அந்நீதிமன்றத்தால் செயல்படுத்த முடியாது.
காஸாவில் பாலத்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையை நிகழ்த்துவதாகவும் தென்னாப்பிரிக்கா குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி 26 அன்று வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவில், காஸாவில் நடந்துவிடக்கூடிய இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேறொள்ளுமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு உலகம் முழுவதிலும் பல்வேறு தரப்பினரால் உற்றுநோக்கப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)